அறிவோம் இஸ்லாம் - நிலத்தடி நீர் - பாத்திமா மைந்தன்

.
மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் 'செல்கள்' வற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகக்கூடும். 
தாவரங்கள் உள்பட எல்லா உயிரினங்களின் உடல் எடையில் முக்கால் பங்கிற்கு மேல் இருப்பது தண்ணீரே. இந்தப் பூமியில் தண்ணீர் இல்லாத இடமே இல்லை. நம்மைச் சுற்றி உள்ள காற்றிலும், நம்மைச் சுமந்து நிற்கும் மண்ணிலும் தண்ணீர் உள்ளது. இந்தப் பூமி, 'நீர்க்கோளம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு, இதன் ஒட்டு மொத்தப் பரப்பளவில் 70 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பி இருப்பதுதான் காரணமாகும். அந்த நீரில் 70.7 சதவீதம் உப்பு கரிக்கிற கடல் நீராகும். மீதம் இருக்கிற 29.3 சதவீத நீரை நாம் நிலப்பரப்பில் பெற்றாக வேண்டும்.
சூரிய வெப்பத்தால் கடல் நீர், ஆவியாக மாறி, காற்றில் கலந்து மேல் சென்று மேகங்களாகத் திரண்டு தூய்மையான மழைநீரைப் பொழிகிறது. அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவியாகி மழையையும், தண்ணீரையும் சுழற்சி முறையில் பெறுகிறோம். கரிக்கும் கடல் தந்த மேகத் துளிகளில், ஒரு துளி நீரிலும் உப்பில்லை என்பது இறைவனின் பேரதிசயமே.
உணவை உற்பத்தி செய்வதற்கு தண்ணீர் உதவுகிறது. அதே நேரத்தில் அந்தத் தண்ணீர் உணவாகவும் இருக்கிறது. தண்ணீருக்கென்று தனியாக நிறம் கிடையாது; சுவை கிடையாது; மணம் கிடையாது. அது சேரும் பொருளுக்கேற்ப நிறத்தையும், சுவையையும், மணத்தையும் கொடுக்கும். நீரும் நீரும் கலந்தால் நீராக ஒன்றுமே அன்றி தனித்தனியே நில்லாது. உடலுக்குத் தேவையான ஆறு சத்துப் பொருட்களில் தண்ணீரும் ஒன்று. தண்ணீர் மட்டும்தான் திட, திரவ, வாயு நிலையில் இருக்கக் கூடியது. அதாவது ஐஸ் கட்டியாக, தண்ணீராக, ஆவியாக மூன்று நிலைகளை எடுக்கக் கூடியது. 

தண்ணீர் என்பது இயற்கையின் அரிய பொக்கிஷம்; இறைவனிடம் இருந்து வருகிற அருட்கொடையாகும். இறைவனைத் தவிர வேறு யாராலும் ஒரு சொட்டு நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது. 
இது பற்றி திருக்குர்ஆனில், 'மேகத்தில் இருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?' (திருக்குர்ஆன்-56:68) என்றும்,
'நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகிய கால்நடைகளும் புசிக்கக் கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?' (திருக்குர்ஆன்-32:27) என்றும்,
'உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய் விட்டால், அப்போது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்?' (திருக்குர்ஆன்-67:30) என்றும் இறைவன் கூறுகின்றான்.
நிலத்தடி நீர் என்பது பெய்யும் மழையால் பெறப்படுவதே ஆகும். நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர், மண்ணுக்குள் ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீராகிறது.
ஆனால் இதற்கு மாறாக முற்காலத்தில் நிலத்தடி நீர் குறித்து பல விசித்திரமான விளக்கங்கள் தரப்பட்டன. கி.மு. 7-வது நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் என்பவர், 'சுழலும் காற்றின் வேகத்தால் கடலில் இருக்கும் தண்ணீர் நிலத்தை நோக்கிப் பாய்ச்சப்படுகிறது. இதனால்தான் நாம் நிலத்தின் அடியில் நீரைக் காண்கிறோம்' என்றார். 
'மண்ணில் உள்ள நீராவி, குளிர்ந்த மலைப் பொதும்புகளில் நீர்த்தேக்கங்களாக மாறுகின்றன. இந்த நீர்த்தேக்கங்கள்தான், நிலத்தில் உள்ள நீரூற்றுகளுக்குத் தண்ணீரைத் தருகின்றன' என்றார், அரிஸ்டாட்டில். 18-ம் நூற்றாண்டு வரை நிலத்தடி நீர் குறித்து இதே கருத்தே நிலைத்து நின்றது. 
நிலத்தடி நீர் பற்றிய சரியான விளக்கம் கி.பி.1580-ம் ஆண்டு பெர்னார்ட் பாலிசி என்பவரால் அளிக்கப்பட்டது. அவர், 'நிலத்தடி நீர் என்பது மழை நீரில் இருந்து பெறப்படுவதே' என்றார்.
ஆனால் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தடி நீர் குறித்து குர்ஆன் கூறுகிறது இப்படி: '(நபியே!) நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்தில் இருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களுடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்' (39:21). 
'வானத்தில் இருந்து நாம் அளவோடு (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனை பூமியில் தங்க வைக்கிறோம். நிச்சயமாக அதனைப் போக்கி விடவும் நாம் சக்தியுடையோம்' (23:18).
உயிரினங்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பது மட்டுமல்ல; தண்ணீர் இல்லாவிட்டால் இந்த பூமியில் உயிரினங்களே தோன்றி இருக்க முடியாது.
ஒவ்வொரு உயிரினமும் நீரால் படைக்கப்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது:
'நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' (21:30).
விலங்குகளை நீரில் இருந்து படைத்ததாகக் கீழ்க்கண்ட வசனம் கூறுகிறது:
'எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான். அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு. அவற்றில் நான்கு (கால்)களைக் கொண்டும் நடப்பவையும் உண்டு. தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்' (24:45).
நமது உடலில் 80 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. ரத்தத்தின் நீர்மப் பகுதியில் 92 சதவீதம் அளவில் தண்ணீர் உள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது அறிவியல் அறிவிக்கும் உண்மையாகும்.
ஒவ்வொரு உயிரினமும் நீரால் படைக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல; அந்த உயிரினங்கள் பெருமளவு நீரால் நிரப்பப்பட்டுள்ளன.

No comments: