ராஜபக்ச குடும்பத்தினரின் கணக்குகளை ஆராய அமெரிக்கா, இந்தியா உதவி
அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்
இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!!
3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு யாழ். நீதிமன்றம் மரண தண்டனை
இன்று முதல் தடை.!
ராஜபக்ச குடும்பத்தினரின் கணக்குகளை ஆராய அமெரிக்கா, இந்தியா உதவி
03/01/2018 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
குடும்பத்தினருக்கு டுபாயில் உள்ள வங்கிக் கணக்கு விபரங்கள் திரட்டப்பட்டு
வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துத் தெரிவித்துள்ள அமைச்சரவை உப பேச்சாளர் அமைச்சர் ராஜித்த
சேனாரத்ன, டுபாய் வங்கிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் சட்ட விரோதமாக
வைத்திருக்கும் கணக்குகள் குறித்து விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தற்போது
நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் மிக முக்கியமான தகவல்கள் வெளியாகும்
என்றும் தெரிவித்துள்ளார்.
டுபாய் வங்கிகளில் ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் பெயரில் பல
மில்லியன் டொலர்கள் வைப்பிலிருப்பதாக 2015ஆம் ஆண்டு அரசு
தெரிவித்திருந்தது. இந்தக் கணக்குகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமெரிக்கா
மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் உதவியளித்து வருவதாகவும் அரசு
தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பெற்ற பணத்தையெல்லாம் வெளிநாடுகளில் தமது
குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சட்ட விரோதமாக ராஜபக்ச குடும்பம்
முடக்கியிருக்கிறது என்று தற்போதைய அரசு கூறியிருந்தாலும் ராஜபக்ச அதை
மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்
03/01/2018 யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படவுள்ளது.
நன்றி வீரகேசரி
இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!!
03/01/2018 இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன
முறையில் நகரம் ஒன்றை நிர்மாணித்து சிங்கப்பூர் போன்ற நாடுகளில்
இருக்கும் வசதிகளை பெற்றுக்கொடுப்போம் என பிரதமர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத்திட்ட வேலைத்திட்டங்களை நேற்று
பார்வையிடச்சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வேலைத்திட்டத்தின்
முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டதன்
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
சீனா துறைமுக நிறுவனத்தினால் கடல் நிலத்தை நிரப்பி 99வருடங்களில்
இந்த இடத்தில் நகரம் ஒன்றை ஏற்படுத்துவோம். இந்த நகரம்
பயன்படும்வகையில் முழு இந்து சமுத்திரத்துக்கும் பொருத்தமான
நிதி வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு
திட்டமிட்டுள்ளோம். அதற்காக துறைமுக நகரமாகிய இந்த பிரதேசத்தில்
பிரத்தியேகமாக நிதி மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்.
அத்துடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பிரதேசத்தில் இரண்டு
இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன முறையில்
நகரம் ஒன்றை நிர்மாணிப்போம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும்
வசதிகள் அனைத்தும் இந்த நகரத்துக்கு பெற்றுக்கொடுப்போம். இது சீன
துறைமுக நிறுவனத்தின் பிரதான முதலீடாகும்.
அத்துடன் இந்த வேலைத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்துக்கு
புதியதொரு சக்தியை ஏற்படுத்தும் வேலைத்திட்டமாகவே
பார்க்கின்றோம். அத்துடன் இந்த இடத்தில் இருந்துகொண்டே எமது
மக்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிதிவசதிகளை
பெற்றுக்கொள்ள தேவையான சட்ட மற்றும் வணிக சேவைகளை
பெற்றுக்கொடுப்போம். இதற்கு அப்பால் இந்த பிரதேசத்தில் எமது மக்கள்
பெருமைப்படும் வகையில் மகிழ்ச்சியாக இருக்க பாரிய பூங்காவொன்றை
ஏற்படுத்த இருக்கின்றோம்.
அத்துடன் 2020ஆகும் போது இந்த துறைமுக நகரத்தின் அடிப்படை
வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய கட்டட வேலைகளை பூர்த்திசெய்ய
இருக்கின்றோம். இதன் மூலம் நாங்கள் நினைத்தும் பார்க்க முடியாத நகரம்
ஒன்று இங்கு அமையப்போகின்றது. இது இந்து சமுத்திரத்தின் கேந்திர
நிலையத்துக்கான வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாகும். துறைமுகம்,
விமான நிலையம் ஆகியவற்றின் சேவையுடன் உற்பத்தி தொழிற்சாலைகளை
ஏற்படுத்துவது, நிதி சேவைகளை ஏற்படுத்துவது மற்றும் சுற்றுலா
வேலைத்திட்டங்களை ஏற்படுத்தும் திட்டத்திலே அரசாங்கம்
என்றவகையில் இந்த வேலைத்திட்டங்களை மேற்கொண்டு செல்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த
வேலைத்திட்டங்களை நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். இதற்கு தேவையான
சட்டங்களை இந்த வருடம் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் அனைத்தையும் ஒரேதடவையில் செய்துமுடிக்க இயலாது.
தற்போது நாங்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இலங்கை கடனுக்குள்
மூழ்கியிருந்ததற்கு பதிலாக இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி,
சிறந்த முறையில் வாழ்வதற்கு முடியுமான, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும்
பொருளாதாரத்தை ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார். நன்றி வீரகேசரி
3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு யாழ். நீதிமன்றம் மரண தண்டனை
02/01/2018 யாழ்.மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற
கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர்
இது வரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதி
கே.பி.எஸ்.வரதராஜா, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதி
எஸ்.தியாகேந்திரன், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதி
பி.ஸ்வர்ணராஜா, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதி
ஆர்.ரி.விக்னராஜா, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதி
எஸ். பரமராஜா, 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதி
ஜெ.விஸ்வானந்தன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதி
அ.பிறேம்சங்கர், 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி
திருமதி கே.சிவபாதசுந்தரம் ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக
கடமையாற்றியுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரை
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி
வருகிறார்.
மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக்காலப்பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2005, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கும்,
2012 ஆம் ஆண்டு 2 பேருக்கும், 2013 ஆம் ஆண்டு ஒருவருக்கும், 2014 ஆம்
ஆண்டு 4 பேருக்கும், 2015 ஆம் ஆண்டு 8 பேருக்கும், 2016 ஆம் ஆண்டு 11
பேருக்கும் 2017 ஆம் ஆண்டு 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற
கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபார்கள் கைது செய்யப்பட்டு நீதிவான்
நீதிமன்றங்கள் ஊடாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று பின்னர் மேல்
நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு அதில்
குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு இந்த மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
இன்று முதல் தடை.!
01/01/2018 உணவுப் பொதியிடம் பொலித்தீன் தாள் மற்றும் பெட்டி உள்ளிட்ட பொலித்தீன்
உற்பத்தி பொருட்களுக்கான தடை இன்று முதல் கட்டாய அமுலுக்கு வருவதாக மத்திய
சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
லன்ச்சீட், பொலித்தீன் மீது கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த பொருட்களின் பாவனையை தவிர்த்து கொள்ள கால அவகாசம்
வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதற்கமைய தேசிய, சமய மற்றும் அரசியல் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில்
இவ்வகையான பொலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதற்கு முற்றாக தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று முதல் லன்ச்சீட், பொலித்தீன் விற்பனை தொடர்பில்
விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார
சபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment