இலங்கைச் செய்திகள்


பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

எனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் மத்தியில் அச்சம்

“ஜனபலய” ஒருவர் பலி ; மதுபோதையால் 81 பேரும் உணவு ஒவ்வாமையால் 8 பேரும் வைத்தியசாலையில் அனுமதி

விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் - சட்ட மா அதிபர் ஆலோசனை

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே-மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை


பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

04/09/2018 வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ்.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 
வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்தும் வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துரித கதியில் கைதுசெய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி எனது மருமகன் அப்பாவி- அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து

04/09/2018 அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்ட்டுள்ள எனது மருமகன் அப்பாவி என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டு அவுஸ்திரேலியாவில் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையை சேர்ந்த நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் அவரை நேசிக்கின்றோம் ஆனால் எவராவது தவறு செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஒரு குடும்பம் என்ற வகையில் நாங்கள் அவர் அப்பாவி என்றே கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் என்ற அடிப்படையில் அவர் தவறு  இழைத்திருக்க மாட்டார் என நாங்கள் கருதுகின்றோம்,இது குறித்து நாங்கள் உயர்ந்தபட்ச நம்பிக்கை கொண்டுள்ளோம்,எனினும் நீதித்துறை தனது கருத்தை தெரிவிக்கும் வரை நாங்கள் பொறுமையாகயிருக்கவேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முன்கூட்டியே  விடயங்களை மதிப்பிட முயலவில்லை  நாங்கள் அவரை நம்புகின்றோம் நேசிக்கின்றோம் என்பதை மாத்திரமே எங்களால் தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிஜாம்டீன் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள பின்னர் இதுவரை குடும்பத்தவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள பைசர் முஸ்தபா  குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபருடன் தொடர்புகொள்வதற்கான நடைமுறையொன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் நீதித்துறையை மதிக்கின்றோம் பொருத்தமான தருணத்தில் நாங்கள் அவரை தொடர்புகொள்ள முடியும் என நாங்கள் கருதுகின்றோம்  எனினும் குடும்பத்தவர்கள் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிஜாம்டீன்  தாக்குதல் முயற்சிக்கான திட்டங்களை தீட்டியிருப்பார் என நான் கருதவில்லை அவர் இறுதியாக இலங்கை வந்தபோது மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் அனைவரிலும் பாசத்துடன் காணப்பட்டார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினரை பொறுத்தவரை இது கடினமான தருணம்,எனினும் பயங்கரவாதம் என்ற சர்வதேச பிரச்சினையை நீதித்துறை கையாளவேண்டியுள்ளது,சந்தேகம் வந்தால் அவுஸ்திரேலிய அரசாங்கமும் அது குறித்து கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சராக உள்ளேன் என்பதற்கான இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடாது அது பிழையான விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிஜாம்டீன் ஏனைய இளைஞர்களை போன்றவர்   அவர் விளையாடுவார் அவர் நடனமாடுவார், இலங்கை அவுஸ்திரேலிய இளைஞர்களிடமிருந்து அவர் வித்தியாசமானவர் இல்லை,எனகுறிப்பிட்டுள்ள அமைச்சர் குடும்பத்தவர்கள் அனைவரும் மனமுடைந்த நிலையில் உள்ளனர் எனினும் இது அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதால் அங்கு சிறந்த நீதித்துறை உள்ளதால் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் மத்தியில் அச்சம்

03/09/2018 மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இன்று 62 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன..
மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள்  இடம்பெறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.
ஆனாலும் இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டாலும் 97 மனித எச்சங்கள் மீட்கப்பட்டாலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட தடைய பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
இது வரை வட்ட வடிவிலான உலோகப்பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடைய பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.
இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை  அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும் இது வரை  துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த விதமான தடைய பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தோகத்திற்குறியதாக காணப்படுகின்றது.
சடலங்களாக புதைக்கப்பட்ட போது ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டு பிடிக்கப்படாத நிலையில்  புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம்? என மக்கள் மத்தியில் சந்தோகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

“ஜனபலய” ஒருவர் பலி ; மதுபோதையால் 81 பேரும் உணவு ஒவ்வாமையால் 8 பேரும் வைத்தியசாலையில் அனுமதி

06/08/2018 கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்பில் பல்லேறு இடங்களில் வந்திறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 
விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் - சட்ட மா அதிபர் ஆலோசனை

07/09/2018 முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்தினை தெரிவித்ததன்  மூலம் அவர், குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் சரத்துக்கு அமைவாக குற்றம் இழைத்துள்ளார் எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு எனவும் சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 157 ஆவது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும் அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 


முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே-மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை

07/09/2018 முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே என தெரிவித்து முல்லைத்தீவில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையால் அறிக்கை ஒன்று வெளியிடபட்டுள்ளது .
அந்த அறிக்கை வருமாறு 
 முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தின் பின் தமிழர்கெதிரான அடக்குமுறை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளது அதில் தமிழர் நில அபகரிப்பு முதன்மையானது. மகாவலி அதிகாரசபை தொல்லியல் திணைக்களம்  வன பாதுகாப்புத் திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்புப் படையினர் என பல்பரிமாண நிலபகரிப்புக்கெதிராக தமிழினம் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
 இவ் அடக்குமுறைகளுக்கெதிராக  நெருக்கடிகளைக் கையாள தமிழ் மக்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. சனநாயக ரீதியான வன்முறையற்ற போராட்ட வடிவங்கள் தமிழருக்குப் புதியதும் அல்ல. அவ்வகையில் கடந்த 28ம் திகதி 2018 அன்று மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை மக்களையும் வெகுசன அமைப்புக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மகாவலி திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஒழுங்கமைத்திருந்தது.

மறுப்புவாதத்தை  வரலாற்றில் ஓர் உத்தியாக சிங்கள அரசு பயன்படுத்தி வந்துள்ளது பயன்படுத்தி வருகின்றது. தமிழர் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளையும் அடக்குமுறையையும் மறைத்து தன்னை ஒரு நிரபராதியாக உலகுக்கு காட்ட முனைந்து வந்துள்ளது.
அதே போல் மகாவலி  முன்னெடுப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை பௌத்த சிங்கள மயப்படுத்துவதை நிராகரித்து மக்கள் சனநாயக போராட்ட முனைப்புக்களுக்கு சேறு பூச முனைந்து வருகின்றது.
 முல்லைத்தீவு மாவட்டத்தை பௌத்த சிங்கள மயப்படுத்துவதான சாட்சியங்கள் பொது வெளியில் இருக்கின்றன. இதற்கு உதாரணமாக செம்மலை தமிழ்க் கிராமத்தில் நீராவிப் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தை தற்போது பௌத்த தொன்மை அடையாளங்கள் இருப்பதாக கூறி பௌத்த விகாரை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. 
இதனூடாக ஏற்கனவே சிங்கள குடியேற்றம் இருந்தது என வரலாற்றைப் புனைந்து இன்னொரு சிங்கள குடியேற்றத்திற்கு திட்டமிடுகின்றது.
தமிழர் பாரம்பரிய கிராமமாகிய கருநாட்டுக்கேணியில் அத்துமீறி காணிகளை கைப்பற்றியவர்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நடவடிக்கையானது தமிழ் அரச அதிகாரிகளால் சட்டம் சார்ந்து எடுத்த நீதிமன்ற தீர்ப்புக்களை கேலிக்குரியதாக்கியுள்ளதோடு ‘நல்லாட்சி அரசின்’ இரட்டை வேடத்தையும் வெளிக்காட்டியுள்ளது. 
மகாவலி அதிகார சபை 1980 களின் நிறுவப்பட்ட பின்னர் தமிழர் நிலங்களில் நிகழ்ந்த குடிப்பரம்பல் மாற்றத்தினூடு அதன் இனவழிப்பு அரசியலை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். வெலி ஓயா சிங்கள கிராமம் இன்று முல்லைத்தீவின் ஒரு பகுதியாகிவிட்டத்து. 
செப்டெம்பர் 5 மே திகதி 2018 அன்று தமிழர் வரலாற்றுப். பாரம்பரிய நிலமான குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க முற்பட்ட சம்பவம் நல்லாட்சி அரசு முந்தைய சிங்கள அரசாங்கங்ககளைப் போலவே பௌத்த சிங்கள ஒற்றையாட்சி அலகை தமிழ்ப் பிரதேசங்களில் விரிவு படுத்துகின்றது  என்பதை புலப்படுத்தியுள்ளது
இரண்டு தோத்திரப் பிக்குகளின் தலைமையில் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்கள மக்கள் தமிழர் பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்க முனைந்தது தமிழர்களின் வரலாற்று தொல்லிடங்களை மாற்றி அமைப்பதற்கான மிக அண்மைய முயற்சி. 
மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை முல்லைத்தீவு அரசாங்க அதிபரூடாக மகாவலித்திட்டம் தொடர்பான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டு சனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளித்து நிலையில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.
இவ்வாறு வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களைத் துண்டாடி சிங்கள கிராமங்களை உருவாக்கி தமிழர் பிரதிநிதித்துவங்கள் குறைக்கப்படுகிறது.
13ம் திருதத்ததின் கீழ் அரச காணிகள் தொடர்பில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை.  அரச காணிகள் தொடர்பில் மாகாண சபைகள் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமே தவிர அவை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே மையப்படுத்தப்பட்டுள்ளது. அரச காணிகள் தொடர்பில் இருக்கும் பெயரளவு அதிகாரங்கள் கூட மகாவலி திட்டங்களின் உள்வரும் காணிகள் தொடர்பில் மாகாண சபைக்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 
நல்லாட்சி அரசும் சரி இதற்கு முந்தைய சிங்கள அரசாங்கங்களும் சரி தமிழர் அரசியல் பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகியதாக இல்லை. இச்சம்பவங்கள் தமிழர் தொடர்பில் சிங்கள அரசு தொடர்பில் ஏற்கனவே இருந்த காழ்ப்பணர்வுகளையும் சந்தேங்களையும் வலுப்படுத்துவதாக அமைகின்றது.
இதுவரைக்கும் எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் பேரவை தனது அடுத்த கட்ட நடவடிக்கையை நகர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை பேரவை மக்களுக்கு மிக விரைவில் தெரியப்படுத்தும். என தெரிவிக்கபட்டுள்ளது  நன்றி வீரகேசரி 


No comments: