சிங்கப்பூர் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ் மொழி விழா 2019: “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்”


அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆறாவது ஆண்டு நிகழ்வு உமறுபுலவர் தமிழ்
மொழி நிலையத்தில் சனிக்கிழமை 20.04.19 மாலை சிறப்பாக நடந்தேறியது.‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’
என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் புத்தாக்கத்தை வெளிக்கொணறியதோடு, அவர்களின்
எதிர்கால எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தது.

மொத்தம் பதினாறு பள்ளிகளைச் சேர்ந்த நாற்பத்தி ஐந்து மாணவர்கள் இந்த ஆராய்ச்சி விளக்க போட்டியில்
கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் பரிசைப்பெற்ற மாணவர்கள் தங்களுடைய
படைப்புகளை மேடையில் படைத்தனர். தொழில்நுட்பத்தில் தமிழை வேறு எந்தெந்த வகையிலெல்லாம் புகுத்துவது
என்பதைப் பற்றி பல புதிய யோசனைகளை முன்வைத்த மாணவர்களின் படைப்புகள், பார்வையாளர்களை
வாயடைக்கச் செய்தது. உள்ளங்கை நெல்லிக்கனியாய் நம் வாழ்வை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு
எளிமைப்படுத்தி இருக்கும் தொழில்நுட்பத்தில், தமிழாக்கத்தின் அவசியத்தையும் மாணவர்கள் உணர்த்தினர். தமிழையும்
மற்ற ஆதிக்க மொழிகளைப் போல, அடிப்படை மொழியாக (Core Language) கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல
புதிய யோசனைகளை முன்வைத்தனர். அதோடு, விளையாட்டு, போட்டித் தேர்வு, கேள்வி- பதில் மன்றம் கொண்ட ஒரு
பொது வலைத்தளத்தை உருவாக்கி அதன் வழியாகக் கற்றல் கற்பித்தலைக் கொடுக்க வேண்டும் என்பதை யுவபாரதி
மாணவி சுபிக்க்ஷா விளக்கினார். மேலும் உலகளாவிய நிலைப்படுத்துதல் அமைப்பைத் (GPS) தமிழில் கொண்டு
வருதல், யதார்த்த மெய்நிகர் (VIRTUAL REALITY) வாயிலாக இதிகாசகதைகளை பள்ளி மாணவர்களுக்குக் கொண்டு
செல்லுதல் என்று கல்வி, சுற்றுலா, போக்குவரத்து போன்ற தொழில் நுட்பத்தளங்களில் தமிழை சேர்க்க வேண்டும் என்ற
சிந்தனையும் படைக்கப்பட்டது. தமிழ் மொழி உலக தரத்தில் இருக்க 100% தனி நபர் முயற்சி இருக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி தங்கள் ஆராய்ச்சியை செருக்குடன் படைத்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்; என்ற பெருமைகளைக் கொண்டுள்ள தமிழர்களின் சிந்தனைகளும்,
செயல்களும், எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழை முன்னிறுத்த எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றியும்
மாணவர்கள் கருத்துரைத்தனர். இறுதியாக, விழாவிற்கு சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர் திரு. முத்து நெடுமாறன்
அவர்கள், இத்தலைப்பின் அடிநாதத்தை விளக்கினார். இதுவரை செய்த கண்டுபிடிப்புகளை நாம் அதிகம் பயன்படுத்தும்
போதுதான், தமிழ் மொழி உச்சத்தை அடைய முடியும் என்பதை நமக்கு நினைவூட்டிச் சென்றார்.
இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துரு வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் நீண்டகாலமாக ஈடுபட்டு
வரும் திரு. முத்து நெடுமாறன், முரசு அஞ்சல் மென்பொருளின் வடிவமைப்பாளர் என்பதோடு செல்லினம்
குறுஞ்செயலியின் வடிவமைப்பாளரும் நிறுவனரும் ஆவார். திரு. முத்து நெடுமாறன், மலேசியாவில் இருந்து,
குறுஞ்செயலி (மொபைல் எப்) தொழில்நுட்பத் தளத்தில் வெளிவரும் ஒரே தமிழ் இணைய ஊடகமான ‘செல்லியல்’
மின்னூடகத்தின் நிறுவனரும் வடிவமைப்பாளருமாவார்.

நிகழ்ச்சியின் வரவேற்புரையை சங்கத் தலைவர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் வழங்கினார், வளர் தமிழ் இயக்க
தலைவர் ராஜாராம் உட்பட பல அமைப்புகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும்
அண்ணாமலைப் பல்பலைக்கழக முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவினை
சிறப்பித்தனர், நன்றி உரையை திரு. ராஜேஷ் அவர்கள் வழங்கினார். விழாவினை தொடக்கம் முதல் இறுதி வரை
விறுவிறுப்புபாக வடிவமைத்து ஏற்பாடு செய்துயிருந்தார் ஏற்பட்டுக் குழுத் தலைவர் திரு முரளி கலியமூர்த்தி அவர்கள்.
“தமிழைப் பயன்படுத்துவோம், தமிழில் பெயர் சூட்டுவோம்”

செய்தி : நிருபமா பாலாஜி





No comments: