அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

.
20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா கௌர் எனப் பிறந்தவர். அப்பா பள்ளிஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் வாழ்க்கை நடத்தினார். கொஞ்சம் கவிதையும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அப்பாவை விட்டுவிட்டு மகளைப் பிடித்துக்கொண்டுவிட்டாளோ கவிதாதேவி? தன் 11-ஆவது வயதில் அம்மாவை இழந்தார் அம்ரிதா. அப்பா தன் மகளைக் கூட்டிக்கொண்டு லாகூருக்கு இடம் மாறினார். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலையே அம்ரிதாவுக்கு சரியாக இருந்தது. தோழியரில்லை; போக்கிடம் தெரியவில்லை. தனிமையின் நிழல் எப்போதும் அவர்மீது படிந்திருந்தது. ஏகாந்தச் சிந்தனைகள் அவரிடம் எழுத்துவடிவம் பெற்றன. கவிதை புனைய ஆரம்பித்தார் அம்ரிதா. 16-ஆவது வயதில் அவரது முதல் கவிதைத்தொகுப்பு ‘அமிர்த அலைகள்’ வெளியானது. தன் 17-ஆவது வயதிலே, ப்ரீத்தம் சிங் என்பவரை திருமணம் செய்ய நேரிட்டது. அம்ரிதா ப்ரீத்தம் என்கிற பெயரில் எழுதுவதைத் தொடர்ந்தார். முதல் ஏழெட்டு வருடங்களுக்குள் சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.
இரண்டு குழந்தைகள் தந்த மணவாழ்வு இனிக்கவில்லை அம்ரிதாவுக்கு.

அவருடைய இளம் பருவம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்கிற கொடூர சரித்திரத்தை நேரிடையாக எதிர்கொண்டது. அது அவரது வாழ்வில் பெரும் மனஅழற்சியை உண்டுபண்ணிவிட்டது எனத் தெரிகிறது. ஆகஸ்டு 14-ல் பிறந்தது பாகிஸ்தான். அந்தநாள் அங்கு இதுகாறும் வாழ்ந்துவந்த இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் கொடும்நாளாய் மாறிவிட்டது. அமைதியான வாழ்வு நொடியில் துவம்சமானது. ஹிந்து, சீக்கியக் குடும்பங்களின் சொத்துபத்துக்கள் இரவோடு இரவாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் ஹிந்துஸ்தானுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். அனைத்தையும் ஒரேயடியாக விட்டுவிட்டு அம்போ என்று, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்று ஹிந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாய் ஹிந்துஸ்தானை நோக்கி ஓடிவந்தனர்.. பிரிவினையின் தவிர்க்கமுடியாத விளைவான இனக்கலவரம் வெடித்தது. சாமானியமக்களின் வாழ்வை சிலதினங்களிலேயே பலிகொண்டது. பெண்கள் சீரழிக்கப்பட்டனர். கால்நடையாகவும், மாட்டுவண்டிகளிலும் ஹிந்துஸ்தான் நோக்கி ஓடிவந்தவர்களில் பலர் வருகிற வழியிலேயே அதிர்ச்சியாலும், நோய்வாய்ப்பட்டும் இறந்துபோயினர்; கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர். தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார்.


கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம் கீழே :
பஞ்சாபின் ஆகச்சிறந்த காதல்கவிஞனே
வாரிஸ் ஷா!
உனை நான் இன்று அழைக்கின்றேன்
உன் கல்லறையிலிருந்து நீ பேசுவாய்
உன்னால் எழுதப்பட்ட
காலந்தாண்டிய காதல்காவியத்தில்
இன்னுமொரு பக்கத்தை
இன்று நீ சேர்த்துவிடலாம்
பஞ்சாபின் பெண்ணொருத்தி
துக்கம் தாளாது அழுதாள் என்பதற்காக
சோகக் காவியம் ஒன்றை எழுதினாய் அன்று
இன்றோ பஞ்சாபின் ஆயிரமாயிரம் யுவதிகள்
ஆற்றமாற்றாது அழுது துடிக்கிறார்கள்
துக்கமுற்றோரின் துணைவனே!
கல்லறையிலிருந்து நீ எழு!
உன் பஞ்சாபிற்கு நேர்ந்துவிட்ட அவலத்தைப் பார்
சேனாபில்* ரத்தம் வெள்ளமாய் ஓடுகிறது
வயல்வெளிகளில் எறியப்பட்ட பிணங்கள்
கோரமாய்க் காட்சி தருகின்றன
பஞ்சாபின் ஐந்து நதிகளிலும்
விஷத்தைக் கலந்துவிட்டார்கள் யாரோ
விஷந்தான் நிலமெங்கும் பாசனமாகிறது
என்னவாயிற்று இந்த பஞ்சாபிற்கு?
ராஞ்சாவின்** சகோதரர்கள்
புல்லாங்குழல் இசைக்க மறந்துவிட்டார்களா?
இனிய காதல்கீதங்களெல்லாம் என்னவாயின
அவற்றை இசைத்த புல்லாங்குழல்கள்தான் எங்கே
ரத்தமே மழையாகப் பெய்திருக்கிறது எங்கும்
இடுகாடுகளிலும் ரத்தக்கொப்பளிப்புகள்
இதயமே நொறுங்குமாறு கதறுகிறார்கள்
காதல் இளவரசிகள் அங்கே அமர்ந்து.
குவாய்தோக்கள்*** இன்று நாட்டில்
காதலையும் இளமையையும்
குதறிச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வாரிஸ் ஷாவைப்போல் ஒரு கவிஞன்
இனி மீண்டும் வருவானா?
வாரிஸ் ஷா!
நீ படைத்த அந்தக் காதல்காவியத்தில்
இன்னுமொரு சோகப்பக்கத்தை
இன்று நீ எழுதிச் சேர்த்துவிடு !
————————————————————————
*சேனாப் (Chenab): பஞ்சாபின் ஒரு நதி. **ராஞ்சா: ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தின் நாயகன். ***குவாய்தோ: நாயகியான ஹீர் (Heer)-ஐ விஷம்வைத்துக் கொன்ற பெண்
தொடரும்
நன்றி solvanam.com 

No comments: