தமிழ் சினிமா - தேவராட்டம் திரை விமர்சனம்


சினிமாவில் தனக்கு என்று ஒரு பெரிய இடத்தை பிடிக்க போராடி வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று வேதராட்டம் படம் வெளியாகியுள்ளது. கிராமத்து கதைகளில் வல்லவனரான முத்தையா இயக்கிய இப்படம் எப்படி இருக்கிறது. தேவராட்டம் பட்டய கிளப்பியதா? பார்ப்போம்.

கதைக்களம்

ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்கின்றார் கௌதம் கார்த்திக். 5 அக்காவிற்கு கடைசி தம்பியாக இருக்கும் இவரை எல்லோரும் தம்பி என்று பார்க்காமல் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கின்றனர். வக்கீலுக்கும் படிக்க வைக்கின்றனர்.
அந்த நேரத்தில் பெண்களை தவறாக படம்பிடிக்கும் ஒருவனை ஒரு பெண் நடுரோட்டில் செருப்பால் அடிக்க, அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகின்றது, ஆனால், அதை தொடர்ந்து அந்த பெண் கடத்தப்பட்ட பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு, மிக மோசமான நிலைக்கு வருகின்றார்.
அந்த கேஸ் கௌதம் கார்த்திக்கு வர, இந்த நாச வேலையை செய்தவன் ஊரில் பெரிய ரவுடியான பெப்சி விஜயன் மகனிடம் உதவி கேட்க, ஒரு கட்டத்தில் கௌதம் கார்த்திக்கும், பெப்சி விஜயன் மகனுக்கு மோதல் ஏற்பட, கௌதம் அவனை நடுரோட்டில் வெட்டி சாய்கிறார், பிறகு பெப்சி விஜயன் கௌதமை கொலை செய்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்ட, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கௌதம் கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளார், இவருக்கு எப்படி மதுரை பையன் கதாபாத்திரம் செட் ஆகும் என்று நினைத்தால், ஆறடி உயரம் முதல் காட்சியிலேயே தப்பு செய்தவர்களை அடித்து பறக்கவிடுவது, மதுரை பலபலக்குது பாடலுக்கு இறங்கி ஆடுவது என கச்சிதமாக செட் ஆகின்றார்.
மஞ்சிமாவிற்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கதையுடன் அவர் காட்சிகள் வருவது ரசிக்க வைக்கின்றது, சூரியின் காமெடி பல நாட்களுக்கு பிறகு சிரிக்க வைக்கின்றது, கௌதமின் மாமாவாக அவர் மட்டுமில்லாமல், மேலும் இருவர் செய்யும் கலாட்டா, கவுண்டர் என முதல் பாதி சில மணி நேரம் கலகலப்பாக்கின்றனர்.
பசி தெரியாத வளர்க்கனும்னு நினைச்சோம், இப்படி பயம் தெரியாம வளர்ந்துட்ட, என்று தன் தம்பிக்காக பாசத்தை பொழியும் அக்கா, அவருடைய கணவர் போஸ் வெங்கட் என அனைவருமே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், செண்டிமெண்டிற்கு பஞ்சமில்லை.
ஆனால், இதை வெறும் கமர்ஷியம் படம் என்று மட்டும் ஒதுக்கி சென்றுவிட முடியாது, ஜாதி பற்றியே படம் எடுக்கவில்லை என்று முத்தையா அடித்து சொன்னாலும், இன்று திரையரங்கில் ஒரு சில காட்சிகளுக்கும், வேல் கம்பு தூக்கியவர்கள் என்ற சொன்ன வசனத்திற்கு வந்த கைத்தட்டலுக்கும் முத்தையா எப்படி பதில் சொல்வார் என்று தெரியவில்லை, தமிழ் சினிமாவில் பல முற்போக்கு படங்கள் வந்தாலும், பெண்களை பாதுக்காப்பதே ஆண்களின் வீரம் என்று வசனத்தை வைத்துவிட்டு, அதே வேலையில் பொம்பல மாதிரி என்னை ஊரை விட்டு அனுப்புகிறீர்கள் என்று பிற்போக்குத்தனமான சில காட்சிகளும் படத்தில் இருப்பதை கூறி தான் ஆகவேண்டும்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை, மதுரையை அப்படியே கண்களில் காட்டிய ஒளிப்பதிவு, அதை விட பாடல்கள் பின்னணி இசை என நிவாஸ் பிரசன்னாவின் இசை பட்டையை கிளப்புகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதில் நல்ல விறுவிறுப்பாகவே செல்கின்றது.
செண்டிமெண்ட் காட்சிகள், எந்த காலத்திலும் ஒர்க் அவுட் ஆகும் என்பதிற்கு சான்று.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.

பல்ப்ஸ்

வன்முறை காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகின்றது.

மொத்தத்தில் சில பிற்போக்கு விஷயங்களை தவிர்த்து கமர்ஷியலாக பார்த்தால் படம் கண்டிப்பாக பி, சி ரசிகர்களுக்கு முழுத்திருப்தி தான்.


No comments: