“வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை”: ஐ.நா.வில் ட்ரம்ப் கன்னியுரை
ஒத்திகைக்கே தாக்குப் பிடிக்காத 900 கோடி ரூபா அணை!
மெக்சிக்கோ பூமியதிர்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் பலி
“வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை”: ஐ.நா.வில் ட்ரம்ப் கன்னியுரை
19/09/2017 “சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் முரட்டு ஆட்சியாளர்கள்
ஒருபக்கம், பெருகிவரும் பயங்கரவாதம் ஒரு பக்கம் என, உலகம் முன்னெப்போதும்
இல்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களைத்
தோற்கடிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய
வேண்டிய நேரம் இது” என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
நூற்று ஐம்பது நாடுகள் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில், தனது முதலாவது ஐ.நா. உரையைச் சற்று முன் நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது ஜனாதிபதிப் பிரசாரத்தின்போது ஐ.நா.வை ‘செயற்படாத அமைப்பு’ என்று
குறை கூறியிருந்த ட்ரம்ப், அதே ஐக்கிய நாடுகளின் அமர்விலேயே இவ்வாறு
குறிப்பிட்டார்.
அவரது உரையில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
“பயங்கர ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில், மகத்தான ஒரு
உறுதிமொழியை ஏற்க வேண்டிய உன்னதமான நேரத்தில் நாம் அனைவரும்
சந்தித்திருக்கிறோம். இந்த உலகத்தைப் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லப்
போகிறோமோ அல்லது மீளத் திருத்தியமைக்க முடியாத ஒரு அதல பாதாளத்தில்
தள்ளிவிடப் போகிறோமா என்பது நம் தீர்மானங்களைப் பொறுத்ததே.
“வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் உலக அமைதிக்குப் பங்கம்
விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கின்றன. இதை எதிர்க்கும் வகையில் ஐக்கிய
நாடுகள் சபை அந்நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதை நான்
பாராட்டுகிறேன்.
“அதேவேளை, அந்நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவையும் அதன் சார்பு
நாடுகளையும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால், கிழக்காசியாவில் ஒரு நிலையற்ற
தன்மையை உருவாக்கி வந்தால், எனது நாட்டைக் காப்பாற்றுவதற்கு எந்த
பதிலடியையும் கொடுக்கத் தயார். அதன்போது வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத்
தவிர வேறெந்த வழியும் இருக்காது.”
இதன்போது, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை ‘ரொக்கெட் மேன்’ (ரொக்கெட்
மனிதன்) என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவை அச்சுறுத்துவதாக
நினைத்துக்கொண்டு அவர் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார் என்றும்
குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
ஒத்திகைக்கே தாக்குப் பிடிக்காத 900 கோடி ரூபா அணை!
20/09/2017 இந்திய மதிப்பில் 389 கோடி ரூபாய் (இலங்கை
மதிப்பில் சுமார் 900 கோடி ரூபா) செலவில் நிர்மாணிக்கப்பட்ட அணையின் ஒரு
பகுதி, திறப்பு விழாவுக்கு முன் இடம்பெற்ற ஒரு ஒத்திகையின்போது தகர்ந்து
விழுந்ததில், அப்பகுதி வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்கள் கடும்
அதிர்ச்சிக்கும் உள்ளாகினர்.
பீஹார் மாநிலம் பாட்னாவில், கங்கையில் இருந்து நீரைத் தேக்கி, அதன்மூலம்
பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் விவசாயத் தேவைகளுக்குப்
பயன்படுத்துமுகமாக இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
நாற்பதாண்டுகளுக்கு முன்னரே பதினான்கு கோடி ரூபாயில் நிர்மாணிக்க அனுமதி
வழங்கப்பட்டிருந்த இந்த அணை தற்போதுதான் பூர்த்தியாகியிருந்தது. இந்த
அணையை இன்று (20) மாநில முதல்வர் நித்தீஷ் குமார் திறந்து வைப்பதற்கு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று ஒத்திகை பார்ப்பதற்காக கங்கையின் நீர் இந்த
அணைக்குள் திறந்து விடப்பட்டது. அப்போது, கங்கையின் வேகத்துக்குத்
தாக்குப்பிடிக்க முடியாத அணையின் ஒரு பகுதி சுவர் சரிந்து விழுந்தது.
பாய்ந்து வந்த கங்கை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகியது.
இதையடுத்து, ‘ஆளும் கட்சியின் ஊழல் ஆட்சிக்கு அணை ஒன்று இரையாகியிருக்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. நன்றி வீரகேசரி
மெக்சிக்கோ பூமியதிர்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் பலி
20/09/2017 மெக்சிக்கோவில் இடம்பெற்ற அதிசக்தி வாய்ந்த
பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் மெக்சிக்கோ நகரில் குறைந்தது 20 வரையான பாடசாலை மாணவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 30 பாடசாலை மாணவர்களை காணவில்லையெனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் 7.1 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மெக்சிகோவில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
இந்நிலையில் குறித்த பூமியதிர்வு காரணமாக இன்றுவரை 226 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment