.
படைப்பாளி
ஒருவர் தன்னுடைய படைப்பின் வழியாக வாசகனை அந்தக் களத்துக்குள் இழுத்து
அவனையும் அந்தச் சூழலில் வாழ்ந்து விட்டு வரச் செய்ய முடியுமென்றால் அதுவே
படைப்பின் வெற்றியாகக் கொள்ள முடியும். செங்கை ஆழியானின் “சாம்பவி”
குறுநாவல் தொகுப்பும் அவ்விதமானதொரு அனுபவத்தையே காட்டி நிற்கின்றது.
“தலைமைத்துவத்தின்
கம்பீரத்துடன் 1992 களில் எனது யாழ்ப்பாணப் பணிமனையில் என் எதிரில்
அமர்ந்து கோரிக்கைகளை நியாயபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் முன் வைக்கும்
திறனை என்னால் மறக்க முடியவில்லை. அந்தப் போராளியிடம் வாதத்தில் நான்
தோற்றிருக்கிறேன். “திரும்பி வந்தால் சந்திக்கிறேன்” என விடை பெற்றாவள்
வரவேயில்லை. என் விழிகளைக் குளமாக்கிய குறு நாவலிது” எனர தன்னிலை
விளக்கத்தோடு செங்கை ஆழியான் அவர்களால் “சாம்பவி” எனர படைப்புக்கான விலாசம்
கொடுக்கப்பட்டு மூன்று குறு நாவல்களை உள்ளக்கியதாக இந்தத் தொகுப்பு
உள்ளது.
இதில் “மீண்டும் ஒரு சீதை” கலைமகள் அமரர்
ராமரத்தினம் நினைவுக் குறு நாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது.
“சாம்பவி” என்ற குறு நாவல் கணையாழி இதழில் வந்தது. “யாழ்ப்பாணக் கிராமம்
ஒன்று”கணையாழியின் தி.ஜானகிராமன் நினைவுக் குறு நாவல் போட்டியில் பரிசைக்
கண்டது. “சாம்பவி” நாவலில் வரும் பெண் போராளியும், “மீண்டும் ஒரு சீதை”
யின் “காயத்திரி”யும் எழுத்தாளர் நிஜத்தில் கண்ட மானுட தரிசனங்களே.
செங்கை
ஆழியானின் நாவல்கள் அவை எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள் என்று
வகைப்படுத்தப்பட்டாலும் அவற்றீனூடு ஈழத்து வாழ்வியல் வரலாறு அந்தந்தக்
காலச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுமாற் போல எழுதப்பட்டிருக்கும். இந்த
மூன்று குறு நாவல்களைப் படிக்கும் போதும் அதே உணர்வையே தருகின்றது.
குறிப்பாகத் தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்து வாழ்வியலைக் கழித்தவர்களுக்குச்
சம்பவங்கள் இன்னும் நெருக்கமானதொரு தோற்றப்பாட்டைக் காட்டும்.
தங்கு
விடுதிகள், தமிழர் குடியிருப்பு சார்ந்த பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட
பிரதேசங்களில் தினம் தினம் சுற்றி வளைப்புகள், கைதுகள், சித்திரவதைகள், வதை
முகாம்களிலேயே மன நிலை பிறழும் அளவுக்கு அடி வாங்கி வாழ்வைத்
தொலைத்தல்கள், படுகொலைகள் என்று தொண்ணூறுகளில் இலங்கையின் தலை நகர
வாழ்வியலைக் கழித்தவர்கள் முகம் கொடுக்க வேண்டியதொரு அவல நிலை இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் கைதானவர்கள் இன்றும் பல்லாண்டுகளாகச் சந்தேகத்தின்
பேரில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை இருக்கும் சூழலில்
“மீண்டும் ஒரு சீதை” என்ற குறுநாவல் இந்த அடித்தளத்தில் எழும் சமூகச்
சிக்கலை வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
அந்த
நெருக்கடியானதொரு வாழ்வை அதிகம் பிரதிபலிக்காவிட்டாலும் அவ்வாறான சூழை
எதிர் கொண்ட காயத்திரி என்னும் பெண் தன் சொந்த உறவாலேயே சந்தேக வலையில்
சிக்கும் சூழலைக் காட்டுகிறது. இந்தக் கதையின் பெரும் பங்கைக் காயத்தி தன்
அத்தான் மீதான காதலைக் கொண்டே நகர்த்தியிருக்கிறார் செங்கை ஆழியான்.
தொலைக்காட்சி நாடகத்துக்கேற்ற கட்டமைப்புக் கொண்டது இது.
யாழ்ப்பாணத்தின்
கேந்திர முக்கியத்துவம் பெற்ற சத்திரத்துச் சந்தியில் இருந்து கதையை
நகர்த்துகிறார் “யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று” குறு நாவல் வழியாக. செங்கை
ஆழியானின் படைப்புகளைத் தேடி ரசிக்கும் வாசகர் வட்டத்துக்கு இந்தப் படைப்பை
நகர்த்திய விதம், அங்கதச் சுவையைப் புதுமையாக எண்ணி ரசிப்பர்.
“சத்திரத்துச்
சந்தியில் இருந்த திருவள்ளுவர் சிலையும் காணாமல் போயிற்று. தந்தை
செல்வநாயகத்தின் தகப்பனாரின் சிலை இதுவென எவரோ கூறியதால் உடனடியாகத்
தலையைக் கொய்து விடும்படி அங்கு நின்று இவற்றினைச் செய்வித்த சிங்கள
மந்திரி கட்டளையிட்டதாக ஒரு கதை” இதுவொரு உதாரணம் இந்த நாவலை இயக்குவதற்கு
அவர் கையாண்ட உத்தியைக் காட்ட.
தொண்ணூறுகளில்
யாழ்ப்பாணத்து வாழ்வியலில் வன்னிப் பக்கம், அது தடைப்பட தென்மராட்சி என்று
விறகு தேடிச் சைக்கிளின் பின் கரியரில் ஒரு ஆள் நீளத்துக்குக் கட்டி
எதிர்க்காற்றுக்கு முகம் கொடுத்து வலித்து வலித்து ஓடி, எதிர்ப்படும் போர்
விமானங்களைக் கண்டு போட்டது போட்டபடி விட்டு விட்டு மறைவாக ஓடி, அல்லது
அந்த விமானங்களின் குண்டுக்கு அந்த இடத்திலேயே இரையாகிஒ போன மனிதர்களை
நினைப்பூட்டுகிறது இந்த நாவலினின் வழியாகக் காட்டும் சம்பவக் கோவைகள். போர்
மனிதர்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கும், இழப்பின் வழியாக அது அந்த
மனிதர்களின் வாழ்வையும் கூட மாற்றி இன்னொரு திசைக்கு இட்டுச் செல்லும்.
ஈழப்போர் கனதியாக விளங்கிய காலகட்டத்தில் பொதுவாக எல்லோரது வாழ்வியலும்
இப்படித்தான் இயங்கியது. ஒரு கட்டத்தில்
ஓடி ஓடி
வாழ்வைத் தேடிப் பழகிப் போய் விட்ட வாழ்வே இயல்பானது என்ற நிலையும் வந்து
விடும். இந்த “யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று” குறு நாவலின் முக்கியத்துவமே
தொண்ணூறுகளின் போர்ச் சூழல் யாழ்ப்பாணத்து வாழ்வியல், அதன் சமூகக்
கட்டமைப்பு இவையெல்லாம் எப்படியிருந்தன என்பதைப் படம் பிடித்துக் காட்டும்
ஒரு ஆவணமாக வெளிப்பட்டிருப்பது தான்.
போராளி
ஒருவர் நாவல் எழுதத் தலைப்பட்டால் அதில் எவ்வளவு துல்லியமான கள
நிலவரங்களோடமைந்த சமர்க்களக் காட்சிகள் இருக்குமோ அதையே “சாம்பவி” குறு
நாவலைப் படிக்கும் போது உணர முடிந்தது. குடமுருட்டி ஆற்றுப் படுக்கையினூடாக
நவீன ஆயுதங்களை ஏந்திய ஐந்து இளம் பெண்களோடு தொடங்கும் கதையில் சாம்பவி
வழியாக, இனப் பிரச்சனையின் முக்கியமான காலகட்டங்களில் ஒரு குடும்பம்
எதிர்கொண்ட அவலங்கள் வழியாக அந்தந்தக் காலகட்டத்து வரலாறுகளை
நினைப்பூட்டுகிறது.
“நாகதேவன் துறையின் இராட்சத
சேர்ச் லையிற் அவர்கள் உடல்களை மேவிச் செல்லும் போது ஆடாமல் அசையாமல்
மண்ணோடு மண்ணாகக் கிடந்தார்கள்” இவ்விதம் ஒரு களமுனை நிகழ் தளத்தில் இயங்க,
சாம்பவியின் நினைவின் வழி ஈழப்போரின் கால கட்டங்களுக்குள் பயணிக்கிறது.
அது அவளின் தனிப்பட்ட குடும்பத்தின் இழப்புகளைக் காட்டினாலும் வரலாற்று
ரீதியான ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் மெய்த்தன்மையோடே காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment