இலங்கைச் செய்திகள்


மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாதிபதி மைத்திரி - ட்ரம்ப் முதன்முறை சந்திப்பு

ஐ.நா.வில் ஜனாதிபதி மைத்ரிபால: பாக்.பிரதமருடன் பலனுள்ள பேச்சு என ட்வீட்

முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் வவுனியா இந்துக்கல்லூரியில்

மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.யாழ். கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர்.
இவ்வாறு ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக யாழிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
படுகொலைகளை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியைப் பெற்றுக் கொடுக்க ஐ.நா சபை ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி ஜனாதிபதி மைத்திரி - ட்ரம்ப் முதன்முறை சந்திப்பு

20/09/2017 நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்து இரண்டாவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முதலாகச் சந்தித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடனிருந்தனர்.  நன்றி வீரகேசரி
ஐ.நா.வில் ஜனாதிபதி மைத்ரிபால: பாக்.பிரதமருடன் பலனுள்ள பேச்சு என ட்வீட்

20/09/2017 ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்ளுமுகமாக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அபாஸியைச் சந்தித்ததாக அவரது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பிராந்தியம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், இரு நாட்டு உறவுகள் பற்றியும் அர்த்தபூர்வ பேச்சுவார்த்தைகள் இச்சந்திப்பின்போது இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
“பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அபாஸியை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. இருநாட்டு உறவுகள், பிராந்திய விடயங்கள் குறித்து பலனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என அந்த ட்விட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.  நன்றி வீரகேசரி 

முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் வவுனியா இந்துக்கல்லூரியில்
18/09/2017 வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் முதியோர் விழிப்புணர்வு செயல் திட்டம் இன்று கோவில்குளத்தில் உள்ள  வவுனியா இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர்  ரி. பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்ற முதியோர் விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை, ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் பங்கு கொண்டனர் .
"மூத்தோர்வாக்கும் முழுநெல்லிக்காயும்" என்ற  தலைப்பில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தரும் இலக்கியப் பேச்சாளருமான இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் சிறப்புரை நிகழ்த்தினார் .

"மாணவர்களானவர்கள் பெற்றோர் ,ஆசிரியர்கள், பெரியோர்கள் சொல்வதை உற்றுக்கேட்க செவிமடுக்க கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் உன்னிப்பாக விடயங்களை கவனிக்க வேண்டும் எனவும் முதுசெம்களாக விளங்கும் எமது தாத்தா பாட்டிகளின் நல்ல அனுபவங்களை கேட்டு நடப்பதே வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை" போன்ற கருத்துக்களை மாணவர்கள் மத்தியில்  முன்வைத்தார்.
 மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மன்றம் பாடசாலை மாணவர்கள் மத்தியில்  நடத்திய சொற்கணை விவாதப்போட்டியில் பங்குபற்றிய மாணவிகளுக்கான சான்றிதழ்களும் அதிபரால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

நன்றி வீரகேசரிNo comments: