யாழ்ப்பாணத்திலே சித்திரத் திருக்கோவில் - திருவாசக அரண்மனை


சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தெல்லிப்பழை சிறீ
துர்க்கையம்மன் கோவிலின் தர்மகர்த்தாவும் ஆகிய செஞ்சொற் செல்வர்
திரு ஆறுதிருமுருகன் அவர்களின் அயரா உழைப்பினால்
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியிலே அமைந்துள்ள
திருவாசக அரண்மனை அண்மையிலே சமயக்கிரிகைகள்
முற்றுப்பெற்றபின்னர்; சிறந்த முறையிலே திறக்கப்பெற்றது. உலகிலே
முதன்முதலாக மணிவாசகரின் திருமுறையைக் கருங்கல்லிலே
செதுக்கிச் சைவசமயத்தவர்கள் வணங்குவதற்குரிய தெய்வத்
திருவுருவங்களுடன் இத்தகையதொரு கலைக்கோவிலை
யாழ்ப்;பாணத்திலே தோற்றுவித்தமை மிகவும் பாராட்டுதற்குரியது.
திருவருள் கடாட்சத்துடனும் அமரர் தங்கம்மா அபக்பாக்குட்டி அவர்களின்
அருளாசியுடனும் திரு ஆறுதிருமுருகன் அவர்களின் உழைப்பினால்
இந்தத் திருக்கோவில் சுமார் இரண்டு வருடங்களிலே உருவானது ஒரு
வியக்கவைக்கும் அற்புதமே!.
இந்த அரண்மனையிலே மூலவராகத் தெற்கு நோக்கிய வண்ணம்
சிவதட்சணாமூர்த்தியைத் தாபித்துள்ளார்கள். ஐந்து அடுக்குகளைக்
கொண்ட விமானத்திலே 108ச் சிவலிங்கங்கள் அழகுற
அமைக்கப்பெற்றுள்மை கண்கொள்ளாக் காட்சியே!. மூலவரின் சிலைக்கு
முன்பாகப் பார்ப்போரின் கருத்தை ஈர்க்கும் வகையிலே 21அடி உயரம்
கொண்ட சித்திரத்தேர் காட்சியளிக்கிறது. கருங்கல்லிலே அற்புதமாக
இதைச் செதுக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பகழ்பூத்த சிற்பக்



கலைஞரான புருசோத்தமன் ஆவார். இவர் தனது குழுவினருடன்
செதுக்கிய தேர் பலவித சி;ற்பங்களைக் கொண்டு அவர்களின்
கைவண்ணத்தை வெளிக்காட்டுகிறது.
சித்திரத் தேருக்கு முன்பாகச் சைவர்களின் பரம்பொருளான
சிவபெருமானின் சிலையையும் பத்திச் சுவை ததும்பும் திருவாசகத்தை
அருளிய மாணிக்கவாசகப் பெருமானின் சிலையையும் தாபித்தமை
தனிச்சிறப்பே!. இதற்குமுன்னாகக் கருங்கல்லினாலே செதுக்கப்பெற்ற
மூன்றடி உயரமும் இரண்டரை அடி விட்டமும் கொண்ட பெரியதோர் நந்தி
பொலிவுடன் அமைக்கப்பெற்றுள்ளது.
திருவாசகப் பாடல்கள் அத்தனையையும் கருங்கனல்லிலே ஒருவித
பிழைகளுமின்றி அழகுறச் செதுக்கிய பெருமை கிளிநொச்சியிலுள்ள
விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் விவேக் என்பவரையே சாரும்.
இவை படிப்போரை மெய்யுருகச் செய்வனவாக அமைந்துள்ளன.
சிவபுராணத்தைத் தமிழிலே செதுக்கியதுமல்லாமல் அதைக்
கன்னடத்திலும் சிங்களத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்த்து
அவற்றையும் கல்லிலே பொறிப்பித்தமை மேலும் இந்த அரண்மனைக்குச்
சிறப்பைத் தருகின்றது. அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நிலையமும்
அமைக்கப்பெற்றமை பாராட்டுதற்குரியது.
இந்த அரண்மனையை யாழ். ஊரெளுவைச் சேர்ந்த திரு சண்முகநாதன்
என்பவர் தனது குழுவினருடன் சேர்ந்து அழகாக நிர்மாணித்துள்ளமை
பாராட்டுதற்குரியது.
திருவண்ணாமலையிலே சித்தர் பெருமான் ஒருவரின் அருளாசி
கிடைக்கப்பெற்றவர் செஞ்சொற் செல்வர் திருஆறுதிருமுருகன் அவர்கள்.
"திருவாசகத்தை;க் காப்பாற்றுங்கள். அது உங்களைக் காப்பாற்றும்" என்ற
சித்தர் பெருமானின் அருள் வாக்கின் ஆற்றல் ஆறுதிருமுருகன்
வாயிலாகச் செயல்வடிவம் பெற்றுவிட்டது தெய்வீகமே!. திருவாசக

அரண்மனை தாபிப்பதற்குரிய காணியைச் சிட்னியைச் சேர்ந்த பிரபல
இருதயநோய் நிபுணர் மனமோகன் அவர்கள் அன்பளிப்புச் செய்தமை
பாராட்டுதற்குரியதொன்று. சிவம் கமழும் திருவாசக அரண்மனை
பல்லாயிரம் ஆண்டுகள் சைவத்தை நிலைநாட்டிச் சகலருக்கும்
இறைபத்தியை வளர்க்கும் திருக்கோவிலாக அமையும் என்பதில்
எந்தவித ஐயப்பாடும் இல்லை. இந்தப் பெரும் பணியை நிறைவேற்றிச்
சைவத்தையும் மணிவாசகரின் திருவாசகத்தையும் நிலைநாட்டிய
ஆறுதிருமுருகன் அவர்களுக்கு சகல நலன்களையும் அருளும்வண்ணம்
சிவபெருமாளின் பாதக்கமலங்களை வேண்டிப் பிரார்த்திப்போம்.
இத்தகைய சரித்திரப் பிரசித்திபெற்ற நிழகழ்விலே நேரடியாகக்
கலந்துகொள்ள வாய்ப்பு இல்லாது போனாலும் சிறியேன் ஒரு வாழ்த்துக்
கவியை அனுப்பியிருநற்தேன். அதை தமிழ்முரசு வாசக அன்பர்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திருவாசக அரண்மனை திறப்புவிழா திருப்பொலிந்து
நனிசிறக்க வாழ்த்திடுவோம்!
ஒருவாசகத் திற்குமுருகா உள்ளமெலாம் உருக்கிவிடும்
ஒப்பரிய மணிவாசகர் உலகமுய்ய அன்றுசெய்த
திருவாசகம் என்னுந்தேன் செந்தமிழ்ப்பா முழுவதையும்
சித்திரமாயக்; கைதேர்ந்த சிற்பிதனைத் தேர்ந்தெடுத்துக்
கருமைமிகு கருங்கல்லிற் காதலொடு பொறிப்பித்த
கருணைச்செயல் தனைநினைக்கக் கண்பனிக்கா தெவருண்டோ?
முருகனவன் அருள்பெற்ற ஆறுதிரு முருகன்நிறுவிய
திருவாசக அரண்மனையின் திறப்புவிழா வாழியவே!

செய்வனவெலாம் திருந்தச்செயும் செம்மனத்தோன் சிந்தையிலே
திருவருளின் சக்திநின்று செய்வித்த அற்புதமோ?
சைவந்த ழைத்துயர வாதவூரர் அருளியநற்
தமிழமுதப் பாடல்களைத்; தரமான சிற்பிகொண்டு
மெய்வருந்தி நிதிதிரட்டி வேண்டியநன் னிலம்பெற்று
மேதினியில் ஒருவருமே கனவினிலுமே கண்டிராத
கைவண்ணமாய்க் கருங்கல்லிற் செதுக்குவித்த விந்தையிதோ?
காலமெலாம் அருள்பொழிநற் கலைக்கோயில் வாழியவே!

மருள்நீக்கி மன்பதையை வழிநடத்தும் பெற்றிகொண்ட
மணிவாசகரின் அருட்பாடல் அத்தனையும் ஒளிகால
திருநெறிய செந்தமிழாய்த் தேன்பில்கும் சுவையூற
தெய்வமணம் கமழ்ந்துயர் சிவம்வளர்க்கும் திருத்தளியாய்
வருஞ்சைவச் சந்ததிக்கோர் வரப்பிரசாத மாயமையும்
வளஞ்சுமந்த திருவாசக அரண்மனையோர் பொக்கிசமே!
பெருமைமிகு உலகம்வதி பேரன்புச் சைவரெலாம்
பிறங்கிமகிழ்ந் தேவாழ்த்தத் திறப்புவிழாச் சிறந்திடுமே!

பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


No comments: