"ஓவியர்களல்ல ஓவியங்களே பேச வேண்டும்" ஓவியர் குலராஜும் அவரது ஓவியங்களும் சி. மௌனகுரு



1972 ஆம் ஆண்டு.
சென்னை அடையாறு கலாசேத்திராவில் ஒரு விழா ஒழுங்கு செய்கிறார்கள்.
அங்கு ஓவியம் கற்கச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த 21 வயதான ஒரு மாணவனிடம் வாசலில் கோலம் போடும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
அம்மாணவனுக்குக் கோலம் போடுவதில் கொள்ளை ஆசை.
அவன் கோலம் போடத் தொடங்குகின்றான்,
ஏற்கனவே அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை சற்று மெருகூட்டிப் போடுகிறான்.
அதன் அழகு கண்டு பலரும் வியக்கிறார்கள்.
விழா ஆயத்தங்களை பார்வையிட்டுக்கொண்டு வந்த கலாசேத்திர ஸ்தாபகரான ருக்மணி அருண்டேல் அக்கோலத்தைப் பர்வையிடுகிறார்.
மாணவன்,  ருக்மணி அம்மையரின் வாயில் இருந்து வரும் பாராட்டுரைக்குக் காத்திருக்கிறான்.
அந்தக்கோலத்தை உற்றுப் பார்த்த அவர், "முன்னே இருந்த ஒன்றைப்போலப் போடுவது கலை அல்ல. அது புது ஆக்கமாக இருக்க வேண்டும்,  அது உன்னுடையதாக இருக்கவேண்டும்.  மற்றவரை பிரதி பண்ணல் கலை ஆகாது. புதிதாக எதாவது செய்யும்" என்று கூறி விட்டுச் செல்கிறார்
மாணவன் சோர்ந்துவிடுகிறான். எனினும் அவனுள் ஒரு ஞானத்தை அந்த அம்மையார் விதைத்து விட்டுச் சென்றுவிடுகிறார்.
அதுதான்,"மற்றவரைப் பார்த்துக் கொப்பி பண்ணாதே
நீ உனக்கெனப் புதிதாக ஒன்றை உருவாக்கு"
இந்த வேத மந்திரமே தனித்துவம் மிக்க ஓவியராக அந்த மாணவன் வளர உதவிய வேதோபதேசமாகும்.
அந்த மாணவன் பெயர் குலராஜ்.
ஓவியர் குலராஜின் ஓவியங்களை ஒருங்கு சேரப்பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்குக் கிட்டியது. நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அற்புதமான அந்த ஓவியர் பற்றியும், அவரது ஓவியங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்ற தூண்டுதலும் எனக்குள் எழுந்தது.
இது ஓர் சிறு அறிமுகக் குறிப்பே!
ஓவியர் குலராஜை நான் அறிந்தது 2000 ஆம் ஆண்டுகளில். அப்போதுதான் அவர் தமிழ் நாட்டிலிருந்து மீண்டுவந்து மட்டக்களப்பில் தனது வாழ்வை ஆரம்பித்திருந்தார். அப்போது நான் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறைத் தலைவராகக் கடமை புரிந்து கொண்டிருந்தேன்.
நாங்கள் வருடம் தோறும் உலக நாடக தின விழாவை நடத்திக்கொண்டிருந்தோம். ஒரு வாரம் அவ்விழா நடைபெறும். அந்நாடக விழாக்களுக்கு முகப்புப் பந்தல், தோரணம் அமைக்க ஒருவரைக் கண்டுபிடித்தோம். அவரே குலராஜ்
அழகாக மரபு தவறாமல் அவர் போட்ட நாடக விழா முகப்புப் பந்தல்கள் அவர் பக்கம் அனைவரது கவனத்தையும் திருப்பியது. அவர் ஓர் மரபு வழி ஓவியர் என அறிந்தோம் ,அத்தோடு கலசேத்திர மாணவரும் கூட.
அவரது ஓவியங்கள் அடங்கிய ஓர் ஓவியக் கண்காட்சியையும் நுண்கலைத்துறை 2000 ஆம் ஆண்டில் வந்தாறுமூலைக் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடத்தியது. பலரையும் மிகவும் கவர்ந்த ஓவியக் கண்காட்சி அது.
யார் இந்தக் குலராஜ்?
மட்டக்களப்பின் பயனியர் தெருவில் கோவில்களுக்கு இந்துக் கடவுளர் படங்களடங்கிய அருமையான திரைச் சேலைகளை வரைந்து கொடுக்கும் ஒருவர் 1950 களில் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் ஈஸ்வரராஜா. அவரது மகனே குலராஜ்.
தந்தை திரைச் சேலை ஓவியம் கீறுவதைப் பார்த்து பார்த்து அவருக்கு வர்ணங்கள் எடுத்துக்கொடுத்து, வரைய ஒத்தாசை செய்து வளர்ந்தவர் குலராஜ். ஓவியம் அவருக்குத் தந்தை வழி முதுசம்.
1951 இல் பிறந்த இவர் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் தமது கல்வியை முடித்து விட்டு ஓவியம் பழகும் ஆசையில் 1972 இல் தமிழகம் செல்கிறார். அங்கு கலாசேத்ராவில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஓவியம் கற்கிறார்.

ரகுபிரசாத் ,ஶ்ரீனிவாசலு.
இவர்களுள் ஶ்ரீனிவாசலு இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியரான தேவி பிரசாத் ராய் சௌத்திரியின் மாணவராவர்.
ராய் சௌத்திரி 1950 களில் சென்னை நுண்கலைகல்லூரியில் முதல்வராக இருந்தவர். ஐரோப்பிய ஓவிய மரபைப் பின்பற்றி முக்கியமாக ரவிவர்மா போன்றவர்களின் ஓவிய மரபில் இந்திய ஓவியர்கள் பலர் வளர்ந்த காலத்தில் இந்தியமரபில் ஓவியம் வரைந்தவர்களுள் முகியமானவர் ராய் சௌத்திரி.
இந்திய மரபில் ஓவியம் வரையும் பல புகழ்பெற்ற தமிழ் ஓவியர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் இவரே. இவர்களின் ஓவியங்கள் ஐரோப்பியத் தன்மையினின்று விடுபட்டு இந்தியத்தன்மையில் அமைந்திருப்பதைக் காணலாம். ராய் சௌத்திரியின் தாக்கம் ஶ்ரீனிவாசலுக்கூடாக குலராஜை அடைந்தது எனலாம்.
நான்கு வருடங்கள் குருகுல பாணியில் கலசேத்திராவில் ஓவியம் பயின்ற பின்னர்,  1976 இல் தமிழகத்திலிருந்து தாயகம் மீண்ட குலராஜ் கல்லடியிலிருந்த ஒரு துணி நெய்யும் ஆலையில் ஆடை டிசையினராகப் பணி புரிகின்றார்.
அது செயலற்றுப் போகவும், 1978 இல் வீரகேசரி பத்திரிகையில் ஓவியராக இணைந்து கொள்கின்றார். 1983 இனக்கலவரம் காரணமாக மீண்டும் தமிழகம் செல்கின்றார். அங்கு மாலை முரசு பத்திரிகையில்  ஓவியராக இணைந்துகொள்கின்றார்
1983 தொடக்கம் 1988 வரை தமிழகத்தில் வாழ்ந்த இவர், கலங்காரி, தஞ்சாவூர், மதுபானி ஓவிய மரபுகளின் தாக்கத்திற்குள்ளாகின்றார்.  அங்கு அவருக்கு ஓவியர் வீரசந்தானத்தின் உறவுகிடைக்கிறது. இதனால் குலராஜின் ஓவியப் பார்வை இன்னொரு பரிமாணம் பெறுகின்றது.
அக்காலத்தில் Textile printings  இல் பாண்டித்தியம் பெறுகிறார்.திருமண மண்டப அலங்காரம் இவருக்குப் பிடித்த ஒன்று அதிலும் பாண்டித்தியம் பெறுகின்றார். அதே வேளை தூர்தர்சன் தொலைக்காட்சியிலும் அவருக்கு வேலை கிடைக்கிறது.  அங்கு மேடை அலங்காரம்,  மேடைப்பொருட்கள் அலங்காரம் என்ற செட்  டிசன்களில்  தன் கை வண்ணம் காட்டுகின்றார்
1988 இல் மீண்டும் தாயகம் திரும்புகின்றார்.

மட்டக்களப்பின் கோவில் தோரண வேலப்பாடுகள், சடங்குகளின் போது அமைக்கப்படும் மடைகள்,  அப்போது தேவாதிகளுக்கு அணிபவர்கள் அணியும் உடைகள்,  அதன் கடும் நிறங்கள், சடங்குகளிற் பாவிக்கப்படும் சிவப்பு நிறக் குங்குமம் ,மஞ்சள் நிற மஞ்சள், பச்சை நிற வேப்பிலை என்பன அவர் மனதை கவர்கின்றன.
இவற்றை அவர் பூமியின் நிறங்களாக உணர்கிறார். பூமியின் நிறங்கள் என்றால் அவை மண்ணின் நிறங்கள் ,மக்களின் நிறங்கள்.
சிறுதெய்வக்கோவில்களிற் போடப்படும் பல்வேறுவகையன மயில்,வேல் போன்ற முகப்புத் தோரணங்கள், அங்கு வரிசையாக வைக்கப்படும் மடைகள், அக்கோவிகளில் தெய்வஏறி ஆடுபவர்களுக்கு மேலு உற்சாகம் அளிக்க அல்லது தெய்வத்தை ஆவாஹனம் பண்ண, அல்லது நோய் தீர்க்க மந்திரித்துக்கட்டப்படும் செப்புத்தகடுகளில் கீறப்படும் யந்திரங்கள் எனப்படும் அட்சரங்கள் அவற்றில் எழுத்துகளை பாவிக்கும் முறை என்பன அவர் மனதைக் கவர்கின்றன.
இவற்றை அவர் மண்ணின் டிசைன்கள், மக்களின் டிசைன்கள் என்கிறார்
இந்த மண்ணுக்கான நவீன ஓவியம் இம்மண்ணின் மரபுகளிலிருந்து உருவாகவேண்டும். வெளியிலிருந்து இறக்குமதி செய்வதிலிருந்தல்ல என்பதில் அவர் காட்டும் உறுதி எம்மை அவருக்கு அருகில் கொண்டு செல்கிறது.
நாடகத்தில் நாம் இதனையே செய்ய வேண்டும் என நான் பலகாலமாகச் சொல்லி வருகிறேன். செய்தும் காட்டியுள்ளேன்.
ஓவியத்தில் என் சிந்தனைப்போக்குள்ள ஒருவரை நான் இனம் காணுகின்றேன்.
1988 இல் மட்டக்களப்பில் வண்ணாத்திப்பூச்சி பூந்தோட்டம் கனடா உதவியுடன் ஆரம்பிக்கிறது. யுத்தத்தால் சிதைந்த இன உறவுகளை இளம் சிறாரிடம் கட்டி எழுப்பும் பணியினை அது செய்கின்றது.
ஓவியத்தை மன நலத்துக்காகப் பவிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைகிறது. அதில் சேர்ந்து இளம் சிறார்களுக்கு ஓவியம் பயிற்றுவிக்கிறார் குலராஜ்.
அவரால் வரையாமலும் இருக்க முடியாது, தனக்குத் தெரிந்ததை இளம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்காமலும் இருக்க முடியாது இவ்விரண்டும் அவரது பிரதான குணாம்சங்கள்.
அதன்பின் கனடியரான போல் கோஹனுடன் இணைந்து பயனியர் வீதியில் ஓர் கலைக் கூடத்தை ஆரம்பிக்கிறார்.
குலராஜின் ஓவியங்கள்
குலராஜின் ஓவியங்கள் கனவுலகைச் சார்ந்தவையல்ல, அடிமன உணர்வுகளை விளங்காத ரேகைகளிலும், நிறங்களிலும் கூறுபவை அல்ல. அவை மரபு சார்ந்தவை. ஆனால், நவீனத்தன்மைகாட்டுபவை. விளங்கிக்கொள்ளக்கூடியவை. பரவசம் தரக்கூடியவை
அவர் தனது ஓவியங்களுக்கு மண்சார் நிறங்களையே பாவிக்கின்றார்.
இது அவர் கலசேத்திராவில் பெற்ற பயிற்சியாயினும் தான் பிறந்து வளர்ந்த செழுமையான இந்துக் கோவில் அலங்கரங்களிலும் சடங்குகளிலும் காணப்பட்ட நிறங்களிலிருந்து பெற்றுக்கொண்ட  நிறங்களாகும்.
அவர் இரத்தத்தோடு கலந்த நிறங்களே அதிகமாகக் கையாளும் நிறங்களாகும்.
சடங்குகளின் போது பாவிக்கப்படும் மஞ்சள் ,சந்தணம்,குங்குமம் போன்றனவே மண் கலர்கள் என்கிறார். இதனை அவர் ஏர்த் கலர் என்கிறார்.
ஒயில் கிறீன் ,இந்தியன் ரெட், இந்தியன் பிறவுண், வெனிலா ரெட்
என்பன இவர் விரும்பும் நிறங்கள்.
இவரது ஓவியங்களில் கத்தித்து நிற்கும் பாணி தஞ்சாவூர் சித்திர பாணியாகும்,
உருண்டையான கை கால்கள் ,பருத்த முலைகள், அகண்ட கண்கள் ,அலங்காரமான ஆபரணங்கள், ஒரு பக்கம் காட்டி நிற்கும் நிலைகள் என்பன தஞ்சாவூர் சித்திர பாணியாகும்
தஞ்சாவூர்க் கண்ணாடி ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
தமிழ் நாட்டில் கற்ற கலசேத்திராபாணி, அங்கு ஈர்க்கப்ப்ட்ட தஞ்சாவூர்பாணி என்பனவற்றுடன் மட்டக்களப்புச் சிறு தெய்வக்கோவில்களான
மாரி அம்மன் ,கண்ணகை அம்மன், காளிஅம்மன் ,திரௌபதைஅம்மன், பேச்சி அம்மன், நாககன்னி அம்மன், கடல்நாய்ச்சியம்மன் போன்ற பெண் தெய்வக்கோவில்களிலும், வைரவர், பெரியதம்பிரான், மாறா ,குமரர் ஆகிய ஆண் தெய்வக் கோவில்களிலும் சடங்குகளுக்குப் பாவிக்கப்படும் நிறங்களையும் அலங்காரங்களையும் கலந்து தனக்கான ஒரு ஓவிய பாணியைஇன்னொரு வகையில் ஈழத்தமிழ் மக்களுக்கான இன்னொருவகையில் மட்டக்களப்பு மண் வாசனை அல்லது மக்கள் வாசனை கலந்த தனித்துவமான ஓவியங்களை உருவாக்கி வருகிறார் குலராஜ்
எமது கோவில்களில் எம்முன்னோர் கையாண்ட டிசைன்கள்,
எமது மந்திர ஏடுகளில் எம்முன்னோர் கீறிவைத்த டிசைன்கள். எம்கோவில் கோல டிசைன்கள், சேலைகளுக்கும், மேசை விரிப்புகளுக்கும், தொங்க விடப்படும் படுதாக்களுக்கும் அழகான டிசைன்களை அளிக்கும் செழுமை மிக்கவை என்றுகூறுகிறர் இவர்.
இவ்வகையில் அவர் பிறரைப் பிரதி பண்ணாத தனித்துவம் மிக்க ஓவியராக நம் மனதில் பதிந்து விடுகிறார்.
அண்மைக்கால நவீன ஓவியங்கள் பற்றி அவருடன் உரையாடுகையில் நவீனம் பற்றிய அவரது கருத்துக்களை அறிய முடிந்தது.
இன்றைய நவீன ஓவியங்களின் மூலத்தை நமது மரபுகளில் காணமுடியதவர்களே மேலைத்தேய நவீனஓவியத்தின் பின் இழுபட்டுச் செல்கிறார்கள் என்கிறார். பிரதி பண்ணுவது கலை அல்ல புத்தாக்கமே கலை என்று முதன் முதலில் மோதிரக் கையால் பெரிய குட்டு வாங்கிய குலராஜ்.
இன்று தனித்துவம் மிக்க கலைஞராக நிமிர்ந்து நிற்கிறார்.
குலராஜ் பாணி என்றொரு பாணியையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
"இது எனது பாணி, தேடலுக்கூடாக நான் கண்டது" எனக்கூறும் இவர் மாணவரைஈ " என்னைப்போல வரையவேண்டாம் உங்கள் பாணியில் வரையுங்கள்" என்றும் வழிப்படுத்துகிறார்
"அடிப்படையைக் கொடுத்து வழிகாட்டி விட்டால் அவர்கள் தம் பாணியில் வளர்வர்." என்கிறார். அனுபவ ஞானம் இது.
குலராஜின் ஓவியங்களில் காணப்படும் மாந்தர் சாதாரண மாந்தர். காவடி எடுத்து வரும் பக்தர்கள், மீன் சுமந்து செல்லும் ஆண்களும் பெண்களும்.பறை முழக்கும் ஆண்களும் பெண்களும் ,குழல் ஊதும் மாந்தர், பாலூட்டும் தாயர், திகிலூட்டும் தெய்வங்கள். வித்தியாசமான தோற்றங்களில் காட்சிதரும் இந்துத் தெய்வங்கள்.
ஒரு வகையில் மண் சார்ந்த நிறத்தில், மண்சார்ந்த கோடுகளில், மண்சார்ந்த பண்பாட்டை குலராஜின் ஓவியங்கள் காட்டி நிற்கின்றன எனலாம்.
அவரை நாம் மண் சார்ந்த நவீன ஓவியர் என அழைப்பதில் தவறிருக்காது என்றே நினைக்கிறேன் அண்மையில் சில ஓவியக் கண் காட்சிகள் பார்க்க சென்றிருந்தேன்.
அவர்களில் அதிகமானோர் சமகாலப் பிரச்சினைகளைக் காட்டுகிறோம் என்ற போர்வையில் யுத்தம் ,அவலம் ,அரசியல் வாதிகளின் ஏமாற்று, பேரினவாத ஆக்கிரமிப்பு  என்ற மக்களுக்குவப்பான விடயங்களை -  எல்லோரும் எப்போதும் பேசும் விடயங்களை ஓவியமாக்கியிருந்தனர்.
அவற்றில் பல எனக்கு விளங்கவில்லை. என் முகபாவத்தைக் கண்ட அவர்கள் ஒவ்வொரு சித்திரம் பற்றியும் எனக்கு ஒவ்வொரு லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஓவியர்கள் பேசக் கூடாது.
ஓவியங்கள் பேச வேண்டும்.
அவை நமக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்த வேண்டும்.
குலராஜின் ஓவியங்கள் எம்முடன் பேசுகின்றன.
நம்முள் ஓர் அதிர்வை ஏற்படுத்துகின்றன.



No comments: