பார்வை ! ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )



     அம்மாவின் பார்வை அப்பாவுக் கிருக்காது
          அக்காவின் பார்வை அண்ணாவுக் கிருக்காது
     ஆசிரியர் பார்வை மாணவர்க் கிருக்காது
          ஆனாலும் பார்வைகள் அர்த்தத்தை அளித்துவிடும் !

    கற்றறிந்தார் பார்வை கருத்தாக அமைந்துவிடும்
        கசடர்களின் பார்வை கண்ணியத்தைக் குலைத்துவிடும்
   நற்றவத்தார் பார்வை நானிலத்தைக் காத்துவிடும்
           நம்பார்வை ஒன்றே நமையறியச் செய்துவிடும் !

   ஆணவத்தார் பார்வை அனைத்தையுமே அழித்துவிடும்
           அலைபாயும் பார்வை நிலைகுலைய வைத்துவிடும்
    ஞானமுள்ளார் பார்வை நற்கருணை ஆகிவிடும்
            ஈனமுடை பார்வை எல்லோர்க்கும் இடைஞ்சலன்றோ !

      காளையரின் பார்வை காதல்கதை பேசிநிற்கும்
             கன்னியரின் பார்வை நாணமதைக் காட்டிநிற்கும்
      கணவர்களின் பார்வை மனைவிமீது பதிந்திருக்கும்
            மனைவியரின் பார்வை மாங்கல்யம் தனைநோக்கும் ! 


       வள்ளுவரின் பார்வை வாழ்வியலாய் ஆகிருக்கு
            வள்ளலாரின் பார்வை மனுக்குலத்தை பார்க்கிறது
       கள்ளமிலா விவேகானந்தர் பார்த்துநின்ற பார்வை
             உள்ளமதில் ஆன்மீக உணர்வுதனை ஊட்டியது !

       நபிபார்வை யேசுபார்வை நாட்டுக்கே உதவியது
            நால்வரது பார்வையினால் நற்கருத்தே பரவியது
       புத்தர்பார்வை காந்திபார்வை புத்தியினை மாற்றியது
            சத்தியத்தைப் பார்த்துவிடின் சகலதுமே மாறிவிடும் !

      நீதிக்கும் பார்வையுண்டு நேர்மைக்கும் பார்வையுண்டு
              வாதிக்கும் மனிதருக்கு வகைவகையாய் பார்வையுண்டு
       சாதிக்கும் பார்வையுண்டு சண்டைக்கும் பார்வையுண்டு
               சன்மார்க்கப் பார்வையினால் சகலருக்கும் நன்மையன்றோ !

      எப்பார்வை பார்த்தாலும் தப்பிதமாய் ஆகாமல்
             செப்பமாய் யாவருமே பார்ப்பதுதான் சிறப்பன்றோ
      முப்போதும் இப்படியே முழுப்பேரும் பார்த்துவிடின்
              முழுமுதலாம் இறைவனது முழுப்பார்வை கிடைக்குமன்றோ !












No comments: