இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்
தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வீடு முற்றுகை
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி
இதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்
தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் - பொலிஸ் விசாரணையில் தகவல்
ஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை நடவடிக்கை
இலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்
தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்
தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை - நியூஸிலாந்து பிரதமர்
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ !
தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ!
சாய்ந்தமருதில் வெடிச்சத்தம் ; பரஸ்பர துப்பாக்கிச் சூடு ? ஐ.எஸ். பதாகை மீட்பு ; 7 பேர் கைது
ஸஹரானின் வாகன சாரதியிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் : ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்- இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பேன்- கோத்தபாய
தொடர்கிறது பயங்கரம் : சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 சடலங்கள் மீட்பு ! - படங்கள் இணைப்பு
தற்கொலை தாக்குதல் குறித்து பிரதமர் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல் என்ன?
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு வவுணதீவு கொலையுடன் தொடர்பு
தொடர் தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் கைது
இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்
21/04/2019 தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷங்ரில்லா, சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இன்று காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் குண்டுத் தககுதல்கள் இடம்பெற்றன.
இந்த ஆறு சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்கள் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன் பின்னர் 2.30 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மூவர் தெமட்டகொட மஹவில பூங்கா பகுதி சொகுசு வீட்டில் இடம்பெற்ற குன்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த 8 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை செய்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொறுப்பு குற்றப் புலனயவுப் பிரிவின் (சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை வரை 13 பேர் கைது செய்யப்ப்ட்டிருந்தனர்.
அவர்களில் மூவர் தெமட்டகொடை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஒருவர் வெடிபொருள் எடுத்து வந்த வேனின் சாரதியாவார்.
ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டரகள் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாத போதும், நேற்று மாலை வரை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை மையபப்டுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையிலான காலப்பகுதியில் 77 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 261 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் 100 பேர் வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேபோல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில) இரு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 6 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களாவர்.
மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 51 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு வடக்கு போதன அவைத்தியசாலையில் ( ராகம) 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 32 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் கம்பஹ வைத்தியசாலையிலும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதங்களில் இன்று மாலையாகும் போது 35 வெளிநாட்டவர்களின் சடல்ங்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மொரோக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவ்ர்கள் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார். நன்றி வீரகேசரி
தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வீடு முற்றுகை
26/04/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சிலர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று ஜலால்தீன் வீதி, அட்டாளைச்சேனை நான்காம் பிரிவில் உள்ள வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த வீட்டினை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பண்டாரவின் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடந்த 19 ஆம் திகதி குறித்த வீட்டினை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு குடியிருந்த சிலர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கிடைத்த தகவலினைத் தொடர்ந்து குறித்த வீடு நேற்று மாலை முதல் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
வாடகைக்கு பெறப்பட்ட இவ்வீட்டில் ஆறுபேர் அடங்கிய குடும்பமொன்று தங்யிருந்ததாகவும், அவர்களுள் இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும், சிறுபிள்ளையொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நேற்று அதிகாலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கணனி, ஹாட் டிஸ்க், தகவல் சேகரிப்பு பென் டிரைவர் ஒன்றும் சில சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும், பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நான்கு நாட்களுக்குள் தங்கியிருந்த இவர்கள் புதிய பல வீட்டு உபகரணங்கள், புதிய குளிர்சாதனப் பெட்டி போன்ற ஆடம்பரப் பொருட்கள் பலவற்றை கொள்வனவு செய்து பாவித்துள்ளனர். இவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வேன் வண்டி தொடர்பாகவும் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி
22/04/2019 கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்.பல்கலை வளாகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்
23/04/2019 நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த 26 பேரில் சி.ஐ.டி.யால் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்கின்றனர். தம்புள்ளையில் கைதுசெய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர உறுதி செய்தார்.
மேலும் மாதம்பை பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும் கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உப கரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வத்தளை - எந்தரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச பொலிசார் (இன்டர்போல்) சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
இதேவேளை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் - பொலிஸ் விசாரணையில் தகவல்
23/04/2019 தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க தலைமையிலான குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இந் நிலையில் இந்த தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக , ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் நாடளாவிய ரீதியில் இந்த குண்டுத் தககுதல்கள் தொடர்பில் 55 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர வீரகேசரிக்கு தெரிவித்தார்.
இந்த 26 பேரில் சி.சி.டி.யால் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்குகின்றனர். தம்புள்ளையில் கைதுசெய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர வீரகேசரிக்கு உறுதி செய்தார்.
இவற்றை விட மாதம்பை பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும் கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உபகரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைவிட வத்தளை - எந்தேரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச பொலிசார் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றிய வேனும், சோதனை செய்த வீடும்
இதேவேளை கொழும்பு தாக்குதல்களுக்கு வெடிபொருட்களை எடுத்து வந்ததாக கூறபப்டும் வேனை நேற்று முன் தினமே வெள்ளவத்தை பொலிசார், தமது பொலிச் பிரிவின் இராமகிருஷ்ண மிஷன் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர். இந் நிலையில் அந்த வேனின் சாரதி கொடுத்த வாக்கு மூலத்தின் படி, ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடாத்த வந்த தற்கொலைதாரிகளில் ஒருவர் தங்கியிருந்து தாக்குதல்களை திட்டமிட்டு தயாரானதாக கூறப்படும் பாணந்துறை, சரிக்காமுல்ல பகுதியைச் சேர்ந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளரையும் வெள்ளவத்தை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் ஷெங்ரில்லா தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி புகைப்படத்தை காட்டி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கே தான் வீட்டை வாடகைக்கு கொடுத்ததாகவும், வாடகைக்கு பெறும் போது உயர்ந்த மெல்லிய தோற்றம் உடைய மற்றொருவரும் உடன் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் அந்த வீட்டில் இருந்து ஷெங்ரில்லா தாக்குதலுக்கு பயன்படுத்தி வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில திரவியங்கள், குண்டு கையாளும் திட்டம் அடங்கிய ஆவணம், கையடக்கத் தொலைபேசி பாகங்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் நேற்று அவ்வீடு அரச இரசாயன பகுப்பாய்வாளரின் சோதனைக்குட்பட்டதுடன் தற்போது அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிரதான சூத்திரதாரி
இந் நிலையில் ஷெங்ரில்ல ஹோட்டலில் இரு தர்கொலை குண்டுதற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவர்களில் மொஹம்மட் சஹ்ரான் எனும் நபரே தொடர் குண்டுவெடிப்புக்களை நெறிப்படுத்திய சூத்திரதாரி என இதுவரையிலான விசாரணைகளை வைத்து பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கின்றது. அவர் தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவர் எனும் பெயரில் தோன்றியவர் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந் நிலையில் இவர் தொடர்பிலேயே கடந்த 11 ஆம் திகதி தேசிய புலனயவுப் பிரிவு இந்த தாக்குதல் திட்டம் குறித்து எச்சரிந்திருந்தது. எனினும் அந்த உளவுத்துறை எச்சரிக்கை பொலிஸ் மா அதிபர் ஊடாக விஷேட பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்கவுக்கு அனுப்பட்டு அதிதிகளின் பாதுகாப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த உளவுத்துறை அறிக்கையில் சஹ்ரானின் கீழ் அவரது குழ்வினர் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தககுதல் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தெமட்டகொடை சம்பவமும், சின்னமன் கிரான்ட் - கிங்ஸ்பெரி தககுதல்களும்
இதனிடையே தெமட்டகொட மஹவில கார்ட்டின் சொகுசு வீட்டில் நேற்று முன்தினம் இரு வெடிப்புக்கள் பதிவாகின. அதில் ஒன்று பொலிச் அதிகாரிகள் மூவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் எனவும் மற்றையது தற்கொலை குண்டுத் தாக்குதல் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதனிடையே வெடிப்பு இடம்பெற்ற குறித்த வீட்டின் உரிமையாளரின் 33 வயது மகனான இம்சான் மொஹம்மட் இப்ராஹீம், 31 வயதான இல்ஹாம் அஹமட் இப்ராஹீம் ஆகியோரே சினமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடாத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் அந்த ஹோட்டலில் 8 ஆம் மாடியில் 819 ஆம் இலக்க அறையில் தங்கிருந்தமை விசாரணையாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தாரியின் பயணப் பாதையும் கண்டறியப்பட்டது. இதனை மையப்படுத்திய விசாரணைகளிலேயே அவர்கள் வந்த சொகுசு காரின் பயணப் பாதை தொடர்பில் சி.சி.ரி.வி. சாட்சிகளை அடிப்படையாக கொண்டே பொலிசார் மூவர் அவ்வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.
தெமட்டகொடை வீட்டில் நடந்தது என்ன ?:
இதன்போதே பொலிசார் அவ்வீட்டின் மேல் மாடியை சோதனை இடச் சென்ற போது கீழ் மாடியில் இருந்த நபர் ஒருவர் ரிமோர்ட் ஊடாக மெல் மாடியில் குண்டை வெடிக்கச் செய்து பொலிசாரை கொலை செய்துள்ளார் என சந்தேகிக்கபப்டுகின்றது. இந் நிலையில் வீட்டு உரிமையாளரின் மகனான 30 வயதுடைய இஜாஸ் அஹமட் இப்ராஹீம், பொலிசாரால் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில் அவரது இளைய சகோதரரான இஸ்மாயீல் அஹமட் இப்ராஹீம் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் அவ்வீட்டில் இடம்பெற்ற முதல் வெடிப்பின் பின்னர் பொலிஸ் அதிரடிப் படை வீட்டை சோதனையிடச் சென்றிருந்தது. இதன்போது அங்கிருந்த , செங்ரில்லா ஹோட்டல் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான இன்ஹாம் என்பவரின் மனைவி 25 வயதுடைய பாத்திமா ஜிப்றி மற்றும் இரு குழந்தைகளுடன் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததாக நம்பபப்டுகின்றது. இக்குண்டு அவரால் வெடிக்கச் செய்யப்பட்டதா அல்லது அதுவும் ரிமோர்ட் கொன்ட்ரோல் ஊடாக வேறு ஒருவரால் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த விசாரணைகளில் அவதானம் வெலுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே இரு நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சந்தேக நபர்களின் தந்தையான , தேர்தல் ஒன்றிலும் போட்டியிட்டுள்ள 65 வயதுடைய வர்த்தகர் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் என்பவரையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பல பகுதிகளிலும் மொத்தமாக 55 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நட்சத்திர ஹோட்டல்கள் மீதான தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் உருவத்தை சி.சி.ரி.வி. கமராவில் இருந்து கண்டுபிடித்து அவரையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும் நீர்கொழும்பு, கட்டான - கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் உருவம் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளியை வைத்து பொலிசார் தேடி விசாரித்து வருகின்றனர். அத்துடன் கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய நபர் தொடர்பிலும் சி.ஐ.டி. நேற்றும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
தெஹிவளை சம்பவம்:
இந் நிலையில் தெஹிவளை யில் இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், குறித்த தங்குமிடத்தின் சேவையாளர்கள் சந்தேகத்துக்கு இடமான இருவரை சோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. எவ்வாறயினும் அது தொடர்பில் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
ஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை நடவடிக்கை
23/04/2019 கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.
இதேவேளை பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை இறக்கியும் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் , பஸ்களும் சோதனையிடப்படுகின்றது. நன்றி வீரகேசரி
இலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்
23/04/2019 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது
ஐ.எஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐ.எஸ் அமைப்பின் போர்வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது
அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்குவைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்
24/04/2019 தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை - நியூஸிலாந்து பிரதமர்
24/04/2019 நியூஸிலாந்தின் கிரைஸ்சேர்ச் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் அமைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இக் கருத்து தொடர்பில் நியூஸிலாந்துப் பிரதமர் ஜெஸின்டா ஆர்டென், இலங்கைத் தாக்குதல் தொடர்பில் தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நியூஸிலாந்து கிரைஸ்சேர்ச் நகரில் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த தாக்குதலில் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமா அத் மற்றும் ஜே.எம்.ஐ ஆகிய அடிப்படைவாத அமைப்புக்கள் உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ !
24/04/2019 இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
அத்துடன் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுடன் இலங்கையிலுள்ள இரு பயங்கரவாத அமைப்புக்கள் செயற்பட்டுள்ளதாகவும் 9 தற்கொலை தாரிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அதிலொருவர் பெண் அடங்குவதாகவும் இரு தற்கொலைதாரிகளில் ஒருவர் லண்டலில் பட்டப்படிப்பையும் மற்றையவர் அவுஸ்திரேலியாலிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளரெனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் காணொளிகள் சர்வதேச ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன.
அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அடங்குகின்றனர். அதிலொரு தற்கொலை குண்டுதாரியின் மனைவி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலைசெய்து உயிரை மாய்த்துள்ளனர்.
வாசனைத் திரவிய வர்த்தகரின் செல்வந்த குடும்பத்தில் பிறந்த இரண்டு புதல்வர்களே கொழும்பின் பிரதான ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.எஸ். அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு தாக்குதல்களை ஏற்படுத்தி இலங்கையில் சுமார் 1000 பேர் வரையில் கொலைசெய்யவும் காயப்படுத்தவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.
தற்கொலைத் தாக்குதலில் உபைதா, அல்-முக்தர், ஹலீல், ஹம்ஷா, அல்-பரா, முஹம்மட், அப்துல்லா ஆகிய 7 பேர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஹம்ஷா என்ற தற்கொலைதாரி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலைத்தாக்குதலையும் கலீல் என்ற தற்கொலை தாக்குதல்தாரி நீர்கொழும்பு புனித செபஸ்ரியன் ஆலயத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மொஹமட் என்ற தற்கொலைதாரி தாக்குதலை மேற்கொண்டுள்ளார். போன்ற தகவல்கள் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
24/04/2019 தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகில் வீடொன்றை சோதனை செய்வதற்கு சென்றபோது குண்டு வெடிப்பில் பலியான கொழும்பு குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் காலஞ்சென்ற டப்ளியு.எம்.ரோஹண பண்டாரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பிலியந்தலை, பட்டுவந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,அன்னாரின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். நன்றி வீரகேசரி
தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ!
26/04/2019 நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக, பாதிமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையே பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் 071 8591771, 011 2422176, 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சாய்ந்தமருதில் வெடிச்சத்தம் ; பரஸ்பர துப்பாக்கிச் சூடு ? ஐ.எஸ். பதாகை மீட்பு ; 7 பேர் கைது
26/04/2019 கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென படைத்தரப்பு சந்தேகிக்கின்றது.
தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையாக இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே சந்தேக குழுவினருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை தேசிய உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றி வளைத்து, அதிரடிப் படையினரும் சி.ஐ.டி.ல் எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவினரும் அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகமும் முன்னெடுத்த விஷேட நடவடிக்கையிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
தேசிய உளவுத்துறைக்கு , சம்மாந்துறையில் உள்ள வீட்டில் தற்கொலை குண்டு அங்கிகள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே அந்த தகவல் சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களது ஆலோசனை பிரகாரம் இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளை மையம் ஆகியவற்றின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
இதன்போது அவ் வீட்டிலிருந்து குண்டு தயரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய உருளைகள் ஒரு இலட்சமும், 150 ஜெலட் நைட் கூறுகளும், மின் கலங்கள், வயர்கள், அமில வகைகள் என ஏராளமான வெடிபொருள் மூலக் கூறுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிட ஒரு மடிக்கணினி மற்றும் ட்ரோன் கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அதே வீட்டில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்களுக்கு பொறுப்பேற்று ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட புகைப்படம் மற்றும் காணொளயில் உள்ள நபர்கள் அணிந்திருக்கும் முகத்தை மறைத்திருக்கும் ஆடைகளை ஒத்த ஆடைத் தொகுதிகள் மற்றும் அப்படங்களின் பின்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையை ( பெனர்) ஒத்த பதாதையையும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஸஹரானின் வாகன சாரதியிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் : ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல்
27/04/2019 இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் 19 திகதி வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த பொலிஸாரை கத்தியால் தானே குத்தி கொலை செய்துள்ளதாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும் கல்முனை - சாய்ந்தமருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்- இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பேன்- கோத்தபாய
27/04/2019 ஜனாதிபதி தேர்தலி;ல் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்
ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும்உருவாக்கப்பட்ட புலனாய்வு வலையமைப்பையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் செயல்இழக்கச்செய்திராவிட்டால் குண்டுதாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அரசாங்கம் தயாராகயில்லாததன் காரணமாகவே தற்போதைய பதட்டநிலை உருவாகியுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது 100 வீதம்உறுதி என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
குண்டுவெடிப்புகள் எவ்வாறு இடம்;பெற்றன என்பது குறித்து அரசாங்கம் இதுவரை தெளிவான தகவல்களை வழங்கவி;ல்லை என குறிப்பிட்டுள்ள அவர் யார் இதற்கு காரணம் இலங்கை எதிர்நோக்கும் ஐஎஸ் ஆபத்து எவ்வளவு பாரதூரமானது என்பது குறித்தும் அரசாங்கம் எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குண்டுதாக்குதல்களிற்கு பின்னர் என்ன நடந்தது என்ற சரியான விபரங்களை வழங்காமல் பலர் பலரை குற்றம்சாட்டிவருகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
மக்கள் பெயர்களை எதிர்பார்க்கின்றனர், எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டது என்ற விபரங்களை எதிர்பார்க்கின்றனர்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பதும் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை மீளப்பலப்படுத்துவதுமே எனது முதல் நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இஸ்லாமிய தீவிரவாதம் பாரதூரமான ஒரு பிரச்சினை நீங்கள் இந்த குழுக்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அவர்களை செயல்இழக்கச்செய்யவேண்டும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
2011 இல் நான் 5000பேரை உள்ளடக்கிய இராணுவபுலனாய்வு பிரிவொன்றை உருவாக்கினேன், அதில் சிலரிற்கு அராபியமொழி தெரிந்திருந்தது எனகுறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய குழுக்கள் சிலவற்றின் மத்தியில் காணப்பட்ட தீவிரவாதபோக்கை கண்டுபிடிப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் அந்த பிரிவை கலைத்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை,அவர்கள் நல்லிணக்கம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
தொடர்கிறது பயங்கரம் : சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 சடலங்கள் மீட்பு ! - படங்கள் இணைப்பு
27/04/2019 கல்முனை - சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையதெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண்ணொருவரும் சிறு பிள்ளையொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லையென் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சடலங்கள் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதல் குறித்து பிரதமர் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல் என்ன?
27/04/2019 இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தங்களை பின்பற்றி மேலும் பலர் தாக்குதல்களை மேற்கொள்ளமுன்வருவார்கள் என எதிர்பார்த்திருக்ககூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஏன் பெருமளவு வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டு சென்றார்கள் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
மேலும் பலர் தங்களை பின்பற்றி தாக்குதலை மேற்கொள்ள முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தார்களா என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேலும் பல முஸ்லீம்களை தாக்குதல்களை மேற்கொள்ள தூண்டும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் அவ்வாறு இரண்டாவது சுற்று தாக்குதல்களை மேற்கொள்பவர்களிற்கு வெடிமருந்துகள் அவசியம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசாரணையாளர்கள் 140 ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் இனம் கண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள பிரதமர் இவர்களில் அரைவாசி;க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சிலர் தப்பியோடியவண்ணமுள்ளனர் இவர்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் திறமையுள்ளவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய மேலும் பலரை ஈர்க்கும் முயற்சிகள் இடம்பெறலாம் எனகருதுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
வெடிபொருட்களை பயன்படுத்துவது குறித்த பாரிய திட்டமொன்று உள்ளது என்ற சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் யாரை கொண்டுவரப்போகின்றார்கள் என்பதே கேள்வி எனவும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு வவுணதீவு கொலையுடன் தொடர்பு
28/04/2019 கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூவருக்கு, கடந்த ஆண்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
வவுணதீவு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வவுணதீவு வலையிறவு பாலம் பகுதியில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் போது பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன.
குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த இரண்டு துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தொடர் தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் கைது
28/04/2019 ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை 5.00 மணிளயவில் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment