ஜெரோம் சகோதரிகளின் அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.தமிழ் கலாச்சாரத்தில் கொண்ட ஆர்வத்தினால் புலம் பெயர்ந்த தமிழர் தமது பெண்களுக்கு பரதநாட்டியம் கற்பித்து வருகிறார்கள். அரங்கேற்றத்தில் ஆடலை கற்ற மாணவி மேடையில் தோன்றி 2 மணிநேரம் பார்வையாளர்களின் மனதை கவரும் படியாக ஆடல் வேண்டும். இதில் வெற்றி பெறும் பொழுதுதான் அவர்கள் அரங்கேற்றம் முறையாக அமைந்தது என்று கூறலாம். இதற்கு ஆசிரியையின் முறையான ஆடல் அமைப்பு, இசைக்  கலைஞரின் திறமையான ஒத்திசை, மாணவியரின் திறமையென யாவும் ஒன்று சேரல் வேண்டும்.

22.4.2018 கொன்சலா ஜெரோம் தனது மூன்று மகள்களின் அரங்கேற்றத்திற்கு அழைத்திருந்தார். பல அரங்கேற்றங்களை பார்த்த பின் இந்த அரங்கேற்றத்தையும் பார்க்கலாம் என சென்றேன். தனித்தொருவர் ஆடுவதை விட மூவர் இணைந்து ஆடினால் பல வகையாக ஆடலை அமைக்கலாம் அதனால் சிறிது புதுமையை எதிர்பார்த்தனர் ஆடல் அறிந்தவர்கள். ஆதலின் ஆரம்பத்தில் இறை வணக்கத்தை அடுத்து அவர்கள் தமிழ் என்ற தாய் மொழியை எவ்வாறு நேசிக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது தமிழ் வணக்கம் "தாய் பிள்ளை உறவு போன்றது தமிழும் உயிரும்" என்ற பாடல். இதை சகோதரிகள் சகானா, இன்பனா , ஆரணா  ஆடலாக  உருவகப்படுத்தியது போற்றற்குரியது.
முதல் நிகழ்ச்சியை 'மல்லாரி' சம்பிரதாயமாக கோயில் திருவிழாவில் சுவாமி புறப்பாட்டின் போது சுவாமியை தோளிலே சுமந்து வருபவர்கள் நாதஸ்வர இசைக்கேற்ப சுவாமியை அசைத்து ஆட்டி தூக்கி வருவார்கள். பண்டை காலத்தில் கோயில் தாசிகள் சுவாமி முன் ஆடி வருபவர்கள் மல்லாரிக்கும் ஆடினார்கள். அதனால் மல்லாரி பல தளங்களிலும் உண்டு. அன்று சுவாமி ஊர்வலமாக ஆடல் அமைந்தது. அதை அடுத்து ஜதீஸ்வரம் என நிகழ்ச்சி நகர்ந்தது.

கச்சேரியின் மூன்றாவது உருப்படியான சப்தம் ஆடலுடன் அபிநயம். அபிநயம் முதலிலே துளிர் விடுவது சப்தத்தில் மூவரில் இளையவளான ஆரணா 'தண்டை குலுங்க சதங்கை கிழுங்க' என்ற சபதத்தை ஆடினார். முருகனின் அழகு மயிலின் வேறுபட்ட ஆடல், தவழ்ந்து வரும் முருகனின் மாந்தளிர் மேனியினை அபாரமாக சித்தரித்தார். கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. கல்யாணி இறக்கத்தில் அமைந்த கோகுல பாலா என்ற வர்ணம் மூவருமாக கோகுலத்து கண்ணனின் லீலைகளை அற்புதமாக சித்தரித்தார்கள். பல் வகையான சஞ்சாரி பாவங்கள் (கதையை ஆடலின் மூலம் விளக்குவது)  மூவருமாக பல வகையான பாத்திரங்களை ஏற்று மாறி மாறி ஆடியதால் நடிப்பு புரியும் படியாக நாட்டியம் அமைந்தது. ஒருவரே பல பாத்திரம் ஏற்று ஆடும் பொழுது ஆடலின் நுணுக்கம் புரியாதவர் ரசிப்பது கிடையாது.

ஆடலின் நடுநாயகமாக பரதத்தின் அழகு அத்தனையும் காட்டி நிற்கும் 'வர்ணம்' நீண்ட உருப்படி, பலரால் இரசிக்க முடியாத நிகழ்ச்சியாகி விடுவதும் உண்டு. ஆனால் இங்கோ மூன்று சகோதரிகள் இணைந்து வெவ்வேறு பாத்திரங்களை ஆடியமையால் பார்வையாளர் யாவரும் புரிந்து ரசித்தனர். இடைவேளையை  அடுத்து மூன்று சகோதரிகளும் இணைந்து முப்பெரும் தேவிகளாக துர்கா, லட்சுமி, சரஸ்வதி என ஆடினார்கள். ஒன்றிணைந்து மூன்று தேவிகளையும் உருவகப் படுத்தினார்கள். சக்தி என்பது ஒன்றே அதை உருவகப்படுத்தும் முறையே மூன்று தேவிகளும் என அர்த்தப்படுத்தும் முயற்சி அற்புதம். எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள்? மூத்தவரான சகானா ஆனந்த கூத்தனின் ஆடலை அற்புதமாக ஆடினார். பல கடினமான ஆடல்களையும் களைப்பெதுவும் இன்றி கலைப் பொலிவுடன் வெகு லாவகமாக ஆடினார்.

தாயார்  'மது எமில்' கொன்சலா ஜெரோம் தமிழால் தம்மை வளர்த்த, தமிழை தமக்கு ஊட்டிய, தமிழுடன் வாழ வைத்த தங்க தாத்தா, பாட்டிக்கு சமர்ப்பணமாக ஒரு பாடலை எழுதியிருந்தார். அவர் பெற்ற செல்வம் இன்பனா அற்புதமாக அதை ஆடினார். பாடலுக்கு அகிலன் அற்புதமாக இசையை அமைத்திருந்தார். இசையும் ஆடலும் இணைந்த அழகு அகிலனின் அனுபவத்தின் வெளிப்பாடு.

பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் - சுட்ட
காடாகி போனதாமே உண்மைதானோ
நட்டாலும் பட்டாலும் நூறுபலன்தந்துவிடும் - எம்
பனை மரத்தை வீழ்த்துவது என்ன நியாயம்

இப் பாடல் ஆடப்பட்டமை மொழிப்பற்று , நாட்டுப்பற்று , திறமைக்கு எடுத்துக் காட்டு . ஆடலும் பாடலும் இணைய மெய் சிலிர்த்தது. கண்கள் பனித்தன. தாயின் கலை ஆர்வம் தந்தையின் அன்பான வழி நடத்தல் , குருவின் மனமார்ந்த ஆசிகள் , மாணவியரின் அயராத உழைப்பு அத்தனையின் பயனே அன்றைய அரங்கேற்றத்தின் அடிநாதம்


அரங்கேற்ற சம்பிரதாயங்கள் தலைமை உரை வழங்கினார் திருமதி புஸ்பராணி வில்லியம் , பரத நாட்டிய வரலாற்றை சுருக்கமாக எடுத்து விளக்கி , சகோதரிகளையும் பெற்றோரையும் வாழ்த்தினார் . தொடர்ந்து கவிஞர் செ.பாஸ்கரன் அருமையான கவிதை கொண்டு அவர்களை வாழ்த்தினார் . அதைத் தொடர்ந்து சகோதரிகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நன்றி கூறினர்.

தில்லானாவுடன் இணைந்து பாரதியின் கவிதை "சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ" என்ற பாடலும் இணைய கச்சேரி இனிதே நிறைவேறியது. அருமையான ஒரு நடன நிகழ்வைப் பார்த்த திருப்தியோடு இரசிகர் கூட்டம் வெளியேறியது .

மிருனாளினி ஜெயமோகனின் நட்டுவாங்கம், அகிலன் சிவானந்தனின் அருமையான குரல் வளம், ஜனகன் சுதந்திரராஜின் கச்சிதமான மிருதங்க வாசிப்பு, லகுதாஸ் கோபதிதாசின் அனுசரணையான வயலின் இசை, பல்கலை வித்தகர் ஜெயராம் ஜெகதீசனின் வீணை, கடம், மோசிங் இணைய, வளர்ந்துவிட்ட கலைஞராக வெங்கடேஷ் ஸ்ரீதரன் வேணுவில் (புல்லாங்குழல்)
நாதம் இசைக்க அற்புதமான இசைக் குழு ஆடலின் அழகை இரட்டிப்பாக்கியது. இசைக் கலைஞர்களுக்கு இனிமேல் எங்கும் போகவேண்டாம். வெண்ணை இருக்க நெய்க்கு அலைவாரும் உண்டோ ?
2 comments:

மது said...

நடனத்தை நன்கறிந்த
நர்த்தனம் பல புரிந்த கார்த்திகா அம்மையாரின்
நற் தமிழ் வார்த்தைகளுக்கும் இங்கிதமான கருத்துகளுக்கும்
நன்றிகள் பலவாமே!

நன்றியுடன்
ஜெறோம் குடும்பத்தினர்

யசோதா.ப said...

முயற்சி, பயிற்சி, தேர்ச்சி, நேர்த்தி, ஆசி எல்லாம் ஒருங்கு கூடி நிகழ்ந்த அவ் அரங்க நிகழ்வை நானும் ஒரு பார்வையாளராய் இருந்து நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தேன்.

செல்விகளுக்கு எங்கள் வாழ்த்துக்களும் உரித்தாகுக! உலகத் தரம்வாய்ந்த அரங்கு! நிறைந்த மக்கள், நேர்த்தியான அலங்காரம், சிறந்த சிற்றுண்டி வகைகள்,சிறந்த பக்கவாத்தியங்கள், பாடல்கள், தரமான ஒலி ஒளி அமைப்பு, மேடை நிர்வாகம், வழிகாட்டிகளின் கூர்மையான அவதானிப்புகள்...என பின்னால் அமைந்த கச்சிதங்கள் ஒரு நிர்வாக நேர்த்தியின் கச்சிதத்தைக் காட்டியது. நேர நிர்வாகத்தை மட்டும் இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

பொதுவாக சிட்னியில் எத்தனையோ அரங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து விட்டன. அரங்கேறிய எத்தனை பேர் தொடர்ந்து அரங்கைத் தக்கவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரங்கேற்றம் என்பது ஒரு முடிவல்ல; அது ஒரு தொடக்கம்.

இந்தச் செல்விகள் இதனை ஒரு தொடக்கமாகக் கொண்டு தொடர்ந்து இந்தக் கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கைங்கரியத்தில் ஈடுபட வேண்டும். அதுவே இந்தக் கலைக்கும் அதனை கொடுத்த குருவுக்கும் தமிழுக்கும் புலம்பெயர்ந்த தமிழருக்கும் அவர்கள் கொடுக்கும் நல்லதொரு பங்களிப்பாக இருக்கும்.

ஆடல் அரங்கு கண்ட செல்விகளுக்கு ஒட்டுமொத்தமான வாழ்த்துக்கள். இதே முயற்சி, பயிற்சி, தேர்ச்சி, நேர்த்தி, மற்றும் நடன லாவன்யங்கள் உங்கள் ஆடலில் மிளிர்வதாக!

அன்புடன்
யசோதா.பத்மநாதன்.