கர்ணன் நாட்டிய நாடகம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .

.


மதுரை முரளிதரன் வருடா வருடம் நடைபெறும் சிட்னி இசைவிழாவில் பல வருடங்களாக தொடர்ந்து நாட்டிய நாடகங்களை வழங்கி வருகிறார். சிட்னியில் உள்ள நடன பாடசாலைகளும் அவருடன் இணைந்து பங்குபற்றுவார்கள். ஒளிப்பட காட்ச்சிப் பின்னணியுடன் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வருடமும் ரிவெர்சயிட் தியேட்டரில் முரளிதரன் தயாரிப்பில் "கர்ணன்" நாட்டிய நாடகம் மேடை ஏறியது. இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்களுடன் சுகந்தி தயாசீலனின் கலாபவன் மாணவியரும் இணைந்து ஆடினார்கள்.

மகாபரத்திதின் கர்ணன் வாழ்வு யாவரும் அறிந்த கதையே கர்ணன் போல் கொடுக்கப் பழகவேண்டும் என மாணவியர் ஆறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை வெவ்வேறு வகையாக ஆடினார்கள். இதில் கரகாட்டமும் பொய்க்கால் குதிரையும் வந்து போயிற்று. காண கச்சிதமான ஆடை அலங்காரம், இதன் மத்தியில் கதை கூறுபவர் சிறந்த முகபாவத்துடன் ஆடினார்.



கதையின் ஆரம்பம் கர்ணன் ஆற்றிலே மிதந்து வரும் காட்சி, குழந்தையின் அழுகை மனதை உருக்கியது. அதை அடுத்து கர்ணன் துரோனாச்சரியரிடம் வில்வித்தை கற்கப் போய், ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதால் அவர் வித்தையை கற்றுத்தர மறுக்கிறார், மனமுடைந்த சிறுவனை தாயார் தேற்றுகிறார். சுகந்தி தயாசீலன் தாயாகவும் அவரது மகள் கர்ணனாகவும் ஆடினார்கள். வாலிபக் கர்ணனாக இந்தியாவில் இருந்து வருகை தந்த சுவிகுமார் சிறப்பாக ஆடினார்.

கர்ணன் எவ்வாறாவது வில்வித்தையைக் கற்று விடவேண்டும் என்ற ஆர்வத்தால் தான் பிராமணன் என பொய் கூறுவது, அவன் காலில் வண்டு துளைத்து இரத்தம் பெருகியும் பொறுமையாக குருவின் நித்திரையைக் குழப்பாமல் கால்களை அசைக்காமல் இருந்த சகிப்புத்தன்மையால் அவன் பிராமணன் அல்லன், பிராமணனால் இவ்வாறு வலியைத் தாங்கும் திறமை கிடையாது, இவன் தன்னை ஏமாற்றி விட்டான் என கோபம் கொண்டு சபிக்கிறார் குரு. வண்டு துளைத்தா காட்சி அருமையான கற்பனை. அதனை அடுத்து வில்வித்தைப் போட்டி போட்டியிலே வில்லை சரமாரியாக பொளிதல். ஆடலுடன் பின்திரையில் ஒளிப்பட காட்ச்சியும் இணைந்தது. போட்டியில் கலந்துகொண்ட எதிராளியும் சளைக்காமல் ஆடினார். காட்சி பிரமாதம் . அங்கு சபையோரால் அவன் தந்தை தாய் யார், உன் குளம் எது, தேரோட்டி மகனா நீ என அவமதிக்கப் படும் பொழுது துரியோதனன் கர்ணனை அரசனாக முடிசூட்டுகிறான். அவன் மானம் காத்து நட்பு வளர்க்கிறான். போட்டி நடை பெற்ற இடத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் ஆண்களே. சில இளைஞர்கள் ஆடக் கூடியவர்களாகவும் உள்ளனர்.




கர்ணன் துரியோதணனின் மனைவி பானுமதியுடன் சொக்கட்டான் விளையாடும் காட்சி, பானுமதியாக பிரஷா பத்மநாதனும் கர்ணனாக சுவி குமாரும் அவன் மனைவியாக காவியா முரளிதரனும் ஆகும். இருவருமே சிறந்த ஆடத் கலைஞர்கள் இந்தக் காட்சியில் இருவரும் இணைந்து ஆடலாக அமைத்திருந்தால் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ரிருப்பார்கள். பார்வையாளர்களும் எதிர் பார்த்தார்கள் , ஆனால் அங்கோ நான்கு பெண்கள் திலோத்தமை, ரம்பை, ஊர்வசி, என சிலையாக நின்றனர்.இது எதற்கு? கர்ணன் கதையில் அழகிய ஆடலுக்கு இடம் கிடையாது என இந்த சிறந்த ஆடற் கலைஞர்கள் மிக மிக குறுகிய ஆடலை ஆடினார்கள். குந்தியை அறிமுகப் படுத்திய போது கோlலாட்டம் கும்மி என நீண்டது. இதை எல்லாம் குறைத்து காவியா சுவிகுமார் ஆடியிருந்தால் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும்.   

சூரியன் வருகை குந்தி கர்ப்பம் தரித்தலில் சூரியனைக் காட்சிப்படுத்தியது அழகான கற்பனை . குழந்தையை ஆற்றில் விடுதல் முதல்க் காட்சியாக அமைந்தது. திரும்பவும் ஒரே காட்சி. குந்தியின் கனவாக பின்நோக்கிக் காட்டப் பட்டாலும் பலர் புரிந்துகொள்ள முடியவில்லை. 

கதை கூறுவோர் அதைக் கேட்க இரு சிறுமிகள் இவை இல்லாமலேயே பார்ப்போருக்கு புரிந்திருக்கும். இவர்கள் வருகை குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியது. சகுனி பாத்திரப் படைப்பு பிரமாதம். அவர் நடையே அவரது பாத்திரத்தின் சூழ்ச்சி தனத்தின் அடையாளமாக அமைகின்றது. தாம் இவரையும் சொத்தில் இழந்த தர்மன் தனது மனையாள் துரோபதியை பணயம் வைத்து தோற்கிறான் . துரோபதியாக நடித்த வைசாலி தர்மகேசன் நன்றாகவே நடித்தார். 

துரோபதி துகில் உரிகையின் பின் கர்ணன் தன வீட்டிற்கு வந்ததும் மனைவியாகவரும் காவியாவின் ஆத்திரம் மிகுந்த ஆடல், இதற்கு நீயும் உடந்தையாக இருந்தாயா என கோபாவேசமாக ஆடியமை அவரது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது. 

இதன் பின் கர்ணனாக மதுரை முரளிதரனே தோன்றுகின்றார். கண்ணன் சூழ்ச்சியால் தாய் குந்தியை சந்திக்கும் காட்சி. குந்தி- கர்ணன் இருவருமே அருமையான நடிகர்கள். இறுதிப் போரில் கர்ணனின் உருக்கமான நடிப்பு. இறக்கும் தருவாயில் தாய் குந்தி மடியில் போட்டுகொண்டு மகனே என அழும் காட்சி கண்ணீர் சிந்த வைத்து விட்டார். 

சிலவற்றைத் தவிர்த்திருந்தால் நாட்டியம் மேலும் மெருகு பெற்றிருக்கும். கூட்டுத் தயாரிப்பு எனும் பொது, சிட்னி மாணவர்களுக்கும் ஆட சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற காட்சிகளின் சேர்க்கை நாட்டியத்தின் கட்டுக் கோப்பை இழக்கச் செய்துவிட்டது. சிறந்த தயாரிப்பாளரான முரளிதரனுக்கு ஏற்பட்ட சிக்கல் என நாம் இதைக் கொள்ளலாம். மதுரை முரளிதரனின் கலை வாழ்வு நீண்டகாலம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம்.




No comments: