அவுஸ்திரேலியா- சிட்னியில் பரத நாட்டிய அரங்கேற்றம் - பரமபுத்திரன்

.

அவுஸ்திரேலியா- சிட்னியில்
 சகானா, இன்பனா, ஆரணா சகோதரிகளின்
பரத நாட்டிய அரங்கேற்றம்                




இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு ஏப்ரல் திங்கள் இருபத்து இரண்டாம் நாள்,  ஞாயிற்றுக்கிழமை, மாலைவேளை நேரம் சரியாக 5. 15 மணி பரமற்றா ரிவர்சைட் தியேட்டர், மண்டபத்தின் விளக்குகள் மெதுவாக தங்கள் ஒளிக்கதிர்களை குறைத்து செல்ல, மேடையின் முன்புறம் மூடிய திரை மெல்ல மெல்ல மேலெழுந்து அரங்கினை காட்டிட, மேடையிலிருந்து ஒளி எழுந்து பரவ, அரங்கினில் ஆடல்நாயகன் நடராஜப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வீற்றிருந்த காட்சி ஒவ்வொருவர் மனதையும் கொள்ளை கொண்டிருக்கும் என நம்பலாம்.  இந்நிகழ்வு நடைபெற்ற இடம்   திரு. ஜெறோம் எமிலியனுஸ் திருமதி. கொன்சலா ஜெரோம் தம்பதிகளின் அன்புச் செல்வங்களான சகானா, இன்பனா, ஆரணா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற மேடை. வலப்புறம் நடராஜர் கம்பீரமாய் வீற்றிருக்க, இடப்புறம் வாத்தியக்கலைஞர்கள் வரிசையாய் அமர்ந்திருக்க, திரு. டொனல்ட் தேவராஜ்  அவர்கள் நிகழ்விற்கு அனைவரையும் வரவேற்று தொடர்ந்து வழங்கிய  பரதநாட்டிய கலை  தொடர்பான அறிமுக உரையுடன்  கிரி சங்கரப்பிள்ளை, பாலகி பரமேஸ்வரன் அரங்கேற்றக் கலைஞர்களை அறிமுகம் செய்து வைக்க, பாடகர் பாடிட, இசைவாத்தியங்கள் இசைக்க, நடன ஆசிரியர் திருமதி.  மிருனாளினி ஜெயமோகன் அவர்களின் நெறிப்படுத்தலில் சகான இன்பனா ஆரணா மூவரும் மல்லாரி நடனத்தை நிகழ்த்துவதற்காக தங்கள் ஆடற்கலைத்திறனை வெளிக்காட்டி உற்சாகமாக அரங்கினில் தோன்றினர். அவர்களின் அந்த வருகையே மக்களை மெய்சிலிர்க்க வைத்து, கைதட்டலை அள்ள போதுமாக இருந்தது. இதில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய செய்தி ஆரம்பம் முதல் இறுதிவைரை மண்டபத்தில் அமர்ந்திருந்த  மக்களை தம்வசமிழுத்து,  நடனத்தை இரசிக்க வைத்தது மட்டுமன்றி, யாரும் கேட்காமலே மக்கள் தாங்களாகவே கரகோசம் செய்து மகிழ்ச்சியை காட்டி பாராட்டியமை நடனக்கலைஞர்களின் திறமைக்கு கிடைத்த பரிசு என்றே சொல்ல முடியும். தமிழினை வேண்டியும் வாழ்த்தியும் பாடல்கள் அமைத்தமை மொழியுடன் கொண்ட நேசத்தை காட்டியது.




பரதக்கலையின் ஆரம்ப அங்கமாகிய மல்லாரி நடனத்தை அரங்கினில் நிகழ்த்தி மலர்தனை தூவி இறைவனை பணிந்து, குருவிடம் சென்று ஆசியை  பெற்று, இசைக்கலைஞர்களுக்கு சிரம்தனை  தாழ்த்தி, மக்களை வணங்கி நடனத்தை தொடர்ந்தனர். மூன்று சகோதரிகளின் அரங்கேற்றம் என்பதால் , தனித்தும், இணைந்தும்  நடனத்தை வழங்க  வாய்ப்புக் கிடைத்தது. மூவரும் சேர்ந்து ஆடிய போதினில் போட்டிக்கு ஆடும் கலைஞர்கள் போல, போட்டியும் போட்டு, பாசமும் காட்டி, நட்பாய் நல்ல நளினமும் புரிந்து நடனம் தந்தமையும், ஆரம்பம் முதல் இறுதி வரை களைப்போ சளைப்போ காட்டாமல் அரங்கினை ஆட்சி செய்தமையும்  அவர்களின் நடனத்திறமை என்றே சொல்லமுடியும்.



மூன்று சகோதரிகளும் இணைந்து விநாயக வணக்கம், ஜதிஸ்வரம், வர்ணம், முப்பெரும் தேவியர், தில்லானா ஆகிய நடன நிகழ்வுகளை குழுவாகவும், சபதம், கீர்த்தனம் வங்கக்கடல் சூழ்ந்த நாடு முறையே ஆரனா சகானா இன்பனா ஆகியோரால் தனித்தனியாகவும் நிகழ்த்திக்காட்டப்பட்டது. குழுவாக ஆடும்போது ஒத்திசைவாகவும், தனியாக ஆடும்போது தம் திறமையைக்காட்டி ஆடியமையும் பாராட்டுக்குரியது. பாடகரும், இசைக்கலைஞர்களும் நடன சகோதரிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு அரங்கினை உயிரூட்டியமை பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இசையும் நடனமும் இணைந்த அவ்வேளை உண்மையில் அனைவரையும் மகிழ வைத்தது என்று உறுதியாக சொல்ல முடியும்.



தொடர்ந்து தனித்து வந்த ஆரணா தமிழ்க்கடவுள் முருகனின் கதையை அபிநயத்தில் இலகுவாகவும் தெளிவாகவும் சொல்லிச்சென்றார். அடுத்து மூவரும் வர்ணம் நிகழ்த்தினர். அது கிருஷ்ணரின் கதை. அந்த கதையை வர்ணமாக நிகழ்த்தி  கைதட்டல் வாங்கிக்கொண்டு மூவரும் மேடையிலிருந்து விலக, இடைவேளைக்காக சரியாக 7. 30 மணிக்கு அரங்கத்தின் திரை மூடப்பட்டது.



மீண்டும் இரவு 8. 15 மணிக்கு அரங்கம் திறந்தது. முப்பெரும் தேவியர் அரங்கினில் நின்றனர். இசைக்கலைஞர்களின் பாடல்களுக்கேற்ப விரைவாகவும் மெதுவாகவும் சிறப்பாகவும்  நடனமாடி அவையினை மகிழ்வித்தமை முக்கிய நிகழ்வாகும். பெற்றோரின் விருப்பில் இந்த நிகழ்வு அமைக்கப்பெற்றாலும் முப்பெரும் தேவியர்களாக தம்மை உருவகித்து நடனமாடினர் அந்த மூன்று சகோதரிகளும்.
தொடர்ந்தது  கீர்த்தனம். ஆடலரசன் சிவனை சகானா எம் கண்முன் கொண்டுவந்தார். தொடர்ந்து இன்பனா ஈழத்து உடையில் ஈழத்தை நினைவுபடுத்தும்   வங்க கடல் சூழ்ந்த நாடே என்ற  பாடலுக்கு நடனமாட மேடைக்கு வந்தார். அவரது தாயார் கொன்சலா எழுதி பாடகர் அகிலன் இசையமைத்து மிருனாளினி ஜெயமோகனின் நெறியாள்கையில் நடைபெற்ற நடனம் ஈழத்திலிருந்து வந்த ஒவ்வொருவரையும் அங்கு கண்டிப்பாக கூட்டிச்சென்றுதான் இருக்கும் என்பதை  மறுக்கமுடியாது. பாடலின் வரிகள், பாடிய பாடகர், நடன ஆசிரியர் ஆகியோருக்கு இதற்காக  தலைவணங்கியே  ஆகவேண்டும். அவுத்திரேலியாவில் பிறந்து வளர்ந்த ஒரு பிள்ளை, முழுமையாக ஈழத்து செய்தியை உள்வாங்கி, தனது நடனம் மூலம் சிறப்பாக வெளிக்காட்டி,  மக்களை நடனத்துள் இழுத்துச் சேர்த்து  ஈழத்து நினைவுகளை அசைபோட்டு மீட்க வைத்தமைக்கு இன்பனாவை எவ்வளவு பாராட்டினாலும் ஏற்றுக்கொள்ள முடியும்.



இறுதி நடனம்  தில்லானாவும் மங்களமும். மேடைக்கு வந்த மூன்று சகோதரிகளும் ஆரம்பத்தில் ஆடியதிலும் உற்சாகமாக ஆடினர். போட்டி போட்டபடி ஆடிக்கொண்டே இருந்தனர். வாத்தியக்கலைஞர் ஜெயராம் அவர்கள் தவில் வாத்தியம்  முழக்கி நிகழ்வினை மேலும் மெருகூட்டினார்.
நிகழ்ச்சி முடியும் வரை யாரும்  எழுந்திருக்கவில்லை என்பதுதான் அவர்களின் நடனம் சிறப்பாய் அமைந்தமைக்கு சாட்சி என்றே சொல்ல முடியும். வித விதமான அபிநயங்கள், சுழன்று சுழன்று ஆடிய வித்தை, பாம்புபோல் நெளிந்து காட்டிய வினோதம், உடம்பினை வளைத்து காட்டிய சாகசம், முகபாவம், உடல் அசைவுகள் யாவும் நடனத்துடன் தம்மை இணைத்துவிட்ட நிலை என்றுதான் சொல்லவேண்டும்.



இசைக்கலைஞர்களான பாடகர் அகிலன் சிவானந்தன் சிறப்பாக பாட ஒத்திசைவாக   மிருதங்க கலைஞர் ஜனகன் சுதந்திரராஜ்  வயலின் கலைஞர்  கோபதிதாஸ் நாராயணதாஸ், வீணை கடம் மோர்சிங் என்பவற்றை இசைத்த பன்முக கலைஞர் ஜெயராம் ஜெகதீஸன் மற்றும் புல்லாங்குழல் கலைஞர் வெங்கடேஷ் சிறீதரன் ஆகியோர் போட்டிபோட்டு இசை வழங்கினர். பாடகர் நடனத்திற்கு மெருகூட்டும் வகையில்  பாடினார்.  நடன சகோதரிகள் அவரின் பாடலுக்கேற்ப ஆடினர். இசைக்கலைஞர்களால் மேடையும், நடனமும் மேலும்  உயிரூட்டம் பெற்றுக்கொண்டே இருந்தது. யார் சிறந்தவர் என்று சொல்ல முடியாத அளவிற்கு  சகல இசைக்கலைஞர்களும்  இணைந்து நிகழ்வை சிறப்பாக்கினர். இசைக்கலைஞர்களை உற்சாகப்படுத்தி நடனமும், நடனத்தை உற்சாகப்படுத்தி இசைமுழக்கமும் இடம்பெற்றதால் அபிநயம், இராகம் தாளம் என்பன நன்றே அமைந்திருக்க வேண்டும்.



உரைகள் மிக சுருக்கமாக அமைக்கப்படிருந்தன. பிரதம விருந்தினர் நடன கலைஞர்களின் பெற்றோரின் உரித்துடை மண்ணான இளவாலையை சேர்ந்த திருமதி. புஸ்பராணி வில்லியம் அவர்களும், நடன சகோதரிகளின் பாடசாலையின்  அதிபருக்காக பாடசாலை ஆசிரியர் Mrs. Brooke Robson அவர்களும் உரைகளை வழங்கினர்.



மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட ஒரு அரங்கேற்றம். ஆடையலங்காரம் ஒலி, ஒளி அமைப்பு, மேடை ஒழுங்கமைப்பு என்பனவும் பாராட்டுக்குரியது. வெறுமனமே அரங்கேற்றம் என்று பாராது, அரங்கேற்றத்திற்கு பின்னாலுள்ள உழைப்பும் சிந்திக்கப்பட வேண்டியது. இந்நிகழ்வுக்காக பாடுபட்ட பெற்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். பிள்ளைகளை  பயிற்றுவித்து நெறியாள்கை செய்த நடன ஆசிரியை மதிக்கப்பட வேண்டியவர். தங்களை தயார் செய்து, பயிற்சி பெற்று  அரங்கிற்கு வந்த சகோதரிகள்  தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தார்கள். சளைக்காமலும் களைக்காமலும் மக்களை தம்வசம் வைத்திருந்த இவர்களால் இன்னும் சாதனை புரிய முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இசைக்கலைஞர்கள், நடன ஆசிரியர், அரங்க முகாமையாளர் என்போர் மதிப்பளிக்கப்பட்டு, தொடர்ந்து  நடனஆசிரியரினால் அரங்கேற்றக் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரதநாட்டியம் வழங்கிய கலைஞர்கள்  நடனம் மூலம் நன்றியை கூறியமை மட்டுமன்றி, தங்கள் வாய்மொழி நன்றியையும்  கூறி நிகழ்வினை முடிவுக்கு கொண்டு வந்தனர். மொத்தத்தில் மனதினை நிறைத்து மகிழ்ச்சியை விதைத்த பயனுள்ள ஒரு அரங்கேற்றம்  என்று சொல்லமுடியும்.



1 comment:

மது said...

அன்பான சொற்களுக்கும்
அருமையான கருத்து பகிர்வுக்கும் - எம்
மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்
ஜெறோம் குடும்பத்தினர்