ரொபர்ட் நொக்ஸ் : கைதி மீட்டுத் தந்த வரலாறு - என்.சரவணன்

.

இலங்கையின் வரலாற்றை எழுதுபவர்களுக்கு தவிர்க்க முடியாத பாத்திரம் ரொபர்ட் நொக்ஸ்.  இலங்கையைப் பற்றி வெளியான முதலாவது ஆங்கில நூலை எழுதியவர் அவர் தான். அவரது கதை சுவாரசியம் நிறைந்தது.

1641 பெப்ரவரி 8 அன்று பிறந்த நொக்ஸ் பெரிய தனவந்தரான தனது தகப்பனோடு 14 வயதிலேயே கடற்பிரயாணம். இந்தியாவில் சென்று தங்கியிருந்து வியாபாரங்களை முடித்துக்கொண்டு ஈரான் நோக்கி சென்று கொண்டிருக்கையில் புயலுக்கு அகப்பட்டு கப்பல் சேதமானது. அந்த கப்பல்லுக்குத் தேவையான மரங்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் கிடைப்பதாக அறிந்து கொட்டியாரக்குடாவுக்கு (மூதூரில் உள்ளது) 19.11.1659இல் வந்து சேர்ந்தார். திருத்தப் பணிகளுக்காக அங்கு தங்கியிருந்த வேளை இந்தச் செய்தி அன்றைய கண்டி மன்னன் இரண்டாம் ராஜசிங்கனின் காதுகளுக்கு சென்றது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மன்னருக்கு பரிசுப்பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதை அறிந்திருக்கவில்லை நொக்ஸ் (தகப்பன் மகன் இருவரது பெயரும் ரொபர்ட் நொக்ஸ் தான்). 1960 ஏப்ரல்  மாதம் சிப்பாய்களை அனுப்பி அவர்களை கைது செய்தனர்.

கப்பலில் இருந்த அவர்களை கரைக்கு அழைப்பதற்காக சிப்பாய்கள் முதலில் “வெளிநாட்டவர்களை பரிசுப் பொருட்களைக் கொடுத்து வரவேற்று உபசரிப்பது மன்னரின் வழக்கம்” என்றும் கப்டனை வரும்படி அழைத்தனர். அப்படி வந்த போது 16 பேரையும் கைது செய்து விலங்கிட்டு காடுகள் வழியே கண்டிக்கு நடையாக அழைத்துச் சென்றனர்.

கப்பலில் இருந்த ஏனைய மாலுமிகளை தனித்தனியாக வெவ்வேறு கிராமங்களில் விட்டனர். ரொபர்ட் நொக்ஸ் மற்றும் அவரது தந்தையை ஒன்றாக வாரியபொலவிலுள்ள பண்டார கொஸ்வத்த என்கிற இடத்திலும் தங்க வைத்தார்கள். அவர்களுக்கு மாற்று உடையோ, உறங்க பாய் எதுவும் கொடுக்கப்படவில்லை என்கிறார். பின்னர் வேறு பிரதேசங்களில் மாறியிருக்கிறார். அவர்கள் சிறைகளில் வைக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் மலேரியா நோய்க்கு இலக்காகி நொக்சின் தந்தை கப்டன் நொக்ஸ் 1661 பெப்ரவரியில் கண்டியில் இறந்து போனதும் தனிமை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். தனது தந்தையின் இறப்பையும், தனது தனிமையையும் மிகவும் உருக்கமாக அவர் எழுதியிருக்கிறார்.

இலங்கை தப்புவதற்காக தன்னை தயார் படுத்தி 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கையிலிருந்து அவர் தப்பியது ஒரு அழகான சாகசக் கதை தான். சிங்கள மொழியை படித்து,  பின்னர் அந்த சமூகத்தையும் ஆட்சி, அதிகாரம், சிவில் சமூகம், சாதி, வேடுவர், பெண்கள், உணவு வகை, விவசாயம் என அனைத்தைப் பற்றியும்  கற்றுக் கொண்டதுடன் அங்கிருந்து தப்புவதற்கான திட்டங்களை பொறுமையாக மேற்கொண்டார்.

King Rajasinga 11நொக்ஸ் தனது தாய்மொழியை நினைவில் வைத்திருப்பதற்கு இருந்தது கப்பலில் இருந்து கூடவே கொண்டு வந்த இரண்டே இரண்டு நூல்கள் தான் (A Practice of Piety,The Practice of Christianity). மூன்றாவது நூல் பைபிள். தானே ஓலைத் தொப்பி  செய்து விற்று வந்த நொக்ஸ் ஒரு முறை போர்த்துக்கேயர் ஒருவர் தொப்பியை வாங்கிக் கொண்டு பைபிளை பண்டமாற்றுச் செய்து கொண்டதன் மூலம் கிடைத்தது அது. இவை தான் அவரது ஆங்கிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள எஞ்சியவை. இல்லையென்றால் அன்றைய இலங்கைப் பற்றி நமக்கு பல தகவல்கள் கிடைத்திருக்காது.தப்பிச் சென்றதன் பின்னர் அவர் எழுதிய “இலங்கைத் தீவின் வரலாற்றுத் தொடர்பு” ( An Historical Relation of the Island of Ceylon by Robert Knox - 1681) என்கிற  நூலை கிழக்கிந்திய வர்த்தக சங்கமே வெளியிட வைத்தது. Royal Society அதனை வெளியிட்டது. வந்த அடுத்த வருடங்களில் அது ஜேர்மன் (1689), ஒல்லாந்து (1692) பிரெஞ்ச் (1693) போன்ற மொழிகளில் வெளியாகின. அந்த நூல் ஐரோப்பாவில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் ஒருவர் தப்பி வந்த சாகசக் கதைக்காக மாத்திரமல்ல இலங்கை என்கிற நாடுபற்றி அத்தனை விரிவாக கூறப்பட்ட தகவலுக்காகவும் தான். ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆர்வம் கொள்ள இந்த நூலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நூலைப் வாசித்த அன்றைய இரண்டாம் சாள்ஸ் மன்னன் நொக்சை நேரில் அழைத்து புகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் அது சிங்களத்திலும் “எதா ஹெலதிவ” (“சிங்கள நாடு அன்று”) என்கிற பெயரில் வெளியாகி பல பதிப்புகள் கண்டுவிட்டது. மூல நூலின் தலைப்பை அவர்கள் “சிங்கள நாடு” என்கிற பெயரில் மாற்றியிருந்ததன் அரசியல் நாம் அறிந்ததே. மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் அதாவது 334 வருடங்களுக்குப் பின்னர் அது தமிழில் “இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்கிற பெயரில் இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

இங்கிலாந்துக்கு தப்பி வந்து கொண்டிருக்கும் போதே கப்பலில் வைத்தே இந்த நூலை எழுதும் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து திரும்பியா ஒரே வருடத்திற்குள் அந்த நூல் வெளியானது. தனது மனத் திருப்திக்காகவும், நிம்மதிக்காக்கவுமே இதனை எழுதி முடித்ததாக நொக்ஸ் கூறுகிறார். அதனை நூலாக வெளிக்கொணர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவரது சகோதரர் ஜேம்ஸ் நொக்ஸ் (நொக்ஸ் இங்கிலாந்து திரும்பிய 6 மாதங்களில் ஜேம்ஸ் நொக்ஸ் இறந்து போனார். (D. W. Ferguson Captain Robert Knox 1896-97)) மற்றும் நண்பர் ரொபர்ட் ஹூக் (Robert Hooke (1635-1703)) இந்த ரொபர்ட் ஹூக் தான் தாவரங்கள் உயிர்க்கலங்களால் ஆக்கப்பட்டவை என்கிற மகத்தான கண்டுபிடிப்பை செய்தவர்.

அந்த நூலில் அன்றைய அன்றைய மக்களையும் சமூகத்தையும் பல ஓவியங்களின் மூலம் தந்திருக்கிறார். அவை இன்றும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றன. நொக்ஸ் கூற ஓவியர் ஒருவர் வரைந்த அந்தப் பிரதிகள் இலங்கையர்களின் முகமும், உடலும் ஐரோப்பியர்களின் சாயலில் காணப்பட்டபோதும் அவற்றை தவிர்த்துப் பார்த்தால் அந்த ஓவியங்களில் அந்த வாழ்நிலையை புலப்படுத்தும் அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. ஓவியர் யார் என்பது குறித்து நொக்ஸ்ஸின் நூலில் குறிப்புகள் இல்லை. ஆனால் அந்த ஓவியங்கள் நொக்ஸ்ஸின் சகோதரர் ஜேம்ஸ் நொக்ஸ் வரைந்ததாக இருக்கும் என்கிறார்  பெர்கியுசன். 
இலங்கையின் வரலாற்றை அகப்பார்வையில் இருந்து எழுதியவற்றை விட அன்னியப் பார்வையில் இருந்து எழுதப்பட்டவை பெரும்பாலும் பக்கச் சார்பற்றவை என்று கொள்ளலாம். அதுவரையான வரலாற்றுச் சரிதங்கள் மன்னரைப் பற்றியும் ஆட்சியைப்பற்றியும் புகழ்பாடும் புராணங்களாகவே மன்னர் காலத்து வரலாற்றுக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன. இன்றும் அந்த காலத்து மக்கள் பற்றி அறிந்து கொள்வது வராலாற்று ஆய்வாளர்களுக்கு மிகப் பெரும் சவாலான விடயங்களாகவே இருப்பது இதனால் தான்.

16, 17ஆம் நூற்றாண்டில் இலங்கை எப்படி இருந்தது என்பது பற்றி எழுதுகின்ற பலருக்கும் மூலாதாரங்கள் பலவற்றை தந்திருப்பது நொக்ஸ் எழுதிய குறிப்புகள் தான். 

சிங்களப் பிரதேசத்திலேயே அதிகம் அவர் வாழ்ந்திருந்ததால் சிங்களவர்கள் பற்றியே அதிகம் எழுதியிருந்தார். சிங்களவர்கள் அவர் “சிங்குலேய்ஸ்” (Chingulays) என்றே அவரது நூலில் குறிப்பிடுகிறார். “யாப்பாணப் பட்டிணத்தை ஆளும் மலபாரிகள்” (Jafnapatanam, Malabar) என்று தான் குறிப்பிடுகிறார். அதுபோல தமிழர்களை “மலபார்காரர்கள்” என்று தான் குறிப்பிடுகிறார். அன்றைய ஆங்கிலேயர்கள் பலர் தமிழர்களை மலபாரிகலாகத் தான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கையிலிருந்து அவர் இங்கிலாந்து கொண்டு வந்து சேர்த்த ஒரு விடயம் கஞ்சா. இது மருத்துவ குணமுடையது இதை பயன்படுத்துபவர்கள் அதிக நேரம் சிரித்துக் கொண்டு இருப்பார்கள் என்றும் நண்பர் ரோபர்ட் ஹூக்கிடம் கொடுத்திருகிறார். அப்படித்தான் இங்கிலாந்தில் கஞ்சாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் நொக்ஸ்.

நொக்ஸ் கைதியாக அடைக்கப்பட்டிருக்கவில்லை. சுதந்திரமாகவே எங்கும் போய் வரக்கூயதாக இருந்தார். காணியொன்றை வாங்கி தானே வேளாண்மை செய்து, நெல்லை வட்டிக்கு கொடுத்து தனது வாழ்க்கையை கழித்தார். தப்பிப் போகுமுன் அவரின் சொத்துக்களை தனது வளர்ப்பு மகள் லூசியாவுக்கு உயில் எழுதி வைத்தார்.

தனக்கு காற்சட்டை போன்றன ஒவ்வாமையையும் எரிச்சலையும் தருகிறது என்கிற அளவுக்கு அவர் சிங்கள கிராமத்தவனாகவே ஆகியிருந்தார்.

வியாபாரம் செய்வதைப் போல பல இடங்களுக்கு பிரயாணம் செய்து தப்பியோடுவதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். தனது திட்டம் பூர்த்தியானதும் 18.10.1679 அன்று ஸ்டீவன் ரட்லண்ட் என்ற இன்னுமொரு மாலுமியின் உதவியுடன் கண்டியில் இருந்து தப்பி இருவரும் மன்னாரில் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரிப்புக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதியாக இருந்த லோரன்ஸ் வான் பில் ஆளுனராகப் பதவி உயர்வு பெற்று பதவியேற்புக்காகக் கொழும்பு செல்வதற்காக அரிப்புக் கோட்டையில் தங்கியிருந்தார். லாரன்சு பில் நொக்சை அரிப்பில் இருந்து கொழும்புக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பட்டாவியாவுக்கு (இன்றைய ஜகார்த்தா) அனுப்பி வைத்தார். அங்கிருந்து நொக்சு சீசர் என்ற ஆங்கிலேயக் கப்பலில் ஏறி 1680 செப்டம்பரில் தனது 39 வது வயதில் இங்கிலாந்து வந்து சேர்ந்தார். 19 வருடங்கள், 6 மாதங்கள், 17 நாட்கள் இலங்கையில் கழித்திருக்கிறார். இலங்கையில் அவர் களித்த காலம் என்பது அதற்கு முன் அவரது வயதை விட அதிகமான காலம். அவர் இலங்கையில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19 மட்டுமே.

சிங்களவர்கள் பற்றி அவர் குறிப்பிட்டவற்றில் சாதகமான கருத்துக்களை இன்றைய சிங்கள தேசியவாதிகள் பயன்படுத்தினாலும் கூட சிங்களவர்கள் பற்றி அவர் பல விமர்சனங்களையும் முன்வைக்கிறார். அவர்கள் சோம்பேறிகள் என்றும் உழைப்பாளிகள் அல்ல என்கிறார். ஒரு இடத்தில்...
“அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசக்கூடியவர்கள். தந்திரமும் வஞ்சகமுமுடையவர்கள். அவர்கள் பவ்வியமாகப் பேசுவதைப் பார்த்து அவர்களை சரியாக அறியாதவர்கள் எளிதில் விழுந்துவிடுவார்கள். பொய் கூறுவதும் அதை மற்றவர் அறிந்துகொள்வார்களே என்று பொறுப்பற்று இருப்பதில் மனசாட்சியோ, வெட்கமோ கிடையாது...” என்கிறார்.
மலை நாட்டிலும் தாழ் நாட்டிலும் வாழும் சிங்களவர்களின் இயல்புகள் மாறுபட்டவை. தாழ் நாட்டிலுள்ளவர்கள் நேர்மையானவர்கள், உதவி செய்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், அந்நியர்களை ஆதரிப்பவர்கள். ஆனால் மலை நாட்டிலுள்ளவர்கள் இதற்கு நேர்மாறானவர்கள் என்கிறார்.

வெற்றிலைப் பழக்கம் பற்றி தனித் தலைப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
இரவில் பல தடவைகள் எழும்பி வெற்றிலை உண்பார்கள். புகையிலை புகைப்பார்கள். பின்னர் நித்த்திரையாகுமட்டும் பாடல்கள் பாடுவார்கள்.
மேட்டுக்குடி பெண்கள் வெற்றிலையை சப்பித் துப்பிக்கொண்டு நேரத்தை போக்குவார்கள். வெளியில் இருந்து விருந்தினர்களுக்கும் அதனைப் பகிர்ந்து ஒன்றாக வாய் நிறைய சப்பித் துப்பும் பழக்கமுடையவர்கள். நாம் வைன் குடிப்பதைப் போல....
இப்படி அவர்கள் வெற்றிலை உட்கொள்வதற்கு சில காரணங்கள் உண்டு. அதை வாய் நிறைய போட்டு மெல்லலாம், இரண்டாவது அதில் வரும் நல்ல மணத்துடன் வாயை வைத்திருக்கலாம். மூன்றாவது பற்களை கருப்பாக வைத்திருக்கலாம். ஏனென்றால் வெள்ளைப் பற்களை அவர்கள் கேலி செய்கிறார்கள். “நாயின் பல்லைப் போன்றது என்கிறார்கள்”. (பக்கம் 100)

நொக்ஸ் அதிகமாக ஓடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலேயே வாழ்ந்திருக்கிறார். எனவே அவர் கண்ட சாதிகள் பற்றியும் சாதியத்தின் தன்மை குறித்தும் எழுதத் தவறவில்லை. அன்றைய மக்கள் வெள்ளையர்களை அவ்வளவு மதிக்கவில்லை என்றும் தெரியவருகிறது. சாதியில் ஒடுக்கப்பட்டவர்கள் கூட நொக்சையும் அவருடன் இருந்த கைதிகளையும் தமது தண்ணீர் குடங்களை தொட அனுமதிப்பதில்லை என்று நொக்ஸ் கூறுகிறார்.

அந்த நூலின் கையெழுத்துப் பிரதி இன்றும் பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கிறது. இந்த நூல் பற்றி பல சாதக பாதக அம்சங்கள் குறித்து பல வாதப் பிரதிவாதங்கள் ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
மீண்டும் கிழக்கிந்திய கம்பனியில் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். நாடுகளுக்குப் பயணம் செய்தார். இப்பயணங்கள் பெரிதும் வெற்றியளிக்கவில்லை. பின்னர் “மேரி” என்கிற தனது சொந்தக் கப்பலின் பயணங்களை மேற்கொண்டு 1701 இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். பிற்காலத்தை அவர் இலங்கையைப் பற்றி எழுதுவதிலும், தனது வாழ்க்கையைப் பற்றி எழுதுவதிலும் கழித்தார். 19.06.1720 அன்று தனது 79 வது வயதில் இலண்டனில் காலமானார்.
1719 இல் டேனியல் டிபோ (Daniel Defoe) எழுதிய “ரொபின்சன் க்ருசோ” (Robinson Crusoe) என்கிற நாவல் நொக்சின் வரலாற்றுச் சாகசத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆங்கில இலக்கிய உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாவல் அது. அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட “Robinson Crusoe” திரைப்படங்கள், கார்டூன்கள் எல்லாம் மிகவும் பிரபலமானவை.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நமது வாழ்க்கை முறை பற்றி ஒரு ஆங்கிலக் கைதி நமக்களித்த தகவல்கள் மகத்தான பொக்கிஷம்.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

1 comment:

Anonymous said...

சிறப்பு