திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் அந்திம காலம்
“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி” - திருக்குறள்
“லயஞானகுபேரபூபதி” ஈழத்தமிழ் அன்னையின் தவிலிசைக் கலைச் சக்கரவர்த்தி, எட்டாவது வயதிலிருந்து நாற்பத்தியோராவது வயதுவரை தனது தவிலிசை மழையால் உலகை நனைவித்து, தான் தவில் வாசித்த காலத்தையே தட்சணாமூர்த்தி சகாப்தமாக்கி, அவர் தவில் வாசித்த காலமே தவிலிசையின் பொற்காலம் என இசை விமர்சகர்களாற் போற்றப்பட்ட, தவிலுலகத்தின் “அவதார புருஷர்”; “தெய்வப்பிறவி” என்றெல்லாம் இசை மேதைகளாலும் இசைரசிகர்களாலும் வர்ணிக்கப்பட்ட தவில் மேதை திரு தட்சணாமூர்த்தி அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு தாளவொண்ணாச் சோகம் ஒன்று தலைதூக்கியது. உள்ளத் தூய்மை உடையவர்களைத்தான் இறைவன் அதிகமாகச் சோதிப்பானோ என்னவோ?
திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இந்தியாவிற்கு கச்சேரிகளுக்கு அடிக்கடி சென்று வந்தபோதும் அங்கே மாதக் கணக்காகவோ அன்றி வருடக்கணக்காகவோ தங்கியது கிடையாது. 1970 ஆம் ஆண்டு; (இந்தியா) தமிழ்நாட்டிற்குச் சென்ற திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் தன் குடும்பத்தாருடன் மூன்று வருட காலம் அங்கேயே வசித்து வந்தார். தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலே 1973 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுச் சிந்தை குழம்பிக் கலங்கி நின்றார். இதை அறிந்த அவரது ஒன்று விட்ட சகோதரர் இணுவிற் தவில் வித்தகர் திரு சின்னராசா அவர்கள் இந்தியா சென்று அவரையும் அவர் குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்திற்கு 1974 ஆம் ஆண்டு அழைத்து வந்தார். இங்கு வந்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் உறவுகளை, சொந்த பந்தங்களை, ஏன் உலகையே வெறுத்துக் கச்சேரி செய்வதையும் வெறுத்துத் தனது சொந்தங்களை நாடாது யாழ்ப்பாணம் சுன்னாகத்திலுள்ள தனது நண்பன் நடராசாவின் வீட்டிற் தஞ்சம் புகுந்தார். அங்கு அவர் வீட்டிலுள்ள ஒரு அறையினுட் சென்று அந்த அறையின் சாரளங்களையும் பூட்டிக் கதவினையும் தாளிட்டுக் கொண்டார். வெளிச்சமோ காற்றோ புகமுடியாத அந்த அறையினுள் என்னேரமும் ஒரு சிறிய அகல் விளக்கு மட்டுமே எரியும். அவர் அங்கிருந்த போது யாரையும் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை. தனிமையில் உளம் நொந்து வாடினார். அவரது முழுத் தேவைகளையும் திரு நடராசா அவர்களே கவனித்துக் கொண்டார்.
இதனால் மிகுந்த கவலைக்குள்ளான தட்சணாமூர்த்தி அவர்களின் மூத்த சகோதரர் திரு. உருத்திராபதி அவர்கள் இணுவிலின் பிரபலமான வாதரோக வைத்தியர் திரு. சு. இராமலிங்கம், இணுவிலின் பிரபல மணிமந்திர வைத்தியரும் பில்லி சூனியம் அகற்றுபவருமாகிய அருட்திரு அம்பலவாணசுவாமிகள். (இவரை இணுவில் மக்கள் மணியப் பொடியார் என அன்புடன் அழைப்பர்). அம்பலவாண சுவாமிகளின் குருநாதரும் பிரபல சித்தவைத்தியருமான கொக்குவில் நடராசப் பரியாரியார் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு தன் அன்புத் தம்பியைப் பார்ப்பதற்குச் சென்றார். அறையின் வெளியே நின்று “ நான் உனது அண்ணா வந்திருக்கின்றேன் ஒரே ஒரு தடவை கதவைத் திறக்க மாட்டாயா?” எனத் தன் தம்பியிடம் பல தடவைகள் இறைஞ்;சினார். வழமையாக யாராவது சென்று பார்க்க அனுமதி கேட்டால் அறையினுள்ளே இருந்தபடி கூப்பாடு போட்டு வந்தவர்களை வைது கலைக்கும் தட்சணாமூர்த்தியின் அறையில் அன்று நிசப்தமே நிலவியது. என்றும் தனது தமயனாரிடம் பயமும் பக்தியும் கொண்ட தட்சணாமூர்த்தி அன்றும் அதை நிதானத்துடன் கடைப்பிடித்தார். அண்ணனின் கேள்விக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவர்களும் வெளியிலே மணிக்கணக்காகக் காத்திருந்தார்கள். எந்தச் சத்தமும் இல்லை. நீண்ட நேரத்தின் பின் உள்ளே எரிந்து கொண்டு இருந்த அகல் விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. பதிலை உணர்ந்து கொண்ட அவர்களும் மிகுந்த வேதனையுடன் வந்த வழியே திரும்பிவிட்டனர். இப்படியிருக்க நாம் போனோம் அவரைப் பார்த்தோம் கதைத்தோம் என்றெல்லாம் நிறையப்பேர் கதை சொல்கின்றார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை.
“அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு” - திருக்குறள்
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமற் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து அவனுக்குத் தீங்கு வரும் காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான நட்பு.
திரு முருகையா என்பவர் அளவெட்டியைச் சேர்ந்தவர். இவர் 1940 இற் பிறந்தவர். தற்போது திருகோணமலையிற் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றார். திரு தட்சணாமூர்த்தியின் இன்பதுன்பங்களிற் பங்கெடுத்து, அவருடைய வாகனத்திற்கு சாரதியாகவும் ஆத்மார்த்த நண்பனுமாக இருந்தவர். அவர் கூறுகின்றார். “முதன் முதலிற் தட்சணாமூர்த்தி எனக்கு அறிமுகமானபோது நான் நினைக்கின்றேன் எனக்குப் பத்து, பதினொரு வயது இருக்கும். குழந்தையைப் போன்ற சுபாவம் உடையவர். அருமையான என்னுயிர் நண்பன். அவரைப் போல அன்பான, இனிமையான, ஒரு பிறவியை நான் என் வாழ் நாளிற் கண்டது இல்லை. அவர் தவில் வாசிப்பை இந்த உலகமே மெச்சியது. அவர் ஒரு சித்தர் பின் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே அறிந்து கூறி விடுவார். நான் காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற் சாலையில் வேலை செய்தேன் அந்த வேலையை விடச் சொல்லி விட்டு என்னைத் தனது வாகனத்தின் சாரதியாக்கிக் கொண்டார். யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் அவருக்கு நல்ல பேரும் புகழும் இருந்தது. எப்போதும் கச்சேரி கச்சேரி என்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மாறி மாறி ஓடிக்கொண்டே இருப்பார். தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பைப் பொழிபவர். “என்னுடைய மனைவியை இந்த உலகத்திற் தனியாக விட்டுச் செல்லேன் நான் இல்லையேல் அவள் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும் நான் இறந்தபின் அவளையும் என்னுடன் அழைத்துக் கொள்வேன்” என்றார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத, யாருடனும் எந்தச் சோலிக்கும் போகாத, வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை போன்றவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள். அவருடைய மரணம் இயற்கை மரணம் இல்லை. நானும் குகானந்தனும் ஒரு சிறந்த மாந்திரீகரை எனது நண்பன் தட்சணாமூர்த்தியிடம் அழைத்துச் சென்று இதை உறுதிப்படுத்தினோம். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத எனக்கு ஏன் இத்தனை துன்பங்கள் எனப் பல தடைவைகள் அவர் கண்ணீர் விட்டுள்ளார்.
உண்டான போதுகோடி உறமுறையோர்கள் வந்து
கொண்டாடி கொண்டாடிக் கொள்வர் தனம்குறைந்தால்
கண்டாலும் பேசார்இந்த கைத்தவமான பொல்லா
சண்டாள உலகத்தைத் தள்ளிநற்கதி செல்ல
பல்லவி
என்றைக்கு சிவக்ருபை வருமோ ஏழை
என்மன சஞ்சலம் ஆறுமோ
தட்சணாமூர்த்தி இறக்கும் போது என்னுடைய மனைவி கருவுற்று மூன்று மாதம் எனக்கு மூத்தவர்கள் நால்வரும் பெண்கள். தட்சணாமூர்த்தி இறந்தபின் எனக்குப் பிறந்தது. ஆண்குழந்தை அவனுக்குத் தட்சணாமூர்த்தி என்றே பெயர் சூட்டியுள்ளேன். இதைத் தவிர எனதுயிர் நண்பனுக்கு என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர் 1970 ஆம் ஆண்டு குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னர் என்னை மீண்டும் காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற் சாலைக்கு அழைத்துச் சென்று எனக்கு வேலையையும் பெற்றுத் தந்து விட்டார். அவர் தான் என்னுடைய கடவுள்”;. எனத் தாளமுடியாத வேதனையுடன் விம்மி விம்மியழுது தன்னுயிர் நண்பனை நினைவு கூர்ந்தார்.
கன்றின் குரலைக்கேட்டுக் கனிந்துவரும் பசுபோல்
ஒன்றுக்கும் அஞ்சாது என்னுள்ளத் துயரம்நீக்க
என்றைக்கு சிவக்ருபை வருமோ?
என்ற நீலகண்டசிவனின் கதறல் உண்மையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொதுவானதோ? தட்சணாமூர்த்தியும் தனது மனதிற்குள்ளேயே கதறினார். கலங்கினார். சமணர்கள் ஏவிய சூலை நோய் நாவுக்கரசரைத் தாக்கியது போல, யாரிட்ட பொறாமைத்தீ தட்சணாமூர்த்தியைத் தாக்கியதோ? அவர் மீது பிரியமுள்ளவர்கள் மனம் துடிக்க, அகமுடையாள் நெஞ்சம் கதி கலங்க உடல் நலக்குறைவாற் படுக்கையில் வீழ்ந்தார் தட்சணாமூர்த்தி. தெல்லிப்பழையிலுள்ள வைத்தியர் இராசேந்திரத்தினுடைய மருத்துவமனையில் (இல்லம்) சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளையும் தன்னைப் பார்க்க யாரும் வருவதை அறவே விரும்பவில்லை. அதையும் மீறிச் சென்ற பலர் அவரிடம் அடி, உதைகளும் வாங்கியிருக்கின்றார்கள். அவருடைய அந்த இறுதிக் காலத்தில் அவருக்கு எல்லாமே வெறுத்துப் போய் இருந்தது. இந்த உலகத்திலுள்ள யாரையும் பார்க்கவோ பேசவோ அவர் பிரியப்படவில்லை. அப்படிப்பட்டவர் நடராசா என்பவரை மட்டுமே தன்னுடன் இருக்க அனுமதித்து உள்ளார்.
அங்கு இருக்கும் போது திரு தட்சணாமூர்த்தி தனது பேசும் சக்தியையும் இழந்து உடல் வலிகளுக்கும் ஆளாகியிருந்தார். இந்த வலிகளை மறந்து அவர் துயில் கொள்வதற்காக ஊசி மூலம் மருந்து செலுத்துவது வழக்கம். இவ்வாறு மருந்து செலுத்தி அவர் துயில் கொண்ட வேளை ஒரு நாள் இணுவில் தவில் வித்துவான் திரு சின்னராசா (ஒன்று விட்ட சகோதரர்) அவர்களுடைய குடும்பம் அவரைப் பார்க்கச் சென்றபோது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், திரு தட்சணாமூர்த்தியின் நெற்றியில் அவர்கள் வீபூதியைப் பூசி விட்டு வீடு திரும்பி விட்டனர். துயில் கலைந்து கண்விழித்த தட்சணாமூர்த்தி நெற்றிக் கண்திறந்த உருத்திரனாகிவிட்டார். “திருச்செந்தூர் வீபூதி மணக்கின்றது. யார் இங்கு வந்தது? யாருக்கும் சொல்லுவது புரியாது இங்கு யாரும் வரக்கூடாது யாரையும் இங்கு அனுமதிக்கக் கூடாது என்றால் யார் கேட்கிறார்கள்? இனி நான் இங்கு இருக்க மாட்டேன் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். அங்கு வீட்டின் முன்புறக் கேற்றில் இங்கு யாரும் வரக்கூடாது என்று எழுதி மாட்டிவிடுங்கள்” என்று கூறி அன்றே நடராசாவின் வீட்டிற்குத் திரும்பி விட்டார். வீட்டிற்குச் சென்று அறையினுள்ளே சென்று மீண்டும் தாளிட்டுக் கொண்டு விட்டார் அந்த வீட்டை விட்டு அவர் வெளியில் இறங்குவதே இல்லை.
வீட்டுக்குச் சென்றபின் மருந்துகள் எதுவும் உட்கொள்ளாததால் சில வாரங்களில் மீண்டும் உடல் வலியெடுத்தது. நிறைய வாந்தியும் எடுக்க ஆரம்பிக்கவே உடனே மூளாயில் உள்ள அரசாங்க வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நண்பன் நடராசாவும் அவரது மூத்த தமக்கை இராஜேஸ்வரியும் தங்கை பவானியுமே அருகில் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்கள். அவருக்கு வாந்தி எடுப்பதற்கு முடியவில்லை. அதற்காக மிகவும் அவஸ்தைப்பட்டார். நன்றாகக் களைத்தும் விட்டார். பின்னர் அவரது வாயினுள் குழாய் ஒன்றைச் செலுத்தியே குடலினுள் இருந்தவற்றை வெளியிலே எடுத்தார்கள். அதன் பின்னர் அவர் உடல் நிலை சற்றுத் தேறத் தொடங்கியது. கதைக்கவும் ஆரம்பித்து விட்டார் இருபது நாட்கள் அவரது சகோதரிகள் இராஜேஸ்வரி, பவானி ஆகியோரின் பராமரிப்பில் குணமாகிக் கொண்டு வந்த தட்சணாமூர்த்தி இருபத்தியோராவது நாள் அவருடைய மூத்த சகோதரி வீட்டிற்குச் சென்றிருந்த வேளை இனி இங்கு இருந்தது போதும் வீட்டிற்குச் செல்வோம் எனப் புறப்பட்டுவிட்டார். அவருடைய பேச்சை மறுப்பதற்கு அவருடைய தங்கை பவானிக்குத் துணிச்சல் இல்லை. ஆகவே நடராசாவும் தங்கை பவானியும் காரில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராகினர். காரில் பின் இருக்கையில் அமர்ந்த தட்சணாமூர்த்தி தனது தங்கையையும் பின் இருக்கைக்கு அழைத்து இருக்கும்படி கூறி அவரது மடியிற் தலைவைத்துப் படுத்தபடி வீட்டிற்குச் செல்லும்படி உத்தரவிட்டார் கார் வீட்டைச் சென்றடையும் முன்னரே திரு. தட்சணாமூர்த்தி அவர்கள் அவரது தங்கையின் மடியிலே நிரந்தரமான உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
திரு கேதீஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்திற் “திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறப்பதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு எங்கேயோ இருந்து இந்தியாவால் வந்து கச்சேரி எல்லாம் வாசித்து விட்டு வேறு எங்கோ இருந்தவர் வீட்டிற்கு வந்து சாய்மனைக் கட்டிலிற் படுத்திருந்தார். என்று ஏதோ கதை எல்லாம் சொல்லுகின்றார். எப்போ யாழ்ப்பாணம் சென்றார்? எங்கே இருந்தார்? என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. பின் வீட்டிற்கு வந்தார் நான் சென்று பார்த்தேன் கைகளைக் காட்டினார் என்றெல்லாம் கண்ணீர் விடுகின்றார். தட்சணாமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவினால் அவருடைய நண்பன் நடராசாவின் வீட்டிற்குச் சென்றவர் இறக்கும் வரை அவருடைய சொந்த வீட்டிற்குச் செல்லவில்லை. நண்பன் நடராசா வீடு, வைத்தியர் இராசேந்திராவின் வீடு, மூளாய் வைத்தியசாலை ஆகிய இடங்களிலேயே மாறி மாறி இருந்துள்ளார்.
அது மட்டுமல்ல சித்தர்களின் மன ஒருமைப்பாட்டிற்கும், தட்சணாமூர்த்தி அவர்களின் மன ஒருமைப்பாட்டிற்கும், அவரின் ஒரு முகப்பட்ட தவில் வாசிப்பிற்கும் திரு கேதீஸ்வரன் அளித்த விளக்கம் ஆகா அருமை!! மிகப் பிரமாதம்!!! என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் திருமூலர் தொடங்கிப் பதினெண் சித்தர்களோ அன்றி ஈழத்துச் சித்தர்களோ இவர்களில் யாருமே கூறாத, அவர்களுக்குக் கூடத் தோன்ற முடியாத, மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு உரிய அறிவை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்? தனது அனுபவத்தில் இருந்தா? அப்போ திரு தட்சணாமூர்த்தி அவர்கள் சிறுவனாக இருந்த போது தவில் வாசிக்கும் நேரங்களில் என்ன செய்தார்? யாழ்ப்பாணத்தில் “ஒரு சிறுவன் மிக அற்புதமாகத் தவில் வாசிக்கின்றான்” “அவன் அப்படி என்ன தான் வாசிக்கின்றான்?” என்று தவிற் கலைஞர்களைச் சிந்திக்க வைத்து, உலகையே தான் இருக்குமிடம் அழைத்தாரே! திரும்பிப் பார்க்க வைத்தாரே!! அந்தக்காலங்களில் திரு தட்சணாமூர்த்தி எப்படி இருந்தார்? என்ன செய்தார்? இது எதுவும் திரு கேதீஸ்வரன் அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.
திரு தட்சணாமூர்த்தி அவர்கள் ஒருவேளை இளமைக் காலத்திற் காற்றாக, மழையாக, நெருப்பாக இருந்திருப்பாரோ? அளவெட்டி மண்ணைத் தீண்டி, அளவெட்டிப் பெண்ணை மணந்த பிற்பாடுதான் தவில் வாசிக்கும் சுந்தர புருஷனாக உருவெடுத்திருப்பாரோ?
திரு தட்சணாமூர்த்தி அவர்களுக்கு (தவில்) வித்தியாரம்பம் செய்த ஈழத்துச் சிதம்பரமாகிய காரைநகர் சிவன் கோயில்.
அவரின் முதற் கச்சேரி நடைபெற்ற இணுவில் மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில், இக்கோயில் திரு தட்சணாமூர்த்திஅவர்கள் பிறந்த வீட்டிற்கு அருகிலுள்ளது.
மஞ்சத்தடி கந்தசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் திருவுருவச்சிலை
இவையெல்லாவற்றையும் சுனாமி அடித்துச் செல்லவும் இல்லை. யுத்தம் பாழாக்கவும் இல்லை. அது சரி அவருக்குத் தட்சணாமூர்த்தி பிறந்து தவழ்ந்து ஓடிவிளையாடி வளர்ந்த, சிறிய வயதிற் தந்தையாருடன் இருந்து தவில் வாசித்த, மஞ்சத்தடி ஓழுங்கையில் அமைந்திருந்த, இந்தியக் கலைஞர்கள் பலர் வந்து தங்கி உண்டு உறங்கி இளைப்பாறிய, கலைக் கூடமாகத் திகழ்ந்த, விஸ்வலிங்கத்தின் மூதாதையரும் அதன் பின் விஸ்வலிங்கமும் பின் அவர்களின் மூத்தமகன் உருத்திராபதியும் வாழ்ந்த அந்த மிகப்பெரிய நாச்சார் வீட்டை அவர் கண்டதுண்டோ? அந்த வீடு யுத்தத்தின் போது சிதைவுற்று விட்டதாற் தற்போது உருத்திராபதியின் மகனும், விஸ்வலிங்கத்தின் மூத்தபேரனும், தட்சணாமூர்த்தியின் பெறாமகனுமாகிய திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் கட்டிய புதிய இல்லம் அமைந்துள்ளது.
திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறப்பதற்கு முன் இருபத்தியொரு நாட்கள் மூளாய் வைத்தியசாலையில் இருந்தார். அப்போது அவருடைய அறிவும், சிந்தனையும் மிகத்தெளிவாகவே இருந்தது. அவருக்குக் கைகள் குறளவும் இல்லை. அவர் தனது ஆருயிர் நண்பன் திரு. முருகையாவிடம் தவிர வேறு யாரிடமும் தனது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டவரும் அல்லர். திரு. கேதீஸ்வரன் எப்போ வைத்தியரானார்? திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இறந்த காரணத்தைக் கூறுவதற்கு? திரு. தட்சணாமூர்த்தி அவர்களுக்குக் கால்கள் வீக்கம் கண்டிருந்தது. உடல் வலியிருந்தது. அந்த நிலையிலும் அவர் விரும்பினால் தவில் வாசிக்கக் கூடியவராகவே இருந்தார். ஆனால் அவருக்குத் தான் இந்த உலக வாழ்க்கையே வெறுத்து விட்டது. பின்பு யாருக்காகத் தவிலை வாசிப்பது? பற்றுகள் ஆசைகள் அனைத்தையும் துறந்தவர்களுக்கு இந்தச் சண்டாள உலகத்தில் என்ன வேலை? தன் வேதனைகளை இறுதிவரை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு, தன்னை எரித்துப் பிறருக்கு ஒளி கொடுக்கும் தீபம் போல, தன்னைச் சூழ்ந்திருந்தவர்களுக்கு மகிழச்சியை அள்ளிக் கொடுத்து விட்டு, அருணகிரிநாதரைப் போல, வள்ளளாரைப் போல இவ்வுலக வாழ்க்கையைத் துறந்துவிட்டார். அவர் கூறியபடியே மூன்று மாதங்கள் நிறைவடைய முன்பே தன் மனையாளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். (எழுபது நாட்களில்)
தட்சணாமூர்த்தியும் அவருடைய மனைவியும் 1975 ஆம் ஆண்டு இறந்த பின்னர், மீண்டும் பிள்ளைகள் எல்லோரையும் இணுவிலிற் தன்னுடைய வீட்டிற் தங்க வைத்துத் தான் வேலைக்குச் சென்று நான்கு வருடங்கள் பாதுகாத்து வளர்த்தவர் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி திருமதி பவானி வேதய்யா அவர்களே. இக்காலத்;திற் திரு தட்சணாமூர்த்தியின் இரண்டாவது மகன் திரு உதயசங்கர் அவர்களைத் தன்னுடன் வைத்திருந்து தவிற் பயிற்சி அளித்துப் பின்னர் அவரைத் தமிழ் நாட்டிற்கு அழைத்துச் சென்று வலங்கைமான் சண்முகசுந்தரத்திடம் தவில் படிக்க ஏற்பாடு செய்தவர் இணுவில் திரு. புண்ணியமூர்த்தி அவர்கள். அங்கு ஆறுமாத காலம் இருந்து சிட்சை பெற்றுக்கொண்டு மீண்டும் ஒருவருடம் திரு புண்ணியமூர்த்தி அவர்களுடன் இருந்தே சேவகத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின் தொழில் செய்ய ஆரம்பித்ததும் சிட்டுக்குருவியின் தலைமேற் பனங்காய் வைத்தது போல பதின்மூன்று வயதேயான சிறுவன் உதயசங்கரே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. அன்று அந்தச் சிறிய வயதினிற் தோளிற் தூக்கிய குடும்பச் சுமையையும், துயரங்களையும் இன்று வரை இறக்கி வைக்க முடியாது தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தைக் காலமும் சூழலும் ஏற்படுத்தி விட்டன. இதை எத்தனை பேர் அறிவார்கள்?
“உயிர்களைக் காப்பவனே – என்றும்
உயிர்க்கு உடையவனாம்
அயர்வு வேண்டாம் ஐயா - இதுவே
அறநூல் விதி ஐயா”
இதை நான் கூறவிலலை. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் தனது “ஆசியஜோதி” என்ற நூலிற் குறிப்பிட்டு உள்ளார்.
திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் புகழிற் பணத்திற் குளிர் காய்ந்தவர்கள், குளிர் காய்கிறவர்கள், தட்சணாமூர்த்தி என்னவர், எங்களவர், எம் அயலவர், அவரோடு உண்டேன், குடித்தேன், உறங்கினேன், விளையாடினேன், நண்பனாயிருந்தேன் என்று சொல்பவர்களெல்லோரும் அவர் விரும்பிய மண வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கும், அவர் மனம் உடைந்து தனிமையில் வாடியபோது ஆறுதல் சொல்வதற்கும், அவர் பிணியினால் நொந்து படுக்கையில் வீழ்ந்த போது நல்லதொரு வைத்தியரிடம் காட்டி ஆலோசனை பெறுவதற்கும், திரு தட்சணாமூர்த்தி அவர்களும், அவரது மனைவியும் இறந்தபின் அன்னையையும் தந்தையையும் இழந்து குழந்தைகள் அனாதைகளான போது உடனே அவர்களைப் பொறுப்பேற்றுக் காப்பதற்கும், தங்கள் துயரங்களைக் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஆதரவற்ற அந்தக் குழந்தைகளை நெறிப்படுத்தி வளர்ப்பதற்கும், அதன் பின்னரும் கூட அவர்களின் கஷ்ட துன்பங்களிற் பங்கெடுப்பதற்கும் எங்கே போயிருந்தார்கள்?
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு” - திருக்குறள்
தவில் மேதை தட்சணாமூர்த்தி இவ் உலக வாழ்க்கையைத் துறந்து விட்டார். என்கின்ற செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவி விட்டது. தவில் மேதை தட்சணாமூர்த்தியின் வசீகரமான குழந்தை முகத்தை இறுதியாக ஓரு தடைவ பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கத்தோடு அளவெட்டியிலுள்ள அவரின் இல்லம் நோக்கி மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து படையெடுத்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு செல்வநாயகம் தலைமையிலே திரு.அமிர்தலிங்கம், திரு.தர்மலிங்கம், திரு.பொன்னம்பலம் உட்படப் பல அரசியற் பிரமுகர்களும் சென்று தட்சணாமூர்த்திக்கு இரங்கலுரை வழங்கி, அஞ்சலி செலுத்த, கலைஞர்களும் அவருடைய இரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்த, வெள்ளம் போற் பெருக்கெடுத்த மக்கள் கூட்டம் பின் தொடர, வரலாறு காணமுடியாத ஓரு மா மேதையின் இறுதி யாத்திரை அளவெட்டி கேணிப்பிட்டிச் சுடலையைச் சென்றடைந்தது. அங்கே அவரது பூத உடலுக்கு அவரது அன்புச் செல்வங்கள் வற்றாத கண்ணீருடன் தீமூட்டினர்.
“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி யிரு
கைத்தல மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே”.
என்று பட்டினத்தார் பாடியது போல 1975 ஆம் ஆண்டு அவர் பூத உடல் மறைந்தது. ஆயினும் அவர் செய்த புண்ணியம் தவிலிசையின் வடிவிலே கால் நூற்றாண்டைத் தாண்டிய பின்னரும் ஒலிக்கின்றது. தவில் என்கின்ற வாத்தியம் இருக்கும் வரை திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
“மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே”.
- பட்டினத்தார் பாடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------குறிப்பு
எங்களுடைய குடும்பம் திரு விஸ்வலிங்கம் குடும்பத்துடன் என்னுடைய பாட்டன் காலத்திலிருந்து மூன்று தலைமுறையாக நெருங்கிய நட்புடைய குடும்பம். அந்தக் குடும்ப உறவினாற் தெரிந்து கொண்ட விடயங்களும், திரு. விஸ்வலிங்கத்தின் மூத்தமகன் திரு. உருத்திராபதி அவர்களிடம் எனது தந்தை (இணுவையூர் பண்டிதர். கா.செ.நடராசா) வாய்ப்பாட்டினைக் கற்றவர், நானும் அவரிடம் வாய்ப்பாட்டையும், வயலினையும் கற்றவள். பின்னர் திரு உருத்திராபதி அவர்களின் மகன் தட்சணாமூர்த்தியின் பெறாமகன் திரு இராதாகிருஸ்ணன் அவர்களிடமும் நான் வயலின் கற்றுள்ளேன். சிறு வயதிலிருந்து எனது தந்தையிடமும் எனது குருவினரிடமும் இருந்து அறிந்து கொண்டவற்றில் என் மனதிற் பதிந்த ஏராளமான விடயங்களும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. மேலும் இக்கட்டுரை சிறப்பாக அமைவதற்கு மிகுந்த உள்ளன்போடு தகவல்களைத் தந்து உதவிய இணுவில் திரு கே.ஆர். புண்ணியமூர்த்தி (தட்சணாமூர்த்தியின் சகோதரியின் மகன்) அவர்களுக்கும், இணுவில் திருமதி பவானி அம்மா (தட்சணாமூர்த்தி அவர்களின் சகோதரி) அவர்களுக்கும் அளவெட்டி திரு முருகையா (தட்சணாமூர்த்தி அவர்களின் வாகனச் சாரதி ஆருயிர்த் தோழன்) அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.
உசாத்துணை
நடராசா கா.செ, இணுவை அப்பர்.
ஜெயராசா .சபா, ஈழத்தமிழர் கிராமிய நடனங்கள்.
சண்முகசுந்தரம் .த, யாழ்ப்பாணத்து இசைவேளாளர்.
சண்முகசுந்தரம் .த, இசையும் மரபும்
இராமநாதன் ஏ.எஸ, விவரணப்படம்
சந்திரசேகரம்.பி, “ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி” கட்டுரை
நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்.
இணுவில் கே. ஆர். புண்ணியமூர்த்தி (திரு.தட்சணாமூர்த்தியின் மருமகன் வயது 76 ) – செவ்வி
இணுவில் திருமதி. பவானி. வேதையா (திரு.தட்சணாமூர்த்தியின் சகோதரி வயது 83) – செவ்வி
அளவெட்டி திரு . முருகையா (திரு.தட்சணாமூர்த்தியின் ஆருயிர்த்தோழன் வயது 78 ) – செவ்வி
“பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
- திருக்குறள்.
பண்புடையவர்கள் - நீதி, அறம், உள்ளத்தில் உண்மை உடையவர்கள் வாழ்வதாற்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கின்றது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால், மனித வாழ்க்கை மண்ணுள் புகுந்து மடிந்து போகும்.
No comments:
Post a Comment