கடும்கோடையில் மலர்ந்த கலை, இலக்கிய, சமூகச்சிந்தனைகள் மெல்பனில் ஆவணப்படத்தயாரிப்பாளர் 'கனடா மூர்த்தி'யுடன் நடந்த கலை இலக்கிய சந்திப்பு ப. தெய்வீகன்



ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் கங்காருவை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதெல்லாம் அந்தக்காலம், கல்பனாக்காவை பார்க்கவேண்டும் என்று இங்கு வந்து ஒன்றரைக்காலில் நிற்பது இந்தக்காலம்.

அந்த வகையிலான ஒரு பேரார்வத்தோடும் அதேவேளை மேலும் பல பண்பாட்டு - கலாச்சார ஆர்வங்களோடும் போனவாரம் மெல்பேர்னில் வந்திறங்கியவர்தான் "கனடா" மூர்த்தி. "காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி" நூல் கனடாவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட நிகழ்வில் புத்தகத்தை கிழித்து தோரணம் கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்ற குழுவில் குணச்சித்திர வேடம் வகித்தவர்.
நேரில் பார்த்தால் கிட்டத்தட்ட வடகொரிய பிரதமருக்கு மீசைவைத்துவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு கண்ணியமாக காட்சி தருபவர்.

அவரைப்பற்றி பலர் பல வழிகளில் பேசியிருப்பினும், அவர் குறித்து சுருக்கமாக கூறுவதென்றால் பன்முகத்தன்மைகள் வாய்ந்த ஒரு படைப்பாளி என்று சொல்லலாம். அவரது இலக்கிய ஆர்வம் ஒருபுறம் இருக்க, காட்சி ஊடகத்தில் பன்னெடுங்காலமாக பணியாற்றிய அனுபவமும் வரலாற்று விடய விதானங்களின் மீதான அவரது தீரா ஆர்வமும் அவரை ஏனைய படைப்பாளிகளிலிருந்து தனியாக இனங்காண்பிக்கும்.
படைப்புலக பரப்பில் எந்த விடயத்தினை கேட்டாலும் மணிக்கணக்காக பேசி வதை செய்யக்கூடிய அருமையான திறமை எம்மிடையில் பலருக்கிருக்கிறது. ஆனால், மூர்த்தி அண்ணன் இந்த விடயத்தில் தனது அனுபவத்தின் ஊடான விடயங்களை கூடுதலாக முன்நிறுத்தி பேசக்கூடியவர். அவரது அந்த அணுகுமுறை அவர் மீதும் அவரது படைப்புலகத்தின் மீதும் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும்.

அதேவேளை, இவர் மிகத்தரமானதொரு ஊர் சுற்றி. கல்விக்காக இலங்கையை விட்டு வெளியேறிய எழுபதுகளிலிருந்து தொடர்ந்து நாடுவிட்டு நாடு தாவிக்கொண்டிருக்கிறார். போகும் இடங்களில் எல்லாம் தனக்கு உவப்பான படைப்புலக பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருக்கிறார். இவரது இந்த பயண திறனையும் சுருக்கமாக கூறுவதென்றால், தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். துபாயிலும் இருப்பார்.

இப்போது மெல்பேர்னில் இருக்கிறார்.

ஆக, இவருடனான ஒரு இலக்கிய சந்திப்பு நேற்று  முன்தினம் சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெற்றது. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இலகுவில் இப்படியான நிகழ்வுகள் உலகின் எந்தப்பாகத்தில் இருப்பவர்களுக்கும் அமைந்துவிடுவதில்லை. ஆனால், மெல்பேர்ன் இலக்கிய ஆர்வலர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அது எப்படியென்றால் - நேற்று முன்தினம்  மெல்பேர்ன் வெப்பநிலை 45 பாகை செல்சியஸ். புறநகர் பகுதியில் ஒரிரு பிதேசங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டெரிந்துகொண்டிருந்தது. ஊரே களேபரமாக ஆறு, குளம், குட்டை என்று தண்ணி உள்ள இடங்களை தேடி ஓடிப்போய் பாம்புகள்போல படுத்துக்கிடந்தது. இன்னும் பலர் ஒஸியில் ஏஸி குடிப்பதற்காக ஷொப்பிங் சென்ரர்களில் போய் பதுங்கிக்கிடந்தார்கள்.
இப்படியான ஒரு கலவரபூமியில் நாங்கள் கொஞ்சப்பேர் இளநீர் டின்களுடன் கூடியிருந்து இலக்கியம் பேசினோம். அதுவும் மணிக்கணக்காக பேசினோம்.
சங்கத்தின் தலைவர் திரு. சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மண்டபத்தில்  மெல்பனில்  கிளேய்ட்டன் சமூக கலாசார நூல் நிலைய மண்டபத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் இலக்கியம் இன்னமும் சூடாகத்தான் இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

ஆனால், காலநிலையை கழித்துவிட்டுப்பார்த்தால் இச் சந்திப்பு அருமையாக அமைந்திருந்தது.

மூர்த்தி அவர்கள் பல விடய விதானங்களை மிக நீளமாகவும் ஆழமாகவும் பேசினார்.

கனடாவில் தமிழர்களின் இருப்பு, எண்பதுகளில் அங்கு கப்பலொன்றில் போய் இறங்கிய ஈழத்தமிழ் அகதிகளினால் ஏற்பட்ட அரசியல் மாற்றம், இந்த கப்பலால் அகதிகள் தொடர்பான கனடாவின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றம், முன்னூறு தமிழ் குடும்பங்களாக உருவாகியிருந்த ஆரம்பகால கனடிய புலம்பெயர் சமூகம் பிற்காலத்தில் இலட்சக்கணக்கில் பெருகிக்கொண்ட பாதையில் சந்தித்த சவால்கள், அங்குள்ள மக்களின் சமூக மாற்றங்கள், அந்த மாற்றங்களுக்கும் அவுஸ்திரேலிய தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமை - வேற்றுமைகள், இரு தேசங்களிலும் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள், பண்பாட்டு ரீதியாக தமிழ் சமூகம் எந்தெந்த விடயங்களில் இன்னமும் தங்களை பிற்படுத்திக்கொண்டிருக்கிறது என்று எத்தனையோ விடயங்களை விளக்கமாக கூறினார். எண்பதுகளிலேயே கனடா சென்றவர் என்ற காரணத்தினால் அள்ள அள்ள குறையாத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.

கலை, இலக்கியப்பக்கம் என்று பார்க்கும்போது தனது பங்களிப்போடு வெளியான சிவாஜி கணேசன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் குறித்த ஆவணப்படங்கள்,  குறும்படங்கள் பற்றி கூறினார். ஜெயகாந்தன் மற்றும் பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோருக்கும் தனக்குமிருந்த இலக்கிய உறவு, அவர்களின் ஊடாக இலக்கிய பரப்பில் தான் கண்ட அனுபவங்கள் ஆகியவை குறித்தும் சொன்னார்.
அவுஸ்திரேலிய படைப்புலக பரப்பில் மிகப்பெரிய இடைவெளி காணப்படுவதை தான் உணர்வதாகவும் வெளியில் தெரியாத பல மர்மமான இலக்கிய தாதாக்கள் மாணிக்கங்களாக இங்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தவேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை முன்வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

வெக்கைக்கு குளிர்மையாக இருக்கட்டுமே என்று வாங்கிக்கொண்டு போன இளனி ரின்கள் குடித்தும் முடிய, நிகழ்வும் இனிதே நிறைவடைய சரியாக இருந்தது. சம்பிரதாயபூர்வமாக சில செல்பிகளையும் எடுத்துக்கொண்டோம்.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலேயே கனடா ஒரு வித்தியாசமான தேசம். புதுமையான தேசம் என்றும் கூறலம். எமக்கு அன்னியமான தேசமொன்றை முற்றுமுழுதாக எமக்கேற்றவாறு மாற்றியமைத்திருக்கிறோம் என்றால் அது கனடாதான். எமக்கான தேசமொன்றை தாயகத்தில் வெற்றிகொள்ளவில்லை என்று இப்போதைக்கு நாங்கள் கவலைகொண்டாலும்,  வரலாற்றில் எமது இனத்தின் வெற்றியானது வேறுவகையில் பெருமையாக எழுதப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கனடாவில் பிறக்கும் ஒரு குழந்தை தமிழை தவிர வேறெந்த மொழியையும் பேசாமல் - தமிழர்களை தவிர வேறொருவருடனும் எந்த தொடர்பாடலும் வைத்துக்கொள்ளாமல் வளர்ந்து, படித்து, வேலைசெய்து, முதுமை எய்தி கடைசியில் இறந்துபோகக்கூடிய கட்டமைப்பினை தமிழர்கள் அங்கு வெற்றிகொண்டிருக்கிறார்கள் என்றால் அது எப்பேற்பட்ட புரட்சி? தமிழ் வைத்தியசாலை, தமிழ் பாடசாலை, தமிழர்களின் தலைமையில் இயங்கும் வேலைத்தளங்கள், தமிழ் கோயில்கள், தமிழ் முதியோர் இல்லங்கள் என்று வளர்ந்து தமிழ் இறுதிகிரியை நிலையங்களும் வந்துவிட்ட நிலையில் அதனை -

கடந்த முப்பது வருட காலத்தில் எமது இனம் வெற்றிகரமாக சாதித்துள்ள ஒரு விடயம் என்றுதானே கூறவேண்டும்.

அந்த நிலத்திலிருந்து வந்த ஒரு படைப்புலக பிரமுகர் - கிட்டத்தட்ட அந்த நாட்டின் எமது சமூகத்தினொரு தூதுவர் போல - இங்கு வந்து பல விடயங்களை பகிரந்துகொண்டமை மிகுந்த மகிழ்ச்சி.

No comments: