இலங்கைச் செய்திகள்


யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை ; மூவர் அரச சாட்சிகளாக மாறினர்

சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம்

சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழில் இனந்தெரியாதோர் தாக்குதல் மூவர் காயம், உடைமைகள் சேதம்



யாழில் சிறுமி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

26/06/2018 யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர்.
வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும், நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். 
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி 









யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை ; மூவர் அரச சாட்சிகளாக மாறினர்

26/06/2018 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. 
ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296 ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு மீதான சுருக்க முறையற்ற விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்  20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்தச்  சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். 
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
3 பொலிஸார் விடுவிப்பு
வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த  5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் ஏக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று அறிக்கையிட்டனர்.
மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296 ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு இன்று 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. 
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர். அதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்துவரும் தவணைகளில் சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முடிவுறுத்தப்பட்டு வழக்கு ஆவணங்கள் மேல் நீதிமன்ற நடவடிக்கைக்காக சட்ட மா அதிபரிடம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி 
 










சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம்

28/06/2018 யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீதி மறியில் போராட்டமானது இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி 









சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

28/06/2018 யாழ்ப்பாணம், சுளிபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி றெஜினாவுக்கு உரிய நீதிபெற்றுத் தரக்கோரி இன்று காலை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி சேர் பொன். இராமநாதன் வீதியூடாக சென்று யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியை சென்றடைந்து குறித்த வீதியை மறித்து முற்றுகைப் போராட்டத்தை ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மாணவர்கள் முன்னெடுத்தனர்.
இதன்போது 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினர் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைச் சேர்ந்த றெஜினா என்ற 6 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 








யாழில் இனந்தெரியாதோர் தாக்குதல் மூவர் காயம், உடைமைகள் சேதம்

28/06/2018 யாழ்ப்பாணம் மானிப்பாய் லோடஸ் வீதியில்  ஆறுபேர் கொண்ட கும்பல் முகத்தில் துணி கட்டிக் கொண்டு இரு வீடுகள் மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் மேற்கொண்ட தாக்குதலில் மூவர்  காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
மானிப்பாய் லோடஸ் வீதியைச் சேர்ந்த  பத்மராசா என்பவரது மகனான தனுயன்  என்பவரைத் தேடி அவரது வீட்டுக்குள் சென்று வீட்டின் முன்பாக இருந்த மோட்டார் சைக்கிளை  பெற்றோல் ஊற்றி கொழுத்தி மற்றும் வீட்டு யன்னல் கதவுகளை சேதபடுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேபோல் தனுயன் மறைந்திருக்கலாம் என்ற சந்தோகத்தில் அவரது நண்பரின் வீட்டுக்குள் சென்றும்  இருவரை வாளால் வெட்டி காயம் விளைவித்து பொருட்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரிடம் முறையிடச் சென்றபோது முறைப்பாடு எடுப்பதற்கு ஆட்கள் இல்லை எனத் தெரிவித்து பின்னர் வருமாறு கூறியுதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன் பகைகாரணமாக  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்குமுன்னரரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது. இதேவேளை குறித்த நபரும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி 






No comments: