சௌந்தரி கணேசனின் கவிதை ஒன்று

.
எனது அம்மாவின் தம்பி, எனது மாமாவின் மரணம் என்னை வாட்டுகிறது. நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சாதாரண மாமாக்களைவிட எங்கள் மாமாக்களுடன் நாங்கள் அதிக நெருக்கம். ஒரே வீட்டில் அவர்களுடன் நீண்ட காலம் வாழ்ந்ததால் பிரித்துப்பார்க்க முடியாத நெருக்கம்.

மறைந்த மாமாவின் மரணத்தின் துயரத்தால் 
சௌந்தரி கணேசன் எழுதிய கவிதை 

ஓர் விலைமதிப்பற்ற
புன்னகையொன்றின்
புகைப்படத்தைப் பார்க்கிறேன்
துயரத்தின்
இருண்ட மேகங்கள்
காற்றைத் துரத்த
இலையுதிர்கால இலைகளைப்போல்
அழுதுகொண்டே வீழ்கிறேன்
ஏன் இந்த வலி
இதிலிருந்து எப்படி மீள்வது
இத்தனை கொடுமையானதா மரணம்
இவ்வளவு மென்மையானதா மனசு
என் இறக்கைகளில் ஒன்று
மௌனமாக உதிர
ஓர் சூடான நினைவகம்
இருட்டில் உருவாகி
கடுமையான குளிர்ச்சோகம்
கால்வரை உறிஞ்சுகிறதே!
வாழ்க்கைக் கடலின்
வசந்தகால ஞாபகம்
வெற்றிடமாவதை
நிரப்ப முடியவில்லை
அழகிய நினைவுகளில்
வேர்விட்ட விருட்சமொன்று
விதையாகிப்போவதை
ரசிக்க முடியவில்லை
நாங்கள் துயரப்படுவதை
அவர் பார்க்க விரும்புவதில்லை
என்ன செய்வது
ஓர் கோடைச் சூரியன்
கோபமாகச் சுட்டெரிக்கிறான்
சோர்விலிருந்து விடுபட்டு
சோகத்தை கற்றுத்தெளிந்து
இதையும் கடந்துபோக
எனக்கு அனுமதி வேண்டும்

No comments: