இலங்கையில் பாரதி -- அங்கம் 35 முருகபூபதி




" தமிழா பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களைப்போட்டு, ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்." என்று சொன்னவர் பாரதியார். தமிழருக்காக அவர் எழுதிய கட்டுரையில் இவ்வாறும், தமிழச்சாதி என்ற தலைப்பிலான கவிதையில் பின்வருமாறும் அவர் பதிவுசெய்துள்ளார்.
".......பற்பல தீவினும்பரவி இவ்வெளிய

தமிழச்சாதி தடி உதை உண்டும்

கால் உதை உண்டும் கயிற்றடி உண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்

பிணிகளால் சாதலும் பெருந்தொலை உள்ள தம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;

'
தெய்வம் மறவார்; செயுங்கடன் பிழையார்;

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,

இறுதியில் பெருமையும், இன்பமும் பெறுவார் "
நாம் எதிர்நோக்கக்கூடிய துன்பங்களையும் சொல்லி, இறுதியில் "பெருமையும் இன்பமும் பெறுவார்" எனவும் முடிக்கிறார்.
இலங்கை இந்தியத்தமிழர்கள் அந்நிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்தமை எதிர்பாராதது.
இந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கை உட்பட எந்தெந்த தேசங்களுக்கு புலம்பெயர்ந்தார்கள் என்பதை இதற்கு முந்திய அங்கத்தில் பார்த்தோம்.


பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியத்தமிழர்கள், பிஜித்தீவிற்கும்  இலங்கைத்தீவிற்கும் வந்தார்கள். பாரதி, பிஜித்தீவில் அவர்களுக்கு நேர்ந்த அவலம் பற்றி வருந்தினார்.
எனினும், மேலும் மேலும் தமிழர்கள் (எங்கு வாழநேரிட்டாலும்) அந்நியதேசங்களுக்கு புலம்பெயர்வார்கள் என்ற தீர்க்கதரிசனம் பாரதிக்கு இருந்திருக்கிறது. அதனால்தான், தமிழச்சாதி என்ற கவிதையையும், தமிழருக்கு என்ற கட்டுரையையும் அவர் எழுதினார்.
இந்த அங்கத்தில் இடம்பெறும் கவிதையை ஞானம் இதழின் 175 ஆவது இதழில் பார்க்கமுடிந்தது.
ஞானம் 175 ஆவது இதழ் (2014 டிசம்பர்) ஈழத்து புலம்பெயர் இலக்கிய   சிறப்பு மலராக வெளியானது.
தமிழினம் குறித்து பாரதிக்கிருந்த தீர்க்கதரிசனம் எத்தகையது என்பதை சமகால வாசகர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஈழத்து புலம்பெயர்ந்தோரின் இலக்கியத்தின் செல்நெறியையும் அதன் உள்ளடக்கத்தையும் ஆவணமாக்கும் பொருட்டு வெளியான குறிப்பிட்ட சிறப்பு மலரில் அக்கவிதை வரிகள் இடம்பெற்றமை மிகவும் பொருத்தமானதே.
இலங்கையிலிருந்து தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலான நாடுகளுக்கும் சென்றமைக்கு இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரும் முக்கிய காரணம்.
அவ்வாறு இந்தத்தேசங்களுக்குச்சென்றவர்களில் பலருக்கு  உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றலும் ஊடகத்துறை அனுபவமும் இருந்தமையால் அவர்களினால் தமிழுக்கும் தமிழ்க்கலை இலக்கியங்களுக்கும் கனதியான சேவையாற்ற முடிந்திருக்கிறது.
பாரதியின் கனவுகள் அவரது தமிழ் என்ற கவிதையில் விரவிக்கிடக்கிறது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்,  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் " முதலான வரிகளிலிருந்து பாரதியின் எதிர்பார்ப்பு அவரது தீர்க்கதரிசனத்துடன் முன்மொழியப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
1970 இற்கு முன்னரே இந்தியத்தமிழர்கள் அந்நியதேசங்களுக்கு புலம்பெயர்ந்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுக்குப்பின்னரே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொற்பதம் பேசுபொருளானது.
இச்சொற்பதத்தை முதல் முதலில் உச்சரித்தவர் இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. எனஅழைக்கப்பட்ட எஸ்.பொன்னுத்துரை (1932 -2014). இவரும் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டவரே. பாரதியின் வரிகளிலும் நூல்கள் எழுதியவர். அவுஸ்திரேலியாவில் இவர் பெயர்சூட்டிய அக்கினிக்குஞ்சு இதழ் வெளியாகி, தற்பொழுது இணைய இதழாகியிருக்கிறது.
புலம்பெயர்ந்தோரின் சிறுகதைகளை தொகுத்து பனியும் பனையும் என்னும் தொகுப்பினையும் இலக்கிய நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள எஸ்.பொ, 22-03-2006  ஆம் திகதி புதுவை பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற தலைப்பில் விரிவுரையாற்றியவர். குறிப்பிட்ட  உரை பின்னர், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற மகுடத்தில் பனிக்குள் நெருப்பு என்ற நூலாக 2006 இலேயே வெளியானது.
இலங்கையிலிருந்து   சென்ற தமிழர்கள், இசை, நாடகம், கூத்து, படைப்பு இலக்கியம், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டார்கள். தமிழில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை முதலான ஊடகங்களையும் இலக்கிய இதழ்களையும் நடத்தினார்கள். நூல்களை வெளியிட்டார்கள்.  பின்னாளில் இணைய ஊடகங்களையும், வலைப்பதிவுகளையும்  தொடங்கியிருக்கிறார்கள்.  தமிழ்ப்பாடசாலைகளை உருவாக்கினார்கள். தமிழர்களுக்காக சங்கங்கள், அமைப்புகளை தோற்றுவித்தார்கள். தமிழ் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தினார்கள். தமிழர் உரிமைப்போராட்டங்களில் ஈடுபட்டார்கள். வெளிநாடுகளிலும் அதேசமயம் இலங்கை அரசியலிலும் இவர்கள் செல்வாக்குச்செலுத்துகிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத்துப்படைப்பாளிகளின் ஆக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியாகின்றன.
பாரதியின் கனவை இவ்வாறு நனவாக்கியவர்களின் முயற்சிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் தி. ஞானசேகரன் அவர்கள் ஞானம் 175 ஆவது இதழை ஈழத்து புலம்பெயர் இலக்கிய   சிறப்பு மலராக வெளியிட்டார்.  ஞானம்  200 ஆவது இதழில் ஞானம் ஆசிரியர் தரும் வாக்குமூலம் பின்வருமாறு:
" ஜூன் 2000 ஆம் ஆண்டில் 'ஞானம்' சஞ்சிகையைத்தொடங்கிய நாம், அன்றிலிருந்து நிதானமாகப்பயணித்து 50 ஆம் இதழை 'பொன்மலரா'கத் தந்தோம்.
100 ஆவது இதழை 'ஈழத்து நவீன இலக்கியச்சிறப்பிதழா'க வெளிக்கொணர்ந்ததன் வாயிலாக தமிழிலக்கியப்பரப்பில் எம்மை அடையாளப்படுத்திக்கொண்டோம்.
150 ஆவது இதழை ' ஈழத்து போர் இலக்கியச்சிறப்பிதழா'கவும் 175 ஆவது இதழை 'ஈழத்து புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழா'கவும் தொகுத்தளித்து உலகத்தமிழிலக்கியத்தில் எமக்கான வகிபாகத்தை வகுத்துக்கொண்டோம்.
பூமிப்பந்தெங்கும் பரந்து திணைகள் கடந்துநிற்கும் தமிழிலக்கிய வெளிக்குள், 'ஈழத்துத்தமிழ் நவீன இலக்கிய வெளி - நேர்காணல்' எனும் இப்பெருந்தொகுப்பை இணைத்து எம்மை மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றோம். இவையனைத்தும் தமிழன்னையின் பாதங்களுக்கு சமர்ப்பணம்!"
என்று தமது  இலக்கியத் தொடர்பயணத்தில் தாம் வெளியிட்டுவரும் ஞானம் இதழின் அழுத்தமான அடையாளத்தை ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் இச்சிறப்பிதழின் தொடக்கத்தில் சொல்கிறார்.
அவர் இதன்மூலம் தம்மை மாத்திரம் விரிவுபடுத்திக்கொள்ளவில்லை. வாசகர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் விரிவுபடுத்தியுள்ளார் என்பதே எமது அனுமானம்.
இம்மலர் வெளியாவதற்கு முன்னர் ஞானம் 160 ஆவது இதழில்   பாரதி ஒரு ஜ்வாலை என்ற கட்டுரையை  இ.ஜீவகாருண்யன்  எழுதியிருந்தார். இவர் இமையவன் என்ற புனைபெயரில் எழுதுபவர். கொழும்பிலிருந்து வெளியான பூரணி  இதழின்  ஆசிரியர் குழுவில் இயங்கியவர்.
ஜீவகாருண்யன் தமது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"பாரதி (1882 - 1921) பிறந்து வளர்ந்த காலம் கிழக்கும் மேற்கும் சந்திக்கின்ற காலம். இந்திய ஆழ்மனக் கண்டு பிடிப்புகள் பெரும் தரிசனங்களாக இருந்த போதிலும் நடைமுறைப் பிரச்சினைகளை அவற்றால் தீர்க்க முடியாத நிலையே இருந்து கொண்டிருந்தது. ஆத்மீகத்தின் பெயரிலும், சம யத்தின் பெயரிலும் ஆபாசமான பொது அறிவுக்குப் பொருந்தாத பல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், உயிர்ப்பற்ற மரபுகளாகவும் ஆத்மீகம் செத்துக் கொண்டி ருந்தது. நிலமான்ய நுகத்தடியில் மக்கள் அடிமைத் துயரை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆங்கில ஆட்சியின் அடக்குமுறை அதனை மேலும் தீவிர மாக்கியது.
 ஆத்மீகத்தை அறிவு ரீதியாக     தூய்மைப்படுத்த வேண்டிய தேவையிருந்தது. (இப்போதும் இருக்கிறது) அந்தக் காரியத்தை மேலைத் தேயம் கொண்டு வந்த பகுத்தறிவுப் பார்வைகளே செய்தன. இந்தியச் சிந்தனையின் ஆதார ஊற்றான ஆத்மீகத்தையும் அது தூக்கி எறிந்துவிட்டது. ஆத்மீக உண்மைகளின் ஆழத்தைக் கண்ட டைவதற்கும் அதனை வாழ்க்கையோடு இணைப்பதற்குமான முயற்சிகள் மேலைத் தேயம் தந்த பகுத்தறிவுச் சிந்தனைகளுடன் தொடங்கின.
முதலில் சுவாமி விவேகானந்தர் ஆங்கிலக் கல்வியைப் பெற்று, இந்திய ஆத்ம ஞானம் பற்றிய விளக்கத்தை இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும், ஐரோப்பா வுக்கும் கொண்டு சென்றார். அப்போது உலகமே அவரைக் கண்டு வியந்தது. பின்னர் காந்தி, அரவிந்தர், போன்றோர் இங்கிலாந்திலேயே கல்வி கற்று மேலைத்தேயத்தின் சிந்தனை முறைமை கலாசாரம் போன்றவற்றின் சிறப்புக்களையும் பலவீனங்களையும் கண்டுணர்ந்தனர்.
பாரதி ஆங்கில அறிவும், ஆழமான ஆத்மீக தரிசனமும், புரட்சிகரமான சிந்தனைகளுமுடையவர். அரவிந்தரோடு பழகக் கிடைத்தமை அவரது ஆத்மீக ஆழத்தை இன்னும் ஆழமாக்க உதவியிருக்கிறது.
மேலும் நகர்வதற்கு முன்னர் ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற                                                                நூலில்  தமிழக  படைப்பாளி  ஜெயமோகன் பாரதியைப் பற்றித் தந்திருப்பவற்றையும் ஜீவகாருண்யன்   சுருக்கமாகத் தந்திருக்கிறார்.
நவீன தமிழ் இலக்கியத்துக்கும் அதற்குத் தேவையான சிந்தனைகள் முளைப்பதற்கும் அடித்தளம் அமைத்தவர்களுள் முக்கிய மானவர்கள் வடலூர் இராமலிங்கம் அடிகள் (1823 - 1896) நாட்டுப் பாடலின் பயன்பாட்டை இலக்கியத்துள் கொண்டு வந்த கோபால கிருஷண பாரதி (1800 -1896) இவர்கள் சுப்பிரமணிய பாரதியின் முன்னோடிகள்.
சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு பல பக்கங்களைக் கொண்டது.
1.         செய்யுள் வடிவை நாட்டார் பாடல்களுடன் சேர்த்து, எளிமைப் படுத்தியமை. யமகம், திரிபு, மடக்கு போன்ற யாப்பிலக்கணங்களிலிருந்து விடுபட்டு இலகு கவிதைக்கு வழிய மைத்தமை.
2.         நவீன உரை நடையின் சிறுகதை, நாவல், நடைச்சித்திரம், உருவகக் கட்டுரை, வசன கவிதை போன்றவற்றின் முன்னோடி.
இவை தவிர, ஞானம் இதழில் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சுவாமி யார்...? என்ற சர்ச்சையும் வெளியாகியிருக்கிறது. அந்தச் சுவாமியார் தனது பரம்பரையில் வந்தவர் என்றும் அவர் தனது பேரனார் என்றும் நிரூபிக்கும் வகையில் செங்கைஆழியான் எழுதிவெளியிட்ட நூல் தொடர்பாகவும் ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் எதிர்வினையாற்றியிருந்தார்.
குறிப்பிட்ட எதிர்வினை பற்றி அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.
(தொடரும்)







No comments: