உலகச் செய்திகள்


வடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம்

வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

சனநெரிசலில் சிக்கி 27 பேர் பலி, 55 பேர் காயம் : மும்பை ரயில் நிலையத்தில் சம்பவம்

டெண்டுல்கரின் தீர்க்கதரிசனத்தால் 22 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்!

முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை





வடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம்

30/09/2017 வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் செல்லப்பட்டதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



எடுத்துச் செல்லப்பட்ட ஏவுகணைகள் மத்திய தர அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஏவுகணைகள் எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜப்பான் கடற்பரப்பின் மேலாக ஏவுகணை பரிசோதனை செய்தும், அமெரிக்கா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும் வரும் வடகொரியா, என்ன செய்யப்போகிறது என்று தெரியாமல் சர்வதேசமும் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறது.  நன்றி வீரகேசரி














30/09/2017 சிரியாவில், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இட்லிப் பிராந்தியத்தில் நேற்றிரவு (29) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட இருபத்தெட்டுப் பேர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அர்மனாஸ் நகரிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இத்தாக்குதல் குறித்து சிரிய படையினர் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.  நன்றி வீரகேசரி








சனநெரிசலில் சிக்கி 27 பேர் பலி, 55 பேர் காயம் : மும்பை ரயில் நிலையத்தில் சம்பவம்

29/09/2017 மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மும்பையில் இன்று காலையில் பெய்த அடைமழையையடுத்து, எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ளது ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டது.
இன்று காலை சுமார் 10.50 மணிக்கு குறித்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதில் இருந்த மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, அங்கிருந்த பெருமளவிலான மக்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது, பெரும் பீதி ஏற்பட்டதையடுத்த அங்கு பெரும் சனநெரிசல் ஏற்பட்டது.
அதில் படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், மேலும் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை, சனநெரிசல், பலி, இந்தியா   நன்றி வீரகேசரி








டெண்டுல்கரின் தீர்க்கதரிசனத்தால் 22 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்!

30/09/2017 மும்பை ரயில் நிலையத்தின் நடைமேடைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையை ரயில்வே அமைச்சு செயற்படுத்தியிருந்தால், நேற்று முன்தினம் அநியாயமாக 22 உயிர்கள் பலியாகியிருக்காது என்று தகவல்கள் எழுந்துள்ளன.
மும்பையில் உள்ள ரயில்வே நிலையங்களில் - எல்பின்ஸ்டன் வீதி ரயில் நிலையம் உட்பட - தரமான நடைமேடைகளை அமைக்க வேண்டும் என, மும்பையின் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரயில்வே அமைச்சிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கோரிக்கை விடுத்திருந்தார். 
இதை ஏற்றுக்கொண்ட அமைச்சு, அதற்கான அறிவித்தலையும் விடுத்திருந்தது. எனினும், அந்த ஒப்புதம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருந்தனவே தவிர செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஒருவேளை சச்சினின் வேண்டுகோளை ஏற்று ரயில்வே அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தால் 22 உயிர்கள் பறிபோயிருக்காது என்று கருத்து எழுந்துள்ளது.  நன்றி வீரகேசரி












முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
27/09/2017 தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சினத்ராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந் நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் கவனயீனமாக செயற்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி




No comments: