வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 5 – ச. சுந்தரதாஸ்

தான் அடுத்து இயக்கப் போகும் படத்தின் கதாநாயகனாக விஐயகுமாரணதுங்கவை தேர்ந்தெடுத்தார் லெனின். படத்திற்கு அபிரஹச (பரமரகசியம்) என்று பெயரிடப்பட்டது. சிலோன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக இருந்த விமல் வீரக்கொடி இப்படத்தை தயாரித்தார். 

நல்லவனைப் போல் நடிக்கும் வில்லத்தனம் நிறைந்த பாத்திரத்தில் விஜய் நடித்தார். அவருடன் சுவர்ணாகாவிட்ட, தலத்தா குணசேகர ஆகியோரும் நடித்திருந்தனர். திகிலும் மர்மமும் நிறைந்த காட்சிகளைக் கொண்ட இப்படத்தை விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் இயக்கி இருந்தார் லெனின். சிங்களத்தில் இவ்வாறு வெளிவந்த முதல் சஸ்பென்ஸ் படம் என்று கூட இதனை குறிப்பிடலாம். 

அபிரஹச படம் தான் விறுவிறுப்பென்றால் அந்தப் படத்திற்கு தேவையான படச்சுருள்கள் கிடைத்த விதமும் விறுவிறுப்பானது. குறைந்த செலவில் படத்தை எடுக்க வேண்டும் என விமல் வீரக்கொடி விரும்பினார். அந்த சமயம் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த திரைப்படங்களை தயாரிக்கும் கச்சா பிலம்களை ஏலத்தில் விடப்போவதாக ஒரு விளம்பரம் வந்தது. விமலும் லெனினும் துறைமுகம் சென்று ஏலத்தில் குறைந்த விலையில் அவற்றை வாங்கினார்கள். 


பழசாகிப் போன் அந்த படச்சுருள்களை அந்த ஸ்டுடியோவுக்கு கொண்டு வந்து ரசாயன கலவையில் போட்டு நல்லவற்றை தேடித்தேடி எடுத்து ஒருவாறு அவற்றை பயன்படுத்தி படத்தை உருவாக்கினார் லெனின். இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தன் நண்பரான பிரபலப் பாடகர் எச். ஆர். ஜோதிபாலவை நடிக்க வைத்தார் லெனின். 1971ம் ஆண்டு வெளிவந்த சிங்களப் படங்களுள் அபிரஹச வெற்றிப் படமாக இடம் பிடித்தது. இநதப் படத்தில் தண்ணீருக்கு அடியில் ஒரு பாழடைந்த அறையில் ஒரு பிணத்தை தேடும் காட்சியை சஸ்பென்ஸ்சுடன் படமாக்கியிருந்தார் லெனின். இப்போதெல்லாம் ஸ்டுடியோவில் செட் போட்டு படங்கள் எடுப்பது மிகக் குறைவு. ஆனால் முன்னர் எல்லாம் ஸ்டுடியோவில் அரங்கம் நிர்மாணித்து படங்களை எடுப்பது தான் வழக்கம். ஆனால் அபிரஹச படத்தை ஒரு பங்களாவுக்குள்ளே எடுத்தார் லெனின். பத்தரமுல்லையில் இருக்கும் தனது நண்பர் ஒருவரின் வீட்டிலேயே முழுப்படத்தையும் சிக்கனமாக எடுத்து தயாரிப்பாளரின் கையைக் கடிக்காமல் பார்த்துக் கொண்டார். 

அதிர்ஷ்டம் வந்துலு என்பது ஒரு தெலுங்குப் படம். தெலிங்கில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நாகேஸ்வரராவ், ஜெயலலிதா சோடியாக நடித்து வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் தயாரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி விரும்பினார். படத்தில் நடிப்பதற்கு சிவாஜியும் கே. ஆர். விஜயாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இவர்களுடன் பாலாஜி, நாகேஸ், சுந்தரராஜன், விஜயலலிதா ஆகியோரும் நடித்தார்கள். இந்தப் படம் தான் திருடன், நூறு நாட்கள் ஒடி வெற்றி பெற்ற இந்தப் படத்தை  சிங்களத்திலும் தயாரிக்க வேண்டும் என்ற ஆவல் தயாரிப்பாளர் சரத் ருபசிங்கவிற்கு ஏற்பட்டது. உடனே அதனை நிறைவேற்றுபதற்கு அவர் அணுகியது லெனின் மொறயஸத்தான்!

படத்திற்கு எதத் சூரயா அதத் சூரயா என்று பெயரிடப்பட்டது. (அன்றும் வல்லவன் இன்றும் வல்லவன்). படத்தின் ஒளிப்பதிவு, டைரக்ஷன், பொறுப்புகளுடன் திரைக்கதையையும் லெனின் அமைத்தார். தமிழ் படத்திலிருந்து சில காட்சிகள் சிங்களத்திற்காக மாற்றப்பட்டன. அழகேசனின் உதவியுடன் திரைக் கதையை சிங்கள ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அமைத்தார் லெனின். நடிகர் நாகேஸ்வரராவின் ரசிகர் காமினி பொன்சேகா. நாகேஸ்வரராவ் நடித்த பாத்திரத்தில் கதாநாயகனாக அவர் நடித்தார். ஜெயலலிதா, கே. ஆர். விஜயா நடித்த வேடம் மாலினி பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டது. நாகேஷின் வேடத்தில் அந்தனி சி. பெரேராவும், பாலாஜின் பாத்திரத்தில் சேனாதீர ருபசிங்கவும் நடித்தார்கள். நடன ஆசிரியையாக ஹெலன் குமாரி பணியாற்றி காமினி, மாலினி, சோனியா திசா ஆகியோருக்கு நடன அசைவுகளையும் சொல்லித்தந்தார். அத்துடன் ஒரு கவர்ச்சி நடனமும் ஆடி இருந்தார் ஹெலன் குமாரி. ரசிகர்கள் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த நடனக் காட்சி படமாகியிருந்தது.

கவர்ச்சி நடனம் என்ற போதும் ஆபாசத்தைக் கலக்காமல்தான் காட்சியை படமாக்குவார் லெனின். சில ஒளிப்பதிவாளர்கள் கமெராவை ஒவ்வொரு விதமாக நகர்த்தி காட்சியை விரசமாக படமாக்குவார்கள். ஆனால் லெனின் அப்படியல்ல. எல்லை மீறாமல் காட்சியை படமாக்கி கவர்ச்சி நடனத்தை எல்லோரும் ரசிக்கும்படி செய்து விடுவார் என்கிறார் ஹெலன் குமாரி. தெலுங்கைப் போல தமிழைப் போல சிங்களத்தில் 1972ல் உருவான எதத் சூரியா அதத் சூரியாவும் வெற்றி கண்டது.

1972ம் ஆண்டளவில் இலங்கைத் திரையுலகில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதுவரை காலமும் தமிழ், ஹிந்திப் படங்களின் இறக்குமதியும், விநியோகமும், மூன்று தனியார் நிறுவனங்களிடையேயே இருந்தன. அதேபோல் இந்த நிறுவனங்களின் அதிபர்களே சிங்களப் படத்தயாரிப்பிலும் விநியோகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். அதுமட்டுமன்றி இந்த மூன்று நிறுவனங்களும் தமிழ் பேசும் இனத்தை சேர்ந்தவர்களிடமே இருந்தன.

இந்த நிலையில் தான் சிறிமாவோ பண்டாரநாயகவின் அரசாங்கம் அரசாங்க திரைப்படக் கூட்டுத்தாபனத்தை ஆரம்பித்தது. இதன் காரணமாக தமிழ், ஹிந்திப் படங்களின் இறக்குமதி, விநியோகம் என்பன திரைப்படக் கூட்டுத்தாபனம் வசம் விடப்பட்டது. இதன் விளைவாக ஹிந்திப் படங்களின் வருகை மிகவும் மட்டுப் படுத்தப்பட்டன. தமிழ்ப் படங்களின் வருகையோ பலத்த கட்டுப்பாட்டிற்கு உள்ளானது.

அதேசமயம் உள்ளுரில் தயாரிக்கப்படும் சிங்கள தமிழ்ப் படங்களுக்கு கூட்டுத்தாபனம் தனது சலுகைகளையும் ஆதரவையும் வழங்கியது.  இதன் காரணமாக பாரம்பரிய படத்தயாரிப்பாளர்கள் இருந்த சிங்கள திரைப்படத்தயாரிப்பு புதியவர்களின் வசம் கை மாறியது. புதிய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உருவானார்கள்.

சிங்கள மக்களின் கலாசாரம் பழக்க வழக்கங்கள் கிராமிய பண்பாடுகள் என்பனவற்றை வெளிப்படுத்தும் படங்கள் சிங்களவர்களினால் உருவாக்கப்பட்டன. இத்திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெறாத போதும் நல்ல படங்கள் என்று பலராலும் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் அதே கால கட்டத்தில் வர்த்தக ரீதியிலான ஜனரஞ்சனமான படங்களுக்கான அவசியமும் உணரப்பட்டிருந்தது. இந்தப் படங்களை லெனின் மொறயஸ் மிக வெற்றிகரமாக உருவாக்கிக் கொண்டிருந்தார். இவரைப் போலவே கே. செல்வரத்தினம், எம். வி. பாலன், எஸ். வி. சந்திரன், கே. வெங்கட் போன்றோரும் வசூல் ரீதியிலான படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சிங்களத்தின் முன்னணி நடிகர்களான காமினி, விஜயகுமாரணதுங்க போன்றோர் இரண்டு விதமான படங்களிலும் மாறி மாறி நடித்து ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தார்கள். இதனால் தமிழ்க் கலைஞர்களுடைய அவசியம் சிங்களத் திரையுலகில் உணரப்பட்டுக் கொண்டே இருந்தது.

இலங்கைத் திரையுலகின் நட்சத்திரத் தாரகையான மாலினி பொன்சேகா லெனினின் பல படங்களில் நடித்துள்ளார். அவரிடம் லெனினின் ஆற்றல்களை பற்றி கேட்ட போது இப்படி சொன்னார். லெனின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவு செய்த படங்களிலும் பின்னர் டைரக்ஷன் செய்த படங்களிலும் நான் நடித்திருக்கிறேன். அப்போதல்லாம் அவருடைய கெமரா திறமைகளையும் டைரக்ஷன் செய்யும் பாணியும் என்னை கவர்ந்துள்ளன. அவரிடம் இந்த நுணுக்கங்களைப் பற்றி கேட்டு அறிந்துள்ளேன். பிற்காலத்தில் நான் நான்கு படங்களை டைரக்;ட் செய்வதற்கு அவருடைய ஆலோசனைகள் துணையாக இருந்துள்ளன. இந்தியப் படங்களை தழுவி எடுத்திருந்த போதிலும் அவருக்கென்று ஒரு பாணியை வைத்திருந்தார். அதில் வெற்றியும் கண்டார். இத்தனை படங்கள் செய்திருந்தும் அவருக்கு விருதுகள்  கிடைக்காதது கவலைக்குரியதுதான். லெனினின் பல படங்கள் வர்த்தக ரீதியிலான படங்கள். அதிலும் பெரும்பாலானவை தமிழ்ப் படங்களை தழுவி எடுக்கப்பட்டவை.

விருது வழங்குவதற்கு நியமிக்கப்படும் கமிட்டி சிங்களத்தில் வெளிவந்த யதார்த்தரீதியிலான சிங்கள கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படங்களையே விருதுக்கென பரீசீலனைக்காக எடுத்துக் கொண்டன. இதனாலேயே திறமையான டைரக்டராக இருந்தும் லெனின் விருதுகள் ஏதும் பெறவில்லை.

விருதுகள் தொடர்பாக லெனின் மொறயஸிடம் கேட்ட போது அவர், என் திறமையை படத்திற்கு படம் ரசிகர்கள் அங்கீகரித்து விட்டார்கள். அதற்கு மேல் விருதுகள் கேடயங்கள் எல்லாம் ஒரு கேடா என்று கூறினார்.

சில படங்களில் என்னுடைய பங்களிப்பை பலவிதமாக வழங்கியிருக்கிறேன். சிலருக்காக என்னுடைய பெயரை விட்டும் கொடுத்திருக்கிறேன். தவிர்க்கமுடியாத சில சந்தர்பங்களில் நட்புக்காக கூட இது போன்று நடந்தது உண்டு. ஆனால் இவற்றை நான் பொருட்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார் லெனின்.

தொடரும்.............
No comments: