நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 16 மரஆலையில் பீனிக்ஸ் பறவையாகத் தோன்றிய மக்கள் விடுதலை முன்னணி - ரஸஞானி


-->
தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள் பற்றி புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.  இலங்கை சுதந்திரம் பெற்றதும் தொடங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் நிறம் பச்சை. அதன் தேர்தல் சின்னம் யானை.
அதிலிருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா பிரிந்துவந்து தொடக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறம் நீலம். அதன் தேர்தல் சின்னம் கை.
இவை இரண்டினதும் தலைமைக்காரியாலயங்கள் கொழும்பில் மருதானை டார்லி ரோட்டிலும் (ஶ்ரீல.சு.கட்சி) கொள்ளுப்பிட்டியில் காலி வீதியிலும் (ஐ.தே.க. ஶ்ரீகோத்தா)  அமைந்துள்ளன. லங்கா சமசமாஜக்கட்சியின் காரியாலயம் யூனியன் பிளேஸிலும் இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியினது    (மாஸ்கோ சார்பு) பொரளை கொட்டாவீதியிலும் ( இன்று கலாநிதி என். எம். பெரேரா வீதி) அமைந்துள்ளன.
இவை இவ்விதமிருக்க, ஶ்ரீல.சு.க.வுடன் பிரிந்து தனது மனைவி சந்திரிக்காவுடன் சேர்ந்து விஜயகுமாரணதுங்காவும் மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை தொடக்கி, கொழும்பில் தெமட்டகொடையில் அதன் காரியாலயத்தை அமைத்தார். அவர் கொல்லப்பட்ட பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால் அவரது  மக்கள் கட்சி மீண்டும் ஶ்ரீல.சு.கவுடன் இணைந்துவிட்டது.
இந்தப்பின்னணிகளுடன் மக்கள் விடுதலை முன்னணியை பார்த்தால் இந்தக்கட்சி முதலில் 1971 இல் ஆயும் ஏந்தி கிளர்ச்சி செய்தமையால் தடைசெய்யப்பட்டு, மீண்டும் 1977 இல் பொது மன்னிப்பின் கீழ் அதன் தலைவர்கள் விடுதலையாகி மீண்டும் பீனிக்ஸ் பறவையைப்போன்று எழுந்து பறந்து தங்களுக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டது.
இவர்களின் பார்வையில் பச்சை, நீலக்கட்சிகள் முதலாளித்துவக்கட்சிகள் எனவும் சிவப்புக்கட்சிகளாக விளங்கிய கம்யூனிஸ்ட், சமசமாஜக்கட்சிகள் சந்தர்ப்பவாதக்கட்சிகள் எனவும் சொல்லப்பட்டது.
இலங்கையிலிருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் வரலாறு இருப்பதுபோன்று ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணிக்கும் சுமார் அரைநூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது.
1943 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருக்கும் ரோகண விஜேவீரா குழந்தையாக இருந்த சமயத்தில் அவரது தாயாரினால் மருத்துவத்தேவைகளுக்காக அப்பகுதியில் கிளினிக் நடத்திவந்த டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவிடம்தான் அழைத்துச்செல்லப்பட்டவர்.
விக்கிரமசிங்கா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( மாஸ்கோ சார்பு) தலைவராக இருந்தவர். மத்திய தர குடும்பத்தைச்சேர்ந்த விஜேவீரா முதலில் குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராகவே இருந்தார். அதனால் ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச்சென்று, அதனை பாதியில் நிறுத்திவிட்டுத்திரும்பி,  சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அங்கும் அதிருப்தியுற்று தொழிலாளர்கள், விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் வேலையில்லாத்திண்டாட்டத்தினால் பாதிப்புற்றிருந்த பட்டதாரி இளைஞர்களை அணிதிரட்டிக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை உருவாக்கி அவர்கள் மத்தியில் ஐந்து வகுப்புகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மிகவும் துணிச்சல் மிக்க விஜேவீரா பேச்சாற்றலும் நிரம்பப்பெற்றவர். மாறி மாறி பதவிக்கு வரும் பச்சை - நீலம் கட்சிகளும் அவற்றுக்குத்துணைசெல்லும் சிவப்புக்கட்சிகளும் தேசத்தை அழிவுப்பாதையிலிருந்து மீட்காமல், ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக நடந்து  அடக்குமுறைக்கே பாதை காண்பிக்கும் எனச்சொல்லி  தீவிரமான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தார்.
அதன்விளைவாக அவர் 1971 இல் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டபோது,  அதே ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் சில பொலிஸ் நிலையங்களை அவரது கட்சியினர் தாக்கி கிளர்ச்சி செய்தனர்.
அதனால் தடைசெய்யப்பட்ட ம.வி.மு. உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். பொலிஸ் நிலையங்களின் பின்வளவுகளில் எரிக்கப்பட்டனர்.
பலரது உடல்கள் களனி கங்கையிலும் வீசப்பட்டன. களனி கங்கையில் மூங்கில்கள் படகுகள் மாத்திரமல்ல இளைஞர்களின் சடலங்களும் 1971 காலப்பகுதியில் மிதந்து வந்த காட்சியை பலரும் மறந்திருக்கமாட்டார்கள்.
கைதுசெய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள் யாழ்ப்பாணம், கண்டி போகம்பரை, கொழும்பு வெலிக்கடை, மகசீன், அநுராதபுரம், நீர்கொழும்பு சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக குற்றவியல் ஆணைக்குழு அமைக்கப்பட்டு நீதியரசர் அலஸ் முன்னிலையில் விசாரணையும் நடந்தது. அதில் தோன்றிய விஜேவீரா லயனல் போப்பகே உட்பட மற்றும் பலருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதியரசர் அலஸ் எழுதிய நூலில் மேலும் தகவல்களை அறியமுடியும்.

1977 இல் பதவிக்குவந்த ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு சிறையிலிருந்த தனது கட்சி ஆதரவாளர்களையும் விடுவிக்கவேண்டியிருந்தமையால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவியல் ஆணைக்குழுவை இரத்துச்செய்தார். அதனால் ரோகண விஜேவீரா , லயனல் போப்பகே உட்பட அனைத்து மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் வெளியே வந்ததும் மீண்டும் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதில் தீவிரம் காண்பித்தனர். அழிக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தை மீண்டும் கட்டி எழுப்பி வளர்ப்பதற்கு அவர்களிடம் நிதியிருக்கவில்லை. போதிய வளங்களும் இல்லை. சிறையில் அவர்கள் இருந்தபோது இயற்றிப்பாடிய விடுதலைக்கீதங்களை மேடைகள் அமைத்து பாடினர். உண்டியல் குலுக்கினர். துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டனர். வண்ண வண்ண சுவரொட்டிகளில் தங்கள் கொள்கைகளை பதிவுசெய்தனர். தாம் ஜனநாயகப்பாதையில் மக்களிடம் வந்திருப்பதாகச் சொல்லி தங்கள் கட்சியையும் பதிவுசெய்தனர்.
அவர்களுக்கு ஒரு அலுவலகம் தேவைப்பட்டபோது அதற்கு உதவுவதற்கு ஒரு சிங்கள இளைஞர் முன்வந்தார். அவரிடத்தில் கொழும்பு ஆமர் வீதியும் புளுமெண்டால் வீதியும் சந்திக்கும் முச்சந்தியில் ஒரு மர ஆலை இருந்தது.
அங்கு பெரிய மரங்களை அரிந்துவிற்கும் தொழிற்சாலை இயங்கியது.
அந்தக்கட்டிடத்தின் மேல் தளத்தில் ஒரு அறையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகம் இயங்கியது. நாடேங்கும் தங்கள் கட்சியின் பிரசாரக்கூட்டங்களை நடத்தினார்கள்.
லுமும்பா பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மருத்துவராக வெளியே வந்திருக்கவேண்டிய ரோகண விஜேவீரா கட்சியின் தலைவராகவும் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பொறியிலாளரக வந்திருக்கவேண்டிய லயனல் போப்பகே கட்சியின் பொதுச்செயலாளராகவும் இயங்கி மக்கள் விடுதலை முன்னணியை அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்தார்கள்.
பஸ்களிலும் ரயில்களிலும் பயணித்து கூட்டங்களில் பேசி வந்திருக்கும் இக்கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்தனர். குறிப்பிட்ட மர ஆலையில் அமைந்த கட்சிக்காரியாலயத்தில் செங்கொடிகளை தரையில் விரித்து உறங்கியும் சாப்பாட்டுக்கடையிலிருந்தும் கட்சித் தோழர்களின் வீடுகளிலிருந்தும் பார்சல் உணவு வாங்கி பகிர்ந்துண்டு வாழ்க்கையை சுதந்திரமாகத் தொடர்ந்தனர்.
களனி கங்கையோரத்தில் கொகில வத்தை என்ற பிரதேசத்தில் அச்சகம் அமைத்து , இங்கிருந்து, நியமுவா, செஞ்சக்தி, ரது பலய, Red Power முதலான பத்திரிகைகளையும் வெளியிட்டனர்.
விடுதலைக்கீதம் என்ற தலைப்பில் நாடெங்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் ஆதரவு திரட்டினர். கட்சி ஆதரவாளர்களின் வீடுகளில் தினமும் மதியம் உணவு சமைக்கும்போது ஒரு சுண்டு அரிசியை வேறாக எடுத்துவைத்து சேமித்து தருமாறும் கோரிக்கை விடுத்து அடிமட்டத்திலிருந்து கட்சியை வளர்த்தெடுத்தனர். வண்ண வண்ண சுவரொட்டிகளின் மூலம் மக்களை கவர்ந்தனர்.
இதனைப்பார்த்த ஶ்ரீமாவோ அம்மையார் அவர்களை "தாப்ப விப்லவ காரயோ " என வர்ணித்து ஏளனம் செய்தார். அதன் தமிழ் அர்த்தம் மதில் புரட்சியாளர்கள். ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பியிருந்த இக்கட்சி உள்ளுராட்சி மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் ஆதரவை கணிசமானளவு பெற்றது. பின்னர் 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில்  இக்கட்சியின்  வேட்பாளராக ரோகண விஜேவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார். அதாவது இலங்கை அரசியலில் மூன்றாவது இடத்திற்கு இக்கட்சி வந்தது.
1983 மே மாதம் கொழும்பு நகர மண்டபத்திடலில் நடந்த ம.வி. முன்னணியின் மாபெரும் மேதினக்கூட்டமும் அதற்கு முன்னர் நிகழ்ந்த மாபெரும் ஊர்வலமும் அன்றைய ஜே.ஆரின் ஆட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதனை மீண்டும் அடக்குவதற்கு அவர் தருணத்திற்காக காத்திருந்தார். அந்த ஆண்டு ஜூலை கலவரம் வந்தது. அதனை ஒரு சாட்டாக வைத்து மக்கள் விடுதலை முன்னணி உட்பட இதர இடதுசாரிக்கட்சிகள் மீதும் தடைவிதித்தார்.
எனினும் கம்யூனிஸ்ட் கட்சி, வாசுதேவ நாணநயக்காரவின் நவ சமசாமஜக்கட்சிகளின் மீதான தடை தளர்த்தப்பட்டது. ரோகண விஜேவீரா உட்பட அவரது கட்சி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் தலைமறைவானார்கள்.
இறுதியில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தனது 46 ஆவது வயதில் விஜேவீரா கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரையடுத்து உபதிஸ்ஸ கமநாயக்க, வாஸ் திலகரத்தின முதலான தலைவர்களும் கொல்லப்பட்டனர். மீண்டும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கப்பட்டனர்.
"அடக்குமுறை தீவிரவாதத்திற்கு அடிகோலும், அதேபோன்று தீவிரவாதமும் அடக்குமுறைக்கு வழிகோலும்"   என்பார்கள். இவை இரண்டிலிருந்தும் பெற்ற பாடங்களை நன்கு கற்றுக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் பீனிக்ஸ் பறவையைப்போன்று தலைதூக்கி பறக்கத்தொடங்கியிருக்கிறது. புதிய தலைமைத்துவத்துடன் இயங்குகிறது.
தலைநகரில் களனி கங்கை தீரத்தில் அமையப்பெற்றுள்ள  அரசியல் கட்சிகளின் தலைமைக்காரியாலயங்களின் வராலாற்றை எழுதும்போது 1977 இற்குப்பின்னர் ஆமர்வீதியில் மிகவும் குறைந்த வளங்களுடன் மிகவும் எளிமையாகத்தொடங்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியாலயம் ஒரு சாதாரண மர ஆலைக்கட்டிடத்திலிருந்துதான் தொடங்கியிருக்கிறது என்ற செய்தியையும் இங்கு பதிவுசெய்கின்றோம்.
இன்று இக்கட்சியின் வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் அத்திவாரம் இட்ட பலர் களனி கங்கையில் சடலங்களாக மிதந்தனர் என்பதையும் மறந்துவிட முடியாது.
(தொடரும்)
( நன்றி: இலங்கை அரங்கம் இதழ்)








No comments: