ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் இன்று முதல்
ஐஎஸ் உறுப்பினர்களை விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்- மனித உரிமை ஆணையாளர்
ஈரானின் ஆன்மீகதலைவரிற்கு எதிராக தடை- டிரம்ப் அதிரடி
"ரஷ்யாவுடனான எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை"
எந்தவொரு நாட்டுடனும் போரை நாடவில்லை பதற்றநிலைக்கு அமெரிக்காவே காரணம் : ஈரான்
ஜி - 20 மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்!
ஈரான் விவகாரம் : ஒன்றிணைந்து செயற்படடுவதற்கு மோடி - ட்ரம்ப் ஒப்புதல்
வடகொரிய எல்லைக்குள் கால்பதித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் இன்று முதல்
24/06/2019 ஈரான் அணு ஆயுதங்களை உடைமையாகப் பெற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக பிரதான மேலதிக தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"நாம் மேலதிக தடைகளை நடைமுறைப்படுத்துகிறோம். சில விடயங்களில் நாம் வேகமான நடவடிக்கை எடுப்போம்" என டொனால்ட் ட்ரம்ப் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறினார்.
தனது அணு சக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணக்கம் காணப்பட்ட வரையறையை தான் தாண்டவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையிலேயே ட்ரம்பின் மேற்படி எச்சரிக்கை வெ ளியாகியுள்ளது.
ஈரானானது 2015 ஆம் ஆண்டு உலக அதிகார சக்திகளுடன் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் தனது நாட்டுக்கு எதிரான தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக தன்னிடமுள்ள செறிவாக்கப்பட்ட யுரேனிய கையிருப்பை மட்டுப்படுத்த இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் அமெரிக்கா அந்த உடன்படிக்கையிலிருந்து கடந்த வருடம் தன்னை வாபஸ் பெற்றுக்கொண்டு ஈரானுக்கு எதிரான தடைகளை மீள நடைமுறைப்படுத்தியதையடுத்து ஈரான் பதிலடி நடவடிக்கையாக அந்த உடன்படிக்கையின் கீழான உறுதிப்பாடுகளை மீறும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
"ஈரான் சுபீட்சமான நாடாக வருவதற்கு விரும்பினால் அது என்னுடன் இணக்கமானதாக இருக்க வேண்டும்" எனக் கூறிய ட்ரம்ப்இ "ஆனால் அவர்கள் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் தாம் அணு ஆயுதங்களைப பெற முடியும் என நினைப்பார் களாயின் அதனை அவர்களால் ஒருபோதும் செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.
அவர் 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது அமெரிக்காவை மீண்டும் மாபெரும் ஒன்றாக மாற்றுவது தொடர்பில் தன்னால் முன்வைக்கப்பட்ட சுலோகத்தை பிரதிபலிக்கும் வகையில் "நாங்கள் ஈரானை மாபெரும் ஒன்றாக மாற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.
மேற்படி ஊடகவியலாளர்களுடனான சந்திப்பையடுத்து டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில்இ ஈரானுக்கு எதிரான பிரதான மேலதிக தடைகள் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிறிதொரு நிலைப்பாடொன்றை கொண்டிருந்த நிலையில் அவர் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து நகர்ந்து அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் செயற்பாட்டில் களம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஈரானுடன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை ஈரான் வார்த்தை ஜாலம் எனத் தெரிவித்து நிராகரித்திருந்தது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஆளற்ற விமானமொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றநிலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஐஎஸ் உறுப்பினர்களை விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்- மனித உரிமை ஆணையாளர்
25/06/2019 ஈராக்கிலும் சிரியாவிலும் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஐஎஸ் உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் விசாரணைககுட்படுத்தவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகள் தங்கள் நாடுகளை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களை பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐஎஸ் உறுப்பினர்களின் குழந்தைகள் மிகமோசமான மனித உரிமை மீறல்களிற்கு உட்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமான விசாரணைகள் மூலமான பொறுப்புக்கூறல்கள் எதிர்காலத்தில் சமூகங்கள் தீவிரவாதமயப்படுத்தப்படுவதை தடுக்கும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என சந்தேகிக்கப்படாதவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்காத பட்சத்தில் ஐஎஸ்உறுப்பினர்களின் வெளிநாட்டு குடும்பத்தவர்களை அவர்களது நாடுகளிற்கே திருப்பி அனுப்பவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோதல் நடைபெறும் பகுதிகளில் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களிற்கு பிறந்த குழந்தைகளிற்கு உலக நாடுகள் தங்கள் நாட்டின் பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே பெரும் துன்பங்களை அனுபவித்துள்ள குழந்தைகளை நாடற்றவர்களாக்குவது ஈவிரக்கமற்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஈரானின் ஆன்மீகதலைவரிற்கு எதிராக தடை- டிரம்ப் அதிரடி
25/06/2019 ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளார்.
புதிய தடைகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.
புதிய தடைகள் காரணமாக பில்லியன் டொலாகள் பெறுமதியான ஈரானின் சொத்துக்கள் முடக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்கான பதில் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த தடை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் கடைப்பிடிக்கும் மோதல் போக்கிற்கு இறுதியில் கமேனியே காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த தடைகள் ஈரானின் உயர் ஆன்மீகதலைவரும் அவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளவர்களும் அவரது அலுவலகமும் முக்கிய பொருளாதார வளங்ளை பெறுவதை பயன்படுத்துவதை தடுக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
"ரஷ்யாவுடனான எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை"
26/06/2019 அமெரிக்காவின் நெருக்கடியை ஏற்று, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார்.
அந்த ஏவுகணைகளை வாங்கிப் பயன்படுத்துவது என்பது துருக்கியின் இறையாண்மை தொடர்பான விவகாரம் ஆகும். எனவே, அந்த இறையாண்மையைக் குலைக்கும் வகையில் அந்தத் திட்டம் கைவிடப்படாது.
திட்டமிட்டபடி ரஷ்யாவிலிருந்து எஸ்-400 ஏவுகணைகள் அடுத்த மாதம் வரத் தொடங்கும். துருக்கியின் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு எந்த நாட்டின் அனுமதியும் நமக்குத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்த ஒப்பந்ததைக் கைவிட துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மறுத்துவிட்டார்.
அதற்குப் பதிலடியாக, துருக்கிக்கு தனது அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களின் விற்பனை செய்வதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந் நிலையிலேயே துருக்கி ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
எந்தவொரு நாட்டுடனும் போரை நாடவில்லை பதற்றநிலைக்கு அமெரிக்காவே காரணம் : ஈரான்
27/06/2019 ஈரானானது அமெரிக்காவுடனான போரொன்றை ஒருபோதும் நாடவில்லை என ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரோஹானி நேற்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
''ஈரானானது பிராந்தியத்தில் பதற்றநிலையை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் அந்நாடு எந்தவொரு நாட்டுடனும் போரில் ஈடுபடுவதை நாடவில்லை" என அவர் கூறினார்.
ஈரான் கடந்த வாரம் அமெரிக்கப் போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியது முதற் கொண்டு இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஈரானிய ஜனாதிபதி ரோஹானி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஈரானிய ஜனாதிபதி மக்ரோனிடம் தாம் எப்போதும் பிராந்தியத்திலான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேண உறுதிப்பாட்டுடன் உள்ளதுடன் அதற்கமையவே முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இந்த வாரம் ஈரானிய உச்சநிலைத் தலைவருக்கு எதிராக தடைகளை விதித்திருந்த நிலையில் ஈரானிய ஜனாதிபதி அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகளதும் அமெரிக்க ஜனாதிபதியினதும் மனநலம் குறித்துக் கேள்வியை எழுப்பியிருந்தார்.
ஈரானின் மேற்படி விமர்சனத்தையடுத்து டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில் அது அலட்சியப்போக்கான அவதூறு செய்யும் அறிக்கையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது ஈரானிய தலைவர்கள் உண்மையை புரிந்து கொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது என அவர் கூறினார். இந்நிலையில் ரோஹானி நேற்று கருத்து வெளியிடுகையில் பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலைக்கு அமெரிக்காவே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா அணு சக்தி உடன்படிக்கையிலிருந்து விலகாது இருந்திருக்குமானால் பிராந்தியத்தில் நேர்மறையான விளைவு களை நாம் கண்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
ஈரான் கடந்த மே மாதம் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையிலான தனது இரு உறுதிப்பாடுகளை இரத்துச் செய்திருந்ததுடன் அந்த அணுசக்தி உடன்ப டிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய அதிகார சக்திகளுக்கு அமெரிக்காவின் தடை களை வெற்றிகொள்ள உதவுவதற்கு 2 மாத காலக்கெடுவை வழங்கியிருந்தது.
இந்நிலையில் ஈரானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை தெரிவிக்கையில், ஈரான் அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக தம்மால் வழங்கப்பட்ட மேலும் சில உறு திப்பாடுகளை எதிர்வரும் ஏழாம் திகதி இரத்துச்செய்யவுள்ளதாக கூறினார். நன்றி வீரகேசரி
ஜி - 20 மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்!
30/06/2019 ஜப்பான் நாட்டின் ஒசாக நகரில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமான ஜி -20 மாநாடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடடின் மற்றும் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் முடிவில் உலக தலைவர்களால் கூட்டு பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* சர்வதேச வர்த்தகம், முதலீடு ஆகியவை வளர்ச்சி, உற்பத்தி, புதுமை, வேலை வாய்ப்பு உருவாக்கம், வளர்ச்சி ஆகியவற்றின் என்ஜின்கள் ஆகும்.
* தாராளமான, நியாயமான, பாகுபாடற்ற, வெளிப்படையான, கணிக்கக்கூடிய மற்றும் நிலையான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
* உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மேம்படுவதற்கு, அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
* உலக பொருளாதார வளர்ச்சி குறைவாகவே உள்ளது. முக்கியமாக வர்த்தகம், புவிசார் பதற்றங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த அபாயங்களை எதிர்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்போம்.
* வலுவான, நிலையான, சீரான, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு கொள்கை ரீதியிலான கருவிகளை பயன்படுத்துவதற்கு மறு உறுதி எடுத்துக் கொள்வோம்.
* வெளிநாட்டு லஞ்சத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவோம். ஒவ்வொரு ஜி-20 உறுப்பு நாட்டிலும் வெளிநாட்டு லஞ்சத்தை குற்றமாக்கும் வகையில் கூடிய விரைவில் தேசிய சட்டம் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வோம்.
* ஊழல்வாதிகளுக்கும் அவர்களது வருமானத்துக்கும் புகலிடம் மறுப்பதற்கும், அவர்களின் சொத்துக்களை மீட்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஈரான் விவகாரம் : ஒன்றிணைந்து செயற்படடுவதற்கு மோடி - ட்ரம்ப் ஒப்புதல்
30/06/2019 வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், ஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் உச்சிமாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டினிடையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக, இந்தியப் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க ஜனாதிபதியுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தேன். தொழில்நுட்ப மேம்பாடு, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தோம். அமெரிக்காவுடனான பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து, வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜனாதிபதி ட்ரம்ப் -– பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். எஸ் - 400 விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு, வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், ஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்ற, 5ஜி தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விவகாரம் தொடர்பாக இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் விரைவில் சந்தித்து பேச முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, சீனா, பிரேஸில், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வடகொரிய எல்லைக்குள் கால்பதித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
30/06/2019 வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென் – வடகொரிய எல்லையில் வைத்து சந்தித்துள்ளார்.
இருவரும் கைகொடுத்துக் கொண்டதன் பின்னர், வடகொரிய எல்லைக்குள் டொனால்ட் ட்ரம்ப் பிரவேசித்தார்.
அவ்வாறு வடகொரிய எல்லைக்குள் சென்ற முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாகவும் ட்ரம்ப் பதிவானார்.
இருவருக்கும் இடையில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த போதும், அவை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment