உறவினைப் பேண வேண்டும்
உள்ளத்தில் துறவு வேண்டும்
அறவழி பேண வேண்டும்
அகமெலாம் அமைதி வேண்டும்
சினமதை ஒழிக்க வேண்டும்
சிந்தையை ஒடுக்க வேண்டும்
வருவதை ஏற்க வேண்டும்
வாழ்க்கையே இனிக்கும் அப்போ !
ஆசைகள் எழவே வேண்டும்
அவைநன்மை பயக்க வேண்டும்
மோசடி தவிர்க்க வேண்டும்
முதுமொழி ஏற்க வேண்டும்
தெருவினில் நடக்கும் போதும்
தீயதை ஒதுக்க வேண்டும்
அருகிலே எந்த நாளும்
அன்பையே இருத்த வேண்டும்
உரு எலாம் இறைவனாகக்
கருதிநீ வாழ்ந்து பாரு
பெருமைகள் உன்னைச் சேரும்
பெரும்பகை ஓடிப் போகும் !
ஊரெலாம் உறவாய்ப் பாரு
உவப்புடன் உதவி நில்லு
பாரெலாம் உள்ளார் உந்தன்
பக்கமே வந்து நிற்பார்
மனதினை மாற்றிப் பாரு
மன்னிப்பை நல்கிப் பாரு
தனிமையில் உணர்ந்து பாரு
தலைவனாய் உயர்வாய் நீயும் !
பேராசை தன்னை நீயும்
பெரும்பகை என்று எண்ணு
ஊரவர் பகைக்கா வண்ணம்
உன்னைநீ உணர்ந்து நில்லு
பாரெலாம் வியந்து பார்க்க
பண்பினை வளர்த்துக் கொள்ளு
வாழ்விலே மனத்தில் நீயும்
மாண்பினை இருத்திக் கொள்ளு !
No comments:
Post a Comment