கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் பத்திரிகை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து ஆன்மீகவாதியான மட்டுநகர் மைந்தன் - முருகபூபதி


"அத்திக்காய், காய் காய்,  ஆலங்காய் வெண்ணிலவே,
இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ,
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ" என்ற பாடலை எமது மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள்.
1962 ஆம் ஆண்டில் பி.ஆர். பந்துலு இயக்கிய பலே பாண்டியா படத்திற்காக கவியரசு கண்ணதாசன் இயற்றி,  மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த  பாடல். "இந்தப்பாடலில் நிறைய காய்கள் வருவதனால், சென்னை கொத்தவால் சாவடியிலிருக்கும் மரக்கறி சந்தையையே கவியரசர் கொண்டுவந்துவிட்டார். இந்தப்பாடல் மக்கள் மத்தியில் எடுபடாது" என்றார் விஸ்வநாதன்.
எனினும் அந்தப்பாடலைத்தான் அந்தப்படத்திற்குத்தருவேன் என்று விடாப்பிடியாக நின்றவர் கண்ணதாசன்.  பாடலும் சிறப்பாக அமைந்தது. இதில் சிவாஜிக்கு மூன்று வேடங்கள். நடிகவேள் எம். ஆர். ராதாவுக்கு இரட்டை வேடங்கள். படமும் வசூலில் வெற்றிபெற்றது.
தத்துவப்பாடல்களும் இயற்றியிருக்கும் கண்ணதாசன், பட்டினத்தார், காளமேகப்புலவர், பாரதியார் மற்றும் சித்தர்களின்  பாடல்களையும் தனது திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தியிருப்பவர். மேற்குறித்த பாடலில் வரும் காய்களில் ஒரு சிலவற்றை  குறிப்பிட்டு முன்னரே கவிதை எழுதியவர்தான் காளமேகப்புலவர்.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஒருவர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர். அத்துடன், மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மற்றும் தி.மு.க.தலைவர்களுடனும் நட்புறவிலிருந்தவர். குறிப்பிட்ட அத்திக்காய் பாடலின் ரிஷிமூலமும் தெரிந்துவைத்திருந்தவர்.
அவர்தான் மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் என்ற பெயரைப்பெற்று நீண்ட காலம் அந்தப்பிரதேசத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியாகவும் பின்னர் பிரதேச அபிவிருத்தி தமிழ் மொழி அமுலாக்கல் இந்து கலாசார அமைச்சராகவும் அதன்பின்னர் மலேசியாவில் இலங்கைக்கான தூதுவராகவும் விளங்கிய  செல்லையா இராசதுரை.
முதல் முதலில் 1966 ஆம் ஆண்டில் இவரைக்காணும்போது எனக்கு 15 வயது. எங்கள் நீர்கொழும்பூரில் எனது மாமா உறவுமுறையான அப்பையா மயில்வாகனன் அவர்கள் சாந்தி அச்சகம் நடத்தி அங்கிருந்து அண்ணி என்ற மாத இதழையும் வெளியிட்டார். அதன் முதல் இதழ் வெளியீட்டு  விழா எமது இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடந்தவேளையில் அதற்கு தலைமைதாங்குவதற்கு இராசதுரை வந்திருந்தார். அச்சமயமும் அவர் மட்டக்களப்பின் எம்.பி. நிகழ்ச்சி முடிந்ததும், வியாங்கொடையில் தரித்துப்புறப்படும் மட்டக்களப்பு - திருகோணமலை இரவு தபால் ரயிலில் ஏற்றி வழியனுப்பிவைத்தோம்.
அன்று முதல் 1987 வரையில் அவரை அவ்வப்போது சந்தித்திருக்கின்றேன். எங்கள் குடும்ப நிகழ்விலும் அவர் தலைமை தாங்கியிருக்கிறார். கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரவு தபால் ரயிலில் அவர் செல்வதையும், அதற்கு முன்னர் ரயில் நிலைய அதிபரின் அலுவலகத்திலிருந்து அதிபருடன் அவர் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன்.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள ராஜேஸ்வரிபவனிற்கு விற்பனைக்கு வரும் தமிழக இதழ்கள் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் உட்பட இலங்கை இதழ்களையும் அவர் வாங்கிக்கொண்டுதான் புறப்படுவார். அவரும் சிறந்த பேச்சாளர். அத்துடன் வாசகர். எழுத்தாளர் முதலான முகங்களையும் கொண்டவர்.

மயில்வாகனன் மாமாவின் ஒன்றுவிட்ட சகோதரனுக்கும் எனது அண்ணிக்கும் வவுனியா வாரிக்குட்டியூரில் 1967 இல் திருமணம் நடந்தது. மணமகன் சீர்திருத்த திருமணம் செய்யவிரும்பினார். இந்த அண்ணன் தம்பி மார் திராவிடக்கழகத்தினரின் கொள்கைகளில் ஈர்ப்புக்கொண்டிருந்தனர். அந்தத் திருமணத்திற்கும் இராசதுரை வந்து திருக்குறளில் இல்லறவியலிருந்து சில குறள்கள் வாசித்து விளக்கமும் தந்து மாலை எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். மதியம் விருந்துண்டு புறப்பட்டார்.
மீன்பாடும்  தேன் நாடு மட்டக்களப்பில் 1927 ஆம் ஆண்டு பிறந்து, ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையிலும் மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கல்வி கற்று, எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர். தந்தை செல்வா தொடங்கிய தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகர முதல்வராகவும் தெரிவாகி, 1956 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக அந்தப்பிரதேசத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியாக விளங்கியவர்.
இவரை அரசிலுக்கு அறிமுகப்படுத்திய தந்தை செல்வா, மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் முதலானோர் இவர் எம்.பி.யாக இருந்த காலங்களில் நடந்த  தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளனர்.
ஆனால், இவரையும் தோல்வியடையச்செய்வதற்காகவே இவர் ஆரம்பம் முதல் இணைந்திருந்த தமிழரசுக்கட்சியினரே இவருக்கு எதிராக, இவருக்கே நன்கு தெரிந்த -  நெருக்கமாகவிருந்த கவிஞர் காசி ஆனந்தனை நிறுத்தினர்.
"தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கவேண்டும்" என்று தப்புக்கணக்குப்போட்டார் தளபதி அமிர்தலிங்கம். இறுதியில்,  1989 ஜூலை மாதம் 13 ஆம் திகதியில்,  அவர் ஏற்கனவே உணர்ச்சியூட்டி வளர்த்து ஆளாக்கிய தனயர்களின் கைகளினாலேயே சுடுபட்டு இறந்தார்.
இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு தமிழரும் ஒரு முஸ்லிம் உறுப்பினருமே  தெரிவாகிவந்தனர். அவ்வாறிருக்கையில் தேசிய சிறுபான்மை இனங்களில் ஒன்றான முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் பொருட்படுத்தாமல், மட்டக்களப்பு தொகுதியில் இரண்டு தமிழர்களை அன்றைய தமிழரசுக்கட்சி தீர்க்கதரிசனம் அற்று முன்மொழிந்தது.
எனினும் நீண்ட காலமாக அங்கு தெரிவாகியிருந்த இராசதுரையைத்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையும் ஆதரித்து மேடைகளில் பிரசாரம் செய்தார்.
இராசதுரை அரசியல்வாதியாக இருந்தபோதிலும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களுடன் நெருக்கமாக இருந்தவர். சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருந்தவர். சுதந்திரன் பத்திரிகையில், எஸ். டி. சிவநாயகம், பிரேம்ஜி ஞானசுந்தரன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் அதன் இறுதிக்காலத்தில் கோவை மகேசனும் இடம்பெற்றவர்கள்.
கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்துதான் சுதந்திரன் பத்திரிகை வெளியானது. மட்டக்களப்பிலிருந்து அந்தப்பத்திரிகையில் பணியாற்ற வந்திருக்கும் இராசதுரை தமிழக திராவிடக்கழக பாரம்பரியத்தில் வந்த தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவுகொண்டிருந்தவர். கவிஞர் கண்ணதாசனின் குடும்ப நண்பருமாவார். இராசதுரையின் புதல்வி பூங்கோதை தமிழ்நாட்டில் படிக்கின்ற காலத்தில் அவருக்கு பாதுகாவலராக (Guardian)  இருந்தவர் கண்ணதாசன்.
மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர். எப்பொழுதும் வெள்ளை நேஷனல் அணிபவர். அவரது இடதுகையை அவதானித்தால் அவர் கைக்கடிகாரம் அணிந்திருக்கும் தோரணை ஆச்சரியம் தரும். அவர் அந்த நேஷனலின் மணிக்கட்டின் பகுதியில் அந்த உடையின் மீதே கடிகாரம் அணிந்திருப்பார். அந்தப்பாணியைப் பின்பற்றியே இராசதுரையும் தனது கைக்கடிகாரத்தை அணியும் பழக்கமுள்ளவர்.
இலக்கியவாதியாக, சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, அரசியல் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, இறுதியில் வெளிநாட்டின் நல்லெண்ணத்தூதுவராக தனது வாழ்வையும் பணிகளையும் தொடர்ந்திருக்கும் அவர் இறுதியில் ஆன்மீகத்தின் பக்கம் தீவிரமாகத் திரும்பி தற்போது அரசியல் பேசுவதையே முற்றாக தவிர்த்திருப்பவர்.
இலங்கையில் ஒரு இலக்கிய மேடையில் கவிஞர் கண்ணதாசனின் அத்திக்காய் பாடலின் உண்மையான அர்த்தத்தை நயமுடன் சொல்லி சபையோரை வியக்கவைத்தவர்.
அந்தப்பாடலில்தான் எத்தனை காய்கள்:
அத்திக்காய்-ஆலங்காய்-இத்திக்காய்-கன்னிக்காய்-ஆசைக்காய்-பாவைக்காய்-அங்கேகாய்-அவரைக்காய்-கோவைக்காய்-மாதுளங்காய்-என்னுளங்காய்-இரவுக்காய்-உறவுக்காய்-ஏழைக்காய்-நீயும்காய்-நிதமுங்காய்-இவளைக்காய்-
உருவங்காய்-பருவங்காய்-ஏலக்காய்-வாழைக்காய்-ஜாதிக்காய்-கனியக்காய்-விளங்காய்-தூதுவழங்காய்-மிளகாய்-சுரைக்காய்-வெள்ளரிக்காய்-சிரிக்காய்-கொற்றவரைக்காய்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுடனும் இராசதுரைக்கு நட்பிருந்தது. இராசதுரையும் முன்னர் ஒரு இலக்கிய இதழ் நடத்தியிருப்பவர். அதற்காக ஒரு சிறிய அச்சுக்கூடமும் வைத்திருந்தார். அவர் வெளியிட்ட இதழ் நின்றதும், அந்த அச்சுக்கூட சாதனங்கள், வெள்ளீய தமிழ் அச்சு எழுத்துக்களையும் மல்லிகை ஜீவாவுக்கு வழங்கும் எண்ணத்திலும் இராசதுரை இருந்தார்.
ஒருநாள் மாலை கொழும்பு ஜிந்துப்பிட்டியிலிருந்த தினபதி - சிந்தாமணி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அவர்களின் இல்லத்திலும் இராசதுரையை நானும் மல்லிகை ஜீவாவும் சந்தித்துபேசியிருக்கின்றோம். அக்காலப்பகுதியில்தான் எம். ஜீ. ஆரை. தி.மு.க. வெளியேற்றியிருந்தது. அக்கட்சி பிளவு பட்டதனால் இராசதுரை பெரிதும் வருந்தி எம்முடன் அதுபற்றி உரையாடினார்.
அதன்பின்னர், 1977 இற்குப்பிறகு இவரும் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறினார்.
தமிழரசுக்கட்சியிலும் தமிழர் விடுதலைக்கூட்டணியிலும் நீண்டகாலம் அங்கம் வகித்த அரசியல்வாதியாக இவர்  இருந்தமையாலோ என்னவோ இவரது அரசியலுடன் எனக்கு இணக்கம் இருக்கவில்லை. எனினும் இவரும் ஒரு கலை, இலக்கியவாதி, இதழ் நடத்தியிருப்பவர், அத்துடன்  சில சிறுகதைகள், இலக்கியப்புதினங்களும்  எழுதியிருப்பதனால் அந்த அடிப்படையில் விருப்பத்திற்குரியவரானார்.
லங்கா முரசு என்ற இதழை நடத்தியிருக்கிறார். அத்துடன் தமிழகம், முழக்கம், சாந்தி என மேலும் சில இதழ்களை வெளியிட்டவர். இலங்கை, தமிழக பத்திரிகைளில் எழுதியவர். அரசியலில் தீவிரமாக இறங்கியதும் அவரது எழுத்துப்பணி குறைந்தது.
அதனால், இலக்கிய விமர்சகர் இரசிகமணி கனகசெந்திநாதன் இவரைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: " இராசதுரை அரசியலுக்கு ஆதாயமானார், இலக்கியத்திற்கு நட்டமானார்."
 அவர் அமைச்சரானதன் பின்னர் எமது எழுத்தாளர்கள் தமது நூல் வெளியீடுகளுக்கு அவரையே அழைக்கும் மரபும்  கொழும்பில் உருவானது.
ஒரு கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு அரங்கு கொழும்பு கோட்டை தப்ரபேன் ஹோட்டலில் நடந்தபோது அமைச்சரின் தலைமையில் நானும் உரையாற்றநேர்ந்தது.
                     அந்த நிகழ்வில் பேசிய கவிஞர் கலைவாதி கலீல், "அமைச்சருக்கு இரண்டு மனைவியர்" என்று சொன்னதும் சபையிலிருந்தவர்களின் முகம் துணுக்குற்றது. இறுக்கமானது. அடுத்த நொடிப்பொழுதில், " ஒன்று தமிழ்" என்றார் அந்தக்கவிஞர்! கரகோஷம் எழுந்தது. அமைச்சரின் முகத்திலும் பிரகாசம் தோன்றியது.
அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் போக்குப்பிடிக்காமல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்ததும், உடனடியாகவே அவருக்காகவே புதிதாக உருவாக்கப்பட்டதுதான் இந்து கலாசார அமைச்சு. அதனுடன் தமிழ் மொழி அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சும் அவரிடம் தரப்பட்டது.
தொடக்கத்தில் அவருக்கென தனியான  அமைச்சு அலுவலகமும் அமைந்திருக்கவில்லை. காலிமுகத்தில் அன்றைய நாடாளுமன்றத்திற்கு சமீபமாக இருக்கும் செலிங்கோ ஹவுஸ் கட்டிடத்தின் 13 ஆவது மாடியில்தான் அவரது அமைச்சு அலுவலகம் முதலில் தற்காலிகமாக இயங்கியது.
அங்கிருந்த வசதிக்குறைபாடுகள் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையிலிருந்தும் தன்னை சந்திக்கவருபவர்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருவார்.
எங்கள் ஊரில் இந்துவாலிபர் சங்கத்தின் பெயர் இந்து இளைஞர் மன்றமாகியதன் பின்னர், 1978 இல் இம்மன்றத்தின் பொதுச்செயலாளராக இருந்தேன். மன்றத்தை நவீன முறையில் திருத்தியமைப்பதற்காக ஒரு ஆலோசனைக்கூட்டமும் உறுப்பினர் ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும் நடத்துவதற்கு தீர்மானித்தோம். அதற்கு பிரதம விருந்தினர்களாக அமைச்சர்கள் தொண்டமானையும் இராசதுரையையும் அழைப்பதற்காக அவர்களின் அமைச்சு அலுவலகங்களுக்கு மன்றத்தின் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு சென்ற காலத்தில் நான் வீரகேசரியில் பணியாற்றினேன். அதனால் அவர்களிடம் எளிதாக Appointment பெறக்கூடியதாகவுமிருந்தது.
இருவரும் எளிமையாகப் பழகியவர்கள். எமது ஒன்றுகூடல் விழாவுக்கு வருவதற்கு முன்னர், " தான் தற்போது மச்சம் மாமிசம் சாப்பிடுவதில்லை. எனவே இரவு விருந்தில் தனக்கு மரக்கறி உணவுதான் வேண்டும்" என்ற ஒரு நிபந்தனையை மாத்திரமே அமைச்சர் இராசதுரை அன்று விதித்தார்.
" அய்யா, எங்கள் மன்றம் தமிழர் இந்துக்களுக்கானது. எனவே அங்கு மச்சம் மாமிசம் இருக்காது " என்றேன். இரண்டு அமைச்சர்களுக்கும் எங்கள் ஊரில் கோலாகலமான வரவேற்பு வழங்கினோம்.
ஊரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மன்ற மண்டபத்தைச் சுற்றி காவலிருந்தனர். உள்ளே மேடையின் படிக்கட்டிலும் அமைச்சர் இராசதுரையின் மெய்க்காப்பாளர் ஒருவர் அமர்ந்தார்.
அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரது அமைச்சின் கீழ்தான் சாகித்திய மண்டலம் இயங்கியது. சாகித்திய விழாக்கள், விருதுவழங்கும் நிகழ்ச்சிகள் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினால் தாமதமானது. இதுபற்றி வீரகேசரியில் இடித்துரைக்கும் சில பத்தி எழுத்துக்களை எழுதியிருக்கின்றேன்.
பின்னர் அவரது அமைச்சு அலுவலகத்திலேயே குறிப்பிட்ட ஆண்டுகளுக்குரிய நூல்களுக்கான விருதும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன்.
எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிவிழா கொள்ளுப்பிட்டி கூட்டுறவுசங்கங்களின் சம்மேளனத்தின் தலைமைக்காரியாலய மண்டபத்தில் நடந்தபோது அமைச்சரையே பிரதம விருந்தினராக அழைத்திருந்தோம்.
அதற்கு இரண்டு செல்லையாக்கள் வந்தனர் என்பதும் குறிபிடத்தகுந்தது. செல்லையா குமாரசூரியர். செல்லையா இராசதுரை. ஒருவர் முன்னாள் அமைச்சர். மற்றவர் இந்நாள் அமைச்சர் என்றும் அச்சமயம் எழுதியிருக்கின்றேன்.
அமைச்சர் இராசதுரை உலக இந்து மாநாடும், சமாதானத்திற்காக அஸ்வமேத யாகமும் நடத்தினார். மாநாட்டிற்கு இலங்கை - இந்திய இந்துமதத் தலைவர்கள் பிரமுகர்கள் வந்தனர். அஸ்வமேத யாகத்திற்கு ஒரு வெண்ணிற குதிரை வந்தது! தமிழக ஆஸ்தான நடன நர்த்தகி சுவர்ணமுகியை இந்து மாநாட்டு கலையரங்கிற்கு அழைத்தார். அவரது அனைத்துப்பணிகளையும் கொழும்பிலிருந்தே இயக்கினார்.
பாதுகாப்புக் காரணங்களினால் அவரால் தனது தொகுதிக்கும் செல்லமுடியாத சூழ்நிலை நீடித்தது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கும் ஆயுதப்படையினருக்கும் அடிக்கடி மோதல் நடந்தது. அப்பாவி மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு நிருபர்கள் நித்தியானந்தனும் கதிர்காமத்தம்பியும் தினமும் செய்திகளை தந்துகொண்டிருந்தனர். இவர்களுடனும் வவுணதீவு - அக்கரைப்பற்று நிருபர்களுடனும் தினமும் தொலைபேசித்தொடர்பிலிருந்தேன்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்துவும் தினமும் எமக்கு செய்தி தருவார். ஆனால், அமைச்சர் இராசதுரைக்கு மட்டக்களப்பு செல்ல முடியாத சூழ்நிலை. ஒருநாள் அமைச்சருடன் தொடர்புகொண்டு, அந்தோனி முத்துவினதும் நிருபர்களினதும் செய்திகளைச் சொல்ல நேர்ந்தது.  அங்கிருக்கும் நிருபர்கள், அரச அதிகாரிகள் தன்னுடன் தொடர்புகொள்வதை தவிர்க்கிறார்கள் என்றும் மனக்குறைப்பட்டார். அமைச்சு - அதிகாரிகள் - ஆயுதம் ஏந்திய இயக்கங்கள், படைகள், ஊடகங்களுக்கு  மத்தியில் தொகுதி நாடாளுமன்ற பிரதிநிதி என்ற அடிப்படையில் தன்னால் தனது மக்களுக்காக செய்யமுடிந்ததைதான் அவர் செய்தார்.  விடாக்கண்டர்களுக்கும் கொடாக்கண்டர்களுக்கும் இடையில் அவரது நிலை தர்மசங்கடமாகியிருந்ததையும் அவதானித்திருக்கின்றேன்.
1984 இல் தமிழகம் எட்டயபுரத்திற்கு சென்றிருந்தேன்.  அங்கிருந்த பாரதியார் மணிமண்டபத்தின் நூலகத்தில்  பாரதி தொடர்பாக ஈழத்தவர்கள் எழுதிய நூல்கள் இருக்கவில்லை. சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் எனப்பாடிய அந்த மகாகவியின் கவிதைகளை இலங்கையில் கே.ஜி. அமரதாச, ரத்ன நாணயக்கார ஆகியோர் மொழிபெயர்த்து " பாரதி பத்ய " என்ற நூலும் வெளிவந்து,  பாரதியின் வாழ்க்கை சரிதம் சிங்களத்தில் சுருக்கமாக வெளியாகியிருக்கும் செய்தியையும் அமைச்சரிடம் எடுத்துக்கூறி, இதுபற்றி தமிழக முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்குமாறும் சொன்னேன்.
அவர் செய்வதாக உறுதியளித்தார். ஈழத்து தமிழ்எழுத்தாளர்களின் நூல்களை தமிழ்ப்பாடசாலைகளின் நூலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதியளித்தார். இராசதுரை பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சராக இருந்த காலத்திலேயே மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தின்  கீழ் இயங்கி வருகிறது.
கிழக்கு பல்கலைக்கழகம் அவருக்கு கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.  இதுவரையில் ராசாத்தி ( குறும்புதினம்) பெற்றதாயும் பிறந்த பொன்னாடும், அன்பும் அகிம்சையும், மிஸ் கனகம், இலங்கையில் அஸ்வமேதயாகம் முதலான நூல்களையும் எழுதியிருக்கும் இந்த முன்னாள் பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், வெளிநாட்டுத்தூதுவர், சொல்லின் செல்வர் என்ற சிறப்பு பட்டத்திற்குரியவர். இன்று ஆன்மீகவாதியாகியிருக்கிறார்.
வாழ்வனுபவங்களின் சுரங்கமான இன்றைய இந்த ஆன்மீகவாதிக்கு 91 வயது நெருங்குகிறது. அவரைப்பற்றி பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.  அவர் பற்றிய விதந்துரைப்புகளாகவே அக்கட்டுரைகள் அமைந்துள்ளன. சோதனைகளையும் சாதனைகளையும் கடந்துவந்திருக்கும் அவர் தன்னைப்பற்றிய சுயவிமர்சனங்களுடன் ஒரு சுயசரிதை நூலை எழுதுவராயின்  மேலும் பல அரிய சுவாரஸ்யமான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ளமுடியும்.  இதுவிடயத்தில்  அவருக்கு  யார் மணி கட்டுவது..?
letchumananm@gmail.com

-->






No comments: