பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்)

.

கலை வெளிப்பாட்டின் வழியே சுதந்திரத்துக்கானதொரு கூவல்
பூவுலகைக் கற்றலும் கேட்டலும் (அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்)
- கருணாகரன் -


அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து, இன்னொரு வாசலைத் திறந்திருக்கிறார் ஆழியாள். இந்த வாசலின் வழியாக நாம் காண நேர்கிற உலகம் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவுஸ்திரேலியாவைப் பற்றிய பொதுப் புரிதலுக்கு அப்பால், அதன்  உள்ளாழத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அந்த நிலத்திற்குரிய ஆதிக்குடிகளின் வரலாற்று அவலத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்திக் காட்ட வேணும் என்பது ஆழியாளின் நோக்காகும். இதற்குக் காரணங்களிருக்கலாம். ஆழியாள் ஒடுக்கப்பட்ட சமூகமொன்றின் பிரதிநிதியாக இலங்கையில் இன ரீதியான புறக்கணிப்பு, அடையாள நெருக்கடிகள், ஒடுக்குமுறை போன்றவற்றின் அனுபவங்களைச் சந்தித்தவர். இதனால், புலம்பெயர்ந்த தேசத்திலும் அந்த நிலத்துக்குரிய ஆதிக்குடிகள், ஆளும்தரப்பினால் புறக்கணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாவது அவரிடம் இயல்பாகவே முதல் கவனிப்பைப் பெறக் காரணமாகியிருக்கிறது. இது ஒடுக்கப்படுவோரிடையே காணப்படும் அல்லது உருவாகும் ஒருமித்த உணர்வின் வெளிப்பாடாகும். இதை ஆழ்ந்து நோக்கினால், இதற்கு அடியில் ஒரு வகையான கூட்டுணர்வு இழையோடியுள்ளமை புலப்படும்.

ஒடுக்குமுறைக்குள்ளாகியோர் அல்லது விடுதலைக்கான வேட்கையுடனிருப்போர் தமக்கிடையே உணர்வில் ஒன்றாகித் திரள முனைவது பொதுப்பண்பு. தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது. தங்களின் நெருக்கடிகளையும் வேட்கையையும் வெளியுலகத்துக்குப் பகிரங்கப்படுத்துவது என்ற செயல்பாடாக இது நீளும். மறுபக்கத்தில் ஒருவகையான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாகவும் இது தொழிற்படும். ஆகவே அரசியல் அர்த்தத்தில் ஏறக்குறைய இது ஒரு எதிர்ப்பு நடவடிக்கையே. நீதியின்மையை வெளிப்படுத்தி, நீதியைக் கோருதல் அல்லது தமது அடையாளத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தல் என இதைக்கொள்ளலாம். கலை வெளிப்பாட்டின் வழியே சுதந்திரத்துக்கானதொரு கூவலாக இதிருக்கிறது.


மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் தேர்வு பெரும்பாலும் அவருடைய கலை ஈடுபாடு, ரசனை, அரசியல் அல்லது வாழ்நிலை அனுபவங்கள் இவை கலந்திணைந்த சமகாலத்தேவை போன்ற காரணங்களால் நேர்வதுண்டு. பலஸ்தீனக் கவிதைகளை பேராசிரியர் எம்..நுஃமான் மொழிபெயர்ப்புச் செய்ததற்கு, அன்றைய காலச்சூழல் அல்லது அந்தக்காலத்தேவையே. இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான ஆயுதப்போராட்டமும் இலங்கையில் கூர்மையடையத் தொடங்கிய (1970 களின் பிற்கூறில்) வேளையில், அதற்குப் பொருத்தமாய் அமையக்கூடியவாறு பலஸ்தீனக் கவிதைகளின் தேர்வை நுஃமான் செய்திருந்தார். இதைப்போல ஏராளமான லத்தீன் அமெரிக்கப் படைப்புகளும் சீன, ரஸ்ய, வியட்நாமிய புரட்சிகர அரசியலைப் பேசும் இலக்கியங்களும் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டன. இங்கே நிகழ்ந்தது ஒடுக்குமுறைக்கு எதிரான சமாந்திர உணர்வு. கூடவே ஒடுக்குதலுக்குள்ளாகி, அடையாள நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் அவலத்தின் ஒத்த நிலை. அதைப்பற்றிய சமாந்தர வெளிப்படுத்துகை. மற்றும் அதன் அவசியம்.
ஏறக்குறைய அத்தகைய பண்பில், இன்னொரு காலத்தேவைக்கேற்றவாறு ஆழியாள் அவுஸ்திரேலிய தொல்குடிகளின் அவலத்தையும் வேட்கையையும் மொழிபெயர்த்து நமக்களித்திருக்கிறார். ஒடுக்குமுறையும் ஆதிக்கமும்கனவுதேசங்களிலும்உள்ளோடியிருக்கிறது என்பது இந்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகளில் தெளிவாகவே சாட்சியமாக்கப்பட்டுள்ளது. வெளியாட்களுக்கு குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளிலுள்ளோரின் பார்வையில் அவுஸ்திரேலியா செல்வச் செழிப்பும் ஆட்சிக் கண்ணியமும் மிக்க நாடு. ஆனால், அவுஸ்திரேலியாவின் தொல்குடிகளுக்கு அப்படியானதல்ல. அவர்களுக்கு அது நீதியற்ற வாழ்க்கையைத் தந்திருக்கும் தேசம். அவர்களுடைய உரித்தும்  அடையாளங்களும் வாழ்நிலைகளும் சூழலும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டிருக்கிறது. சொந்த நிலத்துக்குரியவர்களின் விருப்பு, நியாயம் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவை ஆக்கிரமித்த வெள்ளை ஆதிக்க சக்திகள், தமக்கிசைவான முறையில் அந்த நிலத்தையும் சூழலையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த உருமாற்றத்தில் அங்குள்ள ஆதிக்குடிகளின் அடையாளங்களும் இருப்பும் மட்டும் சிதைக்கப்படவில்லை, அங்குள்ள இயற்கையும் உயிரினங்களும் கூட மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அந்த மண்ணுக்குச் சொந்தக்கார்களான ஆதிக்குடிகள் வரலாற்றில்  நிர்க்கதியாக்கப்பட்டிருக்கிறார்கள். தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள், தங்கள் சொந்த நிலத்தில் வாழ்வதற்கே போராட வேண்டியிருக்கிறது.
இதனால், அவர்களுடைய அடையாளமும் வாழ்க்கைத் தொடர்ச்சியும் சவாலாக்கப்பட்டுள்ளன. இயற்கையைப் பேணியவாறு தம்மைத் தகவமைத்து வாழும் கலையைக் கொண்டிருந்த ஆதிக்குடிகளின் வாழ்க்கை திகைப்படைந்து திணறுகிறது. அதன் இசைவில் அத்துமீறல்களைச் செய்து, அவர்களுடைய நிலத்தின் மீதும் அந்த நிலத்தின் சிறப்பாக இருக்கும் இயற்கை வளங்களின் மீதும் கைவைத்த வெள்ளையாதிக்கச் சக்திகள், தேசத்தைத் தமக்குரியதாக்கி விட்டனர். ஆனால், இதை வெளித்தெரியாதவாறு ஜனநாயகத் தோற்றத்தைக் கொண்டு உருமறைத்திருக்கின்றனர். ஆனாலும் வரலாற்று ரீதியாகவும் இயற்பண்பிலும் அவுஸ்திரேலிய அடையாளமும் அதன் தன்மைகளும் கெட்டழிந்து போய்விட்டன. அவுஸ்திரேலிய மண்ணுக்குப் பொருத்தமற்ற தாவரங்களையும் பிற உயிரினங்களையும் வெள்ளையாதிக்கர்கள் கொண்டு வந்து சேர்த்தன் மூலம் இயல்பழிப்பு பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது. இது உலக நீதிக்குஇயற்கையின் விதிமுறைக்கு எதிரானது. இதையிட்ட கண்டனமும் இந்த அநீதியை எப்படியாவது வெளியுலகின் முன்னே சொல்லியாக வேண்டும் என்ற உத்வேகமும் ஆதிக்குடிகளின் கவிஞர்களைப்போல, ஆழியாளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த உணர்வு மானுட விகசிப்பின் வழியான ஒன்று. எந்த மனிதர்கள் எங்கே ஒடுக்கப்பட்டாலும் அவர்களோடு  நின்று பேசுவது. அவர்களை முன்னெடுப்பது. அவர்களுடன் சேர்ந்திருப்பது என இது விரியும்.
எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாதவாறு இந்தத் தொல்குடிகளை மந்த நிலையில் வைத்திருப்பதற்கு வெள்ளை அரசு பல பொறிமுறைகளைக் கையாண்டது. உதாரணமாக மதுசாரத்தையும், புகைத்தலையும் அறிமுகப்படுத்தி, அவற்றை இலவசமாக விநியோகித்து நிரந்தர குடிபோதைக்கும், புகைத்தலுக்கும் தொல்குடிகளை வெள்ளை அரசு அடிமையாக்கியது. இன்று, அடிப்படைத்தேவைகளுக்காக வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவைக் கூட குடியில் தொலைத்து விடுகிறார்கள் தொல்குடிகள்.
அவர்கள்

தைல மரங்களுக்கு அடியில்

குந்தியிருக்கிறார்கள்

 
தபால் நிலையம் எப்போது திறக்கும்

என்று காத்திருக்கிறார்கள்

மற்ற நாட்களை விட இன்று கொஞ்சம் சுத்தமாக

...........................

...........................
கையில் கிடைக்கப்போகும் காசை

என்ன செய்யப்போகிறார்கள் என்று

எவரும் பேசிக்கொள்ளவில்லை

அதற்குத் தேவையும் இல்லை

 
கடைசியில் எல்லோரும் போய்

கிளப்பில்தான் கிடப்பார்கள்

சிரிப்பும் குடியும்

அடிதடியும் கலாட்டாவுமாக.


இன்று பென்சன் நாள்

 (
பென்சன் நாள்சார்மெயின் பேப்பர் டோக்)


ஆதிக்குடிகளுக்கான விசேட சலுகைஎன்ற பேரில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியும் குடிவகை உள்ளிட்டவையும் அந்த மக்களைச் சிந்தனைச் சோம்பேறிகளாகவும் செயற்றிறன் இல்லாதவர்களாகவும் ஆக்கியுள்ளனஇதனால்  தீராத வறுமைச் சுழல் (poverty cycle), அடிப்படைக் கல்வியின்மை, அடிப்படைத் தேவைகளின் பூர்த்தியின்மை, தாழ்வுச்சிக்கல் போன்ற பல்வேறு காரணிகளால் மிகப் பின்தங்கிய நிலையிலேயே இந்தப் பூர்வகுடியினர் இருக்க வேண்டியுள்ளது. இவர்களில் மிகக் குறைந்தளவானவர்களே சுய அடையாளம் குறித்த சுய சிந்தனையுடையோராக உள்ளனர். இத்தகைய நிலையே கனடாவிலும் காணப்படுகிறது. அங்கும் அந்த நிலத்துக்குரித்தானவர்கள் பலமிழக்கப்பட்டுள்ளனர். ஆழியாளின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சியின் வழியாக நமக்குக் கிடைக்கும் கவிதைகள், அவுஸ்திரேலியத் தொல்குடிகளின் இருப்புச் சவால்களையும் அவர்களுடைய வரலாற்றுச் சிறப்பையும் அதன் இன்றைய அவல நிலையையும் தெளிவாகச் சித்திரிக்கின்றன.

பொன்னிற முடியுடனும் நீல விழிகளுடனும்

கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைநடுவில் நிற்கிறேன்

 
என்னுடைய ஆன்மா கறுப்பால் ஆனது

இரவுகளில் நான் அழுகிறேன்

எங்கு உரித்தாய் சேர்வது என்பது

எனக்குள் நடக்கும் ஒரு பெரும் போராட்டம்

 (
கறுப்பு மனத்தவன்ஷேன்  ஹென்றி)

 
ஆதிக்குடிகளுடன் வெள்ளையினத்தவர் ஊடாடிப் பிறந்த பிள்ளைகள் எந்த அடையாளத்தைப் பின்பற்றுவது என்று தெரியாத தடுமாற்றத்தை இந்தக் கவிதை சொல்கிறது. நிறம் இங்கே மீறப்பட்டாலும் மனம் தொல்குடி அடையாளத்திலேயே வேரோடிப்போயிருக்கிறது. “கறுப்பு மனத்தவன்என்ற கவிதையின் தலைப்பே இதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏறக்குறைய இதை ஒத்த நிலை அடுத்து வரும் தசாப்தங்களில் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுடைய சந்ததிகளுக்கு நேர்வதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. பாருங்கள், எவ்வளவு ஒற்றுமை ஒவ்வொரு நிலையிலும் என்று.


ஏனென்றால் எந்தவொரு இனச் சமூகத்தினதும் வேரறும்போது அதன் விளைவாக உருவாகும் நெருக்கடிகள் அத்தகைய நிலையைக் கொண்டிருக்கும் அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவானவையாகி விடுகின்றன. எனவேதான் உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் ஒத்த நெருக்கடியைச் சந்திப்பனவாக உள்ளன. இதனால் இந்த நிலையிலுள்ள எல்லாச் சமூகங்களுக்கும் ஒத்த உணர்வோட்டம் பொதுவானதாகி விடுகிறது.


இந்த தொல்குடி மக்களின் சூழல் சார்ந்த சிறந்த வெளிப்பாடாக உள்ளது இன்னொரு கவிதை. பிறத்தியாரால் உணர முடியாத தமது மண்ணின் குரல் பற்றிய விவரணை, எண்ணற்ற உள்ளாழப்படிமங்களை விரித்துக் காட்டுகிறது. இம்மாபெரும் பூவுலகின் அற்புத வார்த்தைகளைஆன்மாவை - செருக்கு மிகுந்தோரால் ஒரு போதுமே அறிந்துணர முடியாது என்று பிரகடனம் செய்கிறது.

 
கேட்டிருக்கிறாயா?

இப் பூவுலகின் சத்தத்தை

நீ கேட்டிருக்கிறாயா

அது சுவாசிக்கும்போது

உன்னால் அதை உணர முடியும்.

..............

.................

இங்கே உரத்து இரைவோரும்

செருக்கு மிகுந்தோரும்

இம் மாபெரும் பூவுலகின்

அற்புத வார்த்தைகளை

கேட்க முடியாதவர்கள் என்றென்றும்

கேட்கவே முடியாதவர்கள்

 (
கேட்டலும் கற்றலும்யுங்கே)

 
ஜோன் லூயிஸ் கிளாக்கின்காக்கைச் சிறகுகள்என்ற கவிதை ஆதிக்குடிகள் அந்நிய எதிர்பாளர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கூறுகிறது. எனினும் அந்தப் போரில் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. அந்தக் கவிதையின் இறுதி அடிகள்,

“...............

அவர்கள் போராட வேண்டியிருந்தது

ஒன்றாய்,

உயிர் வாழவும்

காதல் செய்யவும்

சாவதற்கும் அவர்கள் போராட வேண்டியிருந்தது

தங்களுக்குச் சொந்தமான

சொந்த மண்ணிலேயே

ஏறக்குறைய இதே நிலை ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. இன்னும் இதே நிலையில் பூமியின் பல்வேறு திசைகளில் வாழ்வோருக்கும் உள்ளது. உலகின் பேரிரைச்சலாகியிருக்கும் நீதி முழக்கங்களுக்கும் பிரகடனங்களுக்கும் அடியில் உறைந்திருக்கும் உண்மை நிலை இது. சொந்த நிலத்தில் வாழ்வதற்கே போராட வேண்டிய அவலம் சாதாரணமானதல்ல. ஆனால், அதுதான் யதார்த்தமாக உள்ளது. இவ்வளவுக்கும் ஆக்கிரமித்திருப்போர் தமக்கிசைவான சட்டங்களையும் விதிகளையும் இயற்றிக் கொண்டு உல்லாசமாகமாண்புடையோராக வாழ்கிறார்கள்.

 
இப்படி ஒவ்வொரு முக்கிய விடயங்களைப் பற்றியும் பல ஆழமான சேதிகளைச் சொல்லும் அருமையான கவிதைகளைக் கொண்டதாக இந்தத் தொகுதியின் கவிதைகள் (பூவுலகைக் கேட்டலும் கற்றலும்) உள்ளன. இதில் பான்ஸி ரோஸ் நபல்ஜாரியின்கங்காரு”, கெவின் கில்போட்டின்பால் பெல்போரா நடனம் முடிந்து விட்டது”, ரூபி லாங்வோட்டின்கறுப்புப் பெண்”, சார்மெயின்பேப்பர் டோக்கிறீனின்பென்சன் நாள்”, எலிசபெத் ஹொய்சனின்கொடுத்து வைத்த குட்டிப் பெண்போன்ற கவிதைகள் மிகத் தீவிரமான மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. இன்னும் இந்தத் தொகுதியில் ஆர்ச்சி வெல்லர், பொப் ரென்டல், ஹைலன் மரீஸ், ரோய் மோரிஸ், போலா அஜூரியா, ஜாக் டேவிஸ், ரெக் மார்ஷல், கொஸ்டேன் ஸ்ரோங், லோரி வெல்ஸ் போன்றோரின் கவிதைகளும் அழுத்தமான தொனியில் எழுதப்பட்டுள்ளன. பொதுவாகவே அனைத்துக் கவிதைகளின் தேர்வும் தீவிர மனநிலையின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. இதனால் இவற்றைப் படிக்கும்போது ஒடுக்குமுறைக்குள்ளான அனுபவத்தைக் கொண்டிருக்கும் நமக்கும் பதற்றம் ஏற்படுகிறது. உருக்கம் கூடுகிறது. இது இந்தக் கவிதைகளை மேலும் நெருக்கமுற வைக்கிறது.

 
இதில் என் தேர்வில் ஜூன் மில்ஸின்நான் இறக்கும்போதுஎன்ற கவிதை சிறப்பானதாக உள்ளது.

 
நான் இறக்கும்போது

வேறு எதைச் செய்தாலும்

என்னைத் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள்

..
...................................

நான் இறக்கும்போது

வெள்ளையர்களின் சாபப் பிரார்த்தனைகளைச் சொல்லி

என் பெயரில் செபிக்காதீர்கள்



நான் இறக்கும்போது

என் பிள்ளைகள் அனைவரையும்

அன்போடு பராமரியுங்கள்

...............................

நான் இறக்கும்போது

என் உடலின் நிர்வாணத்தை

மரப்பட்டை கொண்டு உடுத்தி விடுங்கள்



நான் இறக்கும்போது

ஏழிலைப்பாலை மரத்தின் மேலே

என்னை அடக்கம் செய்யுங்கள்
நான் இறக்கும்போது

என் பிள்ளைகளுக்கு

வாழ்தலைக் கற்றுக் கொடுங்கள்

இந்தக் கவிதை ஒன்றே ஒட்டுமொத்த ஆதிக்குடிகளின் மனநிலையையும் வெள்ளை ஆதிக்கத்தின் இருளையும் தெளிவாக்கி விடுகிறது. வெள்ளைப் பண்பாட்டாதிக்கத்தையும் அதனுடைய மதப்பிடிமானத்தையும் மிகத் தீவிரமாக எதிர்க்கும் வரலாற்று மூலமாக உள்ளது.
இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் அவற்றில் கலந்திருக்கும் வரலாற்றுத் துயரம் பற்றியும் ஏராளமாகப் பேச வேண்டியிருக்கிறது. அதற்குத் தூண்டுகின்றன ஒவ்வொரு கவிதையும். இந்தக் கவிதைகள் வெற்றியடையும் இடமே இதுதான். தம்மைப்பற்றிப் பேசத் தூண்டும் குணத்தினால். தாம் கொண்டுள்ள வரலாற்று நிலையைப் பற்றி உரையாடல் செய்ய விளைவதினால். இத்தகைய புரிதலுக்குரிய மாதிரி ஆழியாளின் கவிதைத் தேர்வும் மொழிபெயர்ப்புகளும் உள்ளன. இது சிறப்பே.

 
இங்கே உள்ள சோகம் என்னவென்றால், இந்தத் தொல்குடிகள் தங்களுடைய கவிதைகளைவெளிப்பாடுகளை தங்கள் சொந்த மொழியில் வெளிப்படுத்த முடியாதிருக்கின்றனர் என்பது. நூற்றுக்கணக்கான இனக்குழுக்களாகவும் பன்மொழிகளைப் பேசுவோராக இருந்தாலும் சொந்த மொழியில் தங்கள் கவிதையை எழுத முடியாதவர்களாக உள்ளனர். இதனால், இவர்களுடைய தொல்மரபுசார் வெளிப்பாடுகளைப்பற்றிநமக்கிருக்கும் இலக்கியத் தொடர்ச்சியைப் போல இவர்களுடைய தொல்கவிதைகளைச் சரியாக அறிய முடியவில்லை. ஆழியாளின் மொழிபெயர்ப்பிலிருக்கும் இந்தக் கவிதைகள் பெரும்பாலும் சமகாலம் அல்லது அண்மைச் சமகாலத்தவை. வெள்ளை ஆதிக்கத்திற்குப் பிந்தியவை. அத்தனை கவிதைகளும் இவர்கள் ஆங்கிலம் வழியாக எழுதிய கவிதைகளில் இருந்தே தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆதிக்குடிகளில் மிகச் சிறிய எண்ணிக்கையானவர்களே கல்வி கற்று ஓரளவு சிந்திக்கத் தெரிந்தவர்களாக, தங்களுடைய அடையாளங்களைக் குறித்து அக்கறைப்படுவோராக இருக்கின்றனர். அதனால் தவிர்க்க முடியாமல் ஆங்கிலம் வழியாகவே எழுதுகின்றனர். பல நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசும் பல இனத்தவர்கள் அங்கே வாழ்ந்தாலும் அவர்களிடையே எழுத்து மொழி விருத்தியடையவில்லை. மட்டுமல்ல, இந்தக் கவிஞர்களில் பெரும்பாலானவர்களுடைய பெயர்களைக் கவனித்தாலே தெரியும், அத்தனையும் ஆங்கில - கிறிஸ்தவப் பெயர்கள் என்பதை. உருமாற்றம் எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கிறது, நிகழ்த்தப்பட்டிருக்கிறது? சிதைவுகளுக்கு இதை விட வேறு என்ன சாட்சியம் வேண்டிக் கிடக்கு?

 
ஆழியாளின் இந்த மொழிபெயர்ப்புக் கவிதைளை ஈழ நோக்கு நிலை நின்று இன்னொரு விதமாகவும் நோக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் வரலாற்றுத் துயரங்களோடு மட்டுமல்ல, சமகால வாழ்க்கையோடும் இவை அப்படியே பொருந்தியிருக்கின்றன. முன்னே குறிப்பிட்டுள்ளதைப்போல, சொந்த நிலத்திலேயே அந்த நிலத்துக்குரியவர்கள் அந்நியமாக்கப்படுவது, ஒடுக்கப்படுவது, அடையாளங்களை இழக்க வைப்பது போன்ற மாபெரும் அநீதியை மட்டும் இவை பேசவில்லை. அதற்கு அப்பால், அவுஸ்திரேலியாவை நோக்கிய ஈழத்தமிழர்களின் கனவுலகை நோக்கிய பெயர்வை, அவலப் பெயர்வாகவே உணர்த்தவும் முற்படுகின்றன.

 “
எப்படியாவது அவுஸ்திரேலியாவுக்குச் சென்று  அங்கே குடியுரிமை பெற்று விட வேணும். அதன் மூலம் உத்தரவாதம் நிறைந்த செழிப்பான வாழ்க்கையைப் பெற வேணும்என்ற பெருங்கனவுகளோடு அவுஸ்திரேலியாவை நோக்கி, ஆபத்தான நீண்ட கடல் பயணங்களைச் செய்ய முயற்சித்துச் சீரழியும் ஏராளம் ஈழத்தமிழர்கள் அறிந்திருக்க வேண்டியஅறியாப் பொருளைஇந்தக் கவிதைகளின் வழியே ஆழியாள் காண்பிக்கிறார். இவர்களுக்கு அங்கே அந்த நிலத்தின் சொந்தக்கார்கள் இரண்டாம், மூன்றாம் தரப்பினராக நடத்தப்படுகிறார்கள் என்பதோ அவர்களுடைய இருப்பும் அடையாளங்களும் சிதைக்கப்பட்டுள்ளது என்றோ தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளும் அக்கறையும் இல்லை. அந்த மண்ணில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் வெளித்தெரியா ஒடுக்குமுறையைப் பற்றி இவர்கள் அறிய முற்படுவதுமில்லை. இவர்களுடைய மனதில் நிறைந்திருக்கும் அவுஸ்திரேலியா பற்றிய சித்திரமே வேறானது. அது ஒரு பொற்கனவு. இந்தப் பொற்கனவில் அவுஸ்திரேலியா என்பது, எல்லோரையும் வரவேற்று எல்லோருக்கும் இடமளித்துச் சமத்துவத்தை வழங்கி மகிழ்ச்சியாக வாழ வைக்கின்றசொர்க்க நிலமாகஇருக்கிறது என்ற சித்திரமே உள்ளது. இதனால்தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆபத்தான நீண்ட கடல் பயணத்தைச் செய்துகங்காரு தேசம்நோக்கிப்   பெயர்கிறார்கள்.

 
இலங்கையில் நிலவும் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான தப்பித்தலாக, இன்னொரு பாதுகாப்பானநன்நிலத்துக்குப் பெயர்வதே இவர்களுடைய முனைப்பு. ஆனால், அங்கே அவுஸ்திரேலியாவில் அதிகாரத்திலிருக்கும் ஆங்கிலேய வெள்ளையர்கள் இந்தப் புதிய வருகையாளர்களை ஏற்கத் தயாரில்லை. முன்னர் ஓரளவுக்கு அங்கீகரித்தனர். இன்றைய நிலை அப்படியானதல்ல. இப்பொழுது புதிய வருகையாளர்களை இடைமறித்துத் திருப்பி அனுப்புகின்றனர். கரையிறங்கியோரைத் தயவு தாட்சண்யமில்லாமல் நாடு கடத்துகிறார்கள். இதுபற்றிய எழுத்துகள் மெல்ல மெல்ல தமிழிலும் வெளியாகத் தொடங்கியுள்ளன. அண்மைய உதாரணம், தெய்வீகனின்உமையாள்என்ற கதை. “சட்டவிரோதக் குடியேறிஎன்ற அடிப்படையில் நாடு கடத்துவதற்கு முயற்சிக்கும் அவுஸ்திரேலியக் காவல்துறை கலைக்கும்போது அதிலிருந்து தப்ப முயற்சிக்கும் ஈழத்தமிழரைப் பற்றிய கதை அது.

 
எனவே இத்தகைய அவல நிலைக்கு ஆளாக வேண்டாம் என்ற உணர்த்துதலையும் இந்தக் கவிதைகள் தம்முள் கொண்டுள்ளன. சொந்த நிலத்துக்குரியவர்களே மோசமாக நடத்தப்படும்போது அத்துமீறி வந்திறங்குவோருக்கு எத்தகைய இடமிருக்கும் என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது. எதிர்பாராத விதமாகவோ அல்லது திட்டமிட்டுத்தானோ இந்தக் கவிதைகளின் தேர்வை ஆழியாள் இவ்வளவு பொருளாழத்தோடு செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், வரலாற்றுத் துயருக்கு மட்டுமல்ல, அப்படியே நமது சமகாலச் சூழலுக்கும் அப்படியே பொருந்திப்போகின்றன இந்தக் கவிதைகள்.

 
மொத்தத்தில் கீழ்வரும் வகையில் இந்தத் தொகுதியின் பெறுமானத்தைச் சுருக்கமாகத் தொகுத்துக் கொள்ளலாம்.

1.  
ஆதிக்குடிகளின் பூர்வீகக் கவிதைகள் மட்டுமல்ல இவை. உலகெங்கும் உள்ளோடியிருக்கும் சமகால வாழ்வின் நெருக்கடிகளுமாகும்.

2.  
ஆதிக்குடிகளுக்கான நியாயத்தை உலக அரங்கில் கோருவது? அவர்களுடைய பிரச்சினையை, வரலாற்றுத் துயரை உலகறியச் செய்வது. குறிப்பாகத் தமிழ்ப்பரப்புக்குத் தெரியப்படுத்துவது.

3.  
சொந்த நிலத்திலேயே அந்நியராக்கப்படுவதை எதிர்ப்பது, அடிமைகளாக்கப்பட்டிருப்பதை உரத்துப் பேசுவது.

4.  
வெள்ளை ஆதிக்கர்களின் நாகரீக முகமூடிகளை அம்பலப்படுத்துவது.


(“
பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” – அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள், தமிழில் ஆழியாள் (மதுபாஷினி) வெளியீடுஅணங்கு (பெண்ணியப் பதிப்பகம்) 3, முருகன் கோயில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110).

நன்றி: தேனீ.கொம்
xxxxxxxxxxxxxxxxxxx-------------------------------------xxxxxxxxxxxxxxx--------------------------------xxxxxxxxxxx

No comments: