தமிழ் சினிமா - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம்

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் விஜய், அஜித் ரசிகர்கள் போல் ஹாலிவுட்டில் மார்வல், டிசி காமிக்ஸ் ரசிகர்கள் அடித்துக்கொள்வார்கள், ஆனால், இதில் மார்வல் கையே சில வருடங்களாக அதிகம் ஓங்கியுள்ளது, இதன் உச்சமாக இன்று அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் திரைக்கு வந்துள்ளது, அத்தனை எதிர்ப்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி பார் முடியும் போது தானோஸ் ஒரு சொடக்கில் உலகின் மக்கள் தொகையை பாதியை குறைப்பான், அதை தொடர்ந்து அவெஞ்சர்ஸும் இதையெல்லாம் விட்டு ஒதுங்கி தங்கள் குடும்பம் என வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த நேரத்தில் ஆண்ட் மேன் மூலம் டைம் ட்ராவல் என்ற விஷயம் இருப்பதை உயிரோடு இருக்கும் சூப்பர் ஹீரோக்கள் கண்டுப்பிடிக்க, அந்த சோதனை மூலம் கடந்த காலத்திற்கு சென்று கற்களை எடுத்து, அதை வைத்து தானோஸின் சதி திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்.
அவர்கள் நினைத்தது போல் கற்களை எடுத்தார்களா? தானோஸை அழித்தார்களா? இதன் மூலம் அடைந்த லாபம், வலிகள் என்ன என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதலில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை தமிழில் பார்க்க நினைக்கின்றீர்கள் என்றால் கொஞ்சம் யோசித்தே போங்கள், ஏனெனில் கொஞ்சம் கூட விஜய் சேதுபதி வாய்ஸ் அயன் மேனுக்கு செட் ஆகவில்லை, டோனி ஸ்டார்கை காட்டும் போது இருக்கும் கைத்தட்டல், விஜய் சேதுபதி வாய்ஸ் வரும் போது சிரிக்க தொடங்கிவிடுகின்றனர்.
சரி, படத்திற்குள் செல்வோம், படத்தின் ஆரம்பத்திலேயே மரண படுக்கையில் விண்வெளியில் இருக்கும் அயன் மேனை கேப்டன் மார்வல் காப்பாற்றி பூமிக்கு கொண்டு வருகின்றார், அதை தொடர்ந்து ஆண்ட் மேன் குவாண்டம் உலகில் இருந்து வெளியே வருகின்றார், அவர் யோசனை படி கற்களை தேட பிரிந்து இருந்த அயன் மேன், கேப்டன் அமெரிக்கா உலகின் நலனிற்காக ஒன்று சேர்ந்து டைம் ட்ராவல் செய்கின்றனர்.
இதில் மூன்று குழுக்களாக இவர்கள் செல்கின்றனர், அதிலும், கேப்டன் அமெரிக்கா, கடந்த கால கேப்டன் அமெரிக்காவுடன் மோதுவது, அயன் மேன் தான் பிறப்பதற்கு முன்பே தன் அப்பாவை பார்ப்பது என அந்த காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யம்.
ஆனால், இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மார்வல் சீரிஸிலேயே மிதந்தவர்களுக்கு மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், புதிதாக பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஏமாற்றமே மிஞ்சி இருக்கும், அதிலும் முதல் பாதி என்ன தான்பா செய்ய போறீங்க என்று பொறுமையை சோதிக்கின்றது.
காமிக்ஸ் வெறியர்களை விடுங்கள், ஒரு ஹாலிவுட் ஆக்‌ஷன் படம் பார்க்க போகிறேன் என்ற மனநிலையில் சென்றால், சண்டை இப்போது வரும், அப்போது வரும் என கிளைமேக்ஸ் வரை நம்மை ஏமாற்றிவிடுகின்றனர், கிளைமேக்ஸ் 30 நிமிடம் தானோஸுடன் மோதும் காட்சி மிரட்டல், ஆனால், அதிலும் எந்த ஹீரோவை பார்ப்பது என்று நமக்கே குழப்பம்.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தான் மிகப்பெரும் பலம், அதிலும் கிளைமேக்ஸ் காட்சி மிரட்டியுள்ளனர். தானோஸ் காலம் கடந்தும் மனதில் நிற்கும் ஆல் டைம் பேவரட் வில்லனாக இருப்பார்.

க்ளாப்ஸ்

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் மிக முழுமையாக இருந்தது. டோனி ஸ்டார்க் முடிவு ரசிகர்களை கலங்க வைக்கின்றது.
எமோஷ்னல் காட்சிகள், கண்டிப்பாக தீவிர மார்வல் ரசிகர்கள் கண் கலங்குவார்கள்.
ஆண்ட் மேன் காமெடி கவுண்டர்ஸ். கிளைமேக்ஸ் காட்சிகள்
பல்ப்ஸ்
முதல் பாதி மிக மெதுவாக நகர்கின்றது.
படத்தின் ரன்னிங் டைம். மேலும், தார், ஹல்க் போன்ற சூப்பர் ஹீரோக்களை முழுமையாக பயன்படுத்தாது.
மொத்தத்தில் மார்வல் ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு அழகிய செண்ட் ஆப் விருந்தாகவும், புதிதாக பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறது இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.  நன்றி CineUlagam










No comments: