சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு
புத்தர் சிலை விவகாரம் : யாழ்.பல்கலை வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.!
காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கையின் அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு!!!
சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு
26/04/2018 இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்குகள் மே மாதம் 22ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் தெரிவித்தார்.
இந்த ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணைகளின்போது ஆட்கள் காணாமல் போன சம்பவம் முல்லைத்தீவு நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றிருப்பதனால், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், வடமாகாண அமைச்சருமாகிய அனந்தி சசிதரனின் கணவருமாகிய எழிலன் சம்பந்தப்பட்ட மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மூன்று வழக்குகளின் மனுதாரர்களான விசுவநாதன் பாலந்தினி, கந்தசாமி பொன்னம்மா, கந்தசாமி காந்தி ஆகியோருடன் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. அதனையடுத்து,நேற்று இந்த 3 வழக்குகளும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அந்த அறிக்கைகளின் இறுதிப்பகுதியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் கோரப்பட்டிருந்ததே தவிர, அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என சட்டத்தரணி ரட்னவேல் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அத்துடன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதி மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவற்றை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த கட்டமாக இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் முடிவெடுப்பதற்காக தவணையொன்றைத் தரவேண்டும் என்று மன்றில் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவிட்டதுடன், இந்த வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவத்திடம் சரணடையுமாறும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக அளித்த உத்தரவாத அழைப்பை ஏற்று பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் இறுதி யுத்தத்தின்போது மே மாதம் 18ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் சரணடைந்தனர்.
இவ்வாறு சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களில் 14 பேர் தொடர்பில் 2 தொகுதிகளாக அவர்களுடைய உறவினர்களினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சம்பந்தமாக விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் இந்த வழக்குளைப் பாரப்படுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு 3 வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளே நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
புத்தர் சிலை விவகாரம் : யாழ்.பல்கலை வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.!
24/04/2018 வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்களால் புத்தர் சிலை வைக்க முற்பட்டதையடுத்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டு தலம் அமைப்பதற்கான திட்டம் உள்ளபோதிலும் தற்போது அவ் வளாகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதனால் இதுவரை எந்த மத தலங்களும் வைக்கப்படவில்லை.
இந் நிலையில் சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் அதற்கான பொருட்களையும் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு வளாக நிர்வாகம் அதனை தடுத்ததுடன் கொண்டு வரப்பட்ட பொருட்களையும் தமது கட்டுப்பாட்டினுள் எடுத்துச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவர்கள் நிர்வாகத்தினருடன் முரண்பாடான நிலையை உருவாக்கியிருந்தமையினால் வவுனியா வளாகத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு முதலும் பெண் மாணவர்கள் நாளை காலையும் வெளியேற வேண்டும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வளாகமும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இந் நிலையில் பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதிக்கு சிங்கள மாணவர்கள் சூழ்ந்திருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத் தப்பட்டிருந்தனர். நன்றி வீரகேசரி
காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு
28/04/2018 காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின்
முக்கிய நோக்கமாகும். குறித்த விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள்
போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை,
மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான
பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ,இடம்பெற்று
வருகின்ற நிலையில், அதனை அடுத்து காணாமல் போனோரை தேடி அறியும் பிரிவும்
நியமிக்கப்படும். அதேநேரம் காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ஆம்
திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தை ஆரம்பிடவுள்ளது.
இது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி சட்டத்தரணி சாலியப் பீரிஷ் மேலும் தெரிவித்ததாவது,
இதன்போது, காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர்
மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
28/04/2018 சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட
ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப்
பேரணியொன்று நடைபெற்றது.
கிழக்கு
மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்
ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம்
ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள்
கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான
சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன்
உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற
நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கையின் அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு!!!
26/04/2018 இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்தல் மற்றும்
நாடுகளுக்கிடையில் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பாக நிதி
மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கல சமரவீர மற்றும் கனேடிய தெற்காசிய
விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மன் ஆகியோரிடையே
கலந்துரையாடல் இடம்பெற்றது.
கனடா உலக விவகார அமைச்சின் தெற்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் டேவிட்
ஹார்ட்மன், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னன், நிதி
மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கல சமரவீர, அமைச்சிற்கான முதன்மை ஆலோசகர்
மனோ டிட்டாவெல மற்றும் அமைச்சின் செயலாளரான ஆர்.எச்.எஸ் சமரதுங்க
ஆகியோருக்கிடையே நேற்று நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில்
கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கனேடிய அரசாங்கம்
மற்றும் கனேடிய வர்த்தக துறையினால் வழங்கப்படும் பங்களிப்புக்கள் ,
முதலீடுகள் குறித்தும் இருநாடுகளுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகள்
குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment