உலகச் செய்திகள்


வடகொரிய தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு- புதிய வரலாறு ஆரம்பம்

கனடாவில்  வேனை பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் : 10 பேர் பலி

பெட்ரோல் கிணறு வெடித்து தீ விபத்து : 15 பேர் பலி!!!

பிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் என்ன தெரியுமா?

கடந்த 4 மாதத்தில் சவூதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

அணுவாயுதங்களை அகற்றுவதற்கு கொரிய தலைவர்கள் இணக்கம்



வடகொரிய தென்கொரிய தலைவர்கள் சந்திப்பு- புதிய வரலாறு ஆரம்பம்

27/04/2018 வடகொரிய தென்கொரிய தலைவர்கள் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.
வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள இராணுவசூன்ய பிரதேசத்தில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கிம் ஜொங் அன்னும் மூன் ஜேயும் சிரித்தபடி கைகுலுக்கியுள்ளனர்.
வடகொரியா தென்கொரிய தலைவர்கள் சிரித்தபடி வேடிக்கையாக பேசியபடி நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாங்கள் சமாதானம் மற்றும் இரு கொரியாக்கள் மத்தியிலான உறவுகள் குறித்த புதிய வரலாறு எழுதப்படும் அத்தியாயத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ளோம் என வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென்கொரிய தலைவருடனான தனிப்பட்ட சந்திப்பின்போது மோதல் வரலாற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக  வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு தூக்கத்தை குழப்பியற்தாக மன்னிப்பு கேட்பதாகவும் வடகொரிய ஜனாதிபதி வேடிக்கையாக தென்கொரிய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.  நன்றி வீரகேசரி











கனடாவில்  வேனை பொதுமக்கள் மீது மோதி தாக்குதல் : 10 பேர் பலி

24/04/2018 கனடாவின் டொரன்டோ நகரில் பொதுமக்கள் மீது வேன் சாரதியொருவர் தனது வேனை மோதி தாக்கியதில் 10ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளை வேன் ஒன்று நடைபாதை மேல் ஏறி பொதுமக்களை இலக்கு வைத்து மோதியதை நேரில் பார்த்தாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்தை நேரில் பார்த்த பலர் குறிப்பிட்ட வேன் சாரதி வேண்டுமென்றே வேனை பொதுமக்கள் மீது செலுத்தினார் என தெரிவித்துள்ளனர்.
வேன் சாரதி தனது வாகனத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை விபத்தென்றால் அவர் தனது வேனை நிறுத்த முயன்றிருப்பார் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அலெக் மினாசியன் என்ற நபரே வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள கனடா பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பல மைல் தொலைவில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அலெக் மினாசியன் வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியுள்ளார்  என கருதலாம் என தெரிவித்துள்ள டொரான்டோவின் பொலிஸ் அதிகாரிகள் எனினும் தாக்குதலின் நோக்கம் என்னவென்பது இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 








பெட்ரோல் கிணறு வெடித்து தீ விபத்து : 15 பேர் பலி!!!

26/04/2018 இந்தோனேசியாவில் உள்ள  பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் திருட்டுத்தனமாக பெட்ரோல் திருட நேற்று  அதிகாலை பலர் முகாமிட்ட போது திடீரென பெட்ரோல் கிணறு வெடித்துள்ளது.
பெற்றோல் கிணறு வெடித்ததில் தீ கொழுந்து விட்டெறிந்துள்ளது இத் தீ விபத்தில் கிச்கியே 15 பேர் பலியானதோடு 40க்கும் மேற்பட்டோர்  எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 









பிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் என்ன தெரியுமா?
28/04/2018 பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு பிறந்த இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர்.
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.
இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளார்.
புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் வில்லியம் - கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு "லூயிஸ் ஆர்தர் சார்லஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லூயிஸ் என்பது இளவரசர் வில்லியம்சின் தந்தை வழி உறவினரான லுாயிஸ் மவுண்ட் பேட்டன் பெயரையும், சார்லஸ் என்பது வில்லியம்சின் தந்தை இளவரசர் சார்லசின் பெயரையும் குறிப்பதாக அமைந்துள்ளது. ஆர்தர் என்ற பெயர் வில்லியம் - கேத் தம்பதியின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன   நன்றி வீரகேசரி










கடந்த 4 மாதத்தில் சவூதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை
28/04/2018 சவூதி அரேபியாவில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறுவு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் 600க்கும் மேற்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை தவிர்ந்த ஏனைய குற்றச்செயல்களுக்காக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என  சவூதி அரேபிய இளவரசர் முஹமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி










அணுவாயுதங்களை அகற்றுவதற்கு கொரிய தலைவர்கள் இணக்கம்

27/04/2018 கொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவது என வடகொரிய தென்கொரிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டின் பின்னர் கிம் ஜொங் அன்னும் மூன் ஜேயும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.
சமாதான உடன்படிக்கையொன்றை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக இரு ஜனாதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.

கொரிய யுத்தத்தின்போது பிரிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வடகொரிய தென்கொரிய ஜனாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரிய தீபகற்பத்தில் காணப்படும் பதட்டநிலையை குறைப்பதற்காக இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூட்டறிக்கையில் தெரிவித்துள்ள ஜொங் அன்னும் மூன் ஜேயும் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் மத்தியிலான சந்திப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை தென்கொரிய ஜனாதிபதி வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











No comments: