இலக்கியவாதியும்
விஞ்ஞான ஆசிரியரும் சீர்மியத் தொண்டருமான சந்திரசேகர
சர்மா அவர்கள் திடீரென மறைந்துவிட்டார் என்ற செய்தி இடியாக மனதில் விழுந்தது.
சில
வாரங்களுக்கு முன்னர்தான் அவர் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் தனது மகள்
குடும்பத்தினரைப் பார்க்க வந்திருந்தார். இதற்கு முன்னரும் இங்கு வருகை தந்த
சந்தர்ப்பத்தில் சில கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்தவர்.
இறுதியாக
கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய வாசிப்பு
அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியிலும் - கடந்த
மார்ச் மாதம் நடந்த அனைத்துலக பெண்கள் தினவிழாவிலும் கலந்துகொண்டார்.
"மீண்டும் வருவேன் " எனச்சொல்லிவிட்டே, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி
யாழ்ப்பாணம் புறப்பட்டார். எளிமையானவர். இனிய குணாதிசயங்கள் கொண்டவர். சந்திரசேகர சர்மா, யாழ்ப்பாணத்தில் ஆவரங்காலில் பிறந்து அங்குள்ள அமெரிக்க மிஷன் பாடசாலை, புத்தூர் சோமஸ்கந்தா ஆகியவற்றில் தமது ஆரம்பக்கல்வியை கற்றார். தந்தையார் ஆலயக்குருக்கள் என்பதால், பெற்றவர்களுடன் இவரும் இடம்பெயர்ந்து நாவலப்பிட்டிக்குச்சென்றார்.
தந்தையார் இரத்தினசர்மாவுக்கு அங்கு கதிரேசன் கோயிலில் திருப்பணி. சந்திரசேகரன் அங்கு புனித அன்ரூஸ் கல்லூரியில் கற்றுவிட்டு, அங்கேயே முதலாவது ஆசிரிய நியமனமும் பெற்று, கல்விப்பணியில் ஈடுபட்டார். அறுபதுகளில் மலையகத்தில் வாழ்ந்தவாறு இலக்கியப்பிரவேசம் செய்தார். சிறுகதைகள், கட்டுரைகள், விஞ்ஞானக்கட்டுரைகள் எழுதினார். தினகரனில் தத்துவச்சித்திரங்கள் என்னும் தொடரையும் எழுதினார்.
இவரது எழுத்துக்களை 1965 காலப்பகுதியில் படித்திருக்கின்றேன். மாணவர்களுக்குப்புரியும் வகையில் எளிய தமிழில் அவர் எழுதியமையால் மாணவர்களின் அபிமான எழுத்தாளராகவும் அவர் அந்நாட்களில் திகழ்ந்தார்.
வடக்கில் பிறந்திருந்தாலும் இவரது கல்விச்சேவை இலங்கையில் மலையகத்திற்கும் தென்னிலங்கைக்கும்தான் அதிகம் கிட்டியது. ஓய்வுபெறும் காலப்பகுதியில்தான் வடக்கில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியராகவும் வடமராட்சி கிழக்கிற்கான வலய விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இவருடைய மாணாக்கர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்தான் எழுத்தாளர் திக்குவல்லை கமால், கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா.
சந்திரசேகர சர்மா எழுதியிருக்கும் விந்தைகள் செய்த விஞ்ஞானிகள் என்ற
நூல் இதுவரையில் ஐந்து பதிப்புகளைக் கண்டுவிட்டது. அத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகிவிட்டன.
நாவலப்பிட்டியில் இளம் எழுத்தாளர் சங்கம் உருவானபொழுது அதன் தலைவராக இருந்து, மலையகத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கினார். அங்கு கலைமகள் படிப்பகத்தை உருவாக்கி தரமான வாசகர் வட்டத்தையும் வளர்த்தெடுத்தார்.
பேராசிரியர் நந்தி, பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ.மனோகரன், படைப்பாளி ஆப்தீன் , கவிஞர் பரமஹம்ச தாசன் ஆகியோர் மலையகத்தில் வாழ்ந்திருந்தமையால் இவர்களின் நட்பும் இவருக்கு கிடைத்தது.
இவர்களில் ஆப்தீன் அக்காலகட்டத்தில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியிருந்த இளம் எழுத்தாளர். தனது தொடக்ககால எழுத்துப்பிரதிகளை செம்மைப்படுத்தியவர் சந்திரசேகரன்தான் என்பதை ஆப்தீன் தமது பதிவுகளில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.
பாரதியாரின் பேத்தி விஜயபாரதியும் அவர் கணவர் பேராசிரியர் சுந்தரராஜனும் கு. அழகிரிசாமியும் இலங்கை வந்த சமயத்தில் நாவலப்பிட்டிக்கு அழைத்து விழா நடத்தியவர். சந்திரசேகரன் கொழும்பில் 1972 காலப்பகுதியில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தின் விஞ்ஞானக்குழு அங்கத்தவராக இருந்த சமயத்தில்தான் எனக்கு அறிமுகமானார்.
தமிழில் விஞ்ஞான நூல்கள் அரிதாகியிருந்த கால கட்டத்தில் இலங்கையில் தமிழ் மாணவர்கள் பயன்படுத்தத்தக்க முறையில் எளிய முறையில் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எழுதிய முன்னோடிதான் இர. சந்திரசேகரன்.
கலிலியோ கலிலி, ஐசாக் நியூட்டன், ஜோசப் பிறீஸ்றிலி, ஹம்ப்றி டேவி, ஜோசப் ஸ்ரீபன்சன், மைக்கல் பரடே, சார்ள்ஸ் டார்வின், தோ மஸ் அல்வா எடிசன், கிரஹம்பெல், ஜோர்ஜ் வாஷிங்டன் காவர், ஐன்ஸ்ரீன், சேர் சி.வி. ராமன் முதலானோரின் அளப்பரிய சேவையை விந்தைகள் செய்த விஞ்ஞானிகள் நூலில் தொகுத்திருக்கும் சந்திரசேகரனின் விஞ்ஞான கல்விப்பணியையும் கலை, இலக்கிய செயற்பாடுகளையும் பற்றி பாடவிதான அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் எஸ். ஜீ. சாமுவேல், பேராசிரியர் நந்தி சிவஞானசுந்தரம், ஆகியோர் முன்னுரைகள் எழுதியுள்ளனர். படைப்பாளிகள் திக்குவல்லை கமால், ஆப்தீன், எம்.கே. முருகானந்தன், கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா ஆகியோரும் விதந்து குறிப்புகளை எழுதியுள்ளனர்.
கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா, இறுதிக்காலத்தில் மதுவுக்கு அடிமையாகி நோயுற்றிருந்தவேளையில் இவர் சென்று பார்த்திருக்கிறார். தன்னைத்தேடி வந்துவிட்ட ஆசானைக்கண்டதும் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு " சேர் என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறியிருக்கிறார்.
"இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்" என்று இவர் கேட்டதும், சத்தியம் செய்திருக்கிறார். அவ்வாறே சில மாதங்கள் வாழ்ந்திருக்கிறார். தினகரன் வாரமஞ்சரியில் சாம்பரில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் என்ற தலைப்பில் ஸ்ரீதர் எழுதிய கட்டுரையில் தனது தமிழ்மொழி உச்சரிப்பையும் இலக்கியத்தேடலையும் ஊக்குவித்ததோடு, உள்ளார்ந்த ஓவியக்கலை ஆற்றலை இனம் கண்டு வளர்த்தவர் தனது ஆசிரியர் சந்திரசேகர சர்மா அவர்கள்தான் என்று பதிவுசெய்துள்ளார்.
1999 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் பிச்சையப்பா, சந்திரசேகரனுக்காக எழுதிய வாழ்த்துக்கவிதையையும் பதிவுசெய்து, அவர் பற்றிய குறிப்புகளுடன் தமது நூலின் மூன்றாவது பதிப்பில் பின்னிணைப்பாக சேர்த்துக்கொண்டதை நெகிழ்ச்சியுடன் சொன்னார் சந்திரசேகரன்.
நாவலப்பிட்டியில் இளம் எழுத்தாளர்கள் சங்கம், கலைமகள் படிப்பகம் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் இயங்கியிருக்கும் சந்திரசேகரன், அந்தப்பிரதேசத்தில் இலக்கியப்போட்டிகளையும் நாடகங்களையும் நடத்தியிருக்கிறார்.
கலைமகள் படிப்பகத்தின் ஆண்டுவிழாவில் தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனின் கிம்பளம் என்ற நாடகத்தை மேடையேற்றியதுடன் , அவருடன் கடிதத்தொடர்புகளையும் பேணியிருக்கிறார். மு.வ. அவர்களின் நூல்கள் அன்றைய வாசகர்களை பெரிதும் கவர்ந்திருந்தமைக்கு அவருடைய மொழியாளுமையும் ஒரு காரணம். முக்கியமாக இளம் எழுத்தாளர்கள் - மாணவர்கள் அவருடைய நூல்களை விரும்பிப்படித்தனர்.
சந்திரசேகரனும் கலைமகள் படிப்பகத்திலிருந்து மு.வ. அவர்களின் நூல்களிலிருந்து பெறுதியான கருத்துக்களை தெரிவுசெய்து, ஒரு தனி நூலை தொகுத்திருக்கிறார். அதனை அச்சிட்டு வெளியிடுவதற்காக மு.வ. அவர்களுக்கு கடிதம் எழுதி அனுமதி கோரியிருக்கிறார்.
ஆனால், மு.வ. விரும்பவில்லை. ஏற்கனவே வந்துவிட்ட நூல்களிலிருப்பவற்றை மீண்டும் தொகுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. பின்னர் மு.வ. மறைந்த வேளையில் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் கேட்டதற்கு இணங்க, அஞ்சலிக்குறிப்புடன் டாக்டர் மு.வ. மொழிகள் என்ற தலைப்பில் சுமார் ஆறுமாதங்களுக்கு மேல் தொடர் பத்தி எழுதி, தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார் சந்திரசேகரன்.
இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் மாணவ ஆசிரிய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் இவர், விஞ்ஞான பாடங்களை நாடக வடிவிலும் தயாரித்து ஒலிபரப்பினார். அத்துடன் அகல் விளக்கு, மாணவர் அரங்கு, அறிவியல் அரங்கு முதலான தொடர் நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்.
இவர் எழுதிய விஞ்ஞானப்பாடமொன்று, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒலிப்பதிவு நாடாவாக வட்டாரக்கல்வி அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட விஞ்ஞானக்கருத்தரங்கில் பிரிட்டிஷ் கவுன்சில், யுனெஸ்கோ ஆலோசகர்கள் முன்னிலையில் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் அது பி.பி.சி. வானொலிக்கும் எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.
நல்லொழுக்கம் சுற்றாடல் பாதுகாப்பு ஆலோசகரகவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும் சந்திரசேகரன், தன்சானியாவில் நடந்த சர்வதேச மாநாடொன்றிலும் கலந்துகொண்டவர்.
உளவள நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சாந்திகம் தொண்டு நிறுவனத்தில் திட்ட இணைப்பாளராகவுமிருந்தவர்.
தேர்ந்த வாசகராக, விஞ்ஞான ஆசிரியராக, எழுத்தாளராக ஆய்வாளராக, சமூகச்செயற்பாட்டாளராக வாழ்ந்திருக்கும் இவரிடம் குடியிருக்கும் எளிமையே, இவருடைய வலிமை.
அவுஸ்திரேலியா சிட்னியில் நடந்த தவில்மேதை தட்சணாமூர்த்தி நினைவரங்கு ஆவணப்பட வெளியீட்டிலும் உரையாற்றினார். அத்துடன் அவுஸ்திரேலியா ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலியில் நீண்டதொரு நேர்காணலையும் வழங்கினார். அக்காலப்பகுதியில் இலங்கையில் மறைந்த நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன் பற்றிய நினைவுரையையும் மெல்பனில் நிகழ்த்தினார்.
இவ்வாறு பல நினைவுகளை எம்மிடம்
தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுள்ள எழுத்தாளர்
சந்திரசேகர சர்மா அவர்களுக்கு எமது இதய அஞ்சலி.
---0---
No comments:
Post a Comment