உலகக் கிண்ணப் போட்டிகள் 2018


உலக சம்பியன் ஜேர்மனியை வெளியேற்றி வரலாறு படைத்த தென் கொரியா

நம்ப முடியவில்லை! தோல்வியடைந்தபோதிலும் 2 ஆவது  சுற்றுக்குள் நுழைந்த மெக்சிகோ 

இலகுவான வெற்றியுடன் 2 ஆம் சுற்றில் பிரேஸில்

தேவையான ஒரு புள்ளியைப் பெற்ற சுவிற்சர்லாந்து இரண்டாம் சுற்றில் நுழைந்தது

இங்கிலாந்தை வென்றது பெல்ஜியம்

‘பெயார் ப்ளே’ மூலம் 2 ஆம் சுற்றுக்குள் நுழையும் ஜப்பான்

ஆர்ஜன்டீனாவை வெளியேற்றியது பிரான்ஸ்




உலக சம்பியன் ஜேர்மனியை வெளியேற்றி வரலாறு படைத்த தென் கொரியா

27/06/2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய தலைகீழ் முடிவை ஏற்படுத்தி 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட தென் கொரியா நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியை முதல் சுற்றுடன் வெளியேற்றியது.
உலகக் கிண்ண வரலாற்றில் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் ஜேர்மனியை தென் கொாரியா வெற்றிகொண்டதும் இதுவே முதல் தடவையாகும்.
ஜெர்மனி வீர்ர்களின் தவறுகளினாலேயே தென் கொரியாவின் இரண்டு கோல்களும் உபாதையீடு நேரத்தில் 3 நிமிட இடைவெளியில் போடப்பட்டன.
கஸான் எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற எவ் குழுவுக்கான போட்டியின் 93 ஆவது நிமிடத்தில் தென் கொரிய அணித் தலைவர் ஹியுங்மின் சன் உதைத்த கோணர் கிக்கை ஜேர்மன் பின்கள வீரர்கள் திசை திருப்ப தவறிய அதேவேளை 6 யார் கட்டத்துக்குள் இருந்தவாறு யங்வொன் ரிம் கோலாக்கினார். 
இந்த கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து பெறப்பட்டதாக உதவி மத்தியஸ்தர் கொடியை உயர்த்தி சமிக்ஞை செய்தார். ஆனால் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பை நாடிய ஐக்கிய அமெரிக்க மத்தியஸ்தர் மார்க் ஜீஜர் அந்த கோலை அங்கீகரித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜேர்மனி அணித் தலைவரும் கோல்காப்பளருமான மெனுவல் நோயரும் மத்தியவரிசையில் இணைந்து கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முற்பட்டார்.
ஆனால்  தென் கொரிய எல்லையிலிருந்து உயர்வாக நீண்டதூரம் பரிமாறப்பட்ட பந்தை நோக்கி மூச்சு முட்ட ஓடிய தென் கொரிய அணித் தலைவர் ஹியுங்மின் சன் 96 ஆவது நிமிடத்தில் வெறுமனே இருந்த ஜேர்மன் கோலினுள் பந்தை இடதுகாலால் புகுத்தி தென் கொரியாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த வெற்றியை உறுதிசெய்தார்.
சுவிடனிடம் மெக்சிகோ 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்ததை அடுத்து இப் போட்டியில் ஒரு கோலினால் வெற்றிபெற்றாலும் இரண்டாம் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதை நன்கு அறிந்திருந்த ஜேர்மனி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்த்தாக்குதலை நடத்திய அணியாகத் தென்படவில்லை. 
ஜேர்மனியின் பந்து பரிமாற்றங்கள் ஆமை வேகத்தில் இடம்பெற்றதுடன் பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கிய நகர்வுகளே இடம்பெற்றன. மேலும் அவ்வணி வீரர்கள் கோல் போட எடுத்த பல முயற்சிகளை தென் கொரிய கோல்காப்பாளர் ஜோ ஹியொன்வூ அசாத்திய திறமையுடன் செயற்பட்டு தடுத்து நிறுத்தி பலத்த பாராட்டைப் பெற்றார்.
ஜெர்மனியின் தோல்வியானது தென் கொரியர்களுக்கு பேரானந்தத்தைக் கொடுத்த அதேவேளை, ஜெர்மனிக்கு தாங்கொணாத் துயரைக் கொடுத்தது.  நன்றி வீரகேசரி 





நம்ப முடியவில்லை! தோல்வியடைந்தபோதிலும் 2 ஆவது  சுற்றுக்குள் நுழைந்த மெக்சிகோ 

27/06/2018 சுவீடனுக்கு எதிராக எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற எவ். குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 0 க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோ தோல்வி அடைந்தது. எனினும் தென் கொரியாவிடம் ஜெர்மனி தோல்வி அடைந்ததால் எவ் குழுவிலிருந்து சுவீடனுடன் மெக்சிகோவும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
இரண்டு அணிகளும் போட்டியின் முதலாவது பகுதியில் வெற்றிதோால்வியற்ற முடிவை நோக்கி நகர்வதைப் போன்று தென்பட்டது. ஆனால் இடைவேளையின் பின்னர் சுவீடன் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த அரம்பித்தது.
24 நிமிட இடைவெளியில் ஒரு பெனல்டி, சொந்த கோல் உட்பட 3 கோல்களைப் போட்ட சுவீடன் அமோக வெற்றியீட்டி எவ். குழுவில் அணிகள் நிலையில் முதாலம் இடத்தைப் பெற்றது.
போட்டியின் 50ஆவது நிமிடத்தில் மெக்சிகோ கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி சுவீடன் பின்கள வீரர் லூட்விக் ஒகஸ்டினசன் முதலாவது கோலைப் போட்டார்.
12 நிமிடங்கள் கழித்து கிடைத்த பெனல்டியை சுவீடன் அணித் தலைவர் க்ரான்க்விஸ்ட் கோலாக்கினார். இவர் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்ட இரண்டாவது பெனல்டி இதுவாகும். ஒட்டு மொத்தமாக 24 பெனல்டிகள் இம்முறை வழங்கப்பட்டுள்ளன.
போட்டி 74ஆவது நிமிடத்தைத் தொட்டபோது மெக்சிகோ வீரர் ஈ. அல்வாரெஸ் சொந்த கோல் ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.
இது இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்பட்ட 6ஆவது சொந்த கோலாகும்.  நன்றி வீரகேசரி 







இலகுவான வெற்றியுடன் 2 ஆம் சுற்றில் பிரேஸில்

28/06/2018 ஐந்து தடவைகள் உலக சம்பினான பிரேஸிலுடன் சுவிற்சர்லாந்தும் 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன. இதற்கு அமைய இதுவரை இரண்டாம் சுற்றுக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க நாடுகளுமே தகுதிபெற்றுள்ளன.
ஆசியாவினதும் ஆபிரிக்காவினதும் பெருமையை ஜப்பானும் செனகலும் இன்று காப்பாற்றுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொஸ்கோ, ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஈ குழுவுக்கான உலகக் கிண்ண லீக் போட்டியில் சேர்பியாவை 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரேஸில் வெற்றிபெற்றது.
போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் பிலிப்பே கூட்டின்ஹோ பரிமாறிய பந்தை பௌலின்ஹோ மிகவும் சிரமமான முறையில் கோலாக்கி பிரேஸிலை முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த சேர்பியா கடுமையாக முயற்சித்தது. அனால் பிரேஸிலின் பின்களத்தை ஊடறுத்து செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் அதன் இலக்குகளும் தவறிப்போயின.
போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் நேமாரின் கோர்ணர் கிக்கை முறையாகப் பயன்படுத்திய தியாகோ சில்வா பந்தை தலையால் முட்டி பிரேஸிலின் இரண்டாவது கோலைப் போட்டார்.  நன்றி வீரகேசரி 







தேவையான ஒரு புள்ளியைப் பெற்ற சுவிற்சர்லாந்து இரண்டாம் சுற்றில் நுழைந்தது

28/06/2018 உலகக் கிண்ண இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறுவதற்கு ஒரு புள்ளி மாத்திரமே தேவை என்பதை அறிந்திருந்த சுவிற்சர்லாந்து, அப் புள்ளியை கொஸ்டாரிக்காவுக்கு எதிரான போட்டியை வெற்றிதோல்வியின்றி (2 க்கு 2) முடித்ததன் மூலம் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது மட்டுமல்லாமல்  ரஷ்யாவில் முதல் தடவையாக கொஸ்டா ரிக்கா கோலையும் போட்டது.
முதலிரண்டு போட்டிகளில் போன்றே வேகம் குன்றி காணப்பட்ட சுவிற்சர்லாந்து 31ஆவது நிமிடத்தில் ப்ளெரிம் டிஸெமய்லி முதலாவது கோலைப் போட்டார்.
இடைவேளையின் பின்னர் 58 ஆவது நிமிடத்தில் கொஸ்டா ரிக்காவின் கெண்டொல் வொஸ்டன் பந்தை தலையால் முட்டி அருமையான கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் ஜொசிப் டேர்மிக் கோல் ஒன்றைப் போட்டு சுவிற்சர்லாந்தை மீண்டும் முன்னிலையில் இட்டார். உபாதையீடு நேரத்தில் கொஸ்டா ரிக்கா கோல் நிலையை சமப்படுத்தியது.
அநாவசியமாக சுவிற்சர்லாந்து வீரர் ஒருவர் பெனல்டி ஒன்றைக் கொடுத்தார்.
அந்த பெனல்டியை ப்றயன் ருய்ஸ் உதைத்த போதிலும் குறுக்கு கம்பத்தில் பட்டு திரும்பிவந்த பந்து சுவிற்சர்லாந்து கோல்காப்பாளர் யான் சொமரின் தலையில் பட்டு சொந்த கோலாக உள்ளே சென்றது. நன்றி வீரகேசரி 



இங்கிலாந்தை வென்றது பெல்ஜியம்

29/06/2018 இங்கிலாந்துக்கு எதிராக காலினிங்க்ராட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெல்ஜியம் 100 வீத வெற்றி பெறுபேறுடன் ஜீ குழுவில் முதலாம் இடத்தைப்பெற்றது.
இப் போட்டிக்கு முன்பதாகவே இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்த நிலையில் இரண்டு அணிகளிலும் நேற்றைய போட்டியில் பெரு மாற்றங்கள் செய்யப்பட்டன.
இங்கிலாந்து பயிற்றுநர் கெரத் சௌத்கேட் தனது அணியில் எட்டு மாற்றங்களையும் பெல்ஜியம் பயிற்றுநர் ரொபர்ட்டோ மார்ட்டினெஸ் தனது அணியில் ஒன்பது மாற்றங்களையும் செய்திருந்தனர். இங்கிலாந்தின் வழமையான அணித் தலைவர் ஹெரி கேனுக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இரண்டு அணிகளிலும் வழமையாகக் காணப்படும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் பெரிதாகக் காணப்படவில்லை. பல வீரர்களால் முழுமையான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனாலும் அவ்வப்போது இரண்டு அணயினரும் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினர். அவை இலக்கை அடையவில்லை.
இடைவேளையின் பின்னர் 51 ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் அத்னான் ஜானுசாஜ் தனது இடது காலால் உதைத்த பந்து வளைவாக சென்று இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்போர்டுக்கு மேலாக கோலினுள் புகுந்தது. 
இந்த கோல் போடப்பட்டு சிறிது நேரத்தில் கோல் நிலையை சமப்படுத்தும் வாய்ப்பு ஒன்று இங்கிலாந்துக்கு கிடைத்தது. மார்க்கஸ் ரஷ்போர்ட் கோல் போட எடுத்த முயற்சியை பெல்ஜியம் கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸ் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தடுத்து நிறுத்தினார்.
இந்தப் போட்டி முடிவானது இங்கிலாந்துக்கு முதலாவது தோல்வியைக் கொடுத்ததுடன் குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றதால் நொக் அவுட் சுற்றில் கொலம்பியாவை எதிர்த்தாடவுள்ளது.
நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள ஒரே ஒரு ஆசிய நாடான ஜப்பானை பெல்ஜியம் சந்திக்கவுள்ளது.   நன்றி வீரகேசரி 



‘பெயார் ப்ளே’ மூலம் 2 ஆம் சுற்றுக்குள் நுழையும் ஜப்பான்
29/06/2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நேர்த்தியான விளையாட்டின் (பெயார் ப்ளே) அடிப்படையில் முதல் தடவையாக ஓர் அணி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறுகின்றமை ரஷ்ய உலகக் கிண்ணப் போட்டியில் நிகழ்ந்துள்ளது.
போலந்திடம் ஜப்பானும் கொலம்பியாவிடம் செனகலும் 1 க்கு 0 என்ற ஒரே கோல் எண்ணிக்கையில் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து ஜப்பானும் செனகலும் போட்ட கோல்கள், விட்ட கோல்கள் மற்றும் நிகர கோல்கள் அனைத்திலும் சமமாக இருந்தன. இதன் காரணமாக பீபாவின் விதிகளின் பிரகாரம் நேர்த்தியான விளையாட்டின் அடிப்படையில் ஜப்பான் இரண்டாம் சுற்றுக்கு செல்ல தகுதிபெற்றது.
இந்த இரண்டு அணிகளில் ஜப்பான் 4 மஞ்சள் அட்டைகளுக்காக 4 மறை புள்ளிகளைப் பெற்றிருந்தது. செனகல் 6 மஞ்சள் அட்டைகளுக்காக 6 மறை புள்ளிகளைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய நேர்த்தியான விளையாட்டில் ஜப்பான் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பு கிடைத்தன் மூலம்  ஆசிய வலயத்திலிருந்து தகுதிபெற்ற ஒரே ஒரு நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது.
2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்கு ஐரோப்பிய வலயத்திலிருந்து 10 நாடுகளும் அமெரிக்க வலயத்திலிருந்து 5 நாடுகளும் ஆசிய வலயத்திலிருந்து ஒரு நாடும் தகுதிபெற்றுள்ளன.
வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் நடைபெற்ற எச் குழுவுக்கான போட்டியில் ஜப்பானை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் போலந்து வெற்றிகொண்டது. ஏற்கனவே இரண்டாம் சுற்று வாய்ப்பை இழந்திருந்த போலந்துக்கு இது ஆறுதல் அளிக்கும் வெற்றியாக அமைந்தது.
போட்டியின் 58 ஆவது நிமிடத்தில் ரபேல் கர்ஸாவாவின் ப்றீ் கிக்கை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஜான் பெட்னாரெக், எதிரணியின் கோலுக்கு மிக அருமையில் இருந்து கோல் போட்டு போலந்தை முன்னிலையில் இட்டார்.
இப் போட்டியில்  கோல் போடுவதற்கு பல சந்தர்ப்பங்களில் ஜப்பான் முயற்சித்த போதிலும் அவை ஒன்றும் கைகூடவில்லை. நேர்த்தியான விளையாட்டு தங்களுக்கு கைகொடுக்கும் என அறிந்திருந்த ஜப்பான், கடைசி கட்டத்தில் பந்தை தம் பக்கமே வைத்து நேரத்தைப் போக்கிக்கொண்டிருந்தது. நன்றி வீரகேசரி 




ஆர்ஜன்டீனாவை வெளியேற்றியது பிரான்ஸ்

30/06/2018 பிரேஸில் தேசத்தின் மரக்கானா விளையாட்டரங்கில் நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான ஜெர்மனியும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நான்கு நாட்கள் இடைவெளியில் ஒரே மைதானத்தில் தோல்விகளைத் தழுவி ரஷ்யா 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து வெளியேறின.
தென் கொரியாவிடம் கஸான் விளையாட்டரங்கில் முதலாம் சுற்றின் கடைசிக் கட்ட லீக் போட்டியில் கடந்த புதன்கிழமை 0 க்கு 2 என்ற கொல்கள் கணக்கில் தோல்வி அடைந்து ஜேர்மனி வெளியேறியிருந்தது.
இதே மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் (16 அணிகளுக்கான இரண்டாம் சுற்று நொக் அவுட்) பிரான்ஸிடம் 3 க்கு 4 என்ற கோல்கள் அடிப்படையில் ஆர்ஜன்டீனா தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளுடன் பெரும்பாலும் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் ஆர்ஜன்டீன அணித் தலைவர் லயனல் மெசி பெரிதும் அதிர்ந்துபோய் காணப்பட்டார்.
19 வயதுடைய இளஞ்சிங்கம் கய்லியன் எம்பாப்பே  போட்டியின் இரண்டாவது பகுதியில் நான்கு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டதன் மூலம் ஆர்ஜன்டீனாவை வெற்றிகொண்ட பிரான்ஸ் முதலாவது அணியாக கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இரண்டு சம்பியன் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப் போட்டியில் ஒரு கோல் பின்னிலையிலிருந்து மீண்டு வந்த பிரான்ஸ் அபார வெற்றியீட்டியது.
போட்டியின் 11ஆவது நிமிடத்தில் எம்பாப்பேயை தனது பெனல்டி எல்லைக்குள்வைத்து மார்க்கோஸ் ரோஜோ முரணான வகையில் வீழ்த்தியதால் பிரான்ஸுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
இரண்டு நிமிடங்கள் கழித்து பெனல்டியை எடுத்த அன்டொய்ன் க்றீஸ்மான் மிக நிதானமாக கோலினுள் பந்தைப் புகுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார்.
இடைவேளைக்கு 4 நிமிடங்கள் இருந்தபோது 25 யார் தூரத்திலிருந்து ஏஞ்சல் டி மரியோ இடதுகாலால் உதைத்த பந்து கடுகதி வேகத்தில் பிரான்ஸ் கோல்காப்பாளர் அணித் தலைவர் ஹியூகோ லோரிஸைக் கடந்து வலது முலையால் உள்ளே நுழைந்தது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 3ஆவது நிமிடத்தில் லயனல் மெசி உதைத்த பந்து திசை திரும்பிவந்துபோது கெப்றில் மார்க்கோடோ மிக வேகமாக செயற்பட்டு கோலாக்கி ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் பிரான்ஸ் அணியினர் மிக வேகமாக பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு ஆர்ஜன்டீனாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆர்ஜன்டீனா தனது வழமையான விளையாட்டிலேயே ஈடுபட்டது.
57ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூக்கஸ் ஹேர்னெண்டெஸ் பரிமாறிய பந்து பெஞ்சமின் பவார்டை அடைந்தபோது அவர் மிக இலாவகமாக கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
ஏழு நிமிடங்கள் கழித்து ஆர்ஜன்டீன கோல் எல்லையில் நிலவிய தடுமாற்றத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட எம்பாப்பே பந்தை கோலினுள் செலுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார். அத்துடன் எம்பாப்பே நின்று விடவில்லை. 68ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து அரங்கில் சற்று முரட்டுத்தனமான விளையாட்டு இடம்பெற்றதுடன் அடிக்கடி மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது.
இதனிடையே இரண்டு அணிகளும் ஓரிரு கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டன.
போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன வீரர் சேர்ஜியொ அகேரோ தலையால் பந்தை தட்டி அலாதியான கோல் போட்டார். ஆட்டம் உபாதையீடு நேரத்துக்குள் சென்றபோது இரண்டு அணி வீரர்கள் முரட்டு சுபாவத்துடன் விளையாடியதுடன் முட்டிமோதிக்கொள்ளவும் செய்தனர். இதன் காரணமாக நிலைமையக் கட்டுப்படுத்த வீரர்களை எச்சரித்த மத்தயஸ்தர், இரண்டு அணிகளிலும் தலா ஒரு வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டினார். 
உபாதையீடு நேரத்தின் 3ஆவது நிடத்தில் மெசி உயர்வாகப் பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய சேர்ஜியோ அகுவேரோ தலையால் முட்டி கோலை சமப்படுத்த முயற்சித்தார். ஆனால் பந்து இலக்கு தவறி வெளியே செல்ல பிரான்ஸின் வெற்றி உறுதியானது. நன்றி வீரகேசரி 








No comments: