பயணியின் பார்வையில் - அங்கம் -05 பிறக்கும் நண்பர்களும் உருவாக்கப்படும் நண்பர்களும் " எல்லா விளக்குகளும் அணைந்தன- காற்று, படிக்கொண்டே கடந்தது மரங்கள் நடுங்கின - மிருகங்கள் மரித்தன எவரும் விட்டுவைக்கப்படவில்லை " - PIERRE REVERDY - பிரெஞ்சுக்கவிஞர் முருகபூபதி


கடந்த கால வரலாற்றை நோக்கினால், பலரும் தங்கள் தங்கள் பங்குக்கு தங்கள் தேசத்தையும் மக்களையும் அழித்தொழிக்கும் அதிதீவிர பயங்கரவாத  வேலைகளைச்செய்திருப்பதை பார்க்கமுடிகிறது.
உலகவரலாற்றிலும் இலங்கை வரலாற்றிலும் காலத்துக்குக்காலம் யாராவது ஒருவர் அல்லது  ஆயுததாரிகளான  இயக்கம் அல்லது ஆட்சியாளர்கள் தங்கள் பங்குக்கு நிர்மூலமாக்கும் வேலைகளை தொடர்ந்திருக்கிறார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் தொடக்கம் இது நடந்தேறிவருகிறது. நிர்மூலம் நிகழ்ந்த பின்னர், உயிர்வாழ்பவர்கள், உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து அஞ்சலி நிகழ்த்துகின்றனர். வேறு என்னதான் செய்யமுடியும்?
தனிநபர்கள் மட்டுமல்ல, இயற்கையும் நிர்மூலங்களில் உயிர்களை பறிக்கின்றது. சில சமயங்களில் விஞ்ஞான தொழில் நுட்பக்கோளாறுகளும் நிர்மூலத்தில் தனது  பங்கிற்கு இணைந்துகொள்கின்றது.
சமகாலத்தில் தீயினால் எரியுண்ட வரலாற்றுச்சிறப்புமிக்க பாரிஸின் நோத்ரதாம் தேவாலயத்திற்கு நேர்ந்த பேராபத்தைக்கண்டு, உலக அதிசயங்களில்  ஒன்றான பாரிஸின் ஈஃபிள் கோபுரமும் ஒரு நாள் தனது விளக்குகளை அணைத்து  மௌன அஞ்சலி செலுத்தியது.
இதற்கு முன்னரும் அமெரிக்காவில் பென்ஸில்வேனியாவில் தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அதில் கொல்லப்பட்டவர்களுக்காக ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்துக்கொண்டது.
பொதுமக்களின் கண்டனங்கள், பிரார்த்தனைகள்,  ஈஃபிள் கோபுரம் போன்ற வரலாற்றுச்சின்னங்களின் மௌன அஞ்சலிகளைக்கண்டு அதிதீவிர பயங்கரவாதிகள் அடங்கிவிட்டதாக சரித்திரமும் இல்லை.
எனது பிரான்ஸ் பயணத்தில் ஏனையோரைப்போன்று நான் பார்க்கவிரும்பிய இடம் உலகின்  ஏழு அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் அமைந்துள்ள பிரதேசம்.  ஈஃபிள் கோபுரம் தனது 130 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகியிருந்த தருணத்தில் அதனைப்பார்க்கச்சென்றேன்.
நீர்கொழும்பில் எனது உடன்பிறவாத சகோதரி அம்பிகாவின் புதல்வனும் குறும்பட இயக்குநருமான ரவி பிரதீபன் என்னை அங்கு அழைத்துச்சென்றார். இவரது பெற்றோர்கள் அம்பிகா - ரவீந்திரனின் திருமணத்தை 1970 களில் முன்னின்று நடத்திவைத்திருக்கின்றேன். பிரதீபனின் தாய்மாமனார் நவரட்ணராஜா,  அங்கு சாந்தி அச்சகத்தை பொறுப்பேற்று நடத்திய காலத்தில், எனது முதலாவது கதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் அங்கே அச்சாகியது.
இவ்வாறு எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ரவிபிரதீபன் நீண்டகாலமாக பாரிஸில் வசிக்கிறார். அன்றும் வெளியே பனிபொழிந்துகொண்டிருந்தது. அந்த பனிமழைக்குள் ஈஃபிள் கோபுரத்தை அவருடன் பார்க்கச்சென்றேன்.
அந்தப்பிரதேசத்தில் அமைந்துள்ள சிற்பங்களையும் லூவர் அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தோற்றத்தையும் கண்டு வியந்தேன். இங்குதான்  உலகிலேயே மிக விலையுயர்ந்த ஓவியமாய்க் கருதப்படும்  லியோனார்டோ டாவின்ஸி வரைந்த மோனாலிஸா ஓவியம்  இருக்கிறது.
வரலாற்றுச்சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள், தேவாலயங்கள் முதலானவற்றில் தாக்குதல்களை நடத்துவதற்கும் பயங்கரவாதிகள் எப்பொழுதும் தயாராகத்தான் இருப்பார்கள். அவர்களின் அகராதியில் நிர்மாணம் என்பதே இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நிர்மூலம் மாத்திரமே.
நோத்ரதாம் தேவாலய வளாகத்திலும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயங்கரவாதி தாக்குதல் தொடுத்திருந்தான். எனினும் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு அவனை சுட்டுக்கொன்றார்கள்.
உலக வல்லரசு நாடுகள் பல பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருவதைப்போன்று தற்போது வளர்முக நாடான எமது இலங்கையும் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வேண்டிய மூலோபாயங்களை ஆராயும் சூழலில் எனது பயணியின் பார்வையில் தொடரை எழுதுகின்றேன்.
பிரான்ஸில் " நடு" இணைய இதழை வெளியிடும் இலக்கியவாதி கோமகன் எனது சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கை ஒழுங்குசெய்திருந்தார். இந்த நூலை இலங்கை கிளிநொச்சியில் தனது மகிழ் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டிருந்த நண்பர் கருணாகரன், சில பிரதிகளை டான் தொலைக்காட்சி நடத்தும் நண்பர் ஈழநாடு குகநாதன் ஊடாக பிரான்ஸில் சேர்ப்பித்திருந்தார்.
அங்கு சென்றதன்பின்னர்தான் அந்த நூலின் பிரதியை பார்த்தேன். அதற்கு முகப்பு ஓவியம் வரைந்து தந்தவர் சிட்னியில் வதியும் ஒளிப்படக்கலைஞரும் மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான கீதா மதிவாணன்.
ஒருநாள் நண்பர் செல்வரத்தினத்துடன் கோமகனைப்பார்க்கச்சென்றேன். மூவரும் ஒரு சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்தச்சென்றோம். அவர்கள் தேநீருக்கு ஓடர் கொடுக்கவும், நான் விறுவிறுவென்று உள்ளே சென்று ஆசனத்தில் அமர்ந்துகொண்டேன். அதனைக்கண்டுவிட்ட அவர்கள் இருவரும் சைகையால் என்னை அவசரமாக அழைத்தார்கள். நானும் என்னவோ ஏதோ என பதறிக்கொண்டு எழுந்து அவர்களருகில் வந்தேன்.
" அண்ணே, இங்கு நின்றுகொண்டு தேநீர் அருந்துவதற்கு ஒரு ரேட்!. உள்ளே சென்று ஆசனத்தில் அமர்ந்து அருந்துவதற்கு மற்றும் ஒரு ரேட். ஆனால், அதற்கு விலையும் அதிகம். இங்கே நின்றுகொண்டே அருந்துவோம்." என்றார் கோமகன்.
உலக அதிசயங்கள் நிறைந்த பாரிஸிலா இப்படியும் ஒரு அதிசயம் இருக்கிறது?  என்று மூர்ச்சிக்காத குறையாக வியந்தேன். அங்கு ரயில் நிலையங்களில் அமைந்துள்ள கழிவறைகளுக்கு செல்வதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதனால் ஒன்றுக்கோ அல்லது இரண்டுக்கோ செல்பவர்கள் கையில் நாணயங்களுடன் செல்வது அவசியம் என்பதையும் பாரிஸ் நகரத்தை பார்க்கச்செல்ல விரும்புபவர்களுக்கு முற்கூட்டியே சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
இந்த அனுபவம் இலங்கையிலும் இந்தியாவிலும் எனக்கு கிட்டியிருக்கிறது. பொது மலகூட கழிப்பறைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழும் குடும்பங்களை நினைத்து ஆறுதலடைவோம். வளர்முக நாடுகளில் மட்டுமல்ல பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த வல்லரசுகளிலும் இதுதான் நிலைமை!
நண்பர் செல்வரத்தினம் லாசப்பலுக்கு அழைத்துச்சென்றபோது அங்கு                      ' ஓசை ' மனோகரன், ஈழநாடு இதழை முன்னர் குகநாதனுடன் இணைந்து நடத்திய பாலச்சந்திரன், அறிவாலயம், தமிழாலயம் புத்தக நிலையங்களை நடத்தும் நண்பர்கள், இலங்கை ஈழநாடுவில் முன்னர் பணியாற்றிய கந்தசாமி, மறைந்த ராஜஶ்ரீகாந்தனின் உறவினரும் நிருத்தியம் நூலை எழுதியவரும்  அங்கு நடனப்பள்ளி நடத்துபவருமான ஆசிரியை மீரா, வேலணை பழைய மாணவர் சங்கத்தின் முக்கியஸ்தரும் இலங்கை - இந்திய வர்த்தகர் சங்கம் என்ற அமைப்பில் இயங்குபவருமான ஶ்ரீ பாஸ்கரன் ஆகியோரையும் சந்தித்தேன்.
ஓசை மனோகரன்,  தான் பணியாற்றும் சங்கீதா அச்சகத்தினால் வெளியிடப்படும் நிலா இதழின் பிரதிகளைத்தந்தார். நிலா இதழ் பிரான்ஸ் பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. அங்கு நிகழும் அரசியல் மாற்றங்கள் உடனுக்குடன் அதில் பதிவேற்றப்படுகின்றன.
எனக்குத்தரப்பட்ட ஒரு இதழில், பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டமூலத்திலிருந்து Race - இனம்  எனும் சொல்லாடல் முற்றாக நீக்கப்படும் செய்தி இடம்பெற்றிருந்தது. 1946 இல் உருவகம் பெற்ற பிரான்ஸ் அரசியல் அமைப்புச்சட்டமூலங்களில் Race - எந்த இனத்தவர் எனப்பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சொல்லாடல் இனவெறியை இனப்பாகுபாட்டை வலியுறுத்தும் வகையிலுள்ளது எனவும் இச்சொல்லாடல் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் எனவும் பல அரசியல் அமைப்புகளால் சாடப்பட்டுவந்திருக்கும் தகவலையும் நிலா வெளிப்படுத்தியிருந்தது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை வழங்கும் நிலா இதழ்களை  வெளிநாடுகளில் வதியும் வாசகர்கள் www.nilafrance.com இணையத்தளத்திலும் பார்க்கமுடியும். லாசப்பலில் ஶ்ரீபாரதி அச்சகமும் ஒரு விளம்பர இதழை வெளியிடுகிறது. அதன்பெயர் தாமரை. தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் தேசங்கள் தோறும் இத்தகைய இலவச இதழ்களை காணமுடியும்.
ஶ்ரீபாஸ்கரன் என்னையும் 'ஓசை' மனோகரனையும் நாடக- திரைப்படக்கலைஞர் ஏ. ரகுநாதனை பார்ப்பதற்கு அழைத்துச்சென்றார்.  கடந்த சிலவருடங்களாக நோய் உபாதையில் சிகிச்சையுடன் பொழுதுகளை கடக்கும் ரகுநாதன் எம்மைக்கண்டதும் தான் சம்பந்தப்பட்ட நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்களில் ஒலித்த பாடல்களை பாடத்தொடங்கிவிட்டார்.
நண்பர்களைக்கண்டதும் அவர் உற்சாகமுற்றார். அவுஸ்திரேலியா சிட்னியில் கவிஞர் அம்பியின் 90 வயது விழா நடக்கவிருப்பது பற்றிச்சொன்னதும், பல விடயங்களை நனவிடை தோய்ந்தார்.
சிறுநீரக சிகிச்சைக்காக அடிக்கடி அவர் மருத்துவமனை சென்று வருகிறார். நண்பர்களைக்கண்டதும் அவருக்கு வந்த  உற்சாகத்தை எவ்வாறு வர்ணிப்பது? முதுமையிலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்புத்தான் சிறந்த ஊக்கமாத்திரை! இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். வயதும் மூப்பினால் வரும் பிணிகளும் அவரை முடங்கியிருக்கச்செய்தாலும், நினைவாற்றலுடன் பல சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் அம்பியின் 90 விழா மலருக்கும் அவர் ஒரு ஆக்கம் எழுதியதும் அவரது துணைவியாரின் துணையினால் என்பதை பின்னர்தான் அறிந்தேன். 

எனது நூல் வெளியீடு பாரிஸில் லாசப்பலில் ஒரு சிறிய மண்டபத்தில் நடந்தது. அங்கு மொழிபெயர்ப்பு சார்ந்த பணிமனையும் இயங்குகிறது. அந்த மண்டபத்தை அன்றைய நிகழ்வுக்காக வழங்கி உதவிய அரவிந்த் அப்பாத்துரையும் இலக்கிய ஆர்வலர். தமிழ் அரங்கு வெளியிடும் உடல் என்னும் காலாண்டிதழில் இவரது ஆக்கங்களை முன்னரே படித்திருக்கின்றேன்.
ிரெஞ்சுப்புரட்சி, 19 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக்கவிதைகள் முதலான நூல்களை எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான க. வாசுதேவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
ஈஃபிள் கோபுரம் பார்க்கச்செல்வதற்கு  முன்னர் இலக்கியவாதி                      லக்‌ஷ்மியையும் ஒரு உணவுவிடுதிக்கு அழைத்து மதிய உணவுடன் பேசிக்கொண்டிருந்தோம்.
மல்லிகை ஜீவாவை அய்ரோப்பாவுக்கு அழைத்தவர்களில் இவரும் ஒருவர். பிரான்ஸ் புகலிட இலக்கியத்திற்கு வளம் சேர்த்த நாடு. அதற்கு உரமிட்டவர்களின் பெயர்ப்பட்டியல் நீளமானது. எனினும் அவர்கள் மத்தியில் நீடிக்கும் சுமுகமற்ற நிலை கவலைக்குரியது. என்னைத்தனியாக சந்திக்க விரும்பியவர்கள், பொது இடத்தில் கருத்து முரண்பாடுகளைக் கடந்து ஒன்றுகூடி சந்திக்க விரும்பமாட்டார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில்! திசை மாறிய பறவைகளை ஓரிடத்தில் காண்பது எளிதல்ல! எழுத்தாளர் சாத்திரி வெகு தொலைவிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டார். ஷோபா சக்தி அச்சமயத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்தார். நான் பிரான்ஸை விட்டு புறப்படுவதற்கு முதல்நாள்தான் அங்கு திரும்பியிருந்தார். அவருக்கு பயணக்களைப்பு. எனக்                                                                                                                                                                                    கு லண்டன் செல்லும் அவசரம். தொலைபேசியில்தான் பேசிக்கொள்ளமுடிந்தது.
வி.ரி இளங்கோவன், செல்வரத்தினம், துரைசிங்கம்,  ஷோபா சக்தியின் தங்கை தர்மிணி,  'அகாலம்' சிறைக்குறிப்புகள் நூலை எழுதிய புஸ்பராணி, மறைந்த ஈழத்து எழுத்தாளர் டானியல் அன்ரனியின் புதல்வன் ஏ.ஜே. டானியல், உதயகுமார், ஓசை மனோகரன்,  உட்பட பலர் அந்த இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
'ஈழநாடு' குகநாதனின் துணைவியார் றஜனி, என்னையும் சில இலக்கிய, ஊடக  நண்பர்களையும் அழைத்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இச்சந்திப்பில் மெல்பனில் தயாரிக்கப்பட்ட ரஸஞானி ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டது. இதனைத் தயாரித்த எனது நண்பர்கள் மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி பற்றி அவர்களுக்குச்சொன்னேன்.
ரஸஞானி ஆவணப்படத்தை கூர்ந்து அவதானித்த பத்திரிகையாளர் துரைசிங்கம்,  அதன்பின்னர் " என் மனவானில் சிறகை விரித்த இலக்கியப் பறவை"  என்ற தலைப்பில் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தார். அதனை இணைய இதழில்  படித்த மெல்பன் இலக்கிய நண்பர் மஹ்ரூப்,  தாமதிக்காமல் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். இவ்வாறு எதிர்பாராத பல விடயங்கள் எனது பயணத்தில் நிகழ்ந்ததை எண்ணி ஆச்சரியமடைகின்றேன்.
நண்பர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாக்கப்படுகிறார்களா?
"ஓசை" " அம்மா" முதலான இதழ்களை வெளியிட்ட  மனோகரன் லாசப்பலில்  சங்கீதா அச்சகத்தின் முகாமையாளராக பணியாற்றுகிறார். அவரும்  இளங்கோவனும் பண்டிதர் மயில்வாகனனாரின் பிள்ளைகளும் தத்தமது இல்லங்களுக்கு   அழைத்து  உபசரித்தனர். வெளிநாட்டு பயணங்களில் இந்த அன்புத் தொல்லைகளினால், நான் பார்த்து ரசிக்கவேண்டிய பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களை தரிசிக்கமுடியாமலும்  திரும்பியிருக்கின்றேன்.
எங்கள் ஊரில் ஆசிரியராக பணியாற்றிய "நகுலன்"  தங்கரத்தினம் அவர்கள் எழுத்தாளருமாவார். கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் ஆகிய கதைத்தொகுதிகளை 1960 களில் வெளியிட்டவர். இவரும் சித்தங்கேணியைச்சேர்ந்தவர். 1966 ஆம் ஆண்டில் இவரது நூல் வெளியீட்டு விழா நீர்கொழும்பில் நடந்தபோது நான் எழுதிய மலர்ந்த வாழ்வு என்ற நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றேன். அச்சமயம்  பிறந்து சில மாதங்களேயான அவரது பெண் குழந்தையை அதன்பின்னர் நான் பார்த்திருக்கவில்லை. தங்கரத்தினம் ஆசிரியர்  1987 ஆம் ஆண்டிற்குப்பின்னர் வவுனியாவில் ஒரு இராணுவ ட்ரக்கினால் மோதுண்டு கொல்லப்பட்டார். செய்தியை வீரகேசரியில் வரும்   மரண விளம்பரத்தில்தான் பார்த்தேன். அதிலிருந்த முகவரிக்கு அனுதாப மடல் அனுப்பியிருக்கின்றேன். இதற்கிடையில் அவரது குடும்பத்தில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துவிட்டன!
நான் பிரான்ஸ் வந்திருக்கும் செய்தியை தனது தாயார் மூலம் அறிந்துகொண்ட  1966 இல் நான் குழந்தையாக பார்த்தவர், தாயையும் தனது மகனையும் அழைத்துக்கொண்டு என்னைத் தேடி வந்துவிட்டார்.
இந்தச்சந்திப்பும் எதிர்பாராததுதான். அந்த இளம் தாயும் தனது கணவனை அற்பாயுளில் பறிகொடுத்துவிட்டார் என்ற அதிர்ச்சி தரும் தகவலையும் அன்றுதான் அறியமுடிந்தது.
1966 இல் குழந்தையாக நான் பார்த்தவர், அன்று தனது மூத்த புதல்வனுடனும் தாயாருடனும் ( திருமதி தங்கரத்தினம்) என்னைப்பார்க்க வந்தவுடன் நெகிழ்ந்துபோனேன்.
ஈடுசெய்யமுடியாத இழப்புகளை சுமந்தவண்ணம் என்றோ, ஒரு காலத்தில் தனது தந்தையின் நண்பராக இணைந்திருந்தவர் வந்திருக்கிறார் என்பதையறிந்து ஓடிவந்திருந்த அந்த இளம் பெண்ணைப்பார்த்ததும் என் கண்கள் பனித்தன.
எத்தனை அனுபவங்களை கடந்துகொண்டிருக்கின்றோம். இலக்கியத்தால்  எனக்கு கிடைத்த  உறவுகள் அனைத்தும் உலகில் எங்கு வாழநேரிட்டாலும் என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும்!  அல்லது நானே தேடிச்செல்வேன்! நான் தேடிய தேட்டம் அவர்கள்தான்! 
இந்தப்பயணத்தில் முன்னர் நான் சந்திக்காத - சந்தித்து பேசவிரும்பிய பலரை நேரடியாகக்கண்டு உரையாட முடிந்தது என்ற மனத்திருப்தியுடன் பிரான்ஸிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டேன்.
( தொடரும்)



-->












No comments: