சாமியார்களின் குற்றப் பின்னணி: பிரேமானந்தா முதல் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் வரை




சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தது.

பாகிஸ்தானில் பிறந்து, ஆன்மிகத் தேடலில் ஆசாராம் பாபுவாகி, தற்போது 400 ஆசிரமங்களுடன் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் இருப்பவர் தான் ஆசாராம் பாபு.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு, சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தன்னைத் தானே சாமியார் என்று கூறிக் கொண்ட இதுபோன்ற பலரும் இந்தியாவில் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருந்துள்ளனர். இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றிய ஒரு மின்னல் வேகப் பார்வை இதோ..
சுவாமி பிரேமானந்தா: போர்க்களமாக இருந்த இலங்கையில் இருந்து 1984ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து திருச்சியில் தனது ஆசிரமத்தைத் தொடங்கியவர் சுவாமி பிரேமானந்தா. தமிழகத்தில் சாமியார் என்ற போர்வையில் பாலியல் வழக்கில் சிக்கி அப்போதைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட முதல் சாமியார் என்ற பெருமையையும் இவர் பிடித்தார்.

1997
ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆசிரமத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பிரேமானந்தாவும், இவரது கூட்டாளிகள் 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

சுவாமி நித்யானந்தா: திருவண்ணாமலையில் 1978ம் ஆண்டு பிறந்தவர் நித்யானந்தா. நித்யானந்தா தியானப் பீடத்தை நிறுவிய இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் பக்தையை பலாத்காரம் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா தனிமையில் இருக்கும் சில விடியோவும் வெளியாகி பரபரப்பைக் கூட்டின.

குர்மீத் ராம் ரஹீம் சிங்: ஆசிரமம் என்ற பெயரில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி அதில் வாழ்ந்து வந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். தன்னைத் தானே சாமியார் என்று கூறிக் கொண்ட குர்மீத், பாலியல் குற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாராயண் சாய்: ஆசாராம் பாபுவின் மகன்தான் நாராயண் சாய். சூரத்தில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்கு நடந்து வருகிறது.

இப்படியாக, தமிழகத்திலும் இந்தியாவிலும் தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டு பிரபலமான பல சாமியார்களின் குற்றப் பின்னணி ஒரு நீண்ட நெடுங்கதையாக சென்று கொண்டிருக்கிறது.
 

-->







No comments: