அன்பின் ’காந்த’ ஈர்ப்பு - ரிஷி - (லதா ராமகிருஷ்ணன்)

.


உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில்
ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள்
இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய்
தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்…..
அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம்
என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள்.
அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட
வழியற்ற தன் நிலைக்காய்
வருந்தியதேயில்லை யவள்.
பார்புகழும் படைப்பாளியின் பாதியாக இருந்தது பற்றி
பத்திகளோ, புத்தகங்களோ எழுதப் புகாதவள்;
பக்கம் பக்கமாய் தங்கள் அந்நியோன்யத்தை
கடைவிரிக்கப் பழகாதவள்;
புத்தியில்லாதவளல்ல,


புன்மதியற்றவள்.
வரித்துக்கொண்டவன் வாரிவழங்கிய அன்பை
வழிய வழிய மனங்கொள்ளாமல்
சேகரித்துக்கொண்டவள்.
போருக்கல்ல, பார் நல்லதாக
நூறுமுறை யவர் புறப்பட்டபோதெல்லாம்
வீரத்திலகமிட்டு வாழ்த்தி வழியனுப்பியவள்;
அன்பில் ஆரத்தழுவியதையெல்லாம் ‘செல்ஃபியில்’
சேமித்து சமயம் பார்த்து சுவர்களில் மாட்டிவைக்கத்
தெரியாதவள்.
பேரறியாப் பெண்ணாயிருப்பதில் பாதகமேதுமில்லை
என்று புழங்கியவள்;
அன்பே போதுமென்றிருக்கப் பழகியவள்;
அவரை யிவரைப் பழித்தாளில்லை
.அக்கக்காய்க் கிழித்தாளில்லை.
எஞ்சிய பொழுதை
ஊரறியா ஓரத்தில்
வாழ்ந்துகழிக்கிறாள்
ஆரவாரமற்று.
அகநூலில் அவள் அன்பரின் நேயம்
நரம்பும் ரத்தமும் தோய்ந்த
அருவக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருப்பது
புரிகிறவர்களுக்குப் புரியும்.
புரியாமல்
சாக்கடையென்றும்,
போக்கற்றவள் என்றும்
ஆக்கங்கெட்டவள் என்றும்
நாக்குகொள்ளா நீச வாக்குடையாள் என்றும்
தன் எந்தையின் புகழில் குளிர்காயும்
தீய நோக்குடையாள் என்றும்
தாக்கித்தாக்கித்தாக்கி யெங்கும்
நீக்கமறப் பதிவிட்டுக்கொண்டிருக்கும்
வாரிசுக்கு என்றேனும் பிடிபடுமோ
ஓருலகத்திற்கும் ஒரு உலகத்திற்குமான
வேறுபாடு?

Nantri http://puthu.thinnai.com/

No comments: