ஒரு சமூகம் தன்னை காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் ஆண்டவன் கூட அதைக் காப்பாற்ற முடியாது - நிவேதனா அச்சுதன் ( சிரேஷ்ட சட்டத்தரணி)


இன்று  இலங்கை  முழுவதும் நிலவுகின்ற பதட்ட நிலை, தமிழ்-சிங்களம் , இந்து-கிறிஸ்தவ-இஸ்லாமிய-பௌத்த என்ற மொழி, மத  வேறுபாடுகளைத்  தாண்டி எல்லோரையும் பாதித்து இருக்கின்றது. வெளி நாடுகளில் வாழ்கின்ற எம்மில் பலரும் , எமது மக்கள் - எமது நாடு  என்ற துடிப்போடு இலங்கையில்  நடக்கும் சம்பவங்களை அவதானித்து வருகின்றோம்.

கடந்த பத்து வருடங்களாக எவ்வளவோ பெரிய  விலை கொடுத்து, இழக்கமுடியாத-இழக்கக்  கூடாத பலவற்றையும் இழந்து , தக்க வைத்திருக்கின்ற சமாதானமும் அமைதியும் , மீண்டும்  பறிபோய்விடுமோ என்ற வேதனையும் இயலாமையும் எம்மில்  பலரை சூழ்கின்றது . அதே  சமயம் , மீண்டும் எமது நாடு சமூகப்பிளவுகளில் சிக்குண்டு அடுத்த தலைமுறையின் எதிர்காலம் இருண்டு போகக்கூடாது என்ற பொறுப்புணர்வும் மேலோங்குகிறது.

எமது தமிழ் பாடப்புத்தகங்களில் ஒரு பாட்டு உண்டு " சிங்களர்-தமிழர் -முஸ்லீம் யாம் , சீருடன் பயின்று இணைந்தாலே , மங்களம் பொங்கும் நல்லுலகாய் மாண்புடன் விளங்கும் நம் இலங்கை". நம்மை எதிர் கொண்டு இருப்பது ஒரு சமூகப்பிரச்சனை-அது பூதாகரமாக வெடிக்காமல் , முளையிலே கிள்ளி எறிவது, சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை. இதற்கு அரசியல் தலைமைத்துவத்தை  எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எம்மால் முடிந்த சமூகத் தலைமைத்துவத்தை ஓருவருக்கொருவர் வழங்க முன்வருவது  எமது கையில் இருக்கின்றது.

வெளி நாட்டில் இருப்பவர்களோ உள் நாட்டில் இருப்பவர்களோ, வெறுமனே தகவல்களை மட்டும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் சுடச்சுட பகிர்ந்து  கொண்டு, 'எமோஜிக்களில்' மட்டும் வாழ்க்கையை நடத்தாமல் , நாட்டைப்பற்றிய உண்மையான உணர்வுடன் செயற்பட வேண்டும் .

சமீபத்தில் நடந்த சம்பங்களில் உயிர் இழந்தோ, காயப்பட்டோ , அன்புக்குரியவர்களை இழந்தோ தவிப்பவர்கள் அனுபவிக்கும்  உயிர் வலி, இழப்பைத் தம் வாழ்க்கையில் எதோ ஒரு விதத்தில் எதிர்கொண்ட ஒவ்வொருவருக்கும் முழுமையாகத் தெரியும். இலங்கையை சுற்றுலாப் பயணிகளாகப் பார்க்க வந்து குடும்பத்தினரை  இழந்து இடிந்துபோயிருக்கும் வெளி  நாட்டவர்களும்  சாதாரண மனிதர்கள் தான் . அவர்களது வலியும் வேதனையும் விலை பேச முடியாதவை.


அதே போல் , ஒரு சில மனிதர்கள் மதத்தின் பேரால் நடத்திய   கோரச் செயல்கள், புனிதமான இஸ்லாமிய மதத்தையோ அதை ஆழமாகப்புரிந்து கொண்டு, உண்மையான இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது  முஸ்லீம் நண்பர்கள்  உறவினர்களையோ  தீவிரவாதிகளாக ஒருபோதும்  தவறாக இனம் காட்ட முடியாது.

அப்படி முட்டாள்தனமாக முடிவெடுப்பதும், அந்த சமூகத்தை சேர்ந்த  எல்லோரையும் தவறாக அடையாளப்படுத்துவதும் , மத வெறியர்களின் கைகளைத்தான் பலப்படுத்துவதாக முடியும். அரசியல் சதுரங்கத்தில் பல தவறான தலைமைத்துவங்கள் நகர்த்த விரும்புகின்ற காய்களையும் துரிதப்படுத்தும்.

புனித குர் ஆனில்  ஒரு வாசகம் இருப்பதாக எமது தமிழ் பாடப்  புத்தகத்தில் படித்ததுண்டு. " ஒரு சமூகம் தன்னை காப்பாற்றிக்கொள்ளாவிட்டால் ஆண்டவன் கூட அதைக்  காப்பாற்ற முடியாது". 

 உள்நாட்டு யுத்தம் முடிந்து பெரியஅழிவை எதிர்கொண்டும்  மீள எழத்துடிக்கின்ற  எமது நாடு,  இப்போது ஒரு நான்கு முனைச்  சந்தியில் வந்து ('கிராஸ் ரோட்டில்") நிற்கின்றது. அதை சரியான வழியில் முன்னெடுத்துச்  செல்வது , குடும்பம் , நண்பர்கள் வட்டம்  , பாடசாலை-பல்கலைக்  கழக  சமூகம் , வழிபாட்டு இடங்கள் , சமூக வலைத்தளங்கள், என்று அனைத்துப் பின்னணியிலும் நமது செயல்கள், சிந்தனைகள்  கருத்துப்பரிமாற்றங்கள் மூலம்  சரியான  தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் நமக்கு நாமே வழங்க வேண்டிய கட்டாயக் கடமை  எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

செய்வோமா?
---0---
-->

No comments: