அவுஸ்திரேலிய மாணவ செல்வங்கள் மியன்மாரில் வெற்றிவாகை - கானா பிரபா

.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பெருமைக்குரிய அனுசரணையோடு
அனைத்துலக “பேசு தமிழா பேசு 2018”  போட்டி முடிவுயங்கூன் நகரில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான அனைத்துலக ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டியின் மாபெரும் வெற்றியாளர் இந்தியாவைச் சேர்ந்த நரேன் கெளதம் நாகராஜன் ஆவார். இரண்டாம் நிலை வெற்றியாளராக மலேசியாவின் தேவேந்திரன் சுகுமார் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
அடுத்து, மூன்றாம் நிலை இந்தியாவின் முகம்மது துர்வேசுக்கும் அவுஸ்திரேலியாவின் பருணிதன் இரங்கநாதனுக்கும் கிடைத்தது.
அவுஸ்திரேலியப் போட்டியாளர் செல்வி மாதுமை கோணேஸ்வரனுக்கு சிறந்த பேச்ச்சாளருக்கான இளந்தமிழ்ச் சுடர்’ விருது கிட்டியது.
வணக்கம் மலேசியாவும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து படைத்த இந்தப் பேச்சுப் போட்டி, 3-ஆவது ஆண்டாக நடைபெற்றது. இப்போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன.மலேசியா, இந்தியா, இலங்கை, மியன்மார், அவுஸ்திரேலியா,மொரீசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 உயர்கல்வி மாணவப் பேச்சாளார்கள் போட்டியில் பங்கேற்றனர்.

2016 -இல் இந்தியாவில் நடந்த முதல் ‘பேசு தமிழா பேசு’ போட்டியில், சாம்பியனாக மலேசியா வாகைசூடியது. 2017-இல் கொழும்பில் நடந்த 2-ஆவது அனைத்துலக போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது.
2018-இல் மியன்மாரில் நடைபெற்ற இந்த அனைத்துலக போட்டியில் மலேசிய சபா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஜயரத்னம் இராமா, மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாருகுட்டி இராமன் மற்றும் சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த தேவேந்திரன் சுகுமார் ஆகியோர் மலேசியாவை பிரதிநிதித்துப் போட்டியில் களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட ‘பேசு தமிழா பேசு’ பேச்சுப் போட்டியில், இவர்கள் மூவரும் வாகைசூடி, அனைத்துலக போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.


இந்த அனைத்துலகப் பேச்சுப் போட்டி, மூன்று சுற்றுக்களாக நடைபெற்றன. முதல் சுற்று, தனிநபர் பேச்சுப் போட்டியாக அமைந்தது, 2-ஆவது சுற்று, இருவர் பங்கேற்கும் விவாதக் களமாக நடைபெற்றது. மாபெரும் இறுதிச் சுற்று, நால்வர் பங்கேற்கும் விவாதக் களமாக அமைந்தது.
இப்போட்டியின் இறுதிச் சுற்றின் தலைப்பு காதலில் தப்புத் தப்பாய் கணக்கு போடுவது யார்? காதலியா? காதலனா? பெற்றோரா? நண்பர்களா? ஆகும். காதலிதான் என தேவேந்திரனும், காதலன் தான் என முகம்மது துர்வேஸும், பெற்றோர்தான் என பருணிதரனும், நண்பர்கள்தான் என நரேன் கெளதமும் பேசினார்கள்.
இந்த மாபெரும் இறுதிச் சுற்றின் வெற்றியாளருக்கு பரிசாக 5,000 ரிங்கிட் ரொக்கம், சுழல் கிண்ணம், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.


2 ஆவது வெற்றியாளருக்கு 3,000 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். 3 ஆம் நிலை வெற்றியாளர்களான இருவருக்கு தலா 2,000 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
அடுத்து, 4 ஆம் நிலை வெற்றியாளர்களான நால்வருக்கு தலா 1,000 ரிங்கிட் ரொக்கம், நினைவு சின்னம் மற்றும் சான்றிதழ் தரப்பட்டன. அடுத்து, போட்டியில் பங்கேற்ற இதர எண்மருக்கு ஆறுதல் பரிசாக 500 ரிங்கிட் ரொக்கம், நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
 ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த தலா ஒரு சிறந்த பேச்சாளருக்கு ‘இளந்தமிழ்ச் சுடர்’ என்ற விருது அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
தகவல் உதவி : வணக்கம் மலேசியா
படங்கள் : TRC Singapore
உலகளாவிய ரீதியில் நிகழும் இந்தப் போட்டியில் நமது அவுஸ்திரேலிய மண்ணியில் இருந்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பெருமைக்குரிய அனுசரணையுடன் மியன்மார் நாட்டுக்குச் சென்றிருக்கும் எம் அவுஸ்திரேலிய இளவல்கள்
செல்வி மாதுமை கோணேஸ்வரன்
செல்வன் தாயகன் செல்வானந்தம்
செல்வன் பருணிதன் ரங்கநாதன் ஆகியோரையும்
பங்கெடுத்த மாணவச் செல்வங்களையும் மகிழ்வோடு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாழ்த்துகிறது.


1 comment:

கண்ணன் said...

இந்த பிள்ளைகளுக்கும் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் ஊட்டுத் தாபனத்திற்கும் பாராட்டுக்கள். இன்னும் நிறைய மாணவர்கள் இதில் பங்குபெறவேண்டும். வாழ்த்துக்கள்.