முதுமை - சௌந்தரி கணேசன்

.

அந்த வீட்டைப் பாருங்கள்
எத்தனை அழகு
மரங்கள் சூழ்ந்த முற்றம்
வண்ணக் கலவைப் பூச்சு
அழகான ஜன்னல்
அதற்கேற்ற கதவு
ஆனாலும்
அது ஓர் வெற்று வீடு
வெற்று வீட்டின்
வாய்பேசா மொழிகளை
அசைபோட்டுப் பார்த்தேன்
துயரம் கொண்ட
தூயோர் வாழ்வின்
சோகம் உணர்ந்தேன்
பெரிய வீடு
மயான அமைதி
மூடிய சாளரங்கள்
சிலந்தி பின்னிய வலைகள்
பிரிக்கப்படாத பரிசுப் பொருட்கள்
மூலையில் ஓர் மரக் கட்டில்
கறைபடிந்த படுக்கை விரிப்பு
யாருக்கும் சொந்தமற்று
வரும்பல துன்பம் தாங்கி
தொலைபேசி மணிகேட்க
அல்லும் பகலும் காத்திருக்கும்
வயசான அப்பாவும்
வாடிப்போன அம்மாவும்
அந்த வெற்று வீட்டின்
தனிமைக் குரலை
செவியுற்று செவியுற்று
நாய்களும் பூனைகளும்
நன்றி மறக்காமல்
ஓயாது கத்துகின்றன
அந்த வெற்று வீட்டின்
வலிதின்ற தோற்றத்தை
எட்டியெட்டிப் பார்த்து
சுற்றி நிற்கும் மரங்களும்
சோகத்தின் உச்சத்தில்
இலையுதிர்த்து நிற்கின்றன
இரவு பகல் எப்பொழுதும்
இழவுச் செய்திகள்
கைவசம் உள்ள உறவுகளைக்கூட
காலம் விட்டுவைக்கவில்லை
பலருக்கும் பாரமாகி
பயனற்றுக் கிடக்கும்
இவர்களின் முடிவும்
இன்னும் தூரமில்லை
முடியும் தருணத்தில்
அவர்களுக்காகவும்
ஓர் ஜீவன் துடிக்கட்டும்

No comments: