அகவை 90 காணும் கவிஞர் அம்பி - கவிஞர் செ.பாஸ்கரன்

.அகவை 90 காணும் கவிஞர் அம்பி  -  செ.பாஸ்கரன்கொஞ்சு தமிழ் நிதமெடுத்து 
 கொஞ்சி விளையாடும் 
விஞ்சு தமிழ் வித்தகனார் 
வியக்கவைத்த கவி தந்து 
எங்கள் மனங்களிலே 
இடம் பிடித்த அம்பி ஐயா 
தன்பேனா முனையினிலே 
தமிழ் உலகை ஒன்றிணைத்தார்  
புன்முறுவல் தவளவிட்டு 
புவியோரை அரவணைத்தார் 
நல்ல பெரும் கவிஞர் 
நாடெல்லாம் போற்றுகின்ற 
வெள்ளிமுடிப்  பாவாணர் 
சிறுவர்க்கு  இலக்கியத்தை 
செப்பிவிட வேண்டுமென 
அம்பி கவிதை என்று 
அழகான கவிதந்தார் 
சாதனைகள் செய்பவரை 
போற்றுகின்ற பண்பாளன் 
மருத்துவத்தின் முன்னோடி 
சாமுவேல் கீரீனுக்கு 
ஆய்வு நூலொன்றை 
அழகாக எழுதி வைத்தார் 
இலங்கை அரசாலே 
முத்திரையும் பதிக்கவைத்தார்


புலம் பெயர்ந்தோர் வாழ்வுதனை 
சித்தரிக்கும் ஓர்பாவில் 
சாதனைகள்  செய்த பலர் 
கூனிக், குறுகி, நடை தளர்ந்து 
வேற்றுலக மாந்தர்கள் போல்  
வெந்து படும் துயரை 
"அந்தரஉலகமென்று"
அழகு தமிழ்  குறும் பாவில் 
அற்புதமாய் சொல்லிவைத்தார்
சொற்சிலம்பமிட்டு 
நாடகங்கள் ,கவிவரிகள் 
அரிச்சுவடி,
வேதாளம் சொன்ன கதை 
எத்தனை எழுதி வைத்தார் 
விழி தூக்கிப் பார்க்கின்ற 
விந்தைகள் போல் தெரிகிறது  
உன்பெருமை சாற்றுதற்கு 
என்னால் முடியாது 


குழந்தைகளை கவிதைகளால் 
கவர்ந்தெடுத்த பெருங் கவி நீ 
புலம் பெயர்ந்த தமிழர்க்கு 
பாடநூல்  தந்தவன் நீ 
"ஓடிடும் தமிழனே 
ஒருகணம் நில்லடா 
பேசடா தமிழினை 
வீட்டிலே"- என்று நீ 
வீசினாய் கணைகளை 
கவியெனும் கல்லினால் 
எழுந்தனர் தமிழர் குழந்தைகளோடு
விரைந்தனர் அவர்கள் 
தமிழாலயம் நோக்கி 
பரந்தது  உலகெலாம் 
அழகிய தமிழ் மணம் 
பழமரம்  பழுத்தால் 
பறவைகள் கூடும் 
கவிஞர் அம்பியைச் சுற்றி 
அறிஞர்கள் கூடுவர் 
பப்புவா நியூகினி 
பாடிய கவிஞன் 
பறந்தே வந்தான்
பெருங்கடல் தாண்டி 
சிட்னி மண்ணில் 
தமிழ்மரம் நாட்டினான் 
தமிழைப் பேசியே 
செழுமையை ஊட்டினான்
மனைவி, மக்கள்
மகள் வழிப் பேரர் 
தமிழால் இணைந்தவர்
தரணியை போற்றியோர்   
உற்றார், உறவினர்
உயரிய நண்பர்கள்
சுற்றம் சூழ அழகிய வாழ்வு 
அகவை தொண்ணூறை 
தமிழாய், கவியாய்,
அம்பி மாஸ்டராய் 
அம்பி ஐயாவாய்,
அம்பி தாத்தாவாய் 
அழகுற வாழ்ந்த ஆழிக் கடலே 
வெள்ளைத் தேசத்தில் 
விரிந்து கிடந்து 
தமிழில் கவியை
பாடிடும் குயிலே 
இன்னும் பற்பல
ஆண்டுகள் வாழ 
பாடிப்  பணிகிறேன்  
வாழி பல்லாண்டுகள் 

நட்புடன் 
கவிஞர் செ.பாஸ்கரன் 
28.04.2019

No comments: