கங்காரு வேலி (நடைக் குறிப்பு) - யோகன் (கன்பரா)


சிகரெட் ஊதுவது போல எனது மூச்சுக்காற்று புகையாக வெளி வந்து கொண்டிருந்த அந்த அதி காலைக் குளிர் பூஜ்யத்திலும் ஐந்து டிகிரி குறைவென்று என் மொபைல் காட்டியது.
நேற்று நான் காலையில் நடக்கும் போது அந்தப் பைன் மரத் தோப்பைச் சுற்றி வளைத்துப் போட்டிருந்த வேலியருகே இருவர் கண்ணை உறுத்தும் இளம் பச்சை மேலங்கியுடன் நின்றதை கண்டேன். சரிந்து விழுந்து கிடந்த வேலியை திருத்துவதற்காக ஏழு மணிக்கே வந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டிறக்கும் நின்றது. அந்த ஒரு மீற்றருக்கு சற்று உயரமான வேலி கங்காருக்கள்  தெருவுக்கு வந்து விடாத படி தடுப்பதற்காக.
இரவில் அல்லது அதிகாலையில் தெரு வாகனங்களின்  வெளிச்சத்தை நோக்கி ஓடிவந்து  மோதி சேதத்தை ஏற்படுத்தி தானும் பலியாகிவிடும் இப்பிராணிகள் அளவுக்கதிகமாகப் பெருகி வருவது கன்பெராவில் ஒரு சூழலியல் பிரச்சினை.
கங்காருவை இரையாக உண்ணும் பிராணிகள் (predator) குறைந்த கன்பெராவில் வருடாந்தம் ஆயிரக்கணக்கில் கங்காருக்களை கொல்ல வேண்டிய தேவை ACT அரசுக்கு உள்ளது.
அதே வேளை ஒரு குறிப்பிடட தொகை கங்காருக்கள் சுதந்திரமாக நடமாடிக் திரிவதும் அவை பாதுகாக்கப் படுவதும் அவசியம்.


இன்று காலை எனது நடை சற்றுப் பிந்தி விட்டது. சூரியன் ஏற்கனவே மேலெழுந்து
உறைந்து கிடக்கும் புல்லில் ஒளி பாய்சசி மினுங்க வைத்துக் கொண்டிருந்தான்.
நேற்று போட்ட கம்பி வேலியும் மினுங்கிக் கொண்டிருந்தது.

வேலிக்குச் சமாந்தரமாக செல்லும் நடை பாதையில நானூறு மீற்றர் கடந்ததும் எதேச்சையாக பார்வையில் பட் டன மூன்று கங்காருக்கள். கல்லுச்  சிலைகள் போல அசையாது நின்றிருந்த அவற்றுள் ஒன்று பெரியது-தாய் வேலிக்கு வெளியேயும் சிறிய குட்டிகள் இரண்டு வேலிக்குள்ளேயும் நின்றன.
பைன் தோப்பு உயரத்திலிருந்ததால் வெளியே பள்ளத்துள் பாய்வது தாய்க்கு இலகுவாக முடிந்தது. குட்டிகளுக்கு முடியவில்லை. பள்ளத்தில் இருந்த பச்சைப்  புல்லை கண்டு வேலி பாய்ந்திருக்கக் கூடும்.
இப்போது பள்ளத்திலிருந்து உயரத்துக்கு வேலியைத் தாண்டிப்  பாய்ந்து குட்டிகளிடம் செல்வதும்  தாய்க்கும் கடினமாகி விட்டது.   அவை மூன்றும் ஒன்றையொன்று பார்த்தபடி அசையாது நின்றன. என் காலடி சத்தம் கேட்டு ஒரே நேரத்தில் திரும்பின.

தாயையும் சேயையும் வேலிகள் பிரிக்கும் போது படும் பரிதவிப்பு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுதான் போலும்..
--> ஆயினும் எப்பாடு பட்டாவது தாய் குட்டியை சேர்ந்து விடும் என்பது மட்டும் உறுதி என்று எண்ணியபடி நடந்தே






No comments: