சங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு (காணொளி)
"லிங்க்ட் இன்" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி
வட கொரியாவின் முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை
இளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி!
சங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு
12/12/2017 கௌரவக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு சென்னை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு தலித் மாணவர் சங்கர். தேவர்
சமூகத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா. இருவரும் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி
காதல் திருமணம் செய்துகொண்டனர்.
திருப்பூரில் வாழ்ந்து வந்த இவர்கள் மீது, கடந்த வருடம் மார்ச் மாதம்
பட்டப் பகலில், மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் கத்தி மற்றும் வாள்களால்
கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கர் உயிரிழக்க, நீண்டகால
சிகிச்சையின் பின் கௌசல்யா உயிர் பிழைத்தார்.
இதில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் தந்தை உட்பட
கூலிப்படையினர் ஐந்து பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள கௌசல்யாவின் தாய் மற்றும் தாய்மாமன் இருவர் மீதுமான தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்றுவருகின்றன.
திருமணமாகி எட்டே மாதத்தில் கணவனைப் பறிகொடுத்த கௌசல்யா தற்போது தனது கணவரின் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கௌசல்யா, தனது தந்தைக்கு மரண
தண்டனை வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். எனினும்
தலைமறைவாகியுள்ள தனது தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோரால் தனக்கோ,
கொல்லப்பட்ட தன் கணவரின் பெற்றோருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்று
அச்சப்படுவதாகவும் அவர்கள் கைதாகும்வரை தமக்கு பொலிஸ் பாதுகாப்பு
வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
"லிங்க்ட் இன்" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி
11/12/2017 ஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை
சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி
வருவதாக ஜேர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 10,000 ஜேர்மனியர்களை குறிவைத்து அவர்களை ரகசிய தகவலாளிகளாக
பணியமர்த்த இந்த இணையதளத்தை சீனா பயன்படுத்துவதாக புலனாய்வு அமைப்பு
குற்றஞ்சாட்டி, இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும்
ஜேர்மனி வெளியிட்டுள்ளது.
மேல்மட்ட ஜேர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி
கணக்குகள் மூலம் தெரிய வருவதாக புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹன்ஸ் கேயோக்
மாசன் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கடும் இணைய
ஊடுருவல் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட இருந்ததை
ஜேர்மனி கண்டுபிடித்தது. நன்றி வீரகேசரி
வட கொரியாவின் முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை
16/12/2017 வட கொரியாவின் இரண்டாவது அதி சக்தி வாய்ந்த
மனிதர் என ஒருசமயத்தில் விபரிக்கப்பட்ட உயர்மட்ட
அதிகாரியொருவர் பொது வாழ்விலிருந்து காணாமல்போயுள்ளதாகவும்
அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என
நம்பப்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் தலைவர் கிம் யொங் –உன் அண்மையில் மலைப்
பிராந்தியமொன்றுக்கு விஜயம் செய்ததையடுத்து அவர் தனது ஆட்சித்
துறையிலிருந்து ஆட்களைக் களையும் செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்ற
அச்சம் தோற்றமெடுத்த நிலையிலேயே அந்த உயர்மட்ட இராணுவ
அதிகாரியான ஜெனரல் ஹவாங் பையொங் ஸோ காணாமல் போயுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு சமயத்தில் உச்ச நிலைத் தலைவரான கிம் யொங் –உன்னிற்கு
அடுத்த அதிகாரத்துவம் பொருந்திய இராணுவ உப கட்டளைத் தளபதி பதவியை
வகித்திருந்தார். கிம் யொங் –உன் கடந்த வாரம் பீக்து மலைப்
பிராந்தியத்துக்கு விஜயம் செய்ததையடுத்து அவர் உயர்மட்ட
அதிகாரியொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றத்
திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்பட்டது. ஏனெனில் கடந்த காலங்களில் வட
கொரிய தலைவர்கள் அந்த மலைப் பிராந்தியத்துக்கு விஜயம் செய்யும்
ஒவ்வொரு தடவையும் அந்நாட்டைச் சேர்ந்த உயர்மட்ட
அதிகாரியொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது வழமையாக
இடம்பெற்று வந்தது.
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பதவியிலிருந்து
வெளியேற்றப்பட்டிருந்த ஹவாங் பையொங் ஸோ கடந்த ஒக்டோபர் மாதம்
முதற்கொண்டு பொது இடத்தில் தோன்றாதுள்ளார்.
2013 ஆம் ஆண்டு கிம் யொங் –உன் மேற்படி மலைப் பிராந்தியத்துக்கு
விஜயம் செய்ததையடுத்து அவரது மாமனாரும் பாதுகாவலருமான ஜாங் ஸோங்
தேக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 2015 ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் அந்த மலைப் பிராந்தியத்துக்கு விஜயம்
செய்ததையடுத்து முன்னாள் பாதுகாப்பு தலைவர்களில் ஒருவரான ஹையொன்
சோங் தேக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட
அந்நாட்டின் ஐந்தாவது அணுசக்திப் பரிசோதனையின் பின்னரும் அவர்
அந்த மலைப் பிராந்தியத்துக்கு யாத்திரை சென்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கிம் யொங் – உன்னின் தந்தையும் வட கொரியாவின் மறைந்த
முன்னாள் தலைவருமான கிம் யொங் இல்லும் 1974 ஆம் ஆண்டில் 10 சமூக
நல்லொழுக்க விதிகள் தொடர்பில் அறிவிப்பதற்கு முன்னரும் 1977 ஆம்
ஆண்டில் முன்னாள் சிரேஷ்ட சர்வதேச விவகாரத்துக்கான அதிகாரியான
கிம் தோங் கயுவிற்கு மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னரும் மேற்படி
மலைப்பிராந்தியத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
கிம் யொங் உன்னின் தாத்தாவான அந்நாட்டின் முதலாவது சர்வாதிகாரியின்
பிறப்பிடமாக விளங்கும் பீக்து மலைப் பிராந்தியம் ஒரு புனித இடமாக வட கொரிய
ஆட்சியாளர்களால் கருதப்பட்டு வருகிறது.
நன்றி வீரகேசரி
இளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி!
15/12/2017 இளவரசர் ஹெரி - மேகன் மார்க்கல் திருமணம்
எதிர்வரும் மே மாதம் பத்தொன்பதாம் திகதி வின்சர் கோட்டையில் நடைபெறும் என
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மேகன் மார்க்கலை இளவரசர் ஹெரி திருமணம்
செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது, இங்கிலாந்து அரச
குடும்பம் ஏற்றுக்கொண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது எனக்
கருதப்படுகிறது.
திருமணத்துக்கு முன் மேகன் மார்க்கலுக்கு ஞானஸ்நானம் பண்ணவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருமணத்தில், ஹெரியின் மாப்பிள்ளைத் தோழனாக அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எஃப்ஏ கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே தினத்தில் இந்தத் திருமணம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment