அம்பி 90 பாராட்டு நிகழ்வும் சிட்னிவாழ் தமிழர்களும் - யசோதா பத்மநாதன்

.


      
’மானிலம் வாழ்கவென மழை பொழிகிறது. இருந்தும் உலக மக்களிடம் இருந்து அது எதுவித பிரதி உபகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை; கைமாறு வேண்டாமல் மனித சமுதாயம் பயன் பெற தம் வாழ்வை அர்ப்பணிப்பவரே உண்மையில் உயிர்வாழ்பவராவார்’ - இவ்வாறு தான் எழுதிய புத்தகம் ஒன்றில் கவிஞர் அம்பி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு வாழ்கிறவர் அவர். குழந்தைகவி. திரு. இராமலிங்கம். அம்பிகைபாகர்.
அவருக்கான பாராட்டு நிகழ்வொன்று நேற்றய தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு சிட்னி வாழ் தமிழ் மக்களால் பெண்டில்கில் யாழ் நிகழ்வரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யார் இந்த ‘சிட்னிவாழ் தமிழர்கள்’ எவ்வாறு இவர்கள் இப் பெயரைச் சூட்டிக் கொள்ளலாம் என்ற வினா எழலாம். அது நியாயமான கேள்வி தான். இங்கு பல்வேறு துறைசார் அமைப்புகள் பல்வேறு இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டு இயங்கி வருவது நாம் அறியாத ஒன்றல்ல. அவர்கள் தாம் சார்ந்த அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்பால் அந்த அமைப்பின் சாயலோ நோக்கமோ எதுவும் இல்லாது எல்லோரும் ஒன்றிணைந்து ’சிட்னிவாழ் தமிழர்கள்’ என்ற மகுடத்தின் கீழ் இணைந்து பாராட்டிக் கொண்டாட தற்காலிகமாக இணைந்த அமைப்பு தான் இந்தச் ’சிட்னிவாழ் தமிழர்கள்’









நான் அறிந்த வரை முதன் முதலாக ( தவறெனில் தெரியப்படுத்தவும்) வேறுபட்ட பல்வேறு இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டியங்கும் அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் இணைந்து ஒருமுகப்பட்டு ஒற்றுமையாகவும் விமரிசையாகவும் திறமையாகவும் கச்சிதமாகவும் மிகச்சிறந்த ஒத்துழைப்போடும் மண்டபம் நிறைந்து வழிந்த மக்கள் கூட்டத்தோடும் மனநிறைவாகவும் வெற்றிகரமாகவும் பாராட்டு நிகழ்வொன்றை முதன் முதலாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள்.
சிட்னிவாழ் தமிழ் சமூகத்தவரே இதற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சும்மாவா சொன்னார்கள்? அந்த மிடுக்கு இந்த நிகழ்ச்சியில் தெரிந்தது.
பல சமூக ஆர்வலர்களும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐயா அவர்களின் பணியினையும் சேவையினையும் குணத்தினயும் பாராட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பல்வேறு துறைசார்ந்த பிரமுகர்களும் பொன்னாடைகளும் கெளரவங்களும் விருதுகளும் ஐயாவுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். கூடவே Strathfield பாராளுமன்ற உறுப்பினர் Jodi.Mckay அம்மையார் ஐயா அவர்கள் அவுஸ்திரேலியத் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி பரிசுப்பத்திரம் ஒன்றைக் கையளித்தார்.







குழந்தைகள் தமிழ் கற்கவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு விளங்கிய ஐயா அவர்களின் முன் இங்கு பிறந்து வளரும் குழந்தைகள் அம்பி தாத்தாவின் பாடல்களையும் புத்தகங்களையும் படித்து பாடியும் பேசியும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தார்கள்.
இந் நிகழ்வின் போது விழா மலர் ஒன்றும் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதில் ஐயா அவர்களின் எழுத்தும் பணியும் வாழ்வும் அவருடன் பழகியவர்களின் அனுபவ வெளிப்பாடுகளும் கவிதைகளும் கருத்துரை வாழ்த்துரைகளும் வண்ணப் புகைப்படங்களில் ஐயா அவர்களின் வாழ்வு குறித்த ஒரு சின்ன வாழ்க்கை பெட்டகமும் பிரசுரமாகி இருக்கிறது.
இவைகள் எல்லாவற்றையும் பார்த்த படி மெளனமாக ஆனால் கூர்மையாக அவதானித்துக் கொண்டு இருந்த அம்பி ஐயா இறுதியில் ஏற்புரை வழங்கினார்கள். ஐயா அவர்கள் தம் ஏற்புரையில் டொக்டர் கிறீன் குறித்தும் தமிழில் பாரதி பாடிய,கனவை குறித்தும் பேசியதோடமையாது கையில் எந்தக் குறிப்பேடுகளும் வைத்துக் கொள்ளாது மனதின் ஞாபகக் குறிப்பேட்டில் இருந்து டொக்டர். கிறீன் குறித்து தான் எழுதிய புத்தகத்துக்கு சாகித்திய விருது பரிந்துரைக்கப் பட்ட போதும் அது தனக்கு வழங்கப்படாது போனமை குறித்தும் அதற்கான பின்னணிக் காரணங்கள் குறித்தும் விளக்கினார்கள். எனினும் அதற்காகத் தான் வருந்தவில்லை என்று குறிப்பிட்ட ஐயா அவர்கள் அதற்குப் பிறகு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அந்தப் புத்தகத்தை பொறுப்பேற்று ‘ தமிழ் மருத்துவ முன்னோடி டாக்டர் கிறீன்’ என்ற பெயரில் மீள் பிரசுரம் செய்தமையையும் டாக்டர். கிறீனுக்கான முத்திரை வெளியீட்டில் தான் கண்ட வெற்றி குறித்தும் அம்பி ஐயா பேசினார்கள்.
மேலும், வாழ்வு குறித்தும் விதி வலியது என்பது குறித்தும் வந்து விழுந்த அவரின் வார்த்தைகள் பக்குவமாக மனதில் சேகரித்து வைக்க வேண்டிய அனுபவ அமுத மொழிகளாக இருந்தன. ஒரு பெரிய வாழ்க்கையின் பாடம் அதற்குள் ஒழிந்திருப்பதாகத் தோன்றியது.



ஒரு அமெரிக்கன். மதபோதகர். வைத்தியர். பிரித்தானியர் கால ஆட்சியின் போது யாழ்ப்பாணம் வந்து, தமிழ் கற்று, தமிழ் மொழிமூலம் வைத்திய நூல்களை எழுதி - தமிழில் வைத்தியத்தோடு தொடர்பான சொற்களுக்கு சமனான தமிழ் சொற்கள் இல்லாத இடத்து அதற்குத் தமிழ் கலைச் சொற்களை உருவாக்கி அவற்றை தமிழகத்து தமிழோடு ஒப்பீடு செய்து அவர்களின் அங்கீகாரங்களைப் பெற்றதோடமையாது யாழ்ப்பாணத்து உள்ளூர் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைத்தியம் கற்பித்து அவர்களை வைத்தியர்களாக உருவாக்கி வைத்து விட்டுப் போன ஒருவர் குறித்து முதன்முதல் வெளிவந்த அந்த அற்புதமான வரலாற்று நூலுக்கு சாகித்திய விருது கிடைக்காமல் போன ஆதங்கம் எனக்கு சற்றே சுள்ளென்று சுட்டது…..
மக்களுக்கு ஐயா அவர்களோடு பேசவும் படம் எடுத்துக் கொள்ளவும் ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொள்ளவுமாக நேரம் ஒதுக்கப் பட்டிருந்ததால் நிகழ்வுகள் நன்றியுரையோடும் மாலைநேர தேனீர் சிற்றுண்டியோடும் நிறைவு பெற்ற போது அம்பி ஐயாவின் மகளாரோடு பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. ஐயா அவர்கள் புலமைத்துவத்தோடும் சிறந்த ஞாபக சக்தியோடும் கண்னாடி இல்லாமல் கிடைத்த விருதுகளை வாசித்ததைக் கண்டதன் ஆச்சரியம் குறித்தும் அளந்தெடுத்த அளவான வார்த்தைகளோடும் குரல் தெளிவோடும் பேசியதில் இருந்த வியப்பை நான் அவரின் மகளோடு பகிர்ந்து கொண்ட போது அவர் ஒரு நூதனமான உண்மை ஒன்றினை தெரியப்படுத்தினார்.
அம்பி ஐயா அவர்களுக்கு இடம்பெற்ற சத்திர சிகிச்சையின் போது குரல்வளையின் குரல்தரும் பகுதி பாதிக்கப்பட்டு விட்டிருந்ததாம். அதனால் பேச்சுவர சிரமப்பட்டிருந்த ஐயா அவர்களுக்கு ஒரு உண்மையை வைத்தியர்கள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அது நமக்கும் ஆச்சரியம் தரும் ஒன்று தான்.  நம் எல்லோருடய உடலிலும் இன்னொரு உபரியான குரல்தரும் பகுதி இருக்கிறதாம்.(sound box). அது பிரதான பகுதி வேலை செய்யும் போது போலியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்குமாம். இப்போது ஐயா அவர்களுக்கு பிரதான குரல் கொடுக்கும் பகுதி பாதிக்கப்பட்டு விட்டதால் இந்த உபரியான குரல் தரும் பகுதியை பயிற்சி கொடுத்து பேச வைத்திருக்கிறார்களாம்.





ஆனந்தமான ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது!
ஐயா அவர்கள் அந்தக் குரலினால் தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவரின் மகள்.
’நிலவில் இருந்து தவறி விழுந்து விட்டால் என்ன? கீழே விழுந்து விடாமல் பற்றிக் கொள்ள நட்சத்திரங்கள் இருந்தன; நாங்கள் நட்சத்திரங்களைப் பற்றிக் கொண்டோம்’ என்று சொல்வார்கள்.  
நேற்றயதினம் ஏப்பிரல் 28ம் திகதி சிட்னித் தமிழர்கள் அவரை ஒரு நட்சத்திரத்தில் வைத்துக் கொண்டாடினார்கள்.!
மக்களே திரண்டு வந்து வாழ்த்தி வணங்கி ஆசிர்வாதங்களைப் பெற்றுச் சென்றார்கள்.
அம்பி ஐயா! நம் இனத்துக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும் நம் எதிர்காலச் செல்வங்களுக்கும் நீங்கள் ஆற்றிய தொண்டுகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நம் உள்ளங்களில் மட்டுமல்ல; அவுஸ்திரேலிய தமிழர்களின் வரலாற்றிலும் நம் குழந்தைச் செல்வங்களின் நாவிலும் நீங்கள் என்றென்றைக்கும் நிறைந்திருப்பீர்கள்!
வாழி! நலம் சூழ!!

















































No comments: