மீள் வருகை ( யோகன் - கன்பரா )


( எல்லா வன்முறைகளிலும், யுத்தங்களிலும் மூன்று தரப்புகள் எப்போதும் தொடர்புபட்டிருப்பதாக நம்பியே இந்த உருவக கதை ஒரு புனைவாக எழுதப்பட்டது.  )                 
நீண்ட பகல் பொழுதின் இரைச்சல்களும், ஓலங்களும் , இரத்தமும் , தசைப் பிண்டங்களும், வெடி மருந்தின் கந்தக மணமும் நிறைந்திருந்த அந்த தேவாலயம் இருளின் அமைதிக்குள் மெல்லப் புதையத் தொடங்கியது. 
அனைத்துமே பீதியில் உறைந்து போய் விட்ட அந்த  இரவில், ஓடுகள்  சிதறிய கூரைக்குள்ளால் எட்டிப்  பார்க்க  பயந்த  நிலவும்  இல்லாது முழு இருளில்  மூழ்கிப் போய் பல நாழிகைகள் கழிந்த பின்னரே யாரோ தொண்டையை செருமும் ஒரு சிறு ஒலி அந்தப் அமைதியைக் கிழித்து எழுந்தது. 
அது இரத்த விளாறு விசிறப்பட்ட வெள்ளாடை அணிந்த  இறைகுமாரன் வாயிலிருந்தே எழுந்தது. பேரிடி போன்ற  வெடி குண்டின் வெக்கையும், புகையும் அவர் தொண்டையை கட்டிப் போட்டிருந்தது. 
பிறகு யாரோ பெண் விசும்பும் குரல்
‘யாரம்மா அது?’  அழுகை ஒலி கேட்ட திசையில் பார்த்துக் கேட்கிறார் இறைகுமாரன்.  கும்மிருட்டில் எதுவும் தெரியவில்லை
‘என்னைத்தெரியவில்லையா மகனே? ‘
‘அம்மா ! ’
‘மகனே ! ’
மரியாளின் குரல் உடைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகள் முன் நிகழ்ந்த துயரத்தின் சாயல்.  சிலுவைக்கு தொலைவில் நின்று அழுத அதே மனநிலைதான்.
‘இரத்தம் தோய்ந்த  உன் வெள்ளாடைகளைக்   கண்டதும் என்னையறியாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னே போய் விட்டது என் மனம்.’
‘இதே பூவுலகில் நான் முப்பத்தி மூன்று வருடங்கள் வாழ்ந்ததை மறந்து விட்டாயா அம்மா? நான் பூவுலகில் இறந்து 1986 வருடமாகியதும் எதோ  கணப்  பொழுது போலாகிவிட்டது  பார்த்தாயா? 
‘உலகையே ரட்சிக்க வந்தவனல்லவா? பிறந்த அன்றே ஒருவன் உன்னை கொல்ல  நினைத்தான். ஆனால்  கடைசியில்  ஊரே கூடி உன்னை சிலுவையில் ஏற்றி  விட்டதே?
‘பெத்லேகேமின் மாட்டுத் தொழுவில் வைத்தே என்னைக்  கொல்வதற்காக ஏரோது ராஜா தேடி அலைந்தானே? அதைச் சொல்கிறாயா?   
‘தன்னை வீழ்த்தி விட்டு யூதேயாவுக்கு நீ அரசனாகி விடுவாயோ என்ற அச்சத்தில் அன்று அவன் இருந்தான்.’
' மீகாவின் தீர்க்க தரிசனங்களை தவறாகப் புரிந்து கொண்ட முட்டாள்  அவன்.'
' யூதாவின் வம்சத்தில் வந்து இஸ்ரவேலை ஆளப்  போகிறவன் நீ என்றல்லவா  எழுதி வைத்தார் மீகா? ' 
' அம்மா நான் ஆளப்  பிறந்தவனல்ல.  பாவக் கட்டறுக்க  வந்த மக்களின் இரட்சகன்  என்று அவர் எழுதியிருக்க வேண்டும் '
‘பச்சைக் குழந்தை உன்னை பெத்தலகேமிலிருந்து, எகிப்துக்கு இரவோடிரவாக நானும் உன் தந்தை யோசேப்பும்  யாருமறியாமல் பயந்து, பயந்து கழுதையில் சுமந்து கொண்டு போனோமே. ஆனால்? …..’
‘ஆனால் என்னம்மா?   ஏன் நிறுத்தி விட்டாய் ?’
‘நீ தப்பி விட்டாய். ஆனால் நீ பெத்லேகேமில் தான் ஒளித்திருக்கிறாய்  என்று தவறாக ஊகித்து அங்குள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லாப் பிள்ளைகளையும் கொலை செய்தானே ஏரோது.’
‘அந்த இரவுகள்  எத்தனை கோரமானவை ? எத்தனை யூத தாய்மாரின் அழுகுரல் கேட்டிருக்கும்? ‘
‘அந்த அவலக்  குரல்களை என்னால் மறந்து விட முடியுமா?’
‘நான் அன்று குழந்தையாகவே ஏரோதின் கையால் இறந்திருந்தால் அந்த பல்லாயிரம் குழந்தைகள் எல்லாம் தப்பியிருக்கும் இல்லையா அம்மா?’
‘இன்றும் காலை என் கண்முன்னே இரத்த ஆற்றில் மிதந்தவை எத்தனை குழந்தைகள் ?’
‘அன்று நிகழ்ந்தது இன்று வேறு வகையில் தொடர்கிறது!.’ 
‘ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களா ?’
‘ பழி  வாங்க நினைப்பவன் ஒன்றுக்கு பத்தாகத்தானே செய்கிறான் ?'
அந்தக் கணத்தில் மெல்லிய காற்று திறந்திருக்கும் கூரை வழியே உள்  நுழைந்தது.  இரத்த வாடை கலந்த காற்று தேவகுமாரனின்  முகத்திலடிக்க  அவர் மூக்கை சுளித்துக் உண்டார்.
காற்றுடன் தொடர்ந்து வந்த ஒரு அசரீரி மேலிருந்து ஒலிக்கிறது.
'யாரது இந்நேரத்தில்?' இறை மைந்தன் அண்ணார்ந்து பார்த்து கேட்கிறார்.  
' அம்மாவும், மகனும் நலமாக இருக்கிறீர்களா?’
அந்த அசரீரி பரமண்டலங்களில் உறையும் யெகோவாவின்  குரலென்று அறிய தேவ குமாரனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
'பரம பிதாவே நிகழ்ந்ததைப்  பார்க்காமலா இருந்திருப்பீர்கள் ?’
பரம பிதா மௌனமாக இருந்தார்.
‘ பரமண்டலத்தில் உள்ள  உங்கள் சித்தம் பூமியில் இவ்வாறுதானா செய்யப்படவேண்டும் என்று நினைத்தீர்கள்?’
‘இறை குமாரன் மீண்டும் பிறப்பதற்கான வேளை வந்து விட்டதையும்,  ரத்தம்  சிந்தி மரிப்பதற்கான  காலம் கனிந்து விட்டதையும் எப்படி அறியாதிருந்தாய் ?’
 ‘இல்லை. இல்லை. வேண்டாம் பரம பிதாவே. !’
‘ஏன் மறுக்கிறாய்?’
‘அந்த சிலுவையில் தொங்கி நான் பட்ட  வேதனை  என் கால்களிழும் கைகளிலும் இன்னும் தீக்காயங்களின்  தழும்புகளாய்  வலித்துக்  கொண்டிருக்கிறது.’
மாதா இப்பொது குறுக்கிடுகிறாள்.
' மகனே உன்னை அன்று சிலுவையின் கொன்ற போது தூரத்தில் நின்று அழுது கொண்டிருந்ததேயன்றி என்னால் எதுவும் செய்து விட முடியவில்லையப்பா! '
'நான்தான் மூன்றாம் நாளில் எழுந்து விட்டேனே அம்மா? '
' நீ உயிர்த்த அதே நாளில் நான் வீழ்ந்து கிடக்கிறேனே ?'
அப்போதுதான் மாதாவின் சிலை உடைந்து விழுந்து கிடக்கிறதென்பதை தேவகுமாரன் புரிந்து கொண்டார்.
இவர்களின் பேச்சு எதையும் கேட்காதது போல அசரீரி தொடர்ந்து பேசிக்கொண்டு போகிறது
‘மீண்டும் ஒரு புது உலகம் உருவாகும்! புதிய வானமும் . புதிய பூமியும் தோன்றும்! ‘ சொல்லிக்கொண்டே போனது அசரீரி.
‘பரம பிதாவே நீர் அன்றும் இப்படித்தான் சொன்னீர். இரண்டாயிரம் வருடங்களுக்கு  முன். ஆனால்  என்ன நிகழ்ந்தது.? நாய் வாலை  நிமிர்த்த முடியுமா?’
‘இரடசிக்கப்பட்ட  ஒரு புதிய தலை முறை தோன்றும்.’  தொடர்ந்து  சொல்லிக்கொண்டே போனது அசரீரி.
‘இது அதர்மமும் அநீதியும் நிரம்பிய உலகம். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கப்போவதில்லை. ‘
'எத்தனை உலகப் போர்கள் அரங்கேறி முடிந்து விட்டன? ஆயினும் மனிதனுக்கு இன்னும் கொலை வெறியினின்றும் விடுபட முடியவில்லை.'
‘சமாதானத்தை ஒரு நதியைப் போல ஓடப்  பண்ணுவேன்.  அது பூமியின் கடையாந்தரம் வரைக்கும் ஓடி சகல ஜாதிகளையும் ஒன்றிணைக்கும்.’
‘மகனே  சிலுவையில் தொங்கிய வேதனையிலும்  யூதர்களை மன்னித்தாய்!. அதை யாரும் எப்போவாவது பின்பற்றினார்களா?’
‘மீண்டும்  மீண்டும் பாவபட்ட  சந்ததியின் சங்கிலித்தொடர் இது.  உமக்கு மீண்டும் நான்தானா கிடைத்தேன் பலிக்கடா ?’
‘யுத்தங்களும் வன்முறைகளுமற்ற ஓர் உலகம்.’  சொல்லிக்கொண்டே போனது அசரீரி.
பரம பிதாவின் குரல் ஒரு எதிரொலி போல மீண்டும் மீண்டும் ஒரே அர்த்தம் பொதிந்த  வார்த்தைகளை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
மாதா இப்போது தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.   இரண்டாயிரம் ஆண்டுகள் முன் நிகழ்ந்த அந்த  வேதனையை அனுபவித்தவள் என்பதால்.
தேவ குமாரன் பீதியில் உறைந்து போய் வாயடைத்து நின்றார். அவராலும் எதுவும் செய்து விடமுடியாது. அவரும் ஒரு கருவிதான் என்பதை உணர்ந்திருந்தார்..
கனத்த இருளின் மௌனத்தில் தூரத்தில்   எங்கோ ஒரு வெடி சத்தம் கேட்டது.
அந்த வெடியின் ஓசையிலும் அதன் அதிர்விலும் மாதாவின் அழு குரல் அமிழ்ந்து போனது.  ஒரு தீச்சுவாலை மேலெழுந்தது  போல காற்றின் குவியலொன்று அசரீரியின் குரலையும் கூரை வழியே தூக்கிச் செல்ல மீண்டும் கனத்த அமைதிக்குள் ஆழ்ந்தது அந்த தேவாலயம்.
-->No comments: