பனை மரம்: தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி! - ந. வினோத் குமார்



மிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ‘…முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும் / வேசை எனல் ஆமே விரைந்து’ என்று தமிழ் இலக்கியத்தில் பரத்தையருடன் பனை ஒப்பிடப்பட்டுள்ளது.
வழக்காறுகள் உணர்த்துவதுபோல் பனைக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவு எதிர்மறையானது அல்ல என்கிறார் தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவரான ஆ.சிவசுப்பிர மணியன். நாட்டார் வழக்காற்றியலில் முக்கிய மான பங்களிப்பைச் செய்திருக்கும் ஆ.சிவசுப்பிரமணியன், பனைக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி ஆழமாக ஆய்வுசெய்திருக்கிறார். அந்த ஆய்வின் விளைவு, ‘பனை மரமே! பனை மரமே!’ என்ற புத்தகமாக வந்திருக்கிறது. சிதம்பரத்தில் இன்றும் நாளையும் பனை மரம் தொடர்பான மாநாடு நடைபெறும் வேளையில் இந்தப் புத்தகத்தை இங்கே அறிமுகப்படுத்துவது மேலும் பொருத்தமாக இருக்கும்.


பண்பாட்டின் கண்ணாடி

ஒரு சமூகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு, அந்தச் சமூகத்தின் வழிபாட்டு முறைகள், உணவுப் பழக்கங்கள், உடை, இலக்கியங்கள் எனப் பலவற்றை ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாம். அவற்றுள், அந்தச் சமூக மக்கள் பயன்படுத்தும் புழங்கு பொருட்களைக் கொண்டு, அவற்றுக்கும் அந்தச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவை, பண்பாட்டை ஆராய்வதை ‘பொருள்சார் பண்பாடு’ என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் அடிப்படையில் ‘உப்பு’ குறித்து ஆராய்ந்த ஆ.சிவசுப்பிரமணியன், தற்போது பனை குறித்து ஆய்வுசெய்திருக்கிறார்.
ஆண், பெண் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் பனையில், வேர், தூர்ப் பகுதி, நடு மரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை – பீலி, பனங்காய் (பெண் பனையில் மட்டும் காணப்படும்), பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என 12 உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக் கூடியது. அந்த உறுப்புகளை மனிதர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று மிக விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இந்தக் காரணங்களாலேயே பனைக்கு ‘கற்பக விருட்சம்’ என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளதாக, நூலாசிரியர் தரும் தகவல் நமக்குப் புதிது. அன்றைக்கு எழுதப்பட்ட சுவடிகளெல்லாம் பனை ஓலையால் ஆனவை என்பது நமக்குத் தெரியும்; ஆனால், தென் திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள் அந்த ஓலைக்கென்று தனியே வரி விதித்திருந்தார்கள் என்பது ஆச்சரியமூட்டும் தகவல்.

பதநீரும் கள்ளும்

பதநீருக்கும் கள்ளுக்கும் இடையே முடிச்சுப்போட்டுப் பார்ப்பது தவறான பார்வை. பதநீர் என்பது ஆரோக்கிய பானம். பனை மரத்திலிருந்து பெறப்படும் இனிப்பான சாற்றை, இயல்பாகப் புளிக்கவிட்டால் அது கள். சுண்ணாம்பின் துணைகொண்டு அதைப் புளிக்கவிடாமல் செய்தால் அது பதநீர். ஆனால், பனையிலிருந்து பதநீரை எடுப்பதை யும் ‘கள் இறக்குவது’ என்றே குறிப்பிடு கின்றனர். முன்னர், பல ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்து வந்த இத்தொழில், 1983-ல் ‘டாஸ்மாக்’ தொடங்கப்பட்டபோது, தடை செய்யப்பட்டது.
கள்ளின் காரணமாகப் பனை இழிவானதாகப் பார்க்கப்பட்டது. இதற்கு சமணம், வைதீகம் உள்ளிட்ட மதங்களுக்குக் கணிச மான பங்குண்டு. பிற்காலத்தில் வெளிநாட்டு மது வகைகளின் விற்பனையை அரசே ஊக்குவித்ததால் கள்ளோடு சேர்த்துப் பதநீர் தொழிலும் பாதிப்புக்குள்ளானது.
நுங்கும் பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. ஓலை, கூடைகள் முடையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கூரை வேயவும் பயன்படுகிறது. மரம், வீடு கட்டப் பயன்படுகிறது. பனஞ்சாறு பதநீராகவும் கற்கண்டாகவும் கருப்பட்டியாகவும் தமிழர் உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தகவல் களெல்லாம் ஓரளவுக்கு நமக்குத் தெரிந்தவைதான். ஆனால், இவற்றினுள்ளே நாமறியாத எத்தனை வகைகள் இருக்கின்றன என்பதை ஆ.சிவசுப்பிரமணியன் விரிவாக விளக்கும் போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது.
உணவாக, மருந்தாக, கலைப் பொருளா கப் பனை எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை இதற்கு முன்பு, தமிழில் இதுபோன்று எந்தப் புத்தகமும் விரிவாக அலசியதில்லை. பனை தொடர்பான கலாச்சாரக் கூறுகள், பனை சார்ந்த சொற்கள் போன்றவற்றைப் பார்க்கும்போது, நம் கலாச்சாரத்துக்கும் மொழிக்கும் பனை எந்த அளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறது என்பது புலனாகிறது. புத்தகத்தின் பின்னிணைப்பாக, நூலடைவு கொடுத்த ஆசிரியர், சொல்லடைவையும் கொடுத்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
சாட்சியாக ஒரு மரம்
நொடிக்கொரு முறை
வாகனங்கள்
கர்ஜித்துக் கடக்கும்
இந்த நெடுஞ்சாலையில்
புதையுண்டு கிடக்கின்றன
ரெட்டைப் பனங்காய்
வண்டியின்
தடங்கள்!
என்ற, கோ.பகவானின் கவிதை ஒன்று உண்டு. பனங்காய் வண்டி ஓட்டாத, பனை ஓலையில் காற்றாடி பார்க்காத இன்றைய தலைமுறைக் குழந்தைகள், குழந்தைமை யின் அற்புதங்களில் சிலவற்றை இழக்கின்றன. சென்னையில், மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பக்கத்தில் ஒற்றைப் பனை மரம் ஒன்று உண்டு. அங்குதான் சில ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் படு கொலைக்காகச் சில இயக்கங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தின. ‘குறுத்தோலை ஞாயிறு’ போன்ற நிகழ்வுகளின் போது பனை ஓலையைச் சுமந்து செல்லும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடப்படு கிறது. இப்படியான சில நிகழ்வுகள் மூலமாகத்தான் தமிழர்களின் மனத்தில் பனை மரம் இடம்பெற்றிருக்கிறது.
இவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி யாக விளங்கும் பனை மரங்கள், செங்கல் சூளை எரிபொருளுக்காக வெட்டப்படுகின்றன. எனவே, அந்த மரத்தைச் சார்ந்திருக் கும் பனங்காடை, பனை உழவாரன் போன்ற பறவைகளும் வாழிட அழிவைச் சந்தித்து வருகின்றன. மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது மனிதர்களுக்குப் புரியவில்லை. பறவைகளுக்குப் புரியும்!
ந. வினோத் குமார், தொடர்புக்கு:

No comments: