நடை பாதை நண்பர்கள் (நடைக்குறிப்பு)- யோகன்


பாதையெங்கும் இலை உதிர்த்திருந்த  பிளம் மரங்கள்  இப்போது  வெள்ளை, ஊதாப் பூக்களை  விரித்து   வசந்தத்தை வரவேற்க ஆரம்பித்து விட்டன. துளிர்கள் வர முந்தி பூக்களை மலர்த்தும் இம்மரம்தான் வசந்தத்தின் வரவுக்கான முதல் கட்டியகாரன்.
இப்போ நடை பாதையில் நாய்களுடன் போவோரை அதிகம் காணலாம்.
நாய்களை முன்னே ஓட விட்டு பின்னல் ஓடும் இளவயதினர், நாய்களுடன் நடக்கும் நடுத்தர வயதினர், நாய்களை நடக்க விட்டு பின்னால் மொபிலிட்டி ஸ்கூட்டரில் அமர்ந்து பயணிக்கும் முதியோர் என்று பல தரப்பினர்.
முதல் இரு தரப்பினருக்கும் உடற்பயிற்சி நாய்க்கும் அவர்க்கும். மூன்றாம் தரப்பினருக்கு  உடற்பயிற்சி நாய்க்கு மட்டும்தான்.
எதனை வகை தொகையான நாய்கள் ? கேட்டால்  ஏழு வயது என்பார்கள் ஆனால் நாயின் உயரம் ஒரு சாண்தான் இருக்கும். ஆனால்  வேறு சில ஒரு மீற்றரைத் தொடும் உயரத்தில், பார்த்தால் கரடிகளைப்  போலிருக்கும் ஆனால் வயதை கேட்டால்  ஆறு மாதம் தான் என்பார்கள். 
நாளாந்தம் கண்டு பழகி ஓரிரு நாய்கள் நாளடைவில் என்னையும் தமது நடை பாதை நண்பனாக்கியதன்  காரணமாக நின்று அவற்றை தலையில் தொட்டு விட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.   இப்படி  இந்த நாய்களாவது என்னிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் ஒரு அற்ப திருப்தி.

வீட்டின் ஒரு பக்க வேலியருகே பெரிய பிளம் மரமொன்று உயர்ந்து வளர்ந்து அயல் வீட்டுக்காரனின் வளவுக்குள் சரிந்து நின்றது. மரத்தை வெட்டுவதாக முடிவு செய்து ஒரு வேலையாளையும் வரச்  சொன்னேன்.
அயல் வீட்டில் ஒரு பெரிய கோபக்கார நாய் பின் வளவில் எப்போதும் நிற்கும்.  யாரும் வேலிக்கு கிட்டப்  போனாலே மர வேலியை பிய்த்து வந்து கடித்து விடுவேன் என்று வெருட்டிக் கொண்டிருக்கும்.  மரம் வெட்டுவதற்கு முதல் நாள் நானும் வேலையாளும்  அயல் வீட்டுக்காரனிடம் போய் மரத்தை வெட்டினால் எல்லாக் கிளைகளும் அவரது வளவுக்குள் விழுமென்றும், வேலையாள் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு வசதியாக மறுநாள் நாயை பாதுகாப்பாக கட்டி வைக்குமாறும் கேட்டோம் . அவனோ என்னையும், வேலையாளைம் நாய்க்கு கிட்ட கூடிச் சென்று நாயிடம் எங்கள் இருவரையும் காட்டி  "இவர்கள் உனது நண்பர்கள்" என்று  சொன்னதுதான்.  அடுத்த நாள் மரக்கிளைகளை எடுக்கப் போனபோது வெகு சாந்தமாக எங்களைப் பார்த்தபடி அது படுத்திருந்தது.

கால்கள் கட்டையான நீட்டுக் குழாய் போன்ற உடம்பு கொண்ட நாய்கள், சோசேஜ் டோக்ஸ் என்றும் அழைக்கின்றனர். அது நடந்தால் அட்டை ஊர்ந்து செல்வது போலத்தான்.   கால்கள் இருப்பதே தெரியாது, நின்றால் வயிறு  நிலத்தில் அரையும் போலிருக்கும்.  
எங்கள் வீட்டிலும் இப்படியான ஒரு நாய் நான்கு வாரம் அகதியாக தங்கியிருந்தது. என் மகளுடன் வேலை செய்யும் நண்பியொருத்தி திடீரென வெளிநாடொன்றுக்குப் போக வேண்டி வந்ததால் அவளால் ஒரு நாய் பராமரிப்பாளரையோ ஒழுங்கு செய்ய முடியவில்லை. அதனால் அது ( பெயர் கிரான்ஸ்கி) நாலு வாரம் எங்கள் வீட்டில் நின்றது.
கிரான்ஸ்கி மூன்று விதமான எஜமானர்களை தெரிந்து வைத்திருந்தது.
முதல் எஜமானி என் மகள் - வீட்டுக்கு  அவள்தான் கூட்டி  வந்தாள்  என்பதாலும்  பெரும்பாலும் அவளே பராமரிக்கிறாள் என்பதாலும்.  இரண்டாவது எஜமான் நான்- மாலையில் நான் தான் சாப்பாடு போடுவதால்.  மூன்றாவது எஜமானி - என் மனைவி அவள் பெரும்பாலும் கிரான்ஸ்கியின் பக்கம் போவதில்லை.
எங்கள் மூவரையும் தனித்தனியேகாணும் போதெல்லாம் இந்த வரிசையின் படியே  கிரான்ஸ்கி  மகிழ்ச்சியையும் நட்பையும் காட்டிக் கொள்ளும்.
நாய்கள் பாதையில் மலங் கழித்தால் அதை அகற்ற வேண்டியது நாயின் சொந்தக்காரருடைய பொறுப்பென்று ஒரு சட்டம்  அண்மையில் கான்பெராவில் வந்தது. மீறுபவர்களுக்கு $50 தண்டம் என்றும் சொல்லப்படுகிறது.
சிறு வயதில் எட்டு மணிக்குத் தொடங்கும் பள்ளிக்கூடத்துக்கு ஏழு மணிக்கே வெளிக்கிட்டு நிற்பேன். நடந்தால் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து பதினைந்து நிமிடந்தான்.  ஏன் அங்கை முந்திப் போய் நாய்ப்பீ அள்ளப்   போறியோ  என்று அம்மா திட்டுவா. நேரத்துக்கு முந்திப் போனால்  அதிபரோ, ஆசிரியர்களோ குப்பை  அள்ளச் சொல்லுவார்கள்  என்பதை குறிப்பாலுணர்த்துவதே  இந்த  நாய்ப்பீ நையாண்டி.
நடை பாதையில் அந்த முதியவரை பெரும்பாலும் காண்பேன்.  பட்டரியில் ஓடும் மொபிலிற்றி ஸ்கூட்டரில் வருவார். அவரால்  நடக்க  முடியாவிட்டாலும் நாயின் நடைப் பயிற்சியை தவற விடமாட்டார். அவர் முன்னே நாலைந்து மீற்றர் தூரத்தில் அந்த சிறிய வெள்ளை நாய்  போய்க் கொண்டிருக்கும். கயிற்றால் கட்டுவதே இல்லை.
அதை பார்த்த போது தான் பாண்டவரின் இறுதி யாத்திரையும், தருமனின் நாயும் நினைவுக்கு வந்தது.  
சொர்க்கத்துக்குப் போகும் நீண்ட பாதையில் பாஞ்சாலியும், ஏனைய நால்வரும் களைத்து விழுந்து இறந்து விட தருமன் மட்டும் தனித்து முன் செல்கிறான். அவனுடன் நாய் ஒன்று மட்டும் தான்  கடைசிவரை துணையாக சென்றதென்றும், இந்திரன் குறுக்கிட்டு நாய் உள்ளே செல்ல முடியாதென தடுக்க, அப்படியானால் தானும் நாயை விட்டுவிட்டு சொர்க்கத்துக்கு வரப் போவதில்லை என்று தருமன் சொன்னதாகவும் கதையொன்று படித்தேன்.
-->
கண்ணதாசன்  தன் "வீடுவரை உறவு" பாடலில்,  “கடைசி வரை யாரோ?” என்று கேள்வியுடன் முடிக்காமல் "கடைசிவரை நாய்தான்" என்று முடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. 












No comments: