பயணியின் பார்வையில் - அங்கம் 26



-->

 " வாழ்ந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம். நடந்துதான் நமது பயணத்தை முடிக்கலாம்"
பேராசிரியர் மெளனகுருவின்  ஆளுமைப்பண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மட்டக்களப்பு 'மகுடம்'  சிறப்பிதழ்
                                                                              முருகபூபதி
கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது.  இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன்.
சுநாமியின்போது மௌனகுரு - சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில்  கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார். அந்த நினைவுகளுடன் அங்கு பிரவேசித்தபோது முற்றத்தில் அமர்ந்து ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்.
எம்மைக்கண்டதும் அவர் தமது குரலைத்தாழ்த்தினார். "வேண்டாம். தொடருங்கள்"  எனச்சைகையால் சொன்னதும் தொடர்ந்தார். பாடல் நின்றதும் அந்தக்கலைஞரை எமக்கு மெளனகுரு அறிமுகப்படுத்தினார்.
அவரது பெயர் கந்தப்பு மயில்வாகனம். வயது 76. இவரது கண்டி அரசன் என்னும் நாடகம் மட்டக்களப்பில் 1965 இல்  மேடையேறியபோது மெளனகுருவும் பேராசிரியர் வித்தியானந்தனும் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
அக்காலப்பகுதியில் வித்தியானந்தன் நாடகக்குழுவின் தலைவராகவும் மௌனகுரு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். கந்தப்பு மயில்வாகனத்தின் குரல்வளத்தில் ஈர்ப்புற்ற மௌனகுரு 1968 இல் தாம்  தயாரித்து அரங்காற்றுகை செய்த சங்காரம் நாடகத்தில் கதையை நகர்த்திச்செல்லும் பிரதான எடுத்துரைஞராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.       

"சுழல்கின்ற சூரியனின் துண்டு பறந்ததுவே"  என்ற கந்தப்பு மயில்வாகனத்தின் கணீர் குரலுடன் திரை திறக்குமாம்.  சங்காரம் தீண்டாமை  ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாடு கொழும்பில் லும்பினி அரங்கில் நடந்தவேளையில் அரங்கேறியிருக்கிறது.  தலைமை வகித்தவர் கி. இலக்‌ஷ்மண அய்யர். இடதுசாரித்தோழர் என். சண்முகதாசன்,  பேராசிரியர் கைலாசபதி ஆகியோரும் இந்நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.
அன்று நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், நுஃமான், முருகையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். சங்காரம் நாடகத்தின் ஒளியமைப்பு ந. சுந்தரலிங்கம்.  அன்று நாடகத்தில் ஒலித்த கலைஞர் கந்தப்பு மயில்வாகனத்தின் அசாதாரணமான குரல் அனைவரையும் வெகுவாகக்கவர்ந்துவிட்டதாக மெளனகுரு அவரை எமக்கு அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டு நனவிடைதோய்ந்தார்.
பரந்த கடற்பரப்பில் கத்திக்கத்திப்பாடி தனது குரல்வளத்தை வளர்த்துக்கொண்டவர்தான் கந்தப்பு மயில்வாகனம் என்று தெரிவித்தார் மெளனகுரு. அன்றைய உரையாடலில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவருடன் தனக்கிருந்த உறவை மெளனகுரு சொன்னபோது, அந்தக்கம்பீரம் சற்றும் குலையாமல் மீண்டும் அந்த முற்றத்திலிருந்து அவர் பாடியதைக்கேட்டு சிலிர்த்தோம்.
மௌனகுருவுக்கு கலைஞர் கந்தப்பு மயில்வாகனம் அறிமுகமானது 1965 இல். எனக்கு மெளனகுருவும் சித்திரலேகாவும் அறிமுகமானது 1972 இல். அக்காலப்பகுதி முதல் கடந்த 45 வருடகாலமாக இவர்கள் இருவரதும் கலை, இலக்கிய  மற்றும் கல்வி, சமூகப்பணிகளை அவதானித்துவருகின்றமையால் அவர்களின் கடின உழைப்பு குறித்து எனக்கு மரியாதையிருக்கிறது.
எனது கலை, இலக்கிய நட்புவட்டத்தில் இவர்களுக்குரிய இடம் முக்கியமானது. அதனால் இலங்கைப்பயணங்களில் இவர்களையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்வது எனது இயல்பு.
அன்றைய தினம் சித்திரலேகா கொழும்பில் நின்றமையால் மட்டக்களப்பில் அவரை சந்திக்கமுடியாமல்போய்விட்டது. மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் மகுடம் (ஆசிரியர் வி.மைக்கல்கொலின்) மௌனகுரு சிறப்பிதழ்கள், சார்வாகன் (குறுநாவல்) கிழக்குப்பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் மௌனகுருவின் தடங்கள் நூல் என்பனவற்றையும் அந்தச் சந்திப்பில் பெற்றுக்கொண்டேன்.
2003 ஆம் ஆண்டில் மௌனகுருவுக்கு மணிவிழா நடந்தபோது வெளியிடப்பட்ட மௌனம் சிறப்பு மலரில் சார்வாகன் இடம்பெற்றுள்ளான். இம்மலர் வெளிவந்தகாலத்திலேயே அதனைப்படித்துவிட்டு அதன் சிறப்பு பற்றி வியந்திருக்கின்றேன்.
மகாபாரதத்தில் வரும் சார்வாகன் பற்றி  எனக்கு முதலில் சொன்னவர் தமிழகத்தின் எழுத்தாளர்,  சார்வாகன் என்ற புனைபெயரில்  எழுதிவந்த ஶ்ரீநிவாசன். தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்த  மருத்துவநிபுணர். மக்கள் நலன் சார்ந்த அரிய சேவைக்காக பத்மஶ்ரீ விருதும் பெற்றவர். பாண்டவர்கள்  குருஷேத்திரபோரிலே வெற்றிவாகை சூடியபின்னர் அரசு அமைத்தபோது அந்தவெற்றிக்களிப்புடன் அரசுக்கட்டில் ஏறியவேளையில் அவர்களின் வெற்றி பல்லாயிரம் உயிர்களைக்குடித்துத்தான் சாதிக்கப்பெற்றது என்பதை பகிரங்கமாகச்சொல்லி  கண்டித்த துறவிதான் சார்வாகன். சார்வாக மதம்  இருந்ததாகவும், திரௌபதையும் அந்த மதத்தை பின்பற்றியிருப்பதாகவும் மெல்பனுக்கு 'சார்வாகன்' ஶ்ரீநிவாசன் வருகை தந்த சமயத்தில் அவருடனான ஒரு கார் பயணத்தில்தான் எனக்கு சொல்லியிருந்தார்.
அவருக்கு சார்வாகன் என்ற புனைபெயர் எவ்வாறு வந்தது எனக்கேட்டு அவரை நேர்காணல் செய்தபோதுதான் அந்தக்கதையும் தெரியவந்தது. மௌனம் சிறப்பு மலரில் 2003 இல்  இடம்பெற்ற சார்வாகன் மீண்டும் தனிநூலாக 2016 இல் வெளியாகியிருக்கிறது. லறீனா ஹக்  எழுதிய நீட்சிபெறும் சொற்கள் கட்டுரைத்தொகுதியில்  இடம்பெற்ற சார்வாகன் பற்றிய அவதானவிமர்சனக்குறிப்புகளுடன் இந்தப்புதிய நூல் வெளியாகியிருக்கிறது.
சார்வாகன் கதைபோன்று மகாபாரதத்தில் ஆயிரக்கணக்கான உப கதைகள் இருக்கின்றன என்பதற்கு ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு மிகச்சிறந்த உதாரணம்.
மெளனகுரு அவர்களை விமர்சகராகவும் கூத்துக்கலைஞராகவுமே அறிந்துவைத்திருந்த எனக்கு 2003 இல் வெளியான மௌனம், அவர் பற்றி  நான் அறியாத பக்கங்களையும் அறிமுகமாக்கியிருக்கிறது.
மௌனகுருவின் சார்வாகன், காண்டவதகனம், இராவணேசன் உட்பட பல படைப்புகள் சமகால  அரசியல் சமூகத்துடனும் நாம் கடந்துவந்த ஈழப்போர்க்காலத்தையும்  ஒப்பிட்டுப்பார்க்கத்தூண்டுகிறது.
மக்களுக்காக பேசியவராகவும்  மக்களையும் பேசவைத்த ஆளுமையாகவுமே  மௌனகுருவைப்பார்க்கின்றேன்.
நண்பர் பேராசிரியர் செ. யோகராஜா,  கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மௌனகுரு பதித்திருக்கும் ஆழமான தடங்கள் பற்றி விரிவாக தனிநூலே எழுதியிருக்கிறார்.
மகுடம் சிறப்பிதழின் முகப்பில் , " வாழ்ந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம். நடந்துதான் நமது பயணத்தை முடிக்கலாம்" என்ற மெனகுருவின் வாசகமும் பதிவாகியிருக்கிறது.
மகுடம் ஏற்கனவே தமிழ்த்தூது தனிநாயகம், தர்மு சிவராம், எஸ்.பொ. ஆகியோருக்காகவும் சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது.
" ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் ஒரு திறனை (Skill) கொண்டிருப்பான். இன்றைய விஞ்ஞான உலகு திறன்கொண்ட மனிதர்களின் உலகாக மாறிவருகின்றது. திறன்கொண்ட மனிதர்களே தமது திறன்களை பயன்படுத்தும் மனிதர்களே வெற்றிபெறுகின்றனர்.
அந்தவகையில் கலை இலக்கிய செயற்பாடுகளான நடித்தல், எழுதுதல், பாடுதல், இசைத்தல், ஆய்வுசெய்தல், பேசுதல் எல்லாம் தனிமனிதர்களின் திறன்களே. சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட திறன்களையும் கொண்டிருப்பர். இந்த திறன்கள் மதிக்கப்படல் வேண்டும். அதுவும் காலத்தில் அது கௌரவப்படுத்தப்படல் வேண்டும்.
திறன்களுக்காக நாம் மனிதர்களை கொண்டாடுவதில்லை. ஆனால், தமது திறன்களை தமது வளர்ச்சிக்காக மட்டுமன்றி தன் சமூகத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தும் மனிதர்களின் திறன்களை அவர்களது திறன்களுக்காக அவர்களை நாம் கொண்டாடுவோம்.
அந்தவகையில் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மண்ணின் கலை இலக்கிய செயற்பாடுகளுக்கு குறிப்பாக மட்டக்களப்பு கூத்துக்கலையை உலகறியச்செய்து, அதனை சர்வதேச அரங்கிற்கு நகர்த்தும் முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு கலை இலக்கியத்தினை இனநல்லுறவுக்காகவும் பயன்படுத்தி வரும் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு சிறப்பிதழ் வெளியிட்டு அவரை கொண்டாடுவதில் மகுடம் பெருமை கொள்கிறது." என்று இச்சிறப்பிதழின் ஆசிரியத்தலையங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இச்சிறப்பிதழில் என்னைக் கவர்ந்த - பாதித்த பல ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானது கவிஞர் வ. ஐ.ச. ஜெயபாலன் எழுதியிருக்கும் கவிதை. அதனை அவர் மகுடத்திற்காக அல்ல, வடமாகாண சபை முதல்வர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எழுதிய கவிதை வரியில் எழுதிய கடிதம்.
"ஈழத்தமிழன் முகமான வடமோடிக்கூத்தை அங்கீகரியுங்கள். வடமோடி கூத்தை வளர்க்கும் அண்ணாவிமார்களையும் பேராசான் மௌனகுருவையும் கௌரவியுங்கள்" என்னும் தொனிப்பொருளில் அக்கவிதை அமைந்திருக்கிறது.
சட்டத்தரணிகள் மு. கணேசராஜா,  சோ. தேவராஜா, மற்றும் குழந்தை ம. சண்முகலிங்கம், வி.மைக்கல்  கொலின், தாமரைத்தீவான், பேராசிரியர்கள் எம். ஏ. நுஃமான்,  வீ. அரசு, அ.ராமசாமி, எம். எஸ்.எம். அனஸ், மு. இளங்கோவன், ஆகியோருடன் கரவை மு. தயாளன், தர்மரத்தினம் பார்த்திபன், பாலசுகுமார், வெ.தவராஜா, எதிர்மன்னசிங்கம், ஜெயரூபன் மைக்கல், இரவி அருணாசலம், செங்கதிரோன்,எஸ்.பி. பாலமுருகன், உமா வரதராஜன், ஆகியோருடன் தர்மஶ்ரீ பண்டாரநாயக்க, பராக்கிரம நெரிஎல்ல, கலாநிதி சுசில் விஜய ஶ்ரீவர்த்தனா ஆகியோரும் தமது மனப்பதிவுகளை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதியிருக்கின்றனர்.
இதில் வெளியாகியிருக்கும் சிங்களக்கலைஞர்களின் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பரந்த வாசகர் மத்தியில் செல்லவேண்டிய ஆக்கங்கள். பேரினவாதம் பேசுவோரின் கண்களை திறக்கச்செய்வதற்கும் சிந்திக்கவைப்பதற்கும் அவை பெரிதும் உதவும்.
மகுடம் சிறப்பிதழில்  ஊடக தர்மத்தையும்  காணமுடிந்தது. கலாநிதி சி. ஜெயசங்கர் தமிழ் மிரரில்  எழுதியிருந்த  ஏட்டுச்சுரைக்காய்க்குள் முடங்கிய கூத்து என்னும் கட்டுரையும்  அதற்கு எதிர்வினையாற்றும் சு. சிவரெத்தினத்தினம் எழுதியிருக்கும் அதிகாரமும் அதிகாரத்துவ சொல்லாடலும் என்ற கட்டுரையும்தான் இச்சிறப்பிதழில் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன.
சிவரெத்தினத்தின் கட்டுரையை மாத்திரம் வெளியிட்டிருப்பின் வாசகர்களுக்கு சற்று மயக்கம் தோன்றலாம். அதனால் அந்த எதிர்வினைக்கான காரணம் யாது என்பதையும் வாசகருக்கு தெரிவிப்பதற்காக மகுடம் ஆசிரியர் முயன்றுள்ளார்.
கருத்தியல்கள் மோதும் களமாகவும் இச்சிறப்பிதழ் விளங்குகிறது. மௌனகுருவின் வாழ்வையும் பணிகளையும் அவர் கடந்துவந்துள்ள பாதையையும் கலை, இலக்கியவாதிகளும் - மாணவர்களும் தெரிந்துகொள்வதற்கு மகுடத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களும் படங்களும் உதவும்.
மகுடம் இரட்டைச்சிறப்பிதழாகவும் வெளிவந்து சாதனைபுரிந்திருக்கிறது.  இரண்டு இதழ்களும் மொத்தம் 200 பக்கங்களில் வெளியாகி அசத்தியிருக்கின்றன.
இரண்டவது இதழில் றூபி வலன்ரீனா பிரான்சிஸ், அபிராமி பற்குணம், ஓவியர் ட்ராஷ்கி மருது, சோலைக்கிளி, க. சிவராஜா, அ.ச. பாய்வா, ஏ. பீர்முகம்மது, யோண்சன் ராஜ்குமார், முஸ்டீன், கலாநிதி க. சிதம்பரநாதன், லறீனா அப்துல் ஹக், யோகி சந்த்ரு, ரீ. எல். ஜவ்பர்கான், க.மோகனதாசன், க. ஜென்சி பியோனா,  றியாஸ் அகமட், எஸ். எழில்வேந்தன், பேரா. கி. பார்த்திபராஜா,  ஞானதாஸ் காசிநாதர், கலாநிதி த. சர்வேந்திரா ஆகியோரும் தமது மனப்பதிவுகளை எழுதியிருக்கிறார்கள்.
இரண்டு இதழ்களிலும் மௌனகுருவின் படைப்புலகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைகள், சிறுகதை, கட்டுரைகள் என்பனவும் வெளியாகியிருக்கின்றன.
1949 முதல் 2017 வரையில் ( சுமார் 68 வருடங்கள்) மௌனகுருவின் நாடகங்களும் ஆற்றுகைகளும் பற்றிய விரிவான பட்டியல் பதிவொன்றும் இச்சிறப்பிதழில்  இடம்பெற்றிருக்கிறது. மகுடம் ஆசிரியர் வி. மைக்கல்கொலின் தமது தீவிர தேடுதலில் அதனைத்தொகுத்திருக்கிறார்.
வாழும் சாதனையாளர் பேராசிரியர் மெளனகுருவை கொண்டாடுவதற்காக மகுடம் ஆசிரியர் மேற்கொண்டிருக்கும் அயராத உழைப்பினை ஒவ்வொரு பக்கங்களிலும் காணமுடிகிறது.
அதனால் இந்தப்பதிவின் ஊடாக மெளனகுருவை வாழ்த்துவதுடன் மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலினையும் பாராட்டுகின்றோம்.
மெளனகுருவும் நடித்திருக்கும் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் காவலூர் ராஜதுரை எழுதித் தயாரித்த பொன்மணி திரைப்படம் குறித்த நேர்காணலும் இந்த சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளது. ச. ராகவன் நேர்கண்டு எழுதியிருக்கும் இந்த ஆக்கம் குறித்து, அண்மையில் சிட்னியில் நான் சந்தித்த திருமதி காவலூர் ராஜதுரையிடமும் மகன் அபயன் ராஜதுரையிடமும் பிரஸ்தாபித்தேன்.
சிட்னியில் Pendelhill   என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஒரு முதியோர் காப்பகத்தில் தற்பொழுது தங்கியிருக்கும்  திருமதி காவலூர் ராஜதுரையை சந்தித்து மகுடம் சிறப்பிதழ் பற்றியும் அதில் பொன்மணி பற்றி இடம்பெற்றிருக்கும் நேர்காணல் குறித்தும் சொன்னபோது அவரது முகத்தில் தோன்றிய பிரகாசத்தை அவதானித்தேன். உடனே அவர் அத்திரைப்படத்தில் நடித்தவர்களின் பெயர்களையெல்லாம் முடிந்தவரையில் நினைவுபடுத்தினார்.
எனது இலங்கைப்பயணத்தில்  வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும்  நான் சந்தித்த பல கலை, இலக்கிய ஆளுமைகளிடமிருந்து விடைபெறும்பொழுது எனக்குக்  கிடைத்த இதழ்கள் மலர்கள் தொடர்பாக இனிவரும் அங்கங்களில் எனது வாசிப்பு அனுபவங்களாக  பகிர்ந்துகொள்வேன்.
அதற்கான முதல் அங்கமாகவே பேராசிரியர் மெளனகுருவின் ஆளுமைப்பண்புகளை விரிவாகப்பதிவுசெய்துள்ள மகுடம் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி இந்த பயணியின் பார்வையில் இறுதி அங்கத்தை நிறைவுசெய்கின்றேன்.
இந்த நீண்ட தொடரை அவ்வப்போது படித்து தமது கருத்துக்களை எனக்கு நேரில் சொன்னவர்களுக்கும் மின்னஞ்சலில் உரையாடியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
letchumananm@gmail.com
   ---0---





No comments: