சொல்லவேண்டிய கதைகள்" மெல்பன் நூல் வெளியீட்டில்

.
 "வாழ்க்கையை ரசித்து உண்மைகளையும்வேதனைகளையும்   நகைச்சுவையுடன் பதிவுசெய்யும் பதிவுகள்தான் முருகபூபதியின் சொல்லவேண்டிய கதைகள்"      மெல்பன் நூல் வெளியீட்டில்                                            ரேணுகா தனஸ்கந்தா சமர்ப்பித்த நயப்புரை
அவுஸ்திரேலியா மெல்பனில். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற முருகபூபதியின் இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் வெளியீட்டு விழாவிலிருந்து, அவரது 21 ஆவது நூல் வெளியீட்டு விழாவரையில், முருகபூபதி அவர்களின் எழுத்துலகத்தை  அவதானித்து வருகின்றேன்.

ஆரம்பத்தில் சிறுகதை எழுத்தாளராகவே எம்மத்தியில் அறிமுகமாகியிருந்த அவர், நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், விமர்சனம், நூல் அறிமுகம், ஆளுமைகள் பற்றிய ஆவணப்பதிவுகள், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம்.... என்று தொடர்ச்சியாக படைப்பிலக்கியம் மற்றும்  ஊடகத்துறையில் எழுதிவருபவர். அத்துடன் சில பொதுப்பணிகளில் அவர் ஒரு சமூகப்பணியாளர்.

அதனால் வாழ்வியல் குறித்தும் எழுதுகிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் சொல்லமறந்த  கதைகள் நூலை எமக்குத்தந்திருக்கும் முருகபூபதி, தற்பொழுது அந்த வரிசையில் சொல்லவேண்டிய கதைகள் தொகுப்பினை வரவாக்கியிருக்கிறார்.



இவரது பரிணாம வளர்ச்சியை இரண்டொரு வார்த்தைகளில் சொல்வதாயின், இவர் மானிடரையும் வாழ்க்கையையும் பெரிதும் ரசிப்பவர். நேசிப்பவர். அந்த இயல்புதான் இவரை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் அதேசமயத்தில் ஒரு ஊடகவியலாளராகவும் பயணிக்கவைத்திருப்பதாகக் கருதுகின்றேன்.
குடும்பத்தலைவன், சமூகப்பணியாளன், உறவுகளைப்பேணும் தொடர்பாளன்,  இடுக்கண் களையும் நண்பன் முதலான பல பரிமாணங்கள் கொண்டவர் இவர்.
இவரை நன்கு அவதானித்தால், இவர் ஒரு தனிமனிதனல்ல. ஒரு இயக்கம். " One Man Army "எனச்சொல்லிவிடலாம்.
 Robot போன்று இயங்குபவர். சோர்வு என்ற சொல்லுக்கு இவரிடம் இடமில்லை. தனிப்பட்ட  வாழ்விலும் பொது வாழ்விலும் பல சவால்களை பிரமிக்கத்தக்க வகையில் சாதூரியமாகக் கடந்து வந்தவர். இவரது வாழ்க்கை அனுபவங்கள்தான் இவரது எழுத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன. அவை, கதைகளாகவும் பத்தி எழுத்துக்களாகவும் பிரசவமாகின்றன.
தான் சந்தித்த மனிதர்களிடமிருந்து  காணுகின்ற காட்சிகளிடமிருந்து பெறுகின்ற அனுபவங்களிலிருந்து இவருக்கு கதைகள் கிடைக்கின்றன. வாழ்வின் விழுமியங்களை,  சமுதாயக்கண்ணோட்டத்தை, சமூகத்தின் வினைத்திறனை இவர் தனக்குள் உள்வாங்கிக்கொள்கின்றமையால், வாழ்வை எழுதும் படைப்புகள் இவரிடமிருந்து பிறக்கின்றன.

நேர்மை, பணிவு, மன்னிக்கும் சுபாவம், மனிதநேயம், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கும் பண்பு முதலான இவரது குணங்கள், இவரது எழுத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன.
வாழ்க்கையை ரசித்து எழுதக்கூடிய இவரால் அதற்குள்ளிருக்கும் உண்மைகளையும் வேதனைகளையும்   நகைச்சுவையுடன் பதிவுசெய்யவும் முடிந்திருக்கிறது. எமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்து ரஸனையுடன் எழுதும் கலையையும் கற்றுக்கொண்டவர்.
முன்னர் எழுதிய சொல்லமறந்த கதைகள் கடந்து சென்ற  வேறு ஒரு உலகத்தைப்பற்றி பேசியிருக்கிறது. இன்று வெளியாகும் இந்தச் சொல்லவேண்டிய கதைகள் நாம் கடந்துகொண்டிருக்கும் காலத்தையும் இனிவரவிருக்கும் காலத்தையும் பேசுகின்ற அதேசமயம், அடுத்த தலைமுறையை நோக்கியும் நகர்ந்து  செல்கின்றது.
அதனால், இந்த நூலை பேரக்குழந்தைகளுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். முருகபூபதி தற்பொழுது மூன்று பேரக்குழந்தைகளுக்கு தாத்தா. அக்குழந்தைகள் பற்றியும் இந்நூல் பேசுகிறது. அதன் ஊடாக உலகெங்கும் அவர் நேசிக்கின்ற அனைத்துப்பேரக் குழந்தைகளுக்கும் சேர்த்தே இந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
அதனால் இது குழந்தைகள் இலக்கியம் அல்ல. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  சேர்த்தே எழுதப்பட்ட  ஒருவகை புனைவு சாராத இலக்கியம்.
இந்த நூலில் 20 அங்கங்கள் இருக்கின்றன. எனக்கு நயப்புரை சொல்வதற்கு இதில் தரப்பட்டுள்ளது ஐந்து அங்கங்கள் மாத்திரமே. அதற்காக குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையும் மாத்திரம்தான் படித்தேன் எனச்சொல்ல வரவில்லை. நூல் முழுவதையும் படித்தேன்.
இதில் வருகிறது ஒரு கட்டுரை: படித்தவற்றை என்ன செய்வது..?
இதுபற்றி எம்மத்தியில் யாராவது யோசித்திருக்கின்றோமா..?
எங்கள் வீடுகளிலெல்லாம் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை படித்திருப்போம். சிலவற்றை நாளை படிப்போம், பிறகு படிப்போம். ஏதும் பயணங்களில் படிப்போம் என்று நாட்களைத்தள்ளிப்போடுவோம். ஆனால், இதுவரையில் படித்து முடித்து வீட்டின் மூலையில் இருக்கும் புத்தகங்களை இனி என்ன செய்யப்போகிறோம்..? என்பது பற்றி யோசிக்கின்றோமா..? அவ்வாறு யோசிக்கச்செய்கிறது இந்த ஆக்கம்.
"Recycling and preserving the read books" - என்ற சிந்தனையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது இந்த ஆக்கம். நவீன தொழில் நுட்ப வளர்ச்சியினால், அச்சிடப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும்,  வாசித்தவற்றை சேகரிக்கும் வழக்கமும் குறைந்து வருவதையும் அதேசமயம், படித்து முடித்து ஏராளமாகச் சேர்ந்துவிட்ட நிலையில் அவற்றை பாதுகாத்து மற்றவர்களுக்கும் பயன்படுத்தும் வழிமுறைகளைப்பற்றி ஆலோசிக்குமாறும் இக்கட்டுரை வாசகர்களை வேண்டுகிறது.
விக்ரோரியா மாநிலத்தில் பல இரயில் நிலையங்களில் முருகபூபதி அவதானித்த காட்சிகள் பற்றியும் இக்கட்டுரை ஒரு செய்தியைக்கூறுகிறது. அங்கு வரும் பயணிகளிடமிருந்து பெற்ற பழைய நூல்களை மற்றும் சில பயணிகளுக்கு வழங்கி, அவர்களின் வாசிப்புத்தேவையை இரயில் நிலையங்கள் பூர்த்தி செய்வதற்கு  மேற்கொண்டுவரும் சமூகப்பணி பற்றி பேசுகிறது இந்த ஆக்கம். அதனை வெகு சுவாரஸ்யமாக எழுதியிருப்பதுடன், தனது தாயகம் இலங்கையிலும் இந்த நடைமுறையை இரயில் நிலையங்கள் பின்பற்றலாம் எனவும் சொல்கிறார்.
இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால். முருகபூபதி அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கிறார். இந்தக்கதைகள் சொல்லும் ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியானது அவரதும் எமதும் தாயகம் இலங்கையில்,  வடமராட்சி அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழில்.  இங்கிருந்து ஒரு செய்தியை அங்குள்ள மக்களுக்கு தெரிவிக்கிறார். அந்தச்செய்தி எமக்கும் பயன்படுகிறது.
வீட்டுக்குள் சிறை என்ற அங்கம் அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ பற்றிப்பேசுகிறது. அதாவது Bush Fire பற்றிச்சொல்கிறது. இந்த நாட்டில் கோடை காலத்தில் புதர்க்காடுகள் தீப்பற்றி எரியும் என்பது எமக்குத்தெரிந்த விடயம்தான். அதனை வெகு சுவாரஸ்யமாக எழுதுகிறார்.
இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் முருகபூபதி புதர்க்காடுகளில்... என்ற ஒரு சிறுகதையை வீரகேசரியில் 1987 ஆம் ஆண்டில்  எழுதியிருந்தார். அதனை அவர் கேட்டுக்கொண்டதன்பேரில், Bush Walk என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். இலங்கையில் வெளியாகும் The Island பத்திரிகையில்  அதே ஆண்டு வெளியானது.
அன்று நண்பர்களுடன் Bush Walk சென்றதை ஒரு கதையாக எழுதியிருந்ததுடன், வியட்நாம் போர் பற்றியும் அதற்குள் ஒரு செய்தியை சொல்லியிருந்தார். அன்று நண்பர்களுடன் பயணப்பட்ட கதை.
இன்று மனைவியுடன் ஒரு Bush Fire காலத்தில் வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்த கதையைச்  சொல்கிறார். இதற்குள்ளும் ஒரு செய்தி வருகிறது. இந்த ஆக்கம் நீர், நெருப்பு, ஆகாயம், காற்று , நிலம் என்னும் பஞ்சபூதங்கள் பற்றியும் பேசுகிறது. அவற்றின் அழகையும் அமைதியையும் அதேசமயம்,  அவை கோபம் கொண்டால் என்ன நடக்கும்...?  என்பதையும் சொல்கிறது.
 சுட்டெரிக்கும் கோடை காலத்தில், அணைக்காத  சிகரெட்டுகளை எறிபவர்களை கண்காணிக்கும் கமராக்கள்  பற்றியும், எம்மவர்கள் ஊரில் செய்வது போன்று தைப்பொங்கல் பண்டிகையை கோடைகாலத்தில்  வெளியே முற்றத்தில் வைத்து கொண்டாடினால், பொலிஸ் நிலையத்தில் அல்லது சிறையில் பொங்கல் சாப்பிடவேண்டிவரும் என்ற செய்தியையும் நகைச்சுவையுடன் பேசுகிறது.
அடுத்த ஆக்கம் நடைப்பயிற்சி பற்றி பேசுகிறது. உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சியைப்பற்றி இதில் சுவாரஸ்யமாக பதிவுசெய்கிறார். " நடத்தலின் இனிமையை நாம் உணர்வதேயில்லை" என்ற எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையிலிருந்து தமது ஆக்கத்தை விரிவுபடுத்தி விவரிக்கிறார் முருகபூபதி.
எமது முன்னோர்கள் எவ்வாறு தமது தேவைகளின் நிமித்தம் தூர இடங்களுக்கும் நடந்தே சென்றிருக்கும் பல தகவல்களை உள்ளடக்கியது இந்த ஆக்கம். முன்னோர்களிடமிருந்த ஆரோக்கியத்திற்கு அவர்களிடமிருந்த தொடர்ச்சியான நடைப்பயிற்சியும் முக்கிய காரணம் என்தையும் நினைவுபடுத்துகிறார். இன்றைய இயந்திரமயமான காலத்தில் நடக்கும் தேவை குறைந்துவிடுவதனால் ஏற்பட்டுள்ள தேகாரோக்கிய குறைபாடுபற்றியும் தமக்கே உரித்தான அங்கதச்சுவையுடன் எழுதியிருக்கிறார். சில நண்பர்களுடன் இவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தையும் எழுதியிருக்கிறார்.
அவ்வேளைகளில் தான் கற்றதையும் பெற்றதையும் அதன்மூலம் அறிவுப்பகிர்தலும் இடம்பெறும் என்பதையும் சொல்கிறார். " நடைப்பயிற்சியை தொடருங்கள். அது உங்களை புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும்" என்று அந்த ஆக்கத்தை நிறைவுசெய்கிறார்.
அடுத்துவருகிறது... இந்தத்தேசத்திற்கு படகில் வந்த மக்கள் பற்றிய ஒரு சிறிய கதை. ஒரு காலைக்காட்சியில்.... பனிபெய்யும் ஒரு குளிர்காலைப்பொழுதில் இவர் சந்திக்கும் இரண்டு இலங்கைத்தமிழ்க்குழந்தைகள் பற்றிய கதை. அந்தக்குழந்தைகளின் கனவுகளை உருக்கமாகச்சொல்கிறது.
" அய்யா எங்களை இங்கே இருக்க விடுவாங்களா..?" என்ற அந்தக்குழந்தைகள் முருகபூபதியை எவ்வாறு மனதளவில் பாதித்திருக்கிறார்கள்  என்பது பற்றி பேசுகின்றது கனவுகள் ஆயிரம்.
இதே தலைப்பில் முருகபூபதி எழுதிய சிறுகதை மல்லிகையில் 1972 ஆம் ஆண்டு வெளியானது. அதுவே இவரது முதலாவது சிறுகதை. 45 வருடங்களின் பின்னர் அதே தலைப்பில் இவரால் எழுதப்படுகிறது ஒரு பத்தி எழுத்து. அன்று அவர் பிறந்து வாழ்ந்த நீர்கொழும்பின் கடற்கரையோரத்து கடற்றொழிலாளர்களின் கனவுகள் ஆயிரத்தை எழுதியவர்,  இத்தனை வருடங்களுக்குப்பின்னர் கடல் கடந்து வந்துள்ள ஈழத்தின் குழந்தைகளின் கனவுகள் பற்றி எழுதியிருக்கின்றார்.
படகில் உயிரைப்பணயம் வைத்து இங்கு வந்துள்ளவர்களின் கனவுகளில் கலந்திருக்கும் கண்ணீரைச்சொல்கிறது இந்த ஆக்கம்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த கப்டன் குக்கும் அமெரிக்காவுக்கு வந்த கொலம்பஸ்சும் கடலோடிகளான வாஸ்கொடகாமாவும் இபுன் பட்டூடாவும் இந்த அங்கத்தில் வருகிறார்கள்.
 அதனால் உலகளாவிய பார்வையும் இதில் வருகிறது. இலங்கைக்கு படகில் வந்த விஜயனைப்பற்றியும், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரால்  அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மக்களை எவ்வாறு என்ன பெயர் சொல்லி எள்ளி நகையாடினார்கள் என்பது பற்றியும் கனவுகள் ஆயிரம் பேசுகிறது.
இந்த நாட்டிற்குள் கடல் மார்க்கமாக வந்து  அடைக்கலம் புகுந்தவர்களுக்கு  Boat People என்ற அடைமொழியை நாகரீகமாக சொன்னதையும்.  அன்று இலங்கையினுள் தேவை கருதி பிரித்தானிய சாம்ராஜ்யத்தினால் இழுத்துவரப்பட்ட இந்திய மக்களை எவ்வாறு அழைத்தார்கள் என்பது பற்றியும் இந்த அங்கம் பேசுகிறது.
அதனால் இறந்த காலம், நிகழ்காலம் பற்றியும் சொல்லியவாறு இனிவரவிருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றும் சொல்லிச்செல்கிறது இந்த சொல்லவேண்டிய கதை.
அன்று கலைப்பொழுதில் ஒரு பஸ் பயணத்தில் முருகபூபதி சந்தித்த இரண்டு தமிழக்குழந்தைகளின் கனவுகளை சித்திரிக்கும் இக்கதையில், " அந்தக்குழந்தைகள் தமது பெற்றோர்களுடன் படகில் வந்த பதையை மறக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் செல்லும் பாதை இருட்டாக இருக்கமாட்டாது " என்ற வாழ்வியல் நம்பிக்கை வருகிறது.
இந்த நம்பிக்கையுடன் இக்கதையிலிருந்து நாம் நகர்ந்தவுடன் வருகிறது நம்பிக்கை என்ற தலைப்பில் மற்றும் ஒரு கதை. இது இறை நம்பிக்கை பற்றியது.
நம்பிக்கைதானே வாழ்க்கை என்று எம்மை நாமே ஆறுதல்படுத்திக்கொள்வோம் அல்லவா..?
இனம், மதம், மொழி, தேசம் கடந்து வாழும் ஒரு மனிதன் தெய்வத்திலும் அதேசமயம் சகமனிதரிடத்திலும் வைத்திருக்கும் நம்பிக்கை பற்றி பேசுகிறது இந்தக்கதை.
இதில் முருகபூபதி ஒரு சிங்களச்சகோதரியை எமக்கு அறிமுகப்படுத்துகிறார். அந்தப்பெண் பௌத்தமதத்தைச்சேர்ந்தவர். ஆனால், அவருக்கு ஆழ்ந்த பக்தி சிவபெருமானில்தான்.
பௌத்தர்களும் எமது இந்து தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிள்ளையாரை கண தெய்யோ என்றும் முருகனை கதரகம தெய்யோ என்றும் விஷ்ணுவை விஷ்ணு தெய்யோ  என்றும் அவர்கள் வழிபடுவார்கள். இந்தக்கதையில் வரும் சிங்களப்பெண்ணின் குலதெய்வம் சிவபெருமான்.
அவரை ஈஸ்வரன் என்றும் அழைக்கின்றோம். அவர்கள் ஈஸ்வர தெய்யோ என்று அழைக்கிறார்கள். தனக்கு எல்லாமே அவர்தான் எனச்சொல்லும் அந்தப்பெண், முருகபூபதியை எதிர்பாராத விதமாக முதல் தடவை சந்தித்தவுடனேயே தனது குடும்பத்தை,  தனது வாழ்க்கையின் சரிதையை வெளிப்படையாகச்சொல்லிவிடுகிறார்.
அவ்வாறு எவரும் முன்பின் தெரியாத ஒருவருக்குச்சொல்ல மாட்டார்கள். ஆனால், அந்தப்பெண்ணால் எவ்வாறு அப்படிச்சொல்ல முடிந்திருக்கிறது..?
முருகபூபதியின் எழுத்துக்களையும் முருகபூபதியின் படத்தையும்  அவர்  ஒரு சிங்கள பத்திரிகையில் பார்த்திருக்கிறார். அதில் முருகபூபதியின் சிந்தனைகளை தெரிந்துகொண்டிருக்கிறார். அதனால் தயக்கமின்றி வெளிப்படையாக அவரால், இவரிடம் பேசமுடிந்திருக்கிறது.
இலக்கியத்திற்கு இனங்களை இணைக்கும் சக்தியும் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த நம்பிக்கை என்ற கதை.
" தனது வாழ்வின் தரிசனங்களே தான் எழுதும் படைப்புகள்" என்று பல நேர்காணல்களிலும் தனது பல படைப்புகளிலும் முருகபூபதி சொல்லியிருக்கிறார். அதனையே இந்த நூலின் உள்ளடக்கத்திலும் நாம் பார்க்கின்றோம்.
தனது வாழ்க்கை அனுபவங்களை அழகிய மொழி வளத்துடன், வாசகர்களை கவரும் விதத்தில் பகிர்ந்துகொள்கிறார். இந்த மனிதகுலத்தின் மீது அவர்கொண்டிருக்கும் பற்றுதலையும் நம்பிக்கையையும் இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.
இந்தப்பதிவுகளின் ஊடாக நாம் மட்டுமல்ல எமது இளம் சந்ததியினரும் பயன்பெறுவார்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சொல்ல மறந்த கதைகள் முன்னர் தந்தார். சொல்லவேண்டிய கதைகள் தற்போது தருகிறார். இனி, இன்னும் சொல்லாத கதைகள்தான்  தருவாரோ தெரியவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியாத கதைகளை அவர் எழுதமாட்டார். அவரிடம் அத்தகைய கதைகளும் இருக்கலாம். சமூகத்திற்காக பேசிவரும் முருகபூபதி, சொல்ல முடியாத கதைகளை எங்களுக்குத்தரமாட்டார்.
---0---








No comments: