இலங்கையில் பாரதி --- அங்கம் 29 --- முருகபூபதி -

.

இலங்கையில் ஒப்பியல் இலக்கியம் என்பதை பேசுபொருளாக்கிய முன்னோடிகளில் ஒருவர்தான் பேராசிரியர் க. கைலாசபதி.
பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம்,
Tamil Heroic Poetry, ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி (கமாலுதினுடன் இணைந்து எழுதியது ) இலக்கியமும் திறனாய்வும், கவிதை நயம்(இ.முருகையனுடன் இணைந்து எழுதியது ), சமூகவியலும் இலக்கியமும்,  மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்( மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து எழுதியது),  நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,  திறனாய்வுப் பிரச்சினைகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,  இலக்கியச் சிந்தனைகள்,  பாரதி ஆய்வுகள், The Relation of Tamil and Western Literatures, ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,  On Art and Literature,  இரு மகாகவிகள், On Bharathi,  சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982) முதலான நூல்களை எழுதியவர்.
கைலாசபதி  ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் விமர்சனத்துறையை வளப்படுத்தியவர். 1962 இலேயே பாரதியையும் ரவீந்திரநாத் தாகூரையும் ஒப்பு நோக்கி ஆய்வுசெய்திருப்பவர்.




இவரைப்போன்று பாரதியையும் வங்கக்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரையும்  ஒப்புநோக்கி கங்கையும் காவிரியும் என்ற நூலையும் பாரதியும் ஷெல்லியும் என்ற மற்றும் ஒரு  நூலையும் எழுதியவர்தான்  தமிழகத்தின் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன்.
கைலாசபதி எழுதியிருக்கும் இருமகாகவிகள் நூல் இதுவரையில் பல பதிப்புகளைக்கண்டுள்ளது.
1962 இல் இதன் முதல் பதிப்பை வெளியிட்டது தமிழ்நாடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( என்.சி.பி. எச்). கைலாசபதி மறைந்த பின்னர் 2001 இல் அதே நூலை தமிழ்நாடு குமரன் பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இலங்கையில் பாரதி  தொடரின் 28 ஆம் அங்கத்தில், " பாரத நாட்டின் தெற்கிலே பாரதியாரும், கிழக்கிலே ரவீந்தரநாத் தாகூரும், மேற்கிலே இக்பாலும் தோன்றி தமது வீறுகொண்ட கவிதைகளாலும் பிற ஆக்கங்களாலும் உலகிற்கு உய்யும் நெறி காட்டினர்."  என்ற வரிகளைப்பதிவுசெய்திருந்தோம்.
இருபதாம்  நூற்றாண்டில் பாரத நாட்டில் ஒப்பற்ற கவிஞர்களாக விளங்கிய  இம்மூவரிடத்திலும் நீடித்த ஒற்றுமை - வேற்றுமைகள் குறித்து பல விமர்சகர்களும் எழுதியிருந்தபோதிலும்,  பாரதிக்கும் தாகூருக்கும் இடையில் நீடித்திருக்கும் உறவு சற்று வித்தியாசமானது. அத்துடன் சுவாரஸ்யமானது.
பாரதி ஆழ்ந்த சிந்தனையாளராகவும் தீர்க்கதரிசியாகவும், எவருடனும் வாதம் புரியும் இயல்பினைக்கொண்டவராகவும் விளங்கியவர்.
தன்னை கவர்ந்துசெல்ல வரும் காலனையும் எட்டி உதைப்பேன் என்று ஆக்ரோஷமாக குரல் எழுப்பியவர். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தவேளையில் அவர் இருந்த இல்லத்திற்கு அத்துமீறிப்பிரவேசித்து, தான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒழுங்கு செய்திருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரமுடியுமா...? எனக்கேட்டவர்.
காந்தியோ தனக்கிருந்த வேறுவேலைகளினால் வரமுடியவில்லை எனச்சொன்னதும் " வாழ்க நீ எம்மான்..." எனப்பாடிவிட்டு விருட்டென விரைந்து மறைந்தவர்.


இத்தகைய துடிப்பான இயல்புகொண்டிருந்த பாரதி, ரவீந்திரநாத் தாகூருடன் கருத்தியில் ரீதியில் கவிதா வாதம் நடத்துவதற்கு விரும்பியிருக்கும்   சுவாரஸ்யமான  ஒரு தகவலையும் கைலாசபதி தமது இருமகாவிகள் நூலில் பதிவுசெய்துள்ளார்.
பாரதியின் சரிதையை தமிழில் எழுதியிருக்கும் சுத்தானந்த பாரதியாரும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பேராசிரியர் பி. மகாதேவனும் பாரதியார், ரவீந்திரநாத் தாகூருடன் கவிதா விவாதம் நடத்தவிரும்பினார் என்ற தகவலை தமது நூல்களில் விபரித்துள்ளனர்.
ஒரு நாடக பாணியில் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அந்தக்காட்சியில் தாகூர் இல்லை.
பாரதி: அப்பா, இப்போதுதாகூர் எங்கிருக்கிறான்...?
சிஷ்யன்: மதுரையில்.
பாரதி: உடனே புறப்படு. சலோ மதுரை. அவனை ஒரு கை பார்க்கிறேன்.
சிஷ்யன்: நாம் போவதற்குள் தாகூர் சென்றுவிட்டால்...?
பாரதி: அட அபசகுனமே...! நமது தமிழ்நாட்டுக்கு தாகூர் வந்து நம்மைக்காணாமல் செல்லுவதா...?
சிஷ்யன்: விலாசம் தெரியாதே...!
பாரதி: அட .. சீ...! "தாகூர் மதுரை" தந்தி பறக்கும் ஐயா...!
சிஷ்யன்: சரி... என்ன செய்தி அறிவிக்க...?
பாரதி: " தமிழ்நாட்டு கவியரசர் பாரதி, உம்மைக்கண்டு பேச வருகிறார்" என்று உடனே தந்தி அடியும்.
சிஷ்யன்: அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்...?
பாரதி: ஓய்... ஓய்..., நாம் தாகூருக்கு ஒன்று சொல்லுவோம். " நீர் வங்கக்கவி. நாம் தமிழ்க்கவி. விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசைச் சபை முன் வையும். நாமும் பாடுவோம். நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு 'அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத்தந்து செல்லவேண்டியது என்போம்..!
சிஷ்யன்: அதெப்படி...? அவர் வங்காளத்தில் பாடுவார். நீர் தமிழில் பாடுவீர். வங்காளத்திற்கு கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக்கிடைக்கும்...?
பாரதி: அட.. அட அபஜெயமே! சர்வவேசுரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான். புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப்பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்கவேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தாழ்ந்த தமிழன் அந்தப்பரிசுக்கு லாயக்கில்லையோ...?
சிஷ்யன்: மன்னிக்கவேண்டும். தமிழ் வங்கத்திற்கு தாழ்ந்ததில்லை. ஆனாலும் அவர் உலக மகா கவியாகப் புகழ்பெற்றவர்.
பாரதி:  நாம் உலகப்புகழ் பெறமுடியாதோ...? அட தரித்திர மனிதா! அந்த இழவுக்குத்தான் நோபல் வெகுமதியை தாகூரிடமிருந்து வெல்லவேண்டும் என்கின்றோம் !


இந்தமாதிரியே பேசிக்கொண்டு பாரதியார் இரவில் எட்டயபுரம் வந்தார். (1919) பிறகு நன்றாகச்சாப்பிட்டுத் தலையைச்சாய்த்தார். மறுநாள் காலையில்தான் எழுந்தார். நோபல் வெகுமதி விஷயம் மறந்துபோயிற்று. இது யோகி சுத்தானந்த பாரதி தீட்டியுள்ள சித்திரம். 1918 இல் பாரதியார் புதுச்சேரி வாழ்க்கை அலுத்துப்போய்த் தமது மனைவியின் ஊரான கடயத்திற்குச்சென்றார். கடயத்தில் ஈராண்டு வாழ்க்கை. அப்பொழுதுதான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்ததாகத்தெரிகிறது என்று எழுதுகிறார் பேராசிரியர் கைலாசபதி.
பாரதி சித்தம்போக்கு சிவன் போக்கு என்று வாழ்ந்தவர். நாடோடியாக அலைந்தவர். உணர்ச்சிப்பிழம்பு. அதனால்தான் தாகூரிடம் வாதம் செய்வதற்கு முனைந்திருக்கிறார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்திருக்கும் சில கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும்  இத்தகைய விட்டேத்தியான இயல்புகள் இருந்திருக்கின்றன.
கைலாசபதி, பாரதியின் இத்தகைய நூதனமான இயல்புகளை தமது நூலில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருப்பதுடன் பாரதியின் மேதாவிலாசம் பற்றியும் இவ்வாறு சொல்கிறார்:
" தாகூருடன் கவிதைப்போட்டி நடத்தவேண்டும் என்ற  இந்த எண்ணம் ஒருவித 'ஷணப்பித்தம்' என்பதில் ஐயம் இல்லை. சலனபுத்திகொண்டிருந்த  பாரதியார், எதையும் மிதமிஞ்சியே செய்வார், சொல்வார். அந்த வகையில் தாகூருடன் 'கவிதா வாதம்' நடத்த உணர்ச்சியினால் உந்தப்பட்டிருப்பாரே  தவிர, தாகூரைப்பற்றிப் பாரதியார் குறைவாக எண்ணினார் எனக்கூறமுடியாது. ஏனெனில், பாரதியார் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் எழுதிய கட்டுரையிலே தாகூரின் ஐரோப்பிய விஜயம் சம்பந்தமாகப் பாராட்டி எழுதியிருக்கிறார்.
ஶ்ரீ ரவீந்திர திக் விஜயம் என்னும் கட்டுரையை 1921 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 இல் 'சுதேசமித்திரனி'லே பாரதியார் எழுதினார். அதற்கடுத்த மாதம் செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதி அமரராகிறார். " உலகப்புகழ்பெற்ற ஒரு கவிஞருக்கு மற்றொரு சிறந்த கவிஞர் தமது இறுதி அஞ்சலியைச்செலுத்திவிட்டு விடைபெற்றுக்கொள்கிறார்." (பாரதி தமிழ் - பெ.தூரன்)
நோபல் பரிசு, இரவீந்திரர் சுற்றுப்பிரயாணச்சிறப்பு முதலியன ஒருபுறமிருக்க, தாகூரின் எழுத்துக்களைப் பாரதியார் கூர்ந்து படித்து வந்திருக்கிறார் என்பதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றன.
இந்த இடத்திலே ஓருண்மையை நாம் மனத்திலிருத்திக்கொள்ளுதல் தகும். மகாகவி பாரதியாரைப்பற்றி எண்ணும்போது, அவரது கவிதைகளே முன்னுக்கு வருகின்றன. ஆயினும் பாரதி பற்றிய எந்த ஆராய்ச்சியும் அவரது வசனப்படைப்புகளின்றிப் பூரணமாகாது. பாரதியாரது இலக்கிய ஆவேசத்தையும் ஆத்ம பக்குவத்தையும் அவரது கவிதைகளே திறம்பட காட்டுவனவாயினும்  பாரதியாரது எண்ணக்குவியல்கள், சிந்தனைத்துணிவுகள், உணர்ச்சிப்பொறிகள், ஆபாசங்கள் -- முரண்பாடுகள் முதலியவற்றை அவரது வசனப்படைப்புகளே தெளிவாகக்காட்டுகின்றன. காட்ட முடியும். எனவே பாரதியார் கண்ட தாகூரைப்பற்றி நாம் ஆராயும்போது பாரதியாரது வசன இலக்கியங்கள், அடிக்கடி தம்மை இனங்காட்டிக்கொள்கின்றன. பல அரிய செய்திகளைத் தெளிவாக்குகின்றன." என்றும் பேராசிரியர் கைலாசபதி பதிவுசெய்கின்றார்.
இங்கு குறிப்பிடப்படும் நோபல் பரிசுக்கனவு பாரதியை மாத்திரம் பாதித்த விடயமல்ல. இன்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் பலர் நோபல் கனவுடன்தான் வாழ்கின்றனர்.
" புலம்பெயர்ந்த  ஒரு  காலகட்ட  எழுத்தாளர்கள்  சாதனை புரிகிறார்கள்.  ஷோபா சக்தி,  கருணாகரமூர்த்தி,  அ.முத்துலிங்கம், கலாமோகன்  போன்றோர்  மிகவும்  ஆழமாகவும்  சிறப்பாகவும் இலக்கியம்  படைக்கிறார்கள்.  ஆனால், இது நீண்டகாலம் நிலைக்குமோ  அடுத்த  தலைமுறைக்கு  நிலைக்குமோ  என்பது சொல்ல  முடியாது.   எங்களைப்போல்   இலக்கியத்தை  அடுத்த தலைமுறைக்குக்கொண்டு போவார்களோ  என்று  கூறமுடியாது. ஏனென்றால்  அவர்கள்  வாழும்  நாடு, மொழி, சுற்றாடல், படிப்பு, வாழ்க்கை  முறை  எல்லாம்  வித்தியாசமானவை.  ஆனால்  ஒன்று, இந்தியப்பூர்வ குடிகள்  எப்படி  இந்தியாவிலிருந்து  புலம்பெயர்ந்து அமெரிக்காவிலோ,   இங்கிலாந்திலோ,   சுவீடனிலோ  வாழக்கூடிய மக்கள் , நோபல்  பரிசைப்பெற்றார்களோ,  அதே போன்று  சர்வதேச மொழிகளில்  தமிழன்  பெறுவதாக  இருந்தால்  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த   தமிழன்  பெறுவான்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்  மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா. (ஆதாரம் ஞானம் 200 ஆவது நேர்காணல் சிறப்பிதழ்)
பாரதியின் நோபல் கனவு இன்றளவும் அவருடைய வாரிசுகளிடத்திலும் நீடித்துவருகிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
இருமகாகவிகள் நூலை வெளியிட்டிருக்கும்  சென்னை குமரன் பதிப்பாளர் திரு. செ. கணேசலிங்கனும் ஈழத்து இலக்கிய உலகின் மூத்தஎழுத்தாளராவார்.
அவர் இந்நூலின் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
" தாகூர் வங்கத்திலும் பாரதி தமிழகத்திலும் தோன்றியபோதிலும் இருவரும் பாரதம் முழுமைக்கும் பொதுவானவர்கள். ஏன்... உலகத்துக்கே பொதுவானவர்கள்.
இருவரதும் வாழ்விலும் ஒற்றுமைகளைவிட வேற்றுமைகளே சட்டென்று நம் நினைவுக்கு வருகின்றன. தாகூர் வசதியான பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியோ எளிய குடும்பத்தில்  பிறந்தவர். வறுமையின் கொடுமையை வாழ்வில் நேரடியாக  அனுபவியாதவர் தாகூர். வாழ்வின் இறுதிவரையிலும் வறுமையுடன் போராடி,  உடலும்  சமயங்களில்  உள்ளமும் கூடச்சலித்தவர் பாரதி.
தாகூரின் குடும்பச்சூழ்நிலையே அவரது முற்போக்கான கருத்துக்களுக்கு இளமையிலேயே வித்திட்டது. பாரதி தமது இளமைக்காலத்தில் வாழ்ந்த சூழ்நிலையோ ஜமீன்தாருக்கு (எட்டயபுரம் மன்னர்) லாலி பாடிய ஆஸ்தானப்புலவர்களின் சூழ்நிலை.
தாகூர் தமது ஆயுட் காலத்தில் உலகமெல்லாம் சுற்றிப்பார்த்தவர். ஆனால், பாரதியோ சாகும்வரையிலும் இந்தியாவின் எல்லையைத்தாண்டி அறியாதவர். தமது இலக்கிய வாழ்வின் செம்பாதியை அஞ்ஞாத வாசத்திலேயே கழித்தவர். தாகூருக்கு தமது ஆயுட்காலத்திலேயே சர்வதேசப்புகழ் கிட்டியது. நோபல் பரிசு கிடைத்தது. பாரதிக்கோ தாயகத்திலேகூட அவரது ஆயுட் காலத்தில் போதிய புகழும் செல்வாக்கும் கிட்டவில்லை."
இவ்வாறு பாரதியை தாகூருடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்ததில்  முன்னோடியாகத்திகழ்ந்தவர்கள் இலங்கையரே என்பதுதான் இங்கு முக்கியமான செய்தியாகும்.
(தொடரும்)

No comments: